மழையாகும் அன்பில் விதையாகும் சொற்கள் - ஒரு கோப்பை மனிதம்

"மகிழ்வோ, சோகமோ
அசை போடுவது இதமே....
தாயின் மடியில் புதைந்த 
கணமாய் ..."

"அழித்தாலும் மனதை 
ஊடுருவி உயிர்விக்கும்
இயற்கையாய்
உதறும் உறவுகளால் 
உதிராமல் உயிர்க்கின்றேன்
அடர்வனமாய் "

'தென்றல்' வலைப்பூவின் ஆசிரியர் மு.கீதா, முகநூலில் தேவதா தமிழ், அவர்களின் கவிதைத்தொகுப்பு 'ஒரு கோப்பை மனிதம்'. கவிஞரின் சமூக அக்கறையும் மனித நேயமும் அன்பும் கோபமும் தேவையான அளவுகளில் கலந்து ஒரு கோப்பை மனிதமாக!
என் கவிதைத் தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' , கீதாவின் 'ஒரு கோப்பை மனிதம்' இரண்டும் ஒரே நாளில் வெளியானது இரட்டிப்பு மகிழ்ச்சி. கீதாவின் கவிதை சொல்வதுபோல நூல் வெளியீடு, வலைத்தள நட்புகள் என்று அசைபோடுவது இதம் தருகிறது...


நூல் வெளியீடு முடிந்து, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு இந்தியாவிலிருந்து கிளம்பியாயிற்று, கண்ணீருடன் உறவுகளிடமும் நட்புகளிடமும் விடைபெற்று  வானூர்தியில் ஏறி, ஆசுவாசப் படுத்தியவுடன், ஒரு கோப்பை வெந்நீருடன், எடுத்தேன் 'ஒரு கோப்பை மனிதம்'. அருகமர்ந்து பேசிக் கொண்டே வந்தார் கீதா, பயணம் இனிதாக. பல கவிதைகளில் என் மனதும் இவருடன் ஒத்துப்போவது பார்த்து மகிழ்ந்தேன், வியக்கவில்லை..என் அருமைச் சகோதரியல்லவா?
ஆல்ப்ஸ் 
'பருவத்தின் வாசலில்' சிறகுகள் வெட்டப்பட்ட சிறுமிகள் பலர் கண்முன் வந்தனர். என் வீட்டில் வேலைசெய்தவரின் பெண் உட்பட.

'தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு 
வாங்க யார் கொடுப்பா காசு ?"  
தோட்டிச்சி பாட்டியைக் கவனிப்பதே பெரும் விசயம், நம் அசுத்தம் சுத்தம் செய்யும் அவரை அசுத்தமென விலகிச் செல்லும் நாம், சோப்பா வாங்கிக் கொடுப்போம்? சிறு வயதிலேயே இதைக் கவனித்து வெம்பியிருக்கிறார் ஆசிரியர்.

சுயத்தின் சின வெளிப்பாடாய் 'சுயம்'
"எனக்கு நல்லது செய்வதாய் 
என்னைக் கேளாமல் 
என்னில் குறுக்கிடும் 
சிலரைச் சொல்லமுடியாமல் 
மனதில் வெறுக்கின்றேன்.."

"சிறு குழந்தை வாழத் தகுதியில்லா 
தமிழ்நாட்டின் பெருமையென 
பேசாதீர் இனி.."
நியாயமான கோபம்! அப்படி ஒரு கொடுமை சென்றாயன் பாளையத்தில்.. 

'விடம்' தற்கொலை செய்த ஒரு பெண்ணின் சோகம் பாடுகிறது..தற்கொலை ஒரு தீர்வா? 
"இன்றில்லாத பணம் 
நாளை வரலாம்..இனி
நீ வருவாயோ ஹேமா..."
இதைப் படித்தால்  தற்கொலைகள் குறையும் என்றே எண்ணுகிறேன்.

சமூகத்தில் நடக்கும் விசயங்கள் கவிஞரின் உணர்வில் கவிதைகளாகின்றன.
'கடுதாசி வரக்காணலியே மச்சான்' , 'மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக' என்று மனதை உலுக்கும் செய்திகளும் கவிதைகளாய்!

கழைக்கூத்து, சிதைவு, கைம்மாறு என்று நச்சென்று விசயம் சொல்லும் கவிதைகள் பல. 

என்ன படித்து என்ன வேலை பார்த்தாலும், பெண்ணை இந்த உலகம் மதிப்பதில்லை..பல பெண்கள் 'எரிமலைக்குழம்பாய்' இருப்பது உண்மைதான்!
"கண்விழித்து
வகை வகையாய் வரைந்து 
கட்டிடப் பொறியியலில்
களிப்புடனே தங்கப்பதக்கம்
பெற்ற மனைவியை
வட்ட வட்டமாய் ஆடைதனை 
கண்ட இடத்தில் கழட்டி வீசுபவன் 
வட்டமாய் தோசையில்லையென்றும் 
அம்மாவின் பக்குவமாய் வாராதென்றும் 
குடும்பத்தோடு நக்கலடிக்கிறான்
எரிமலைக் குழம்பென ஆக்கி ..."
எரிமலை வெடிப்பதற்குள் உணர்ந்துகொண்டால் நலம். 

'சிப்பிகள்' நினைவு படுத்துகிறது என் வீட்டில் இருக்கும் வேம்பை..
"சலசலவென்ற சருகுகளை,
குழந்தையின் மென்மையாய் 
சிதறிக்கிடந்த நட்சத்திர பூக்களை,
கோலிக்குண்டென பச்சை முத்துகளை 
கலகலவென சிரிக்கும் 
வேம்பின் பழத்தோல்களை 
வாரி அணைக்கின்றேன் ..
சிப்பிகள் பொறுக்கும் 
குழந்தையாய் ...."
வேம்பின் ஒவ்வொரு பருவமும் அருமையாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்பா!! ஒரு சொல்லுக்குத் தான் எத்தனை சக்தி!!
"வானில் மிதந்திட
பூமியில் புதைந்திட
தேவை ஒரு சொல் 
அணிச்சமலரணைய வாழ்வில்..."

காரணத்தைத் தொலைத்துத் தொடரும் பல நம்பிக்கைகளும் செயல்களும் எத்தனை இருக்கிறது சமூகத்தில்! 
கவிஞர் சொல்லும் ஒன்று, ஆடிப்பெருக்கு.
"ஆடிப்பெருக்கில் 
நீர்ச்சுழலில் மீன் குஞ்சுகளென 
தண்ணீரில் அலைந்தாடிய 
தமிழினம்...
வண்ண மணல் பாய்விரித்து 
தலையில் நீர் தெளித்து 
கொண்டாடுகிறது 
காரணம் மறந்து..."

'போர் ' என்ற கவிதை சொல்கிறது தண்ணீரின் அருமையாய்..நீர்நிலைகளை அழித்து மனிதன் செய்யும் தவறால் வரப்போகும் பேராபத்தை!!
"பருகும் நீருக்காய்
போர் 
கடல் சாட்சி " வந்துவிடுமோ இந்த போர் என்று பயமாகவே இருக்கிறது.

'பால்யங்களின் புதையல்கள் ' அனைவருக்கும் கிட்டும் புதையல்..

வலையில் வீழ்ந்த வீண்மீன்கள் மிகப்பிடித்தது..புவியீர்ப்பு விசையால் நம் காலடி சேரும் விண்மீன்கள் எவை? சுட்டிக்குழந்தை தெரியும்..'சுட்டிக்காற்று' தெரியுமா?  மரம் ஏன் கேலியாகப் பார்த்தது? நானே சொல்லிவிட்டால் எப்படி? 

மு.கீதா அவர்களின் கவிதைகள் ஒவ்வொன்றும் சிறப்பு..மனதைத் தைத்ததும் ஈர்த்ததும் பல இருந்தாலும் எல்லாம் சொல்லிவிட முடியாதல்லவா? பிறகு நூலைப் படிக்கும் இன்பம் போய்விடுமே..

"வசிக்க
வாசி 
சுவாசி"
மேலே கேட்ட கேள்விகளுக்கும் விடை காண, வாசியுங்கள், 'ஒரு கோப்பை மனிதம்'! 

மனிதம் நிறைந்த சுவையான கோப்பை பருகிய மகிழ்வுடன்,
கிரேஸ் பிரதிபா 
kodimalligai@gmail.com


35 கருத்துகள்:

 1. அருமையான விமர்சனம்....
  வாழ்த்துக்கள் கவிஞர் கீதாவிற்கும்

  பதிலளிநீக்கு
 2. புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்
  தங்களக்கும் நூலாசிரியர், கவிஞர். கீதாவிற்கும் வாழ்த்துகள்!
  நன்றி
  த ம 3

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா!
   உங்கள் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :)

   நீக்கு
 4. வானூர்தியில் வழித்துணையாய் கீதா வந்தமர பருகிநீர்களா ஒருகோப்பை மனிதம்.ம்...ம்..ம்.. இதுவன்றோ மனிதநேயம். அருமையம்மா விமர்சனம் இருவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தோழி..நன்றி!
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 5. ஆஹா அருமையான விமர்சனம் ..நன்றி மா...நாம் சந்தித்த தருணங்கள் சந்தணமாய் வீசிக்கொண்டு மனதில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி என்னுடையது கீதா :))
   ஆமாம்..உங்கள் அன்பிற்கு நன்றி

   நீக்கு
 6. மிக சிறப்பான கவிதைகளை எடுத்தாண்டு சிறப்பான நூல் அறிமுகம்! அருமை! வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 7. கூடவே நானும் பறந்து வந்தது போல இருக்கு :)) அருமை கிரேஸ்:) அழகான விமர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டியர் ..நாம் மூணு பேரும் சென்றால் எவ்வளவு நன்றாய் இருக்கும் .. :))

   நீக்கு
 8. உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் டியர்!

  பதிலளிநீக்கு
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி ! மென்மேலும் சிறந்த படைப்புகளைத்
  தந்து இருவருமே புகழ்பெற்றுத் துலங்கவும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி! உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
   உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 10. மிக அழகான விமர்சனம்....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும் நட்புடனும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரரே
   உங்களுக்கும் சகோதரி கீதாவிற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 11. ''ஓரு கோப்பை மனிதம்'' நானும் படித்தேன்னு நினைக்கிறேன் அருமையாக இருந்தது
  நல்லதொரு அலசலான விமர்சனம் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்
  இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தேன்னு நினைக்குறீங்களா? படித்து அதைப் பற்றி எழுதியும்விட்டு ... :))
   நன்றி சகோ, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

   நீக்கு
 12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 13. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி!

  மிக அருமையான விமர்சனம்!

  இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. அருமையானதோர் விமர்சனம்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 16. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..

  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 17. இந்த புத்தாண்டு இனிதே பிறந்து இனிமையாய் வாழ குட்டீஸ், தம்பி,நீங்க,அப்பா மற்றும் சார்ந்த அனைவருக்கும் வெளிச்சமான, இனிமையானபுத்தாண்டாக இருக்க
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. விமர்சனத்திர்க்கு பிறகு வருகிறேன்

  பதிலளிநீக்கு
 19. ஒரு கோப்பையிலே....இத்தனைக்கலவைகளா? விமரிசனமே வியக்க வைக்கிறது....விரைவில வாங்கிப்பருகுகின்றேன்...சகோ!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...