வானத்தின் சினத்தால் துயருற்ற பூமி தன் எதிர்ப்பைக் காட்டக் கரும்போர்வை போர்த்திக்கொண்டிருந்தது.
படம்:இணையம் |
வாகனத்தில் வீட்டிற்குச் செல்ல அரைமணி நேரமாகும். இதில் முதல் பத்து நிமிடங்கள் பரவாயில்லை. நான்கு வழிச்சாலைகள்,போக்குவரத்து சைகைவிளக்குகள் என்று கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. அதிலும் நேற்று வாகனங்கள் குறைவு, என்ன காரணமோ! பிரதானச் சாலையிலிருந்து வலப்புறம் திரும்பினால் இதோ மேலே இருப்பது போன்ற சாலை. சாலையின் நடுவில் கொள்ளிக் கண்கள் வேறு. இருபுறமும் மரங்கள். இருட்டைக் கிழித்துக்கொண்டு இசையை ரசித்துக்கொண்டே சென்ற எனக்குத் திடீரென்று ஒரு சந்தேகம். நான் செல்வது சரியான சாலைதானா என்று! பின்னே, என் சிறுத்தையைத் தவிர வேறு வண்டி எதுவும் இல்லை. ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தால் மையிருட்டு, முன்னால் பார்த்தால் என் வண்டியின் ஒளி மட்டும். பிள்ளைகள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டு வந்தார்கள். என் கற்பனைக் குதிரை பாயத் துவங்கியது. எல்லாம் ஒரு தாக்கம், மேலே படியுங்கள் புரியும்.
வழியெங்கும் என் முன்னால் சிலஜோடி நெருப்புக் கண்கள் சாலையிலிருந்து எட்டிப் பார்த்தன. ரொம்பக் கோபம் இல்லை போல, அதனால் சிவப்பாய் இல்லாமல் மஞ்சளாய்! பயந்துருவேனா? எத்தனை பேய்க் கதை சொல்லியிருக்காரு நம்ம நண்பர் சீனுகுரு ஸ்ரீனி! ஆவியும் நம்ம நண்பர். பிறகென்ன, திடங்கொண்டு போராடு என்று நினைத்துக் கொண்டே வண்டியை ஓட்டினேன்.
ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தால்....தன் கூரியப் பற்களைக் காட்டிக்கொண்டு ஒரு டிராகுலா பின்னால் துரத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. நான் வேகமெடுத்தால் அதுவும் எடுத்தது, நான் மெதுவாகச் சென்றால் அதுவும் பதுங்கியது. ஆஹா, அந்தப் பயம் இருக்கட்டும், இன்றைக்குப் பார்த்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டேன்.
படம்:இணையம் |
ஒரு ஸ்டாப் சைகை இருக்கும் நிறுத்தத்திற்கு வந்தேன். வண்டி ஏதும் வருகிறதா என்று பார்த்துவிட்டு இடதுபக்கம் திரும்ப வேண்டும். வண்டிகள் வரும் வேளையில் எடுத்துக்கொள்வதை விட சில துளிகள் அதிகம் எடுத்துக்கொண்டேன். இருட்டை ஊடுருவிச் செல்லும் தன்மை ஒளிக்கு மட்டுமல்ல நமக்கும் உண்டு என்று உணர்ந்தேன். அப்படி ஒரு இருள்!
அதன் பிறகு முன்னால் எழும்பிக் கொண்டிருந்த கொள்ளிக் கண்களை பார்த்துக்கொண்டே, சாரைப் பாம்பாய் வளைந்து நெளிந்த சாலையில் என் சிறுத்தையைத் தட்டிவிட்டேன். இடையில் சாலை வேலை நடப்பதால் தற்காலிக சிக்னல் ஒன்று. அது வேறு இரத்தச் சிவப்பாய் ஒளிர்ந்தது. வண்டியே இல்லாத நேரத்துல சிக்னல் வேற! இடையில் பெரியவன் அழைத்தான், "அம்மா, ஏன் அமைதியா இருக்க?" "பாட்டுக் கேட்குறேண்டா செல்லம்." ஷ்ஷ்ஷ் :)
அப்பாடா முக்கியச் சாலையில் சேர்ந்து விட்டிற்குச் செல்லும் சாலையில் திரும்பினேன். அது என்னவோ நேற்று பார்த்து ஒரு வீட்டிலும் விளக்கில்லை..ஹாலோவீனிற்குச் செய்த பேய் அலங்காரங்களையும் எடுக்கவில்லை..கர்ர்ர்ர்
ஞாயிறு அன்று எடுத்த படம் |
ஞாயிறு அன்று எடுத்த படம் |
வீட்டிற்குள் வந்து கோட்டையும் ஷூவையும் கழட்டிவைக்கும் வரை அமைதியாய்ச் செய்துவிட்டு ஓடிச்சென்று என்னவரின் தோள் சாய்ந்தேன். இருள் கவ்வும், ஆனால் ஒளி மீட்கும்.
இப்படியொரு பதிவை என்னிடமிருந்து எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சீனுவின் கதைகளைப் படித்து படித்து எனக்கும் இப்படித் தோன்றிவிட்டதே, என்ன ஒரு இன்ஸ்பிரேஷன்!! :)
என்னங்க இரவு நேரத்தில் இப்படி ஒரு திகில் பதிவு போடுறீங்க ( இப்பெல்லாம் 5.30 மணிக்கே இருட்டிவிடுகிறது) எங்க வீட்டு அம்மா வேற இல்லை இப்ப தனியாக இருக்க பயமாக இருக்குங்க. இனிமே இது மாதிரி பதிவு எழுதினா வார்னிங்க் முதலில் கொடுத்துவிட்டு எழுதுங்க
பதிலளிநீக்குஉடனடி வருகைக்கு நன்றி சகோ.
நீக்குஹாஹா இன்றைக்கு ஐந்தரைக்குப் போட்டதற்கு சந்தோசப்படுங்கள், நேற்று பத்து மணிக்குப் பதியலாம் என்று நினைத்தேன், தோசை உங்களைக் காப்பாற்றிவிட்டது :-)
உஷ்!... அப்பா..! கொஞ்சம்.. கொஞ்சமென்ன.. திறில்லாகவே இருந்தது தோழி!
பதிலளிநீக்குநெஞ்சு படக்படக்கென அடித்துக்கொண்டது! நானும் ஹொரோர் ஃப்லிம் பார்த்திருக்கின்றேன்.. பார்ப்பேன். ஆனாலும் இப்படிப் பயப்படுவதில்லை.
நீங்கள் எழுதியவிதம் உங்களருகில் நானும் பயணித்து உணர்ந்ததுபோல இருந்தது.
எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்!
அச்சச்சோ உங்கள பயமுறுத்திட்டேனா..
பதிலளிநீக்குநான் நேற்று பயப்படவில்லை தோழி, சும்மா ஶ்ரீனி மாதிரி எழுதலாம் என்று நேற்று வரும்போதே தோன்றிவிட்டது :-) ஆனால் ஹாரர் படங்கள் பார்க்கமாட்டேன்.
ஒரு வேளை பதிவைப் பற்றி யோசிக்காவிட்டால் பயந்திருப்பேனோ என்னவோ. வலைத்தளம் எப்படி உதவுகிறது பாருங்கள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி
அங்கெல்லாமும் வெளிச்சமில்லாமல், அவ்வளவு இருள் இருக்கம் அளவு விளக்குகள் இல்லாமலிருக்குமா என்ன? ஆனாலும் உங்கள் கற்பனை ஜோர்.
பதிலளிநீக்குஆமாம் ஶ்ரீராம், எல்லா சாலைகளிலும் சாலை விளக்குகள் இருக்காது. வணிக வளாகங்கள், மால்கள், அருகில் இருக்கும் , அவ்வளவுதான். மற்றபடி வாகனங்களின் ஒளிதான். சாலைகளுக்கும் வீடுகளுக்கும் நன்கு இடைவெளி இருக்கும், இடையில் மரங்கள் கண்டிப்பாய் இருக்கும்.
நீக்குஇது போன்ற இருளில் ஓட்டிப் பழக்கம்தான் என்றாலும் நேற்று வாகனங்கள் இல்லாமல் இருந்தது வித்தியாசம், இல்லாவிட்டால் ஒன்றிரண்டாவது அவ்வப்பொழுது கடந்து செல்லும்.
கருத்திற்கு நன்றி ஶ்ரீராம்
ஆம் க்ரேஸ் அங்கிருந்த போது இதே போன்று ஓட்டிய அனுபவம் உண்டு. அதுவும் தனியாக...நாங்கள் சென்று சில மாதங்களே ஆகியிருந்ததால், ரோடு தப்பிவிட்டதோ என்று கூட முதலில் தோன்றியது...ஹைவேக்களில் அங்கு கும்மிருட்டுதான்....மன தைரியம் கொஞ்சம் உண்டு என்பதால் எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன். அப்போது அலைபேசியும் இல்லை எங்களிடத்தில். 14 வருடங்களுக்கு முந்தையது இது..உங்களது இந்தப் பதிவை வாசித்ததும் அது நினைவில் வந்தது...
நீக்குகீதா
நகரத்தில் மட்டுமே விளக்குகள் இருக்கும் சார். அதைத் தாண்டிவிட்டால் எங்கும் இருள் தான்!!
நீக்குநல்ல திகிலை உண்டாக்கி அடுத்து என்ன என்று யோசிக்கவைத்துவிட்டீர்கள். எதிர்கொண்ட விதம் அருமை. நன்றி.
பதிலளிநீக்குஅப்படியா ஐயா? அப்போ நான் பாசாயுட்டேன் :-)
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
த்ரில்லா ஆரம்பிச்சு ரொமாண்டிகா முடுச்சுருக்கீங்க டியர். நானும் ட்ராவல் பண்ணின மாதிரி இருந்தது!! ஸ்ரீராம் சார் கேட்ட அதே டௌட் தான் எனக்கும் வந்தது.
பதிலளிநீக்கு*"அம்மா, ஏன் அமைதியா இருக்க?" "பாட்டுக் கேட்குறேண்டா செல்லம்." ஷ்ஷ்ஷ் :)** என்ன சமாளிப்பு!! :)))))
ஹாஹா
நீக்குஓ அப்படியா டியர்?
வேற வழி? ;-) ஆனா பசங்களுக்கு நான் எதெதுக்குப் பயப்படுவேன் என்று தெரியும்..பப்ளிக்.. பப்ளிக் நாம அலைபேசியில் பேசிக்கலாம் :-)
வித்தியாசமான பதிவு சகோ!
பதிலளிநீக்குத ம 3
ஆமாம் சகோ, முதல் முறையாக இவ்வகைப் பதிவு. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குசகோதரி அவர்களே! கல்லறைத் திருவிழா (All Souls’ Day ) எதிரொலியாக இருக்கலாம்.
பதிலளிநீக்குஇருக்கலாம் ஐயா, அதுவும் சேர்ந்துதான். ஹாலோவீனிற்கு இளையவன் டிராகுலா வேசம் வேற போட்டான்....
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
நன்று...!
பதிலளிநீக்குஆஹா...கிரேஸ்...
பதிலளிநீக்குபயந்துட்டேன்...
கார் ஓட்டும்போது இப்படியா சிந்திப்பது?
உண்மையில் வித்தியாசமாகத்தான் இருக்கிறது...
இன்னும் எழுதி எங்களை பயமுறுத்துங்கள்.....
///விளயாட்டாச் சொன்னேன்...அழகான விறுவிறுப்பான நடை....ஓட்டம்னும் சொல்லலாம்...
பாராட்டுக்கள்
ஹாஹாஹா
நீக்குநேற்று இப்படி சிந்தனை வந்துவிட்டதே.. :-)
மிக்க நன்றி சகோ
நல்ல திகில் அனுபவம்! அருமை
பதிலளிநீக்குசத்தியமாக எதிர்பாராத ஒரு பதிவு!!! ஆனா என்ன ஒரு த்ரில்...ஆனால் பயப்படவில்லை நீங்கள் பழகிய இடம் தானே அதனால் நீங்கள் சரியாகச் சென்றிருப்பீர்கள் என்ற நம்பிக்கை...கடைசியில் தமிழ் சினிமா போல் ஹஹஹஹ....
பதிலளிநீக்குஹெலொவின் டே , தாங்க்ஸ் கிவிங்க் டே என்று அமர்க்களமோ..
ஹாஹாஹா ஆமாம் அண்ணா ஹாலோவின் ஹாலோவின் என்று கூறி மழை வேறு பெய்து.. :-)
நீக்கு//பழகிய இடம்தானே சரியாகச் சென்றிருப்பீர்கள் என்ற நம்பிக்கை// உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா
//தமிழ் சினிமா போல்// ஹாஹா தமிழ் போல் அதுவும் இரத்தத்தில் ஊறிவிட்டதோ? :-)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஹஹஹா.. அருமையாக இருந்தது.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் திகில் கூட்டியிருக்கலாம். ஒரு Hyena வின் இனிமையான குரல் தொலைவில் கேட்டது என்றெல்லாம் போட்டால் சுவாரஸ்யம் இன்னும் கூடியிருக்குமோ? -கிளைமாக்ஸ் எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று தான் இருந்தேன். அதுவும் நன்று..
பதிலளிநீக்குஆஹா.. ஒரு கயோட்டி க்ராஸ் செய்தது என்று எழுத நினைத்து மறந்திருக்கிறேன்... :-)
நீக்கு/Hyenaவின் இனிமையான குரல்// வாவ்! இதற்குத்தான் ஆவி வேண்டும் என்பது.. :-)
நன்றி நன்றி
//எத்தனை பேய்க் கதை சொல்லியிருக்காரு நம்ம நண்பர் சீனுகுரு// அவர் கூறியது எல்லாம் அனுபவம் அல்ல "கதை" என்று சூசகமாக கூறிவிட்டீர்கள். :)
பதிலளிநீக்குஆஹா.. இது வேறயா? ( வடிவேலு பாணியில் வாசிக்கவும்) :-)
நீக்குஎப்படியோ இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டாரே!
நான் எழுதியிருப்பது கதையா அனுபவமா? :-)
நன்றாக இருந்தது... .வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குபரவாயில்லை எங்கள் கிராமசாலையில் கூட தற்போது 90 சதம் விளக்குகள் எரிகின்றன! நல்லதொரு திகில் படம் பார்த்த நினைப்பை ஏற்படுத்தியது பதிவு! நன்றி!
பதிலளிநீக்குபேய்க்கதை படிப்பவர்கள் தொடர்ந்து பேய்க்கதைகள் மட்டுமே படித்து, பெய்க்கதைகளுக்காகவே அலைந்து, அவைகள் யாரால் எழுதப்படுகின்றனவோ அவர்களும் பேயாக இருப்பார்களோ என்று
பதிலளிநீக்குசந்தெகக்கண்களுடனே பார்த்து, கொஞ்ச நாட்களில், தானும் பேயாக மாறிவிட்டோமோ என்று ஐயமுறுவதாக , பயம் கொள்வதாக,
சில மன நல மருத்துவர் சொல்கிறார்கள்.
எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிவிடுவீர்கள் என்றும் உளவியல் சொல்வதை நினைவு கொள்க.
உஷார். உஷார். எதற்கும் மோரை காய்ச்சி குடியுங்கள். இது என் பாட்டி வைத்தியம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
அச்சச்சோ சுப்புத் தாத்தா, இப்படிப் பயமுறுத்துகிறீர்களே.. ஆனால் நான் பேய்ப்படங்கள் எல்லாம் பார்ப்பதில்லை, தப்பித்தேன் :-)
நீக்குதேவையற்றது என்று நினைப்பதாலேயே இங்கு இருப்பதில்லை சகோ, கொஞ்சம் இயற்கையோடு இயைந்து.. :-)
பதிலளிநீக்குமான்கள், கயோட்டிகள்( ஒரு வகை ஓநாய் ) என்று விலங்குகளும் இருக்கும்.
குப்பைத்தொட்டியை நன்கு மூடிபோட்டு வைப்பார்களேத் தவிர மின்சார வேலியெல்லாம் போடுவதில்லை.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ
அருமை அம்மா..எனக்கு திகில் மிகவும் பிடிக்கும்..அருமையாக இருந்தது..
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குஎனக்கும் திகிலுக்கும் நெருங்க முடியா தூரம் :-)
சகோ இப்படியா ? என்னை பயமுறுத்துவது ஆத்தாடீ....
பதிலளிநீக்குகடைசியில் இவ்வளவுதானா ? அப்படினு ஆயிடுச்சு.
தமிழ் மணம் 7
ஆவியா பதிவர் சந்திப்புக்குப் போய் வந்துட்டு இப்போ பயம் என்று சொன்னால் என்ன செய்வது!! அதுவும் கில்லர்ஜீ!!
நீக்குஹாஹா நன்றி சகோ
மூனாம்ப்பு டீச்சரம்மா ஆனதுக்கு வாழ்த்துகள் பா. என்ன திகீல் னு.. சே திடீர்னு திகில் எழுத்தாளராயிட்டே? “வானத்தின் சினத்தால் துயருற்ற பூமி தன் எதிர்ப்பைக் காட்டக் கரும் போர்வை போர்த்திக்கொண்டிருந்தது“ கல்லூரிக்காலத்தில் கொஞ்சம் தமிழ்வாணன், சுஜாதா (கணேஷ் வசந்த்துக்காக) படித்ததுண்டு. இப்பல்லாம் திகில் படம்னானே ஓடடம்தான் (அவ்ளோ பயம் அதன் நேர விரயம் பாத்து) இருந்தாலும் உன் நடை ஒரே ஓட்டம்தான் அது மாய வணிக நடை நமக்கு வேண்டாம்பா.
பதிலளிநீக்குஆஹா! நன்றி அண்ணா :-)
நீக்குஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை அண்ணா, ஏதோ ஒரு பதிவு இப்படி, சும்மா..திகிலுக்கும் எனக்கும் நெருங்க இயலா தூரம். நீங்கள் சொல்லும் கனேஷ் வசந்த் யாரென்றே எனக்குத் தெரியவில்லை.
ஓ அப்படி இருக்கிறதா? ஆமாம், இது சும்மாதான் அண்ணா, இப்படியே எழுத மாட்டேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா
திர்லிங் கதை ....செம
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்குநல்லா கிளப்புறீங்க பீதியை...
பதிலளிநீக்குதிகிலோடு வாசித்தேன்....
ஹாஹா
நீக்குநன்றி சகோ
நல்ல பகிர்வு. உங்கள் அனுபவத்தினை இப்படி சிறப்பாக பதிவாக்கியமை நன்று! பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குசரிதான், ஹாலோவீன் பாதிப்பில் எழுதப்பட்ட பதிவா! நான் பலமுறை அமேரிக்கா சென்றுள்ளேன். ஹாலோவீனுக்கு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சொல்லி மாளாது! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குஆமாம் ஐயா, ரொம்ப அட்டகாசம் தான்!
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஉங்களுக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!