Saturday, July 11, 2015

மூளையின் கதை - பாகம் 1


அட்லாண்டாவில் உள்ள பெர்ன்பன்க் அருங்காட்சியகம்  (Fernbank Museum of Natural History) சென்றபொழுது அங்கு இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள Brain - The Inside story என்ற மூளையைப் பற்றிய காட்சியகம் காண வாய்ப்பு கிடைத்தது. மனித மூளை எப்படி இயங்குகிறது, நம் ஒவ்வொரு செயலும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, மூளையின் பரிணாம வளர்ச்சி என்று அருமையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. மூன்று மணி நேரம் அங்கேயே ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிந்து மகிழ்ந்து வந்தோம். நானும் என் கணவரும், ஏன் என் மூத்தவன் பார்த்தது கூட ஆச்சரியமில்லை,  என் இளையவன் ஒவ்வொன்றையும் வாசித்து, செய்து பார்க்கும் படி இருந்தவற்றைச் செய்துபார்த்து, கேள்விகள் கேட்டு வியப்பில் ஆழ்த்திவிட்டான். நாங்கள் பார்த்து மகிழ்ந்ததை அப்படியே இங்கு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
வாருங்கள் மூளைக்குள் செல்வோம்..உங்க உங்க மூளைக்குள் தான் :)



மூளைக்குள் செல்கிறோம், படத்தில் தெரிவது மூளையின் நரம்பு மண்டலம்


ஆர்வமுடன் படிக்கும் அவன் வேகத்திற்கேற்ப நேரம் கொடுத்து அவசரமில்லாமல் தான் பார்த்தோம். மூத்தவன் முன்னேறும்போது அவனைத் தடுக்காமல் ஒருவர் அவனுடன் சேர்ந்து கொண்டோம்.
மூளை அணுக்கள்
மற்ற உடல் பாகங்களைப் போலவே மூளையும் பல அணுக்களால் ஆனது. இந்த அணுக்களில் பல மூளையின் இரசாயன வேதியியலை ஒழுங்குப்படுத்தி மூளையின் அமைப்பை நிர்ணயம் செய்கிறது. ஆனால் நரம்பணுக்கள் என வழங்கப்படும் சில அணுக்கள் தனித்தன்மை உடையனவாக நாம் சிந்திக்கவும், நகரவும் உணரவும் துணை செய்கின்றன.

மூளையின்  வலையமைப்பு
மூளையில் பத்தாயிரம் கோடி (10,000,00,00,000), அதாவது நூறு பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் குறைந்தது ஆயிரம் நரம்பணுக்களுடன் தொடர்பு கொள்கின்றன. இப்படி மூளையில் குறைந்தது ஒரு கோடி கோடி, அதாவது நூறு ட்ரில்லியன் (1,00,00,000,00,00,000) இணைப்புக்களாவது இருக்கின்றன. எப்படிப்பட்ட வலைப்பின்னல் நம்மை இயக்குகிறது!!


மூளையின் செயல்திறன்  வேகம் 
ஒரு நரம்பணு ஒரு நொடிக்கு ஆயிரம் சைகைகளை (signals) அனுப்புகிறது. இவை ஒரு நரம்பணுவில் இருந்து மற்றொன்றிற்குஒரு மணி நேரத்திற்கு  250 மைல் (400 கிலோமீட்டர்) என்ற வேகத்தில் விரைந்து செல்கின்றன.

















ஒரு நாட்டியத் தேர்வுக்கு முன்னும் ஆடும்பொழுதும் மூளை அனுப்பும் சைகைகள் பற்றிய ஒரு காட்சியளிப்பு செய்திருந்தனர். தேர்வுக்கு முன் ஏற்படும் படபடப்பு, மூச்சை இழுத்துவிடுவதால் ஏற்படும் அமைதி சைகைகள், பயிற்சியின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் என்று சொல்லிப் பின்னர் அந்த அமைப்பு தேர்வின் பொழுது எப்படி இருக்கிறது என்று காண்பித்தனர்.

 ஒவ்வொரு கணமும் லியா என்ற இப்பெண்ணின் மூளை மாறிக்கொண்டே இருக்கும் அவள் உணர்வுகளில் இருந்து சைகைகளை எடுத்துக்கொள்கிறது.








அதே நேரம் அவளின் மூளை அவள் உடலுக்குப்  பல்வேறு ஆணைகளை தொடர்ந்து அனுப்புகிறது.

படம் 3

படம் 4
படம் 4 இல் மஞ்சளாகத் தெரியும் பாகம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் pre frontal cortex எனப்படும் முன் மூளையில் இருக்கும் பகுதி. கிழ்ப்பகுதியில் நீலமாகத் தெரியும் பாகம் சிறுமூளைப் (cerebellum) பகுதி. இதுதான் அசைவுகளை ஒருங்கிணைக்கிறது. மேலுள்ள படத்தில் (படம் 3) பல நரம்பணுத் தொடர்புகளால் முழுவதும் நீலமாய் இருக்கும் மூளை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சமன்படுத்தப்பட்டப் பின்னர் வலப்பக்கப் படத்தில் (படம் 4) உள்ளதுபோல இருக்கிறது.

பல முறை பயிற்சி செய்யும்பொழுது மூளையின் ஒரு சில இடங்கள் தூண்டப்பட்டு சமன்படுத்தப் படுகின்றன. அதே பாகங்கள் தேர்வின் பொழுதும் அதே நிலையில் இருக்கின்றன.  அது தான் இங்கே படம் 4 இல் காண்பிக்கப்பட்டுள்ளது. . பயிற்சி செய்தால் மூளையில் பதிவாகி அழகாக வெளிப்படுகிறது என்று பார்த்து அசந்துபோனேன்.



 மூளையின் கதை தொடரும்....

மூளையின் கதை - பாகம் 2 இன் இணைப்பு

30 comments:

 1. கற்றல் என்பது புத்தகத்தில் இல்லாமல் இது போலக் களப்பயணத்தின் ஊடாக, காட்சிகளின் மூலமாக நிகழ்வது என்பது எவ்வளவு அற்புதமானது.


  நானும் மாணவனாய் மாறி படங்களோடு சேர்ந்து செய்திகளை அறிந்தது போன்ற இனிய எளிய மொழிநடையில் அமைந்திருந்தது தங்கள் விவரிப்பு.

  அருமை.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா, இவ்வாறு கற்கும்பொழுது மனதில் பசுமரத்தாணியாய்ப் பதிகிறது.
   மிக்க மிக்க நன்றி அண்ணா..

   Delete
 2. நாம் அறிவியல் பாடத்தில் மூளையைப் பற்றிப் படித்ததை விட இங்கு நீங்கள் சொல்லி இருப்பது நன்றாகப் புரிகின்றது. எப்படி ஒரு விளக்கம் படங்களுடன் செயல்பாட்டுடன்...அருமை. இப்படிக் கற்கும் போது மூளைக்குள் அதைப் பற்றிய வரலாறு செயல்பாடு எல்லாமே பதிகின்றது இல்லையா...கல்வி முறை இப்படி இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லையா?!! மூளைக்கே மூளையைப் பற்றிய தகவல்கள்..(நம் மூளையில் பதியவைக்கும் போது)

  கீதா: கலிஃபோர்னியாவில், சான்ஹோசே பக்கத்தில் இருந்த போது அங்கு சயின்ஸ் டெக் ம்யூசியம் சென்றோம்...பிரமித்துவிட்டோம். அத்தனை நுணுக்கங்களுடன்...மகன் நன்றாகக் கற்றுக் கொண்டான். இங்கு பாடத்தில் கற்றதை விட...இப்படிக் கற்பதுதான் கற்றல். இங்கு இருப்பது மனப்பாடம், அதை வாந்தி எடுப்பது....

  தொடரக் காத்திருக்கின்றோம்....மிக்க மிக்க நன்றி சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா, ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு செய்முறை என்று வைத்து, அப்படியே பதிகிறது. //மூளைக்கே மூளையைப் பற்றிய தகவல்கள் // ஆஹா! உண்மை! திருநெல்வேலிக்கே அல்வா :)
   ஆமாம் கீதா, இங்கு அருங்காட்சியகங்களைக் கண்டு பிரமித்துத் தான் போகிறோம். சான்ஹோசேவில் இருந்தீர்களா? நாங்கள் மேற்குப் பக்கம் இன்னும் போகவில்லை :)
   ஆமாம், மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பது என்று சரியாகுமோ...
   உங்கள் இருவரின் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 3. ஒவ்வொரு காட்சி அமைப்பின் விவரிப்பே வியப்பைத் தருகிறது சகோதரி...

  நன்றி தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து ஊக்குவித்துத் தொடர்வதற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

   Delete
 4. மூளையைப் பற்றி இதுவரை மூளையில் ஏறாத செய்திகள் சகோதரியாரே
  நன்றி
  தொடருங்கள் தொடர்கிறேன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா, கருத்திற்கும் தொடர் ஊக்கத்திற்கும்.

   Delete
 5. அறிவியலை மனதில் பதியும் வகையில் பகிர்ந்துகொள்ளும் விதம் நன்று.

  ReplyDelete
 6. இப்படியான கற்றல் அனுபவங்கள் கற்றலை மேலும் சுவையுள்ளதாக்கும். இல்லையா டியர்! சூப்பரா இருக்கு ! பசங்க ஆர்வத்தோட நிறைய கத்துகிறாங்க இல்ல!
  பார்க்கவே சந்தோசமா இருக்கு:)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் டியர். கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு, அடிக்கிற வெயிலில் இருந்து ஒளிந்தமாதிரியும் ஆச்சு.. :)
   ஒவ்வொரு அருங்காட்சியகம் செல்லும் போதும் இப்படி நம்மூரில் இல்லையே என்ற எண்ணம் வரும்.
   ரொம்ப ரொம்ப நன்றி டியர்

   Delete
 7. அதி முக்கியமான பதிவுகளில் ஒன்று ...
  வாழ்த்துகள்
  தம +

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா. ஒரு சிறந்த ஆசிரியரிடம் இருந்து வரும் இக்கருத்தும் மிக முக்கியம் வாய்ந்தது.

   Delete
 8. சிறப்பாக கற்றுக் கொடுக்க எத்தனை பிரயத்தனப்படுகிறார்கள்..... சாதாரணமாக படித்துக் கொண்டு போவதற்கும் புரிந்து கொண்டு படிப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்.....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ, புரிந்து கொண்டால் எப்பொழுதும் மறக்காதே...
   மிக்க நன்றி.

   Delete
 9. அட இப்படியெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களா? நம்ம ஊரிலும் செய்தால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
 10. இனியதொரு பதிவு..

  மிகுந்த பொறுப்புடன் ஒவ்வொரு நிலையையும் விளக்கமாகச் சொல்லி -
  எங்களையும் - தங்களுடன் அழைத்துச் செல்கின்றீர்கள்..

  பதினொன்றாம் வகுப்பில் விருப்பப் பாடமாக உயிரியல் பயின்ற நாட்கள் இப்படித்தான் இருந்தன..

  அடுத்த பதிவுக்காக நெஞ்சம் காத்திருக்கின்றது...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.
   அடுத்தப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்..

   Delete
 11. வணக்கம்
  ஒவ்வொன்றின் விளக்கம் வியப்பாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. தேனு அப்போ இப்போ உங்களுக்கு இடமாற்றம் கொஞ்சம் பழகி ரசிக்கத் தொடங்கி இருப்பீர்கள். மிக்க மகிழ்ச்சி. பிள்ளைகளின் கல்விக்கு உகந்த இடம். அவர்களின் பாரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். மூளை எப்படி இயங்குகிறது என்பது பற்றி இப்பவே தெரிந்து கொண்டார்கள். பயிற்சி மூலம் புரிந்து கற்பது தான் சிறந்த வழி நாம் எல்லாவற்றையும் புரியாமலே மனப் பாடம் பண்ணியே காலத்தைக் கழித்து விட்டோம். 1 2 புரியாத வயதிலேயே வாய்ப்பாடு சொல்லித் தருவார்கள் நினைக்க சிரிப்பாக இருந்தாலும் நமக்கு இன்னும் மறக்கவில்லையே அல்லவா. ம்..ம் அருமையாக படங்களோடு அனைத்தையும் விபரித்து ள்ளீர்கள். நன்றிம்மா தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. இனியா, நான் தொடர்ந்து வராமல் இருந்ததைக் கவனித்து, காரணத்தையும் யோசித்து ...உங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது.
   ஆமாம், இனியா, இம்முறை எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடினமாகப் போய் விட்டது. முக்கியமாகப் பிள்ளைகளுக்கு விளையாட அருகில் ஒருவரும் இல்லை என்பது வருத்தம் தந்தது. இப்பொழுது பழகிவிட்டது.
   ஆமாம், இப்பொழுதும் செய்கிறார்கள். ஆனால் என் பிள்ளைகள் சொல்ல மாட்டார்கள் :) கொஞ்சம் யோசித்துத் தான் பதில் வரும். அதனால் என்ன? ஒன்றும் குறைவில்லை.
   உங்கள் கருத்திற்கு நன்றி தோழி

   Delete
 13. செம்ம கிரேஸ் ... அழகாக அழகு தமிழில் விளக்கி இருக்கீங்க... மூளை எப்பொழுதும் என்னை பிரம்மிக்க வைக்கிறது... நான் ஒரு 'documentary' பார்த்தேன்.. மூளை ஒரு வினாடியில் 1 Tera Byte அளவுக்கான data வை process செய்தாம் ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீனி.
   அப்படியா? நீங்களும் டாகுமெண்டரி பட்டாளத்துல சேந்துட்டீங்களா? :)

   Delete
 14. மனித மூளை ஒரு ஆச்சர்யம் தான்! கடவுளின் படைப்பை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. படத்தோடு விளக்கும்போது எந்த ஒரு விஷயமுமே மனதில் நன்றாகப் பதிந்துவிடுகிறது.
  உங்களின் விளக்கம் எளிமையாக சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்த பகுதியைப் படிக்கச் செல்லுகிறேன். பாராட்டுக்கள், கிரேஸ்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சிம்மா.
   ஆமாம், கடவுளின் படைப்பு மிகவும் வியப்பான விசயம். ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொள்வது கடினம்.
   உங்கள் கருத்துரைக்கு. தொடர்வதற்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 15. படித்தேன். அறிந்தன்.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...