மூளையின் கதை - பாகம் 5


அன்று விடுமுறை, தாமதமாக எழுந்து உணவருந்திவிட்டுத்  தொலைக்காட்சியில் ஒன்றினான் நம்முள் ஒருவன்..அதுதான் அவன் பெயர்! மீண்டும் உணவருந்தி ஒரு குட்டித் தூக்கம் போட்டபின் எங்கேயாவது வெளியேப் போகலாம் என்று கிளம்பிச் சென்றவன் வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தக் காட்சியகத்தைப் பார்த்தான். கண்ணாடிக் சுவர்களுக்குள் பல வண்ணக் கார்கள். ஆஹா, போய்ப் பார்க்கலாம் என்று உள்ளே சென்றான். "மே ஐ ஹெல்ப் யூ?" என்று வந்த விற்பனைப் பிரதிநிதியிடம் விசாரித்துக் கொண்டேப்  பல கார்களையும் தொட்டும் உட்கார்ந்தும் பார்த்தான். இரண்டு வண்டிகளை ஓட்டியும் பார்த்து இறுதியில் சிவந்த நிறத்தில் எச்சரிக்கை செய்த காரை வாங்கப் பதிவு செய்து முன்பணம் கட்டிவிட்டு வந்தான்.
அவனுக்குக் கார் தேவையும் இல்லை, அதற்குத் தேவையான பணமும் இல்லை. பிறகு ஏன் நம்முள் ஒருவன் காரை  வாங்கினான்?

முந்தையப் பதிவுகளைப் படிக்க,
மூளையின் கதை - பாகம் 1
மூளையின் கதை - பாகம் 2
மூளையின் கதை - பாகம் 3
மூளையின் கதை - பாகம் 4




 நம்முள் ஒருவனின் சன்மான மையம்  reward centre) செய்த வேலை அது! ஆமாங்க, நம்ம மூளையில் தான் இந்த சன்மான மையம் இருக்கிறது. ஒரு விசயம் நமக்கு மகிழ்வு தருகிறது என்றால் இந்த சன்மான மையம் சுறுசுறுப்பாகிவிடும். நியூக்லியஸ் அக்கும்பென்ஸ் (nucleus accumbens) என்று அழைக்கப்படும் மூளையின் பகுதி இந்த சன்மான மையத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பகுதி டோபமின் (dopamine) மற்றும் செரடோனின் (seratonin) என்ற நியுரோ டிரான்ஸ்மிட்டர்களைச் (neuro transmitters) சார்ந்து செயல்படும். மூளையின் மையப் பகுதியில் இருக்கும் மகிழ்ச்சியோடுத் தொடர்புடையப் பகுதிகளோடு இணைந்து செயல்படும். வென்ட்றல் டெக்மெண்டல் ஏரியா (Ventral tegmental Area VTA) எனப்படும் மூளைத் தண்டின் மேல்பக்கம் இருக்கும் பகுதி டோபமின் ட்ரான்ஸ்மிட்டர்களை இணைத்து நியூக்லியஸ் அக்கும்பென்ஸிற்கு அனுப்பும். இதுபோலவே ப்ரீபிரான்டல் கார்டெக்ஸ் (pre frontal cortex) எனப்படும் மூளையின் முற்பகுதியும் மகிழ்ச்சியைக் டோபமின் கொண்டு செயல்படுத்துகிறது. லோகஸ் சிருலியுஸ் (locus coeruleus) எனப்படும் பகுதி போதைக்கு அடிமையாவதோடுத் தொடர்புடைய பகுதியாகும். ஒரு போதை மருந்து கிடைக்காவிட்டால் அதைப் பெற ஒருவரை எந்த எல்லைக்கும் தள்ளும் பகுதி இப்பகுதியாகும்.
அமிக்டாலா(amygdala), ஹிப்போகாம்பஸ் (hippocampus) மற்றும் இன்சுலார் கார்டெக்ஸ் (insular cortex) ஆகிய லிம்பிக் அமைப்பின் பகுதிகளும் மகிழ்ச்சி சுற்றில் முக்கியப் பங்காற்றுகின்றன. அமிக்டாலா உணர்வுகளையும் புரிதல்களையும் ஆய்ந்து சரியென்றும் தவறென்றும் சொல்லும். ஆபத்து நேரத்திலும்  இப்பகுதி செயல்படும். ஹிப்போகாம்பஸ் நினைவுகளைக் சேமித்து வைப்பதால் மகிழ்வூட்டிய விசயங்களைச் சேமித்தும் போதைப் பொருட்களை எடுக்கவும் தூண்டுகிறது. இன்சுலார் கார்டெக்ஸ் உணவு மற்றும் மனக்கிளர்வு கொடுக்கும் பொருட்களால்  மகிழ்ச்சியைத் தேடுவதில் முக்கியப் பங்காற்றுவதாகக் கருதுகின்றனர்.

நாம் ஒரு முடிவெடுக்கும் பொழுது மூளையின் முற்பகுதியில் இருக்கும் நரம்பணுக்கள் தகவல்களைச் சேகரித்து எதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க உதவுகின்றன. பெரும்பாலான சமயங்களில் உணர்ச்சிகளால் இவை தடுமாற்றம் அடைகின்றன, உதாரணத்திற்கு, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. எப்படிப் பிரிப்பது என்று நண்பர் முடிவு செய்வார். அவர் பிரிப்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் பணம் உங்களுக்கு. இல்லாவிட்டால் இருவருக்கும் கிடையாது. அவர் தனக்கு எழுநூறு  ரூபாயும் உங்களுக்கு முந்நூறு ரூபாயும் என்று சொல்கிறார். ஏற்றுக் கொள்வீர்களா?

முன் மூளை (prefrontal cortex) பணம் கிடைக்கிறதே என்று யோசித்து வாங்கிக்கொள்ளச் சொல்லும். உணர்ச்சிவசப்படும் இன்சுலா (insular cortex) அவனுக்கு அதிகம் கிடைக்கிறதே என்று நினைத்து மறுக்கச் சொல்லும். சிங்குளேட் கார்டெக்ஸ் (cingulate cortex) எனப்படும் லிம்பிக் அமைப்பின் பகுதி இருவரையும் பஞ்சாயத்து செய்து ஒரு முடிவெடுக்கும். (அப்போ, ரெண்டு பேர் சண்டை போட்டால் பின்புலத்தில் இரண்டு பஞ்சாயத்தா? பஞ்சாயத்துக்கு வேற ஆட்கள் வந்தால்?....ஸ்ஹ்ஸ்ஹப்பா :-) )

இந்த இணைப்பில் ஒவ்வொரு பகுதியும் அழகாகத் தனித்தனியாகப் பார்க்கும்படி வைத்துள்ளார்கள். ஹார்மோனல் பிரைன் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

மூளையின் கதை தொடரும்....

12 கருத்துகள்:

  1. அன்புள்ள சகோதரி,

    மூளையின் கதையென்று பல உண்மைகளை உணரச்செய்தது அருமை.

    நன்றி.
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. நலமா?தோழி,ஹிப்போகாம்பஸஎனக்கு சரியாவேலைசெய்யலையோப்பா?எதுவும்
    நினைவில் இல்லை(ஹ..ஹா..ஹா)மறதிஅதிகமாகஇருக்கிறது அருமையானபதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே தோழி ..நீங்க?
      எனக்கும் கொஞ்சம் தகராறு செய்கிறது,,வழிக்குக் கொண்டு வந்துருவோம் அடுத்தப் பதிவில் :-)
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  3. செம்ம கிரேஸ் ...சுவாரசியமாக இருக்கிறது .. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமை சகோதரியாரே
    அருமை
    தொடர்கிறேன்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. அழகாக நடத்திச் செல்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
  6. மூளையைப் பற்றிய இந்தப் பதிவு, சைக்கலாஜிக்கல், சைக்கியாட்ரி தொடர்புடைய நம் நியூரான்களைச் சொல்லும் பகுதி இல்லையா...நாம் எல்லோருமே பொதுவாக மனிதர்கள் சில சமயம் மனம் (மூளை) பிறழ்ந்து செயல்படும் போது, அது சில நொடிகளாக இருந்தாலும் சரி, பல வருடங்களாக இருந்தாலும் சரி, இல்லை வாழ்க்கை முழுவதுமானதாக இருந்தாலும் சரி, அவர்களைத்தான் குற்றம் சொல்லுகின்றோம்.....ஆனால் நமது ஒவ்வொரு செயலுக்கும் காரணம் மூளையிலிருந்துதான் பிறக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதை நாம் பல சமயங்களில் மறந்து விடுகின்றோம். அதனால் தான் மனித உறவுகளில் பிரச்சனைகள்...

    இதை வெல்லத்தான் நமது மூதாதையர்களும் சரி, மூளை நிபுணர்களும் சரி நம்மை ரிலாக்ஸ்டாடாக, ஸ்ட்ரெஸ் இல்லாமல் வைத்துக் கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றச் சொல்லுகின்றார்கள்....இதனை சைக்காலஜி, சைக்கியாட்ரி பிரிவுகள் அலசுகின்றன....இன்னும் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன மனித உணர்வுகளைப் பற்றி....மூளையைப் பற்றியும்....சமீபத்தில் கூட அமெரிக்காவில் சிசொஃப்ரினியா பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் தான்யா எனும் ஒரு பெண்மணி இந்தியாவில் மூடநம்பிக்கைகள் அதிகம் இருப்பதாகவும் இதற்குக் காரணமாக இருப்பதாகவும், அதற்கும் மூளையில் நடக்கும் மாற்றங்களுக்கும் என்ன தொடர்பு, மூளையில் ஏற்படும் ரசாயனமாற்றங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள இங்கு வந்திருந்தார். எனது குடும்பத்தில் உள்ளவர் இந்த மனச்சிதைவுக்கு உள்ளானவர் என்பதால், மனச்சிதைவு மட்டுமல்ல, ஓசிடி, ஓசிபிடி, பைபோலார், என்ற பல மன சம்பந்தப்பட்ட சாம்பிள்கள் இருப்பதால், சாம்பிளாக எடுத்துக் கொள்ளச் சொல்லி எங்கள் மருத்துவர், என்னைச் சந்திக்கச் சொல்லி தான்யாவை அனுப்பியிருந்தார். அவரைச் சந்தித்த போது நிறைய விஷயங்கள் இருவரும் பேசினோம்......அப்போதுதான் நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் பகுதியைப் பற்றியும் நாங்கள் பேசினோம்....

    அப்போது அவர் சொல்லியது, இந்தியாவில் ஒரு புறம் இத்தனை மனம் சம்பந்தப்பட்ட பிறழ்வுகள் இருக்கின்றன ஆனால் மறுபுறம் அவை கூடியவரை வராமல் இருக்கவும், வந்தால் திறம்பட நிர்வகிக்கவும் பல நல்ல தீர்வுகளும் இருக்கின்றன...தியானம், யோகா, உடற்பயிர்சிகள் போன்றவை ஆனால் விழிப்புணர்வு இல்லாததால் இங்கு இது போன்றவற்றை மிகவும் கீழாகப் பார்க்கின்றார்கள் என்பதையும் தெரிவித்தார்...

    உங்கள் பதிவிலிருந்தும் நிறைய தெரிந்து கொள்கின்றோம் க்ரேஸ்..அதுவும் என்னதான் ஆங்கிலத்தில் வாசித்தாலும் அதைத் தமிழ்படுத்தி தெரிந்து கொள்ளும் போது இன்னும் அதிகமாகப் புரிகின்றது க்ரேஸ்..மிக்க நன்றி ....அரிய சேவை செய்துவருகின்றீர்கள். ஒரே ஒரு ஆதங்கம் நம் மாணவர்களுக்கு இது சென்றடைய ஏதேனும் வழி பிறக்குமா என்பதே. பலர் தமிழ்வழிக் கல்வி கற்பதால் அவர்களுக்கு ஆங்கிலத்தில் படிக்க நேரிடும் போது புரிவது கடினமாக இருப்பதால்...

    மீண்டும்மீண்டும் நன்றி க்ரேஸ்...

    கீதா

    துளசிதரன் : மிக அழகாகச் சொல்லிச் செல்கின்றீர்கள்....தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  7. தொடர்ந்து மூளையைப் பற்றி அதிசயமான அற்புதமான செய்திகளைப் பகிர்வதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இந்த விவரங்கள் என் நினைவில் நிற்குமா, தெரியாது! என் மூளை!

    சுவாரஸ்யத் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல எளிமையான விளக்கம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...