ஹென்றி பெர்ன்ப்ரேவிற்கு (Henry Birnbrey) அவர் பெற்றோர் அமெரிக்கா செல்வதற்கான விசா ஏற்பாடு செய்தனர். பதினான்கே வயதான ஹென்றி பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு முகம் தெரியாத நாட்டிற்குப் பயணப்பட்டார். அவருடன் அப்படிப் பயணித்த சிறு குழந்தைகள் 1200 பேர். விழிகளில் நீர்மல்க பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். ஏன்? ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்? இதயம் வேதனையில் துடிக்கப் பிள்ளைகளை ஏன் அனுப்பினர் அப்பெற்றோர்?
அது 1938 ஆம் ஆண்டு! ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஆஸ்திரியாவின் மேல் ஜெர்மன் படை எடுத்திருந்த நேரம். பெரும்போர் வரப் போகிறது என்று உணர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வழியுண்டா என்று ஏங்கிய நிலையில் அமெரிக்கா 1200 சிறுவர் சிறுமியருக்கு அவசரகால விசா கொடுப்பதாக அறிவித்தது. அப்படித்தான் ஹென்றி அமெரிக்கா புறப்பட்டார். இப்பொழுது 97 வயதாகும் அவரை நேரில் பார்க்கவும் அவர் வாய் மொழியாக வரலாற்றின் கொடுமையான சில பக்கங்களைப் பார்க்கவும் முடிந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.
அட்லாண்டாவில் வில்லியம் ப்ரீமன் ஜூவிஷ் ஹெரிடேஜ் அண்ட் ஹாலோகாஸ்ட் மியூசியம் உள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் நாசி ஆதிக்கத்தில் யூதர்களுக்கு ஏற்பட்டக் கொடுமையை, இனப்படுகொலையைப் பற்றிப் பல தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கத் தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் அதை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லவும் முயற்சி செய்கின்றனர். நேரில் பார்த்த சாட்சிகள் உயிருடன் இருக்கும் இக்காலத்திலேயே ஹாலோகாஸ்ட் (holocaust) நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள் இருப்பதால் உண்மையைப் பரப்புவதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக திருமிகு. ஹென்றி பெர்ன்ப்ரே மியூசியம் வந்திருந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மூத்தவனின் ஆசிரியர் சொன்னதாகச் சொல்லிப் போக வேண்டும் என்று அவன் சொன்னதால் எங்களுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.
ஹென்றி அவர்களின் வார்த்தையில், "நானும் என் தந்தை தாயும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தோம். என் தந்தை என் தாயின் இரண்டாவது கணவர். முதல் கணவரும் என் தாயின் மூன்று சகோதரர்களும் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்து உயிர் துறந்திருந்தனர். ஒரு பிள்ளையும் இறந்து போயிருந்தான். போரிற்குப் பிறகு என் தந்தையும் தாயும் சந்தித்து மணந்து கொண்டனர். என் தந்தையும் முதல் உலகப் போரில் படைவீரராக இருந்தவர்தான். அந்தச் சூழ்நிலையில், நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபொழுது ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். உடனே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தெருவெங்கும் சீருடை அணிந்த படைவீரர்கள் அணிவகுத்தார்கள். கடுமையான சட்டதிட்டங்கள் அமலாக்கப்பட்டன. ஒரு நாள் கடைக்குச் சென்ற என் தந்தை திரும்பிவரவில்லை. நானும் என் தாயும் பரிதவித்துத் தேடினோம், பயனில்லை. மூன்று நாட்கள் கழித்து என் தந்தை வந்தார். கடையில் அரசுக்கு எதிராக அவர் ஏதோ சொன்னதால் படைவிரர்கள் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்களாம். மீண்டும் அவ்வாறு பேசினால் கான்சென்ட்ரேசன் காம்ப்பிற்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்து அனுப்பினார்களாம்."
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் கான்சென்ட்ரேசன் காம்ப்புகள் அமைக்கத் துவங்கிவிட்டார்களாம் நாசிப் படையினர். யூத இனத்தவருக்கு என்று இல்லாமல் அரசை எதிர்த்துப் பேசும் எவருக்கும் கான்சென்ட்ரேசன் காம்ப் என்றுதான் துவங்கியதாம்.
யூத மக்களை நசுக்கும் விதமாக முதலில் யூத கடைகளுக்கு மக்கள் போகக் கூடாதென்று சொன்னார்களாம். மீறிச்சென்றவர்கள் சுடப்பட்டனர். இப்படி யூதர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.
| ||
"நாசி அதிகாரத்தில் மக்கள் ஒருவரை ஒருவரை வெறுக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். கொலை செய்யக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். யூதமக்கள் வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கேள்வியின்றி விசாரனையின்றிக் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஜெர்மன் மக்களிலும் நல்லவர்கள் இருந்தார்கள். எங்குமே நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்துதான் இருப்பார்கள். பொதுவாகக் குறைகூறிவிட முடியாது" என்கிறார் ஹென்றி.
ஜெர்மனியில் நாசி அதிகாரத்தில் இப்படி அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்ற சிறுவர்களைத் சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துச் சென்று விடுதிகளில் வளர்த்தார்களாம். ஹென்றி அவ்வாறு அலபாமாவில் இருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கும் வாழ்க்கை அவருக்கு எளிதாக இல்லை. நிறவெறி பிடித்த வெள்ளையருக்கு யூத இனத்தவரையும் பிடிக்கவில்லை. மேலும் ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களைச் சந்தேகத்துடனே எதிரியாகத்தான் பார்த்தார்களாம். அருகிருந்த தபால் அலுவலகத்தில் மாதமொருமுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம்.
| ||
ஹென்றி அவர்கள் 1944இல் அமெரிக்கப் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி சென்று அங்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறார். "1945இல் நார்மண்டி படையெடுப்பில் (Normandy invasion) வெற்றியடைந்து ஜெர்மனி உள்ளே முன்னேறிச் சென்ற நாங்கள் ஒரு புகைவண்டிப் பெட்டியைப் பார்த்தோம். அதில் 60-70 யூத மக்களின் உடல்கள் இருந்தன. மனித உடல்கள் என்றே சொல்ல முடியாத அளவிற்கு எழும்பும் தோலுமாக இருந்தன. ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை நெஞ்சை அடைத்தது. இரண்டு நாட்கள் கழித்து சாலையோரம் பல மைல்கள் தூரத்திற்கு யூதமக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தன. தோற்கப் போகிறோம் என்ற நிலையில் சாலையோரம் நிற்கவைத்துச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்" என்று சொன்ன ஹென்றி அவர்களின் குரலில் இன்றும் வேதனை தெரிகிறது. எப்பொழுதும் நீங்காத வேதனை!
| |||
மியூசியத்தை வடிவமைத்தக் கட்டிடக்கலைஞர் அன்று ஜெர்மனியில் இருந்த நிலையைக் காண்பிக்கும் விதமாகச் செய்திருக்கிறார். "நாசி அதிகாரத் துவக்கத்தில் ஜெர்மனியில் இருந்து தப்பிச்செல்வதற்கு வழிகள் இருந்தன. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் நாடுகள் தயாராக இல்லை" என்கிறார் ஹென்றி. போகப் போக வழிகள் அடைக்கப்பட்டு இறுதியில் தப்பிச்செல்லவே முடியாதபடி ஆகிவிட்டது. அதைச் சொல்லும் விதமாக மியூசியத்தில் சன்னல்கள் படிப்படியாகக் குறைந்து அமைக்கப்பட்டுள்ளது.
"2005இல் கனடாவில் இரண்டாம் உலகப் போரில் இருந்த ஜெர்மானியப் படைவீரரைச் சந்தித்தேன். அவர் விமானப் படையில் இருந்திருக்கிறார். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்பொழுது அவர் ஹோலோகாஸ்ட் என்று ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்னார். நேரில் பார்த்து நொறுங்கிய என்னிடமே இப்படிச் சொல்வார்களேயானால் நாளை என்ன ஆகும்?" என்கிறார் ஹென்றி.
கடைசிப்படத்தில் உள்ளச் சுவற்றில் ஓட்டை தெரிகிறதல்லவா? யூத மக்கள் போதிய உணவின்றி அடைக்கப் பட்டிருந்த இடங்களில் இருந்து சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து, சுவரில் துளையிட்டுச் சென்று சாக்கடை வழியாகச் சென்று எங்காவது உணவு கிடைத்தால் எடுத்துவருவார்களாம். நாசிப் படையினர் கண்ணில் பட்டுவிட்டால் தோட்டா தான்.
| ||
நாசி எதிர்ப்பாளரான ஜெர்மானியர் ரெவ்.மார்டின் நிமோலர் (Rev.Martin Niemoller, Anti-Nazist) அவர்களின் அதிகம் மேற்கோள் காட்டப்படும் புகழ்பெற்ற வரிகள்:
"முதலில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக வந்தனர். அப்பொழுது நான் எதிர்த்துப் பேசவில்லை, ஏனென்றால் நான் பொதுவுடைமைவாதியல்ல.
அடுத்தது, வணிகச்சங்கத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்தனர். அப்பொழுதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் வணிகச்சங்கத்தவன் அல்ல.
அடுத்தது யூதருக்கு எதிராக வந்தபொழுதும் நான் யூதர் அல்லவென்று வாய் மூடி இருந்தேன்.
கடைசியில் எனக்கு எதிராக வந்தபொழுது எனக்காகப் பேச ஒருவரும் இல்லை"
(இந்த மேற்கோள் பல எண்ண அலைகளை உருவாக்குகிறது)
தகவலுக்கு ஒரு இணைப்பு:
மிகக் கொடூரமான காலக்கட்டம் அது. இதைப் பற்றி ஏராளமாக கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். இருந்தாலும் அந்த காலத்தில் இருந்த ஒருவரின் நேரடி அனுபவத்தை கேட்பது, ஒரு பாக்கியமே! தங்கள் மூலம் எங்களுக்கும் அது கிடைத்தது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!
ஆமாம் சகோ, படித்தும் ஆவணப்படங்கள் பார்த்தும் அறிந்திருந்த விசயங்களை விடவும் ஐ-விட்னெஸ் சாட்சி மனதை உருக்கியது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நீக்குகாலங்கள் உருண்டோடும் போது உண்மைகள் பல மறைக்கப்பட்டு அல்லது புதைகப்பட்டுவிடும்.... ஆனால் அந்த நிகழ்வின் போது வாழ்ந்தவர் சொன்னதன் மூலம் இன்னும் பல உண்மைகள் வெளியே தெரிந்து கொண்டு இருக்கின்றன..
பதிலளிநீக்குதமிழில் படிப்பவர்களுக்கு பல செய்திகளை அறிந்து கொள்ள நீங்கள் இடும் பதிவு மிக உதவியாக இருக்கும். பாராட்டுக்கள்
உண்மைதான் சகோ. அப்படி இந்தத் தகவல்கள் மறையக் கூடாது. நேரில் பார்த்த ஒருவரின் வாய்மொழி கேட்டதன் மூலம் நீங்கள் சாட்சிகளாய் மாறிவிட்டிர்கள் என்றார்கள். இன்னும் ஏறக்குறைய பத்து வருடங்களில் நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கமாட்டார்கள் அல்லவா?
நீக்குநம்மவர்களுக்கு இத்தகையத் தகவல்களை எடுத்துச் செல்லவேண்டும் என்ற பேரவா என் மனதில். நன்றி சகோ.
நடக்கவேயில்லை என்று பொய்யை திரித்து கூறும் கூட்டம் இருந்தாலும் ..இதோ இந்த மியூசியம் Anne Frank இன் diary Auschwitz concentration camp ,மற்றும் பலரின் சாட்சிகள் இருக்கும்வரை உண்மையை ஒருநாளும் அழிக்க மறைக்க முடியாது பொய்யர்களால் ..ஹென்றி அவர்களின் ஆடோக்ராப் பெற்றுக்கொண்டீர்களா கிரேஸ் .இப்படிபட்டோரை சந்திப்பது பெரும் விஷயம் .
பதிலளிநீக்குமகள் Auschwitz போவதாக இருந்தது ஹிஸ்டரி ட்ரிப்ப்க்கு ..இவள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆன்லைனில் படித்து கடைசி நிமிடத்தில் போகவே மாட்டேனுட்டா :( நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்ததாம் சில விஷயங்கள்
இன்னும் பத்தாண்டுகளில் நேரில் பார்க்கும் சாட்சிகள் இருக்கமாட்டார்கள்..ஆட்சியாளர்களைச் சரியாகத் தேர்வுசெய்யாவிட்டால் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்கிறார்கள் ஏஞ்சல்.
நீக்குAuschwitz மிகக் கொடுமை அல்லவா? சில படங்களைப் பகிர்வேன். ஆமாம், நமக்கே தாங்க முடியாத விசயங்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஏஞ்சல்.
வணக்கம் சகோதரி...
பதிலளிநீக்குஇரண்டாம் உலகப்போர் நாகரீக மனித குலத்தின் அவமான பக்கம் ! அதனாலேயே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அப்போரின் நினைவுகளை கொஞ்சமும் தணித்துவிடாமல் பாதுகாக்கிறார்கள். அப்படி இருந்தும் நீங்களே குறிப்பிட்டதை போல நாஜிகளை நியாயப்படுத்துபவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
பாசிசத்தின் கைகளில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம் இரண்டாம் உலகப்போர்.
ஹிட்லரை வரலாற்று நாயகனாக நினைத்திருப்பவர்கள் நம் பக்கத்தில் அதிகம் ! இரண்டாம் போர் பற்றிய சரியான புரிதல் இந்தியாவில் பதிவுசெய்யப்படவில்லை.
மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
வணக்கம் சகோ. நீங்கள் சொல்வது உண்மைதான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நீக்குஉங்கள் பக்கம் வருகிறேன், பகிர்விற்கு நன்றி.
கொடூரங்களைச் செய்பவர்களையும் ரசிப்பவர்கள், ஹீரோ ஆக்குபவர்கள் இருக்கிறார்கள். சரித்திரத்தின் பக்கங்களை இஷ்டத்துக்கு மாற்றியோ, ஒரு எதிர்க்கருத்தை உருவாக்கி உண்மைக் கருத்தைக் குழப்புபவர்களோ எங்கும், எப்போதும் இருக்கிறார்கள். கொடுமைகளை அனுபவித்த ஒருவரையே நேரில் அனுபவங்களைச் சொல்லக் கேட்பது நல்ல அனுபவம். வேதனையான அனுபவமும் கூட.
பதிலளிநீக்குஉண்மை ஸ்ரீராம் . ஆமாம், வேதனையாக இருந்தது. இன்னும் சில விஷயங்கள் பதிவேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குஇதய பலவீனமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் என்றிருக்கவேண்டும் போலுள்ளது. இருந்தாலும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமே. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஹ்ம்ம் அந்தப் புகைவண்டிப் பெட்டிகளில் இருந்த சடலங்களின் புகைப்படம் பார்த்தேன் ஐயா..மனதை விட்டகலாமல் துளைக்கிறது.. :( அதனைப் பகிரவில்லை.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
கொடுமையை எத்தனை பிடித்து செய்திருக்கிறார்கள் அவர்கள்..... படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறதே அனுபவித்தவர்களுக்கு எத்தனை துயரமாக இருந்திருக்கும்.....
பதிலளிநீக்குஆமாம் அண்ணா..இங்கு சொல்லியிருப்பது சிறிதளவே!
நீக்குநன்றி அண்ணா.
வேதனை. வரலாற்றில் எவ்வளவு மறைக்கப்பட்டு இருக்கிறது இல்லையா? ஆனால் உண்மை உறங்காது என்பது போல் அன்றைய நிகழ்வுகளின் தாக்கத்திற்குப் பலியானவர் இன்று உயிரோடு இருப்பதால் உண்மைகள் அனுபவங்களின் வாயிலாகத் தெரியவருகிறது இல்லையா. ஹோலோகாஸ்டே நடக்கவில்லை என்று எப்படிச் சொல்லுகின்றார்...மட்டுமல்ல இப்படிக் கொடுமை செய்த நாஸிஸ் தலைவன் எப்படி ஹீரோவாகக் கொண்டாடப்படுகின்றான். வரலாற்றையே திரித்து எழுதுபவர்கள் பல இருக்கின்றார்கள்தான். இப்போது தாங்கள் அதில் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அறிய முடிந்தது.
பதிலளிநீக்குகுடோஸ் க்ரேஸ் தாங்கள் மிக அழகாக பல நல்ல விஷயங்களைத் தமிழில் தருகின்றீர்கள். பதியப்பட வேண்டிய ஒன்று. அருமை..
ஆமாம், அதிகாரம் உள்ளவர்கள் வரலாற்றை மாற்றவே விளைகிறார்கள். யூதர்கள் சேர்ந்து மறக்கக் கூடாது என்று பரப்பி வருவதாலும் பல படங்கள் இருப்பதாலும் பரவாயில்லை..ஆனால் நம் தமிழினப் படுகொலையைப் பற்றி பேசுவாரும் பரப்புவோரும் வேதனைப்படுவோரும் குறைவுதானே!!
நீக்குமிக்க நன்றி அண்ணா மற்றும் கீதா. தொடர்ந்து ஊக்கமளித்து வருவதற்கும் நன்றி.
தளத்தின் வடிவமைப்பு மாறியிருப்பது போல் தோன்றுகின்றதே.
பதிலளிநீக்குஆமாம், பல நாட்களாக நேரமில்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். நேற்று மதுரைத்தமிழன் சகோ செய்ய வைத்துவிட்டார்..அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். :)
நீக்குசிறப்பாக அலசி எழுதியுள்ளீர்கள்
பதிலளிநீக்குஅருமை
மிக்க நன்றி ஐயா
நீக்கு