கடவுளைக் கண்டேன் (3)


 கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னாரோ இல்லையோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு கனவு காண்கிறார்கள். ஆனால் இங்கு ஒருவர், அதுதாங்க பெரிய மீசைக்காரர், கில்லர்ஜி , அதையே போட்டியாக்கிவிட்டார், கடவுளைக் கண்டேன் (1). சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது போட்டிதானே? பத்து பேரை மற்றவருக்கு முன் நாம் பிடிக்க வேண்டுமே! இதில் என் அன்புச் சகோதரி கீதா இரண்டாம் பத்தைப் பிடித்துவிட்டார்கள், கடவுளைக் கண்டேன் (2).

ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே...

ஒன்றா....ரெண்டா..ஆசைகள்! ...


இப்படியெல்லாம் பாடினாலும் இப்போ பார்த்து ஆசைகள் எல்லாம் கண்ணாமூச்சி ஏனடா என்று பாட(??!!) வைக்கின்றன. அவற்றைத் தேடிக்கொண்டிருந்த என்னிடம், "என்ன தேடுகிறாய் குழந்தாய்?" என்று கேட்டு கடவுள் வந்தார். "ஆசைகளை" என்று நான் சொன்னவுடன், "அவைதானே துன்பம் கொடுப்பவை, கேட்கும் உனக்கும், நடத்தவேண்டிய எனக்கும்" என்றார்.  "அதெல்லாம் பரவாயில்லை, எனக்கு வேண்டும்" என்று கையை காலை உதறியவுடன் "சரி, கிடைக்கட்டும், வாட்ஸ்அப்பில் அனுப்பு, உன்னை இப்படித் தூண்டி விட்ட கில்லர்ஜியை .." என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார்..கில்லர்ஜீ சகோ, எதற்கும் கவனமா இருங்க..நீங்க வேற அறுவை சிகிச்சையில் இருக்கீங்க..

எப்படியோ, ஒரு பத்தைப் பிடித்துவிட்டேன்...வாட்ஸ்அப்பில் கடவுளுக்கு அனுப்பியும்விட்டேன். இதோ அவை என்னவென்றால்

1. அட்லாண்டிக்கையும் ஆல்ப்சையும்  தாண்டிப் பறக்க இறக்கைகள் வேண்டும்.

2. இறக்கைகளுடன் தேவதைகள் என்னைச் சுற்றி வலம் வரவேண்டும். என்ன சமைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அவற்றை உடனே தயாராக என் முன் வைக்க வேண்டும்.

3. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தேவதை உதவி செய்ய, நான் புத்தகங்கள்  வாசிக்கவும் பதிவுகள் எழுதவும்  வேண்டும்.

4. அன்பாய்ப் பேச, பலகாரம் பரிமாறிக்கொள்ள அண்டை வீட்டில் ஒரு தோழி வேண்டும்.

5. பெண்களைக் கேலி செய்யாமல் மதிக்கும் உலகம் வேண்டும்.

6. மனிதன் வகுத்துக்கொண்ட பிரிவினைகள் தாண்டி மனிதம் ஓங்க வேண்டும். 

7. பரந்த புரிதல் இல்லாமல் விவாதம் புரிவோருக்குப்  புரிய வைக்க ஆற்றல் வேண்டும்.

8. தமிழர் தமிழைப் போற்ற வேண்டும், தமிழைக் கற்க வேண்டும்.

9. ஆசைகளைத் தொடர ஒரு பத்துபேர் கிடைக்க வேண்டும்.

10. சகோ கில்லர்ஜியின் கனவுகள் மெய்ப்படவேண்டும்.

ஆசைப்பட நான் அழைக்கும் நட்புகள் (கோபப்படாதீர்கள் ப்ளீஸ், நான் உங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறேன் :) ). உங்கள் ஆசைகள் பத்தைப் பட்டியலிட்டு 'கடவுளைக் கண்டேன்' என்ற தலைப்பில் உரிய எண்ணைக் கொடுத்துப் பதிவிடுங்கள். நன்றி! நன்றி!

1. டியர் தோழி மைதிலி

2. அன்பு சகோ செல்வா 

3.காணாமல் போன கனவுகள் என்று கனவுகளைத் தேடும் ராஜி அக்கா 

4. இனிய தோழி இனியா 

5. அன்புத்  தோழி அம்பாளடியாள்

6. அன்புத் தோழி தமிழ்முகில்

7. இனிய நண்பர் சகோ  ரூபன்

8. அன்பு ஐயா திருமிகு.தமிழ் இளங்கோ அவர்கள்

9. எங்கள் பிளாக் நண்பர் ஸ்ரீராம்

10. அன்புச் சகோ சாமானியன் சாம்

ஸ்ஸ்ஸ்ஸ்அப்பா...சகோ கில்லர்ஜிக்கு நகச்சுத்தி வந்ததும் வந்தது...பதிவர் நண்பர்களுக்குத் தலைசுத்து வந்துவிட்டது.. :) பதிவுகள் ஒரு சுற்று வரட்டும்!


55 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ ஆசைகள் அனைத்தும் அருமை மிகவும் ரசித்தேன் பதிவுகள் எழுதவும் தேவதை வேண்டுமா ?
    முடிவில் கில்லர்ஜியின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசையையும் ரசித்தேன் மிக்க நன்றி சகோ
    தமிழ் மணம் 1
    குறிப்பு - கில்லர்ஜி என்பதை கில்லர்ஜீ எழுதாதீர்கள் தெய்வ குற்றமாகி விடுமோ... என்று அஞ்சுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லச்சொல்ல எழுதினால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்..ஆனால் வாசித்தலையும் எழுதுதலையும் எனக்கே வைத்துக்கொண்டேன் :)
      கனவுகளை ரசித்ததற்கு நன்றி சகோ.
      பெயரை மாற்றிவிட்டேன், மன்னிக்கவும் :)

      நீக்கு
    2. அடடே இறை பயம் கொண்டு உடன் பெயரை கில்லர்ஜி என்று மாற்றியமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  2. பத்தென்ன இருபதே இருக்கிறது. யாருக்கேனும் வேண்டுமெனில் வாருங்கள் தருகிறேன்...எனக்கு ஆட்கள் தான் இல்லை ..யாரேனும் தருவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுகையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் ! உங்கள் வீட்டில் ஒரு இளைய தலைமுறைப் பிரதிநிதி இருக்கிறார். S.P. Senthil Kumar இருக்கிறார் ... சீக்கிரம் பிடியுங்கள் சகோ

      நீக்கு
  3. நான் கொஞ்சம் பயந்துட்டேன் கிரேஸ்,, சில வருடங்கள் முன்னால கடவுளைக் கண்டேன் னு தலைப்பில் நம்ம சாரு நிவேதிதா சில பல கட்டுரைகள் எழுதினார். கடவுள் யாருனு கேட்டிங்கன்னா,, நம்ம நித்யானந்தா ஒருவர் ப்ல பிரச்சினைகளை பின்னால மாட்டிக்கிட்டாரே அவரே தான்.

    சாரு எழுதிய கட்டுரை இப்படிப் போகும்..

    யாருக்கோ கேன்சர் வந்து எல்லா டாக்டரும் கைவிட்டவுடன் பகவான் நித்திட்ட அவரு போனாராம். பகவான் நித்தி அவர் உடலுக்குள் நுழைந்து அந்த கட்டியை அகற்றிவிட்டாராம் (நெஜம்மாத்தான் சொல்றேன், அப்படித்தான் அந்தக் கட்டுரை போச்சு). இதை படிச்சுட்டு கடுப்பாகி (என்னைத்தான் தெரியுமே உங்களுக்கு ), "கடவுளைக் காணவில்லை"னு ஒரு பதிவெழுதியதாக ஞாபகம். இதெல்லாம் நடந்தது நித்தி மாட்டிக்கொள்ளும் முன்பே!

    சாருவின் “கடவுளைக்கண்டேனி”ல் கடவுளைக் காணவில்லை!
    http://timeforsomelove.blogspot.com/2010/01/blog-post_30.html

    மேலே உள்ளது நான் பொறுப்பாக எழுதிய ஒரு பதிவு. அதுக்கப்புறம் நித்தி வகையா மாட்டிக்கிட்டாரு.. சாரு தளத்தில் அந்த கட்டுரைகளை எல்லாம் வைரஸ் தின்னுட்டுப் போயிடுத்துனு சாரு ஒரு கதை எழுதி அதை காணாமல் பண்ணிவிட்டார். :)

    உங்க தலைப்பைப் பார்த்ததும் இதெல்லாம் ஞாபகம் வந்துவிட்டது.. :)

    உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம் என்னனா நண்பர்களை எழுதச் சொல்லுறேன்னு என் பேரை மட்டும் சேர்க்காமல் விட்டு விடுவீங்க. உண்மையான நட்புனா இதுபோல் எனக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவிதான் கிரேஸ்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வருண், ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க. நலம் தானே?

      இந்த தலைப்பில் இப்படி ஒரு வில்லங்கம் இருக்கா? கில்லர்ஜி .......கர்ர்ரர்ர்ர் :)
      பயங்கரமான விசயமா இருக்கே..இணையத்திலும் வைரஸ் அழிச்சுடுச்சா? ஹ்ம்ம்ம்

      இந்த தலைப்பிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, சம்பந்தமில்லை, சம்பந்தமில்லை! :))

      அட, இது வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரியுதே...உங்க பேரும் நினைவு வந்தது வருண்..வேலைகளினால் அதிகம் எழுதமுடியவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தது நினைவு வந்தது...இருந்தாலும் மைதிலி இருக்காங்க, கவலைப்படாதீங்க :) (மைதிலி, நோட் திஸ் பாயிண்ட்)
      சொல்லிட்டீங்கல்ல, அடுத்த முறை முதல் பெயர் நீங்கதான். :)
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
    2. எனக்கு உண்மையிலேயே நேரமில்லை கிரேஸ். அதை நீங்க புரிந்து தவிர்த்ததுக்கு உண்மையிலேயே நன்றி சொன்னேன். அது வஞ்சகமில்லா புகழ்ச்சிதான். :)

      நீக்கு
  4. அழகான அர்த்தமுள்ள ஆசைகள்... அதிலும் உங்கள் 2 &3 வது ஆசைகள்...நம்மைப் போன்ற எழுத்துலகப் பெண்கள் அனைவருக்குமான பொது ஆசைகள்.. :))) தன்னைச் சார்ந்தும் தான் வாழும் சமூகம் சார்ந்தும்.. மனிதம் சார்ந்தும் வெளிப்படுத்தப்பட்ட ஆசைகள்... பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ஆமாம் கீதமஞ்சரி, நம் நேரத்தை அதிகமாக வீட்டுவேலைகள் எடுத்துக்கொள்கின்றனவே... இப்போதெல்லாம் எனக்கு 'வர வர சமையல் கசக்குதையா' என்று பாடத் தோன்றுகிறது. :)
      ஆசைகளை ரசித்துக் கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி தோழி.

      நீக்கு
  5. தமிழர் தமிழைப் போற்ற வேண்டும்

    உங்களுடையது ஆசை அல்ல பேராசை
    பேராசை நிறைவேறட்டும்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, பேராசைதான்..நிறைவேறினால் பேருவகை அல்லவா?
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  6. ஆசைகள் அனைத்தும் கிரேஸ் போல அழகு:) எல்லாம் ரைட்டு என்னை இப்படி கடவுளிடம் மாட்டிவிடலாமா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைய்!! நன்றி டியர். ஹாஹா கில்லர்ஜி சகோதான் தலைப்பைத் தேர்ந்தெடுத்தது..அதில் பெரிய வில்லங்கம் இருக்கு போல, வருண் பின்னூட்டத்தைப் பாருங்க. ஆனா, நான் உங்களைக் கூப்பிட்டது ஆசைகளைச் சொல்ல...

      நீக்கு
  7. வணக்கம்
    சகோதரி

    நல்ல உத்தியை கையண்டு உள்ளீர்கள்.. மந்தமாக இருக்கும் பதிவர்களுக்கு ஒரு உச்சாகம் தந்துள்ளீர்கள்... சகோதரி.. தங்களின் ஆசைகளை நான் படித்து மகிழ்ந்தேன்... நிச்சயம் எப்போது ஒருநாள் நிறைவடையும்... இந்த ஆசைகள்.... நிச்சயம் நான் தொடருகிறேன் ... த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      இதை ஆரம்பித்துவைத்தது சகோ கில்லர்ஜி அவர்கள் :)

      வாழ்த்திற்கும் தொடர்வதற்கும் நன்றி சகோ

      நீக்கு
  8. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இறைவனைப் பத்து பத்தாக பிடித்தது போக, இப்போது கில்லர்ஜியின் புண்ணியத்தில் வலைப்பதிவர்களும் இறைவனைப் பத்து பத்தாக பிடிக்கத் தொடங்கி விட்டனர். உங்கள் பத்துகள் யாவும், கடல் கடந்தாலும், தமிழார்வம் மிக்க ஒரு சகோதரியின் வேண்டுகோள்கள் தாம். கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்று நம்புவோம்.

    சாமானியன் சாம் இறைமறுப்பாளர் என்று நினைக்கிறேன். உங்கள் வேண்டுகோளை ஏற்று அவர் என்ன எழுத இருக்கிறார் என்று அறிய ஆர்வமாக இருக்கிறேன்.

    சகோதரி ஆசிரியை கீதா (புதுக்கோட்டை) அவர்கள் , தனது பத்தில், உங்களுக்கு இட்ட பின்னூட்டத்திலிருந்தே, நிச்சயம் உங்களிடமிருந்து தொடர்பதிவு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து எழுதத் தொடங்கி விட்டேன். பாதி கட்டுரை எழுதி வைத்துள்ளேன். மீதியை எழுதியதும் வெளியிடுவேன். எதிர்பார்ப்பை பொய்க்காத, அன்புச் சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
      ஆஹா! முன்பே தயாரிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் ஆசைகளைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.
      சாம் சகோ ஆசைகளை மட்டும் அவர் பாணியில் பட்டியலிட்டால் போதுமே, இதைத் தான் மைதிலுக்கும் சொன்னேன் ஐயா.
      மீண்டும் மனமார்ந்த நன்றி ஐயா

      நீக்கு
  9. 7 : அந்த ஆற்றல் மட்டும் இருந்தால்... (இதுவே பலவற்றை சிந்திக்க வைக்குது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, இதை எழுதுவதற்கு முந்தைய தினம் நண்பர்களுடன் ஒரு விவாதம்...அதனால் தோன்றியது :)

      நீக்கு
  10. ஆஹா அருமையான ஆசைகள் தேவதைகளுடன் பறக்கும் காட்சி மிக அருமை......ஆசைகள் நிறைவேறட்டும்மா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...உண்மையாவே எனக்கு இப்படி இருந்தா நல்லா இருக்குமேன்னு கொஞ்ச நாளா யோசனை :)

      நீக்கு
  11. ததாஸ்து!

    அருமையான ஆசைகள்.

    நம்ம ஆசைகளையும் அடுக்கிடுவோம். வெள்ளி விடியோ, சனி பாஸிட்டிவ், ஞாயிறு ஃபோட்டோ, திங்கற கிழமை போக செவ்வாயில்தான் (கிரகம் அல்ல!) ஆசைகளை அசை போட முடியும்! ஓகேயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி!
      நானே இதையெல்லாம் பார்த்தபின் தான் உங்களை அழைத்தேன் ஸ்ரீராம். :) எப்பொழுது முடிகிறதோ அப்போது பதிவிடுங்கள்.

      நீக்கு
  12. ஒரு பதிவை தேத்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி கிரேஸ். விரைவில் பதிவாக்கிடுறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அக்கா, எவ்ளோ விசயம் எழுதுறீங்க நீங்க! :)
      பதிவிடுவதற்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ.
      உங்கள் பெயரையும் எங்கோ பார்த்தேன், உங்கள் ஆசைகளைக் காணக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  14. "ஆசையே அலை போலே,
    நாமெல்லாம் அதன் மேலே..."
    நீங்க நினைவூட்டியது போலே
    மீட்டுப் பார்க்கிறேன் ஆசை மேலே

    பதிலளிநீக்கு
  15. கடவுளைக் கண்டேன் கடவுளைக் கண்டேன் என்று எல்லோரும் எழுத ஆரம்பிச்சதும் என்னை பற்றிதான் எழுதுகிறார்கள் என்று நினைத்தேன்

    பதிலளிநீக்கு
  16. //இறக்கைகளுடன் தேவதைகள் என்னைச் சுற்றி வலம் வரவேண்டும். என்ன சமைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அவற்றை உடனே தயாராக என் முன் வைக்க வேண்டும்.//

    ஆஹா நம்ம சகோ கிரேஸுக்கு சினிமாவில் டூயட் பாட ஆசை வந்துவிட்டது..... ஹலோ பாரதிராஜா கிரேஸ் நம்மவூர் பொண்ணு நோட் பண்ணிக்கோங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட சகோ! நிஜவாழ்க்கையில் டூயட் பாட ரொம்ப ஆசைதான், சினிமாவில் இல்லை. :)))))
      சமைப்பதும் வீட்டைப் பார்த்துக்கொள்வதும் யாராவது செய்தால் நான் குளம்பியுடன் வாசித்து மகிழலாமே! அதான் இப்படிப்பட்ட ஆசை!

      நீக்கு
  17. //ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தேவதை உதவி செய்ய, நான் புத்தகங்கள் வாசிக்கவும் பதிவுகள் எழுதவும் வேண்டும்.//

    குழந்தைகளுக்காக புத்தகங்களை மிக அதிகமாக படித்தால் இப்படிதான் ஆசைகள் வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அது என்னவோ உண்மைதான்! பெரியவன் பிறந்த பத்தாம் நாளில் இருந்து அவர்களுக்காக வாசிக்கிறேன்.

      நீக்கு
    2. ஹை அட! க்ரேஸ் நானும் மகன் பிறந்ததும் அவனுக்காகவே நிறைய புத்தகங்கள் வாசித்தேன். அவன் பள்ளி செல்ல ஆரம்பித்து கற்றல் குறைபாடு (ஸ்லோ லேர்னர்/ எழுதுவதற்குக்குக் கஷ்டப்பட்டதால்) இருந்ததால் வேறுவகையாக அவனுடனேயே படித்தேன்..ஹஹஅஹ்ஹ...

      நீக்கு
    3. ஓ அப்படியா கீதா? சூப்பர்! நாம் வாசித்தது பயன் தரும்போது பேருவகை வருகிறது இல்லையா? :)

      நீக்கு
  18. ஆஹா... வேண்டும்... வேண்டும்... என ரொம்ப அருமையான ஆசைகள்...
    நிறைவேற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. கில்லர்ஜி ஆரம்பித்து நம் அனைவருடைய ஆசையையும் கேட்டு வாங்கி வேறு ஏதோ பதிவு எழுதப்போகிறார் என நினைக்கிறேன். பிற பணிகள் காரணமாக கில்லர்ஜி அழைப்பு விடுத்தும் இன்னும் அவரைத்தொடரவில்லை. தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஐயா. :)
      நேரம் கிடைக்கும்பொழுது பதிவிடுங்கள் ஐயா, காத்திருக்கிறோம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  20. சகோதரி அவர்களுக்கு! ”கடவுளைக் கண்டேன்” தொடர்பதிவில், உங்கள் பட்டியலில் எனது பெயரையும் சொல்லி இருந்தீர்கள். நானும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால் எழுதச் சொன்ன நீங்களே, ( மற்ற பதிவர்களுக்கு எல்லாம் கருத்துரை எழுதும்போது ) எனது பதிவினில் மட்டும், இன்னும் உங்களது கருத்துரையைச் சொல்லாமலேயே இருக்கிறீர்கள் என்பதில் எனக்குள் ஒரு குறையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை வருந்த வைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன் ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவைக் காணவில்லையே என்று டாஸ்போர்டில் கூடப் பார்த்தேன், தளம் வந்து பார்க்காமல் போய்விட்டேன். (ஏனோ டாஸ் போர்டில் வரவில்லை). கணினியில் அமர நேரமில்லாமல், பிள்ளைகளைக் கூப்பிடக் காத்திருக்கும் நிமிடங்கள், அவர்கள் கொஞ்சம் பாடம் முடிக்கும் நிமிடங்கள் என்று இணையம் எட்டிப் பார்ப்பேன். அதுவும் வார இறுதியில் இன்னும் கடினம்..இருந்தாலும் இடையில் எட்டிப் பார்க்கத்தான் செய்தேன்..பலரின் தளங்களை சில நாட்களாய்ப் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே , என் பின்னூட்டங்களில் பதில் கொடுக்க வில்லையே என்று இங்கு வந்துவிட்டேன். தாமதமாக அதைச் செய்த நேரத்திலேயே நீங்கள் வெளியிட்டும் இருக்கிறீர்கள்,,அது தெரியாமல் போய்விட்டது எனக்கு. வேலைகள், கவனப்பெயர்ச்சிகள் தான் காரணமே தவிர வேறொன்றும் இல்லை ஐயா. எப்படியோ என் தவறுதான், மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா.

      நீக்கு
  21. கிரேஸ்3 வதுஆசை எனக்கும் பிடிச்சிருக்கு ஆசைகள் நிரைவேற் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. முதலில் வருவன கவித்துவமான கனவுகளுடனான ஆசைகளில் தொடங்கி உலகியல் சார்ந்த கனவுகளுக்கு அப்படியே ஸ்லோ மோஷனில் செல்லுவது அருமை....ஆசைகள் அனைத்தையும் கில்லர்ஜியிடம் கொடுத்துவிடுங்கள்....அவர் நிறைவேற்றப் பார்த்துக் கொள்வார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா..ஆமாம் ஜி பார்த்துக்கொள்வார். உங்கள் பதிவினை ரசித்தேன் :)

      நீக்கு
  23. ஆசைகள் அனைத்தும் அருமையான ஆசைகள். கனவு மெய்யப்படட்டும்

    பதிலளிநீக்கு
  24. உங்களின் நான்காவது ஆசை மட்டும் நியாயமானதாகவும் , நிறைவேறக் கூடியதாகவும் தோன்றியது கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரி...

    திருவிளையாடல் தருமியிடம் " வலையுலகில் பிரிக்க முடியாதது... ? "

    எனக்கேட்டால் " சாமானியனும் தாமதமும் ! "

    என பதில் வரும் அளவுக்கு என் பாடு மோசமாகிவிட்டது ! மன்னிக்கவும் !

    என்னையும் மனதில் நிறுத்தி, மதித்து இந்த சுழற்சி பதிவில் குறிப்பிட்டமைக்கும், அழைத்ததற்கும் நன்றிகள் பல.

    முறையாக பதிவெழுதி, என் பங்குக்கு பத்து பேருக்கு அழைப்பு ( " பிள்ளையார் சுழி " கில்லர்ஜீ சார்பில் பாக்கு வெற்றிலையுடன் ! ) அனுப்பும் அளவுக்கு நேரம் இல்லாததால் என் பத்து ஆசைகளையும் பின்னூட்டமாக தருகிறேன் !

    சுயநல ஆசைகள் ஐந்து !

    1. தமிழ் வலைப்பூக்கள் அனைத்தின் பதிவுகளும் நான் படிக்காமலேயே என் புத்திக்குள் ஏறி அவற்றை பற்றிய என் கருத்துகள் தானாகவே அந்தந்த தளங்களில் பதிய வேண்டும் !

    2. அன்றாட செலவுக்கு நூறு யூரோ டாலர்கள் என் சட்டைபையில் ஒவ்வொரு நாளும் தோன்ற வேண்டும் !

    3. நானறியாத மொழிகளின் இலக்கியங்கள் நானறிந்த மொழி புத்தகங்களாக மாறி எனக்கு கிட்ட வேண்டும் ! அவற்றை படிக்க நேரமும் வேண்டும் !

    4. என் பள்ளி காலம் முழுவதும் என்னுடன் படித்த நண்பர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் சந்திக்கும்படியான ஒரு " கெட் டுகெதர் " அமைய வேண்டும் !

    5. வலைப்பூ நட்புகள் அனைவரையும் ஈபிள் டவருக்கு கீழே அமைந்த பூங்காவில் சந்திக்க வேண்டும் ( நல்லதொரு வெயில் நாளில் ! )


    பொதுநல ஆசைகள் ஐந்து !

    1. ஜாதி, மத, பிராந்திய, மொழி சார்ந்த பிரிவினைகளும், மோதல்களும் சட்டென மறைந்து, பூகோள எல்லைகள் மீறி மனிதம் தழைக்க வேண்டும்.

    2. இந்த பூமியின் அனைத்து உயிர்களுக்கும் அன்றாட தேவைக்கான உணவும் நீரும் தானாக கிடைக்க வேண்டும் !

    3. ஆண்கள் அனைவரும் பாலியல் வக்கிரங்களை மறந்து, பெண்களை சக உயிரியாய், சமமாய் மதித்து நேசிக்க வேண்டும் ! பெண்களும் " ஆண்கள் இல்லாத உலகம் " என்றெல்லாம் " ஓவர் பெண்ணிய பட்டிமன்றம் " நடத்தாமல் இயல்பாக வேண்டும் !

    4. மனித குலத்தால் சீரழிக்கப்பட்ட பூமியின் இயற்கை வளங்கள் அனைத்தும் பழைய இயல்புக்கு திரும்புவதுடன் அவை மீன்டும் மனிதனால் அழிக்கப்பட முடியாத நிலை தோன்ற வேண்டும் !

    5. இணையம் தொடங்கி, செல்போன், ஸ்மார்ட்போன் இத்யாதி இத்யாதிகள் அனைத்தும் இரவு பத்து மணிக்கு செயலற்றுபோய் காலை ஆறுமணிக்கு செயல்பட தொடங்க வேண்டும் !

    மீன்டும் தாமத்துக்கு மன்னிக்கவும் சகோ ! நன்றிகள் பல

    சாமானியன்




    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...