மகளிர் வாரம் முதல் நாள் - ஆசிரியர்களுக்கு

Image may contain: text


அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மகளிர் வாரம் என்று கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு நாள் கொண்டாடப்பட்ட மகளிர் நாள் இந்த ஆண்டு ஒரு வாரமாக இணையவழியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ஆசிரியர்களுக்கு அர்ப்பணம். இணைய இணைப்பில் நாற்பது பேருக்கும் மேலாக இணைந்து ஒன்றரை மணித்துளிகள் சிரிப்பும் விளையாட்டும் கவிதையும் என்று கலகலத்தது.
இரண்டு ஆண்களும் இணைந்து பெண்மையைப் போற்றினர். அவர்களுக்கு மனம்நிறைந்த நன்றிகள்.
இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி நிறைவாய் நிறைவுற்றது முதல் நாள் கொண்டாட்டம்.

அவரவர் விரும்பும் ஆசிரியரை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க ஒரு வாய்ப்பு. இதோ, இணைய இணைப்பில் நான் வாசித்தது.

கைவிரலில் பப்புக் கடைந்து
குள்ளநரி துரத்திக் குதூகலிக்கச் செய்து
கதைபல சொல்லிக் கஞ்சியூட்டிய தாய்
முதல் ஆசிரியர்

பின்னால் எத்தனை எத்தனை பேர்
என்னைச் செதுக்கியச் செம்மை மாதர்

கொடைக்கானலில் மழைபெய்தக் குளிர்காலையில்
சேற்றைத் தெளித்து  உதைத்தழுத என்னை
வெள்ளுடை பொருட்படுத்தாமல் தூக்கிச்சென்ற சிஸ்டர்
உள்ளத்தில் உறைந்ததை அறிவாரோ?

வெள்ளியருவியில்
வாழைப்பழம் பறித்துச் சென்றதொரு மந்தி
என் வாழைப்பழம்
விடாமல் துரத்திய என்னைப் பிடித்து நிறுத்திய மதர்
விலகாமல் எண்ணத்தில் வீற்றிருப்பதை அறிவாரோ?

லைன் லயன் உச்சரிப்பு வித்தியாசத்தை
லைன் போட்டுச் சொல்லிக்கொடுத்த திருமிகு.விஜயலட்சுமி

"எனக்கென்னடி என்றும் பதினாறு" என்று சொல்லிச்சொல்லி
என்னை என்றும் பதினெட்டாய் வைத்திருக்கும் திருமிகு.மங்களம்
போனால் போகிறதென்று
இரண்டு ஆண்டுகளைக் கூட்டிக்கொண்டேன்

வகுப்புத் தலைவியாக்கி வகையாய்த் தாளித்து
"பிரதிஈபா, வாட் ஆர் யூ டூயிங்?"
இனிமையாய்க் கோபம் காட்டுவார்
மேத்தொடு பொறுப்பையும்  கற்றுக்கொடுத்த திருமிகு.செலினா

அக்கறையாய் என்னைச் செம்மைபடுத்திய திருமதி. சாம்ராஜ்
அகன்றதுன் அறிவென்று அவர்வைத்த நம்பிக்கை
தளரும் நேரங்களில் இன்றும் தட்டிக் கொடுக்கும்

கரையும் காகத்தை "மிஸ்டர்.க்ரோ, கீப் கொயட் " என்று
மரியாதையுடன் சாடியக்  கல்லூரிப் பேராசிரியர் திருமிகு.சுந்தரி

இவர்களெல்லாம் முத்திரையிட்ட மனதிலிருந்து
உரித்தாக்குகிறேன் உங்களுக்கு
மகளிர்தின
மகளிர்வார வாழ்த்துகள் !

#gatswd2020 #அட்லாண்டா_மாநகரத்தமிழ்ச்சங்க_மகளிர் வாரம்_கொண்டாட்டம் 

7 கருத்துகள்:

  1. சிறப்பு மா.... சுகமான நினைவுகள்

    பதிலளிநீக்கு
  2. கவிதை சிறப்பு. என்றைக்கும் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக் கால நினைவுகள் மறக்க இயலாதவை

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...