Monday, March 14, 2016

போதை மருந்து..பள்ளிகள்..பலிகள்

               ஹெரோயின் போதை மருந்து தாராளமாகப் புழங்கி வந்ததும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடிமையானதும், பல இளைஞர்கள் இதனால் உயிர் இழந்திருப்பதும் வெளிவந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் போதை மருந்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன என்கிறார்கள் இதை வெளிகொணர்ந்துள்ள செய்தியாளர்கள், 4000% அதிகரித்திருக்கிறதாம்!! கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு முக்கோணப் பகுதியில் (மிகுந்திருக்கும் போதை மருந்து புழக்கம் பற்றிய செய்திகள் தற்பொழுது வெளிவந்து பெற்றோரைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

                இளைஞர்கள் உயிரிழப்பைப் பற்றி பத்திருக்கையாளக் குழு ஒன்று ஆய்வு செய்ததில் அதிர்ச்சியாக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. உயிரிழந்தப் பிள்ளைகளின் பெற்றோர் சிலர் இதைப்பற்றியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
               ஒரு மேல்நிலைப் பள்ளிப் பெற்றோருக்கு போலீசிடம் இருந்து வந்த தகவல் பகிரப்பட்டுக் கடந்த வாரம் எனக்கு வந்தது. பள்ளியின் அருகே இருக்கும் பிரபலமான உணவகத்தில் போதை மருந்துப் பரிமாற்றம் நடப்பதாகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் சொன்னது அத்தகவல். அப்பொழுதுதான் போதை மருந்து முக்கோணம் என்று சொல்லப்படும் பல பள்ளிகளை உள்ளடக்கியப் பகுதியில் ஹெரோயின் தாராளமாகப் புழங்குவது பல பெற்றோருக்குத் தெரிய வந்தது. பின்னர் செய்திகளில் வரும் விசயங்கள் அதிர்ச்சி தருவன என்று சொன்னால் அது குறைவானதே!
              பணப்புழக்கம், என்னவென்றுக் கேட்காதப்பெற்றோர் என்று பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் சமாதியானவை நாளைய தலைமுறையினரும் அவர்களின் கனவுகளும்!


             மகளை இழந்த ஒரு தாய் கதறுகிறார், "புரிந்து கொள், புரிந்து கொள் என்று சொன்னாளே, அப்பொழுது நான் காது கொடுக்கவில்லை. இப்பொழுது புரிந்து கொள்கிறேன் என்று அவளிடம் சொல்ல முடியுமா?" என்று.


             அலைபேசியும் ஐபேடும் டேப்ளட்டும் என்று பிள்ளைகள் மூழ்கியிருக்கும் சமூகத்தில் தான் வாழ்கிறோம். அதன் சாதகப் பாதகங்களையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. போதை மருந்து தேவையென்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வாசல் மிதியடிக்குக் கீழ் பணம் வைத்து விட்டால் போதுமாம். மிதியடிக்குக் கீழ் போதைமருந்தை வைத்துவிட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டுப் போய்விடுவார்களாம்.


         
                ஹெரோயினுடன் பென்டானில் (fentanayl) என்ற பொருளும் சேர்க்கப்படுகிறதாம். ஹெரோயினை விட 40-50% சதவிகிதம் அதிகம் வீரியம் கொண்ட பென்டானில் விஷத்தன்மையுடையதாம்.
              பல மரணங்கள் போதை மருந்தினால் என்றாலும் மூடி மறைக்கப் பட்டுள்ளனவாம். ஒரு குறிப்பிட்டப் பகுதியில் போலீசிடம் போதை மருந்தினால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் ஒருவரும் இல்லை என்று சொன்னார்களாம், ஆனால் செய்தியாளர்கள் ஆதாரங்களைத் திரட்டியவுடன் ஒப்புக் கொண்டுள்ளனர். செய்திகளைக் கேட்க கேட்க மனம் பதறுகிறது.
              இந்த முக்கோணம் வேண்டுமானால் வெளிநாட்டில் எங்கோ இருக்கலாம். ஆனால் உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆரோக்கியமான சமூகம் உருவாக உழைக்கும் அதே நேரத்தில் முழுவதுமாகச் சூழலை மாற்றுவது மிகக்கடினம் என்பதே உண்மை என்றாலும் , வீட்டுச் சூழல் நம் கைகளில் தான்! 


              இதுகுறித்து முகநூலில் நான் பதிந்த நிலைத்தகவலும் அதனைத் தொடரும் ஆரோக்கியமான விவாதங்களும்: 
போதை மருந்து ..பள்ளிகள்..பலிகள்!! அருகே, அறிந்தோரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில்.. அதிர்ச்சியான விசயம்!! ஹெரோயின் புழக்கம் அதிகமாம்.. என்னென்னவோ சொல்கிறார்கள்! என் மனதை மிகவும் பாதித்த விசயம் என்னவென்றால் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிட, அன்பிற்கும் அரவணைப்பிற்கும் பஞ்சமே தவிர பணத்துக்கு இல்லை என்பதே!! பல பிள்ளைகள் நம்மூரைச் சேர்ந்தவர்களாம்... 
வேலைக்குச் செல்லும் பெற்றோரைக் குறை சொல்வது என் நோக்கமல்ல, அது சரியுமல்ல நிஷா! ஆனால் பிள்ளைகளுடன் அமர்ந்து பேசி அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள அரைமணி நேரம் கூட ஒதுக்காதப் பெற்றோரைக் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். முன்வைக்கப்படும் எந்தத் தகவலும் குற்றச்சாட்டும் அனைவருக்கும் பொருந்துவது அல்லவே! சூழல் அபாயமானது என்றாலும் முழுக் குற்றச்சாட்டையும் சூழல் மேல் போட முடியாது... எந்தச் சூழலிலும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற ஆல விதையைப் பிள்ளைகள் மனதில் விதைக்க வேண்டும்.நேரமிருந்தால் இணைப்பில் இருக்கும் காணொளிகளைப் பாருங்கள். என் மகள் புரிந்து கொள் புரிந்து கொள் என்றாளே, அப்போது புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே, மகளே, இப்பொழுது புரிந்து கொள்கிறேன் என்று கதறுகிறார்! என்ன பிரயோசனம்!! மகள் இறந்து விட்டாள்.
"Oh yeah! big kid! high school..busy with friends and ipad, they don't need us anymore" என்று சொல்லும் பெற்றோரைக் கேட்டால் (
கேட்டிருக்கிறேன்! கேட்கிறேன்....) எனக்கு அப்படி ஒரு கோபம் வரும்! 
 ...
அதிகக் கண்காணிப்பும் கண்டிப்பும் தேவையில்லை. இதுவும் பிள்ளைகளை வெறுத்துத் தடம் மாறச் செய்யும். அவர்கள் வயதிற்கு இறங்கி, இவ்வயதில் நானிருந்தால் என்ன செய்வேன் என்று சிந்தித்து, பிள்ளைகளுடன் நட்புடன் பேசி நாம் எண்ணுவதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அன்றாடம் நம் செயல்பாடுகள் சிலவற்றிலும் பிள்ளைகளிடம் ஆலோசனை கேட்கலாம். அவர்கள் கருத்து மதிக்கப்படுகிறது என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும். ஓ நான் வளர்ந்த சமயத்தில் இதுபோன்று இருந்ததில்லை, அதனால் எனக்குக் குழப்பம். அதைப் பற்றி பேசிப் புரிந்துகொள்ளலாம், அம்மாவுக்குச் சொல்கிறாயா என்று கேட்டுப் பேசுவேன். ஒன்றாம் வகுப்புக் குழந்தை கூட அதிகம் சிந்திக்கும் காலம் இது. முள் மேல் நடப்பது போல்தான்..கவனமாகக் கையாள வேண்டும். பரஸ்பர நம்பிக்கையின் அடித்தளம் அமைந்துவிட்டால் பின்னர் பிரச்சனை இல்லை. ஆனால் அதை உருவாக்கும் காலங்கள் சவாலானவையே!
 
               ஆல்ப்ஸ் தென்றல் நிஷா பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என் முகநூல் இணைப்பில் வாசிக்க.  
 
ஆரோக்கியமான விவாதங்களும் சமூக ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. 


உசாத்துணை:
Inside the Triangle

Images:thanks Internet

33 comments:

 1. அதிகக் கண்காணிப்பும் கண்டிப்பும் தேவையில்லை. இதுவும் பிள்ளைகளை வெறுத்துத் தடம் மாறச் செய்யும். அவர்கள் வயதிற்கு இறங்கி, இவ்வயதில் நானிருந்தால் என்ன செய்வேன் என்று சிந்தித்து, பிள்ளைகளுடன் நட்புடன் பேசி நாம் எண்ணுவதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அன்றாடம் நம் செயல்பாடுகள் சிலவற்றிலும் பிள்ளைகளிடம் ஆலோசனை கேட்கலாம். அவர்கள் கருத்து மதிக்கப்படுகிறது என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும்

  மிகச்சரியான கருத்தும் இதுவே! நாம் அச்சூழலில் இருந்தால் எப்படிமுடிவெடுப்போம் என்பதை நம் பிள்ளையின் நிலையில் நம்மை நிறுத்தி
  முடிவெடுத்து செயல் பட வேண்டும். கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் இதே பாதையை நாமும் கடந்திருப்போம். அக்கால சூழலுக்கு ஏற்ப ஏதோ ஒரு கடினமான பாதை நம்மையும் அசைத்திருக்கும்.

  மாற வேண்டியது பெற்றோரான் நாம் தானே தவிர நம் குழந்தைகள் அல்ல எனும் தெளிவு நம்முள் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 2. இதை தான் நானும் சொல்வேன், நாமும் அதே வயதை தாண்டித்தானே வந்தோம், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு வகை புரட்சிகளும் பிரச்சனைகளும் நம்மை அலைக்கழித்து தான் இருக்கும்,அப்படி இருக்கும் போது நம் பிள்ளைகளையும் நம்மை போல் நாம் நேசித்தால் அவர்களை புரிந்து கொள்ளவே முயற்சிப்போம். சூழல் அவர்களை தடம்புரட்டுமானா பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவர்களை சரியான படி நடத்தட்டும்.

  ReplyDelete
 3. ஒரு மேல்நிலைப் பள்ளிப் பெற்றோருக்கு போலீசிடம் இருந்து வந்த தகவல் பகிரப்பட்டுக் கடந்த வாரம் எனக்கு வந்தது. பள்ளியின் அருகே இருக்கும் பிரபலமான உணவகத்தில் போதை மருந்துப் பரிமாற்றம் நடப்பதாகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் சொன்னது அத்தகவல். அப்பொழுதுதான் போதை மருந்து முக்கோணம் என்று சொல்லப்படும் பல பள்ளிகளை உள்ளடக்கியப் பகுதியில் ஹெரோயின் தாராளமாகப் புழங்குவது பல பெற்றோருக்குத் தெரிய வந்தது. பின்னர் செய்திகளில் வரும் விசயங்கள் அதிர்ச்சி தருவன என்று சொன்னால் அது குறைவானதே!///////

  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுமா இப்படி கண்காணிப்பில்லாமல் இருந்தார்கள், கையில்பணமிருந்தால் ஏன் எதற்கு என கேட்காமல் கொடுத்து விடுவார்களாமா? ஒவ்வொரு ரூபாய் பணமும் எப்படி எங்கே செலவாகும் என கேட்க வேண்டாமா? பிள்ளைகளுக்கு பாக்கெட் மணி அவசியம் தான். ஆனால் கொடுக்கும் மணிஎவ்வகையில் செலவாகின்றது என கேட்காமலா கொடுப்பார்கள்? சில நேரங்களில் அனைத்துக்கும் பெற்றோரை குற்றம் கூறுதலை நான் விரும்புவதில்லை தான், வேலைக்கு செல்வதும் உழைப்பதும் அப்பிள்ளையின் எதிர்காலத்தேவைக்கும் எனும் போது எல்லாம் பெற்றோரால் தான் என முடிவெடுக்கவும் முடியாது தான்,ஆனால் பெற்ற பிள்ளையில் மாற்றம் உணர முடியாமல்,அன்பாய் அரவணைக்க முடியாமல் பணம் பணம் என ஓடும் பெற்றோரும் மிகக்கண்டிப்புக்கு உரியவர்களே!

  பணத்தினை எப்போதும் சம்பாதிக்கலாம்?பிள்ளையை அப்படி நினைத்த போது சம்பாதிக்க முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்...ஆனால் நெறயா பேருக்கு அது தெரியலயே :(

   Delete
 4. வருத்தமான ஒன்று தான் மாணவர்கள் இன்றும் போதைக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை அழித்து வருகின்றனர் சகோ.வேதனையாக உள்ளது.என்று தான் இந்த நிலைமை மாறுமோ..!!

  ReplyDelete
 5. பரஸ்பர நம்பிக்கையின் அடித்தளம் அமைந்துவிட்டால் பின்னர் பிரச்சனை இல்லை. ஆனால் அதை உருவாக்கும் காலங்கள் சவாலானவையே!////

  மிகச்சரியான புரிதல் கிரேஸ்!காலங்கள் எனும் போது வயதெல்லை இல்லை என்றாகியும் விடுகின்றது.ஆல விதையை போட்டு மரம் வளர வளர நீருற்றி நன்கு கிளை விட்டு வளர்ந்த பின் தான் மழை நீரை நம்பி விடுவோம், அப்படித்தான் பிள்ளை வளர்ப்பும்,

  சில நேரம் நாம் இத்தனை வளர்ந்தும் நம் பெற்றோருக்கு கட்டுப்படும் நிலை உணரும் போது நம்பிள்ளைகளிலும் நம் பொறுப்பும் பொறுமையின் எல்லைகளுக்கும் முடிவே இல்லை என்றாகின்றது!

  ReplyDelete
 6. அட்லாண்டாவில் மட்டுமல்ல நீயூஜெர்ஸியிலும் அதே நிலைதான் கடந்த மாதம் நண்பரின் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்தோம் அந்த குடும்பத்தில் உள்ள பெண் 11 கிரேடு படிக்கிறார் அவரிடம் பள்ளி அனுபவத்த கேட்ட போது அந்த பெண் சொன்னது நம் இந்திய குழந்தைகள் அதிகம் எளிதில் அடிக்ட் ஆகிவிடுகிறார்கள் என்று சொன்னார் எனக்கு அந்த பெண் ஷாக்காக இல்லை.காரணம் நான் வேலை செய்வது இங்குள்ள பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள நிறுவனத்தில் அதுமட்டுமல்ல என் நிறுவனத்தில் பலர் பார்ட்டைமாக வேலை செய்வதால் இந்த தலைமுறை பற்றி அதிகம் என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது ஆனால் எனது மனைவிக்கு மிக ஷாக்கான செய்தி.


  நாம் நம் குழந்தைகளை கண்காணிப்பதைவிட அவர்களின் நண்பர்களாக மாறிவிடுவதுதான் இது மாதிரி தவறுகளில் இருந்து அவர்களை தடுக்க முடியும். அப்படி இல்லையென்றால் பின்னாளில் வருத்தப்படுவதை தவிர வேறு ஏதும் செய்ய இயலாது.

  ReplyDelete
 7. மிகவும் வருத்தமாக உள்ளதும்மா..வீட்டுச்சூழலே குழந்தைகளைக்காப்பாற்றும்..

  ReplyDelete
 8. சில சமயகளில் நம் பிள்ளைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் உடனே எனது மானம் போய்விடது கெளரவம் போய்விட்டது என்று பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் குழந்தைகளை அந்த சூழ்நிலையில் இருந்து அமைதியாக வெளிவரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. செம!! அதே அதே...இது ஒரு பெண் குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளானாலும் அதற்கும் பொருந்தும்..வழி தவறினாலும் அதற்கும் பொருந்தும்...

   கீதா

   Delete
 9. பிள்ளைகளை நாம் கண்காணிக்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் கண்கொத்தி பாம்பாக இருந்துவிடவும் கூடாது குழந்தைகளுக்கு நாம் சுதந்திரம் கொடுக்கவேண்டும் நாம் அந்த காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த முறையில் இப்போது நம் குழந்தைகள் அதே மாதிரி இங்கே வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. நாம் காலத்திற்கு ஏற்ப சிறிது வளைந்து கொடுத்து அதே நேரத்தில் நம் கண்காணிப்பு வளையத்தில் இருந்து அவர்கள் போய்விடாமல் பார்த்து கொள்ள் வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள் சகோ. இங்கு பள்ளி செல்லும் பிள்ளையை ஸ்லீவ்லெஸ் அணியக் கூடாது என்று கட்டுப்படுத்தும் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். அந்தப்பெண் ஸ்ரக் போட்டுக்கொண்டு போய் பள்ளியில் கழட்டிவிடுகிறாள். அவள் அம்மாவிடம் பேசியபொழுது பரவாயில்லை, அவர் அப்பா திட்டுகிறார் என்கிறார். வீட்டிலிருந்து போகும்போதும் வரும்பொழுதும் போட்டுக்கொண்டு சென்றால் போதும் என்றால் என்ன மாதிரி விழுமம் பதிக்கிறார்கள் மனதில் என்று தெரியவில்லை

   Delete
  2. அம்மா அப்பாவிற்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் குழந்தை வளர்ப்பு என்று வந்துவிட்டால் அதில் இருவருமே பகிர்ந்து கொண்டு ஒரே நிலைப்பாடை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டில் தோழமை உணர்வு இருக்க வேண்டும். இருவருமே தடா சட்டம் இயற்றினால் குழந்தைகள் வரம்பு மீறுவார்கள் அதுவும் கள்ளத்தனமாக.. ஓவர் லீனியண்டாகவும் கூடாது. குழந்தைககைச் சுயமாகச் சிந்திக்கவும் ஊக்கப்படுத்தி வளர்க்கவும் வேண்டும்.

   பெற்றோர் என்றாலும் பெர்ஃபெக்ட் கிடையாது இல்லையா...அவர்களும் தவறு செய்யலாம். எனவே குழந்தைகள் அதைச் சுட்டிக் காட்டினால் அது சரி என்றால் ஏற்றுத் திருத்திக் கொள்ள வேண்டும். "நீ என்ன எதிர்த்துப் பேசற. உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் தலையிடாத" என்று ஏகாதிபத்தியம் பேசக் கூடாது. அவர்கள் சொல்லுவதையும் கேட்கும் லிசனிங்க் மோட் பெற்றோர் நமக்கு வேண்டும்.

   ஒருவர் லீனியன்டாகவும் ஒருவர் ஓவர் கட்டுப்பாட்டுடன் இருந்தால் குழந்தைகள் சைக்காலஜி???!! ..அட்வாண்டேஜ் எடுப்பதுதான்...இல்லை கன்ஃப்யூஸ் ஆவார்கள்.

   Delete
  3. தமிழா மிகச் சரி உங்கள் நிலைப்பாடு...

   Delete
  4. மிகச்சரி கீதா மற்றும் துளசி அண்ணா

   Delete
 10. என்ன கொடுமைங்க இது...?

  சே...

  ReplyDelete
 11. உள்ளத்தைத் தொடும் அருமையான பதிவு

  ReplyDelete
 12. நான் எனது குழந்தைக்கு நல்ல சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் அதே நேரத்தில் நான் அவளுடன் செலவிடும் நேரமும் மிக மிக மிக அதிகம் பல நேரங்களில் போதை பொருட்கள் பற்றி விவாதித்து இருக்கிறோம் அது பற்றிய படங்களை பார்த்து அதனால் விளைவுகளை பற்றி விவாத்திது இருக்கிறோம். அதே நேரத்தில் ஜீனியர் போலீஸ் அகடமியில் அவளை சேர்த்து இருக்கிறோம் இது சம்மர் லீவில் நடக்கும் ஒரு புரோகிராம் ஆகும் இது மிகவும் பயனளிக்கிறது அங்கு பல விஷயங்களை கற்று கொடுக்கிறார்கள். பல இடங்களுக்கு கூட்டி செல்லுகிறார்கள் . இந்த நிகழ்வில் போதைக்கு அடிமையாகி திருட்டு தொழிலில் ஈடுப்பட்டு இப்போது சிறையில் வாழ்பவர்ளை கூப்பிட்டு அவர்களின் அனுபவங்களை எடுத்துரைக்க வைக்கிறார்கள் அதுபோல பொதையால் ஏற்படும் விபத்துகளையும் அதனால் பாதிப்படைந்த வாகனங்களையும் , பல உடல் உறுப்புகளை இழந்தவர்களிடம் அழைத்து சென்று பாதிப்பை எடுத்துரைக்கிறார்கள்..இந்த புரோகிராம் பற்றி பல இந்தியர்களுக்கு தெரியவே இல்லை. இதை படிக்கும் அமெரிக்க வாழ் நண்பர்கள் யாரும் இருந்தால் உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிகளில் அல்லது டவுன்சிப்பில் இது மாதிரி புரோகிராம் இருக்கிறதா என்று கேட்டு அதில் சேருங்கள்.... இந்த புரோகிராம் நீயூஜெர்ஸி மாநிலத்தில் பல டவுன்ஷிப்பில் நடை பெறுகிறது

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நல்ல விஷயம் சகோ. உண்மைதான், நம்மூர் மக்கள் இதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. குமான், அபாகஸ் என்று தான் பெரும்பாலும் யோசிக்கிறார்கள். நாங்களும் பிள்ளைகளுடன் எதைக் குறித்தும் விவாதிப்போம்.
   ஜீனியர் போலீஸ் அகடமி பற்றிய தகவலுக்கு நன்றி சகோ. இங்கு பள்ளியில் இல்லை, ஆனால் சர்ச்சில் இருந்து cub scout மூலமாக அறிந்திருக்கிறோம் .

   Delete
  2. மிக மிக நல்ல விஷயம் தமிழா. ஜூனியர் போலீச் அகடமி என்பது மிகச் சிறந்த ஒன்றாக இருக்குறதே!! சூப்பர் தமிழா...

   இங்கும் சரி பெற்றோர்கள் எப்போதும் படிப்பு, ட்யூஷன், அபாகஸ், என்றுதான்...கணக்குப் பயிற்சி குறைந்த நேரத்தில் எவ்வளவு பதில்கள் எழுத முடியும் என்றெல்லாம்...

   துளசியின் குழந்தைகள் கேரளத்தில் குட்டிப் போலீஸ் என்று சொல்லப்படும் பிரிவில் இருக்கிறார்கள். ஸ்கௌட் போன்ற ஒன்றுதான்.

   They help regulate traffic and check minor crimes. They’ve made eve-teasers and drug peddlers disappear and stopped cigarettes and gutkhas from being sold near schools. And word of their effectiveness is spreading in the country.
   They are the ‘kutty police’ (little policemen) of Kerala — schoolchildren aged between 14 and 18.
   It all started as an experiment in August 2010 by then Kozhikode commissioner P Vijayan. Today, the Student Police Cadets (SPC) is an 11,000-strong force across 127 schools in the state.
   Dressed in khakis, they can be seen patrolling around schools morning and evening. They receive training from teachers trained as school-level community policing. Their lessons include physical training and awareness of social maladies and crime.

   Delete
  3. வரவேற்க்கதக்க செயல் பாடு ...மாணவர்கள் மகிழ்வோடு ஈடுபடுவார்கள் ...


   ஆனால் இப் பொழுது பல பள்ளிகளில் scot செயல்பாடே இல்லை ... என்ன செய்வது ....

   Delete
 13. வருத்தம் தரும் விஷயம். தலைநகர் தில்லியிலும் இது போன்று மாணவர்கள் பலரும் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள் -பணம் படைத்தவர்கள் ஹெராயின் போன்றவற்றை பயன்படுத்த, மற்றவர்கள் வேறு போதைப் பொருட்களை....

  ReplyDelete
  Replies
  1. வேதனையான விசயம் அண்ணா.. ஏன் இப்படி வழிமாறிப்போகிறார்கள் என்று வருத்தமாக இருக்கிறது.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
 14. நல்ல விழிப்புணர்வுப்பதிவினைத் தந்துள்ளீர்கள். பெற்றோரின் பங்களிப்பும், ஆசிரியர்களின் பங்களிப்பும் மாணவர்களை நல்வழிக்குக் கொணர உதவும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வது தான் என் எண்ணமும்.,

   Delete
 15. அருமையான விழிப்புணர்வுப் பதிவு க்ரேஸ். பிள்ளைகளைக் கண்ணில் விளக்கெண்ணை போட்டுக் கொண்டு தடா போட்டு வளர்த்தலும் நல்லதல்ல...கவனிக்கப்படாத ஓவர் சுதந்திரமும் நல்லதல்ல. நாம் அந்தக் காலத்தில் வளர்ந்த விதம் வேறு. எந்தவித ஊடகமும் இப்போது போல் இல்லை. அலைபேசிகள் இல்லை அதுவும் இப்போது வித விதமாக.. எனவே இப்போதுள்ள சூழலுக்கு ஏற்றாற் போல் பெற்றோர்கள் தங்களை மாற்ற்கி கொண்டு பிள்ளைகளின் லெவலுக்கு இறங்கித் தோளில் கை போட்டுத் தோழமையுடன் வளர்த்தாலே இது போன்ற பிரச்சனைகள் எழுவதில்லை.

  என்னிடம் ஆலோசனைகள் என்று நட்பு வட்டத்தில் வரும் பெற்றோருக்கு நான் அடிக்கடிச் சொல்லுவது. சிறு வயதிலிருந்தே உங்கள் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குத் தெரியாது என்றோ. இல்லை ஏய் சும்மாரு தொண தொணக்காத என்றோ, இது உன் வயசுக்கு ஏத்தது இல்ல உன் வயசுக்கு ஏத்தா மாதிரி பேசு என்றோ சொல்லாதீர்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக சரியான அறிவியல் சார்ந்த பதில் அளியுங்கள். தெரியவில்லை என்றால், தெரியவில்லை இதோ நானும் தெரிந்து கொண்டு உனக்கும் சொல்லுகின்றேன் என்று தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும். படித்தவர்கள் என்றால் இதைச் செய்ய வேண்டும். நூலகம் அழைத்துச் சென்று நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள் நீங்களும் கூடவே இருங்கள். இல்லை வீட்டில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி நீங்களும் அவர்களுடன் புத்தகம் வாசித்து அதற்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள் என்பேன். அவர்களுடன் விளையாட வேண்டும்.

  படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுக்குச் சொல்லுவது விளையாட்டு. குழந்தைகளுடன் விளையாடச் சொல்லுவது. அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிக்க முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொளல் என்று.

  நல்ல நல்லொழுக்கக் கதைகளை உணவு கொடுக்கும் போதே, தூங்க வைக்கும் போதே சொல்ல வேண்டும் சிறு வயதிலிருந்தே. அவர்களுடன் நாம் அதிக நேரம் செலவழிக்க முடியாத சூழலிலும் கூட க்வாலிட்டி டைம் ஒதுக்க வேண்டும்.

  அதே போன்று குழந்தைகள் குறிப்பாகப் பருவ வயதில் இருக்கும் குழந்தைகளிடம் சொல்ல வேண்டியது, அவர்களுக்கு வரும் சில உடல் சார்ந்த கேள்விகள், சந்தேகங்கள், சில திரைப்படங்கள் பார்த்து எழும் செக்ஸ் சார்ந்த கேள்விகள் குழந்தைப் பிறப்பு, பெண் குழந்தைகளிடம் பீரியட்ஸ் பற்றி, அதே போன்று ஆண் குழந்தைகளிடம் அவர்களுக்கு ஏற்படும் பருவ மாறுதல்கள் பற்றி எல்லாம்பெற்றோர்கள் பேசுவதற்குத் தயங்கக் கூடாது. அறிவியல் பூர்வமாகச் சரியாக விளக்க வேண்டும். அதில் பூசி மெழுகவோ, தயக்கத்தில் கண்டதையோ உளறல் கூடாது.

  அதே போன்றுதான் அந்தப் பருவ வயதில் ஆரம்பிக்கும் கெட்ட பழக்கங்கள், சகவாசங்கள் குறித்தும் தோழமையுடன் பகிர்ந்தால் பிரச்சனைகளைச் சமாளித்து விடலாம். குடும்ப உறவுகள்ம் நண்பர்கள் குடும்பங்கள் என்று நாம் அவர்களை ஈடுபடுத்தவும் வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தனிமை கூடாது. இன்னும் நிறைய பேசலாம் இதைப் பற்றி.

  ஆசிரியர்களின் பங்களிப்பும் இதில் நிறைய உண்டு. மேலே சொன்ன குழந்தைகளின் கேள்விகள் கேட்டல், பதில் சொல்லல் என்பது முக்கியாக

  மொத்தத்தில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலே போதும். சிறு வயது முதலே. தோழமை பெற்றோர் குழந்தைகள் என்றில்லை...எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். கணவன் மனைவியும் தோழமையுடன் நல்ல பெற்றோராக, குழந்தைகள் முன் வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல், தோழமை உணர்வுடன் இருந்தாலே போதும் குழந்தைகள் அவர்களிடமிருந்து பாடம் கற்க. நிறைய பேசலாம். இதுவே பதிவு போல் ஆகிவிட்டது என்பதால் இங்கு நிறுத்திக் கொள்கின்றேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கீதா. உங்கள் கருத்து அனைத்தும் எனக்கும் ஒத்துப் போகிறது. //சிறு வயதிலிருந்தே உங்கள் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குத் தெரியாது என்றோ. இல்லை ஏய் சும்மாரு தொண தொணக்காத என்றோ, இது உன் வயசுக்கு ஏத்தது இல்ல உன் வயசுக்கு ஏத்தா மாதிரி பேசு என்றோ சொல்லாதீர்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக சரியான அறிவியல் சார்ந்த பதில் அளியுங்கள். தெரியவில்லை என்றால், தெரியவில்லை இதோ நானும் தெரிந்து கொண்டு உனக்கும் சொல்லுகின்றேன் என்று தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும். // இதையே தான் நானும் சொல்வேன்.. இதுவரை பின்பற்றியும் வருகிறோம். அதுபோலவே வாசித்தலும். மகன் வயிற்றில் மூன்று மாதக் கருவாய் இருந்தபோதிலிருந்து தொடர்ந்து தினமும் வாசிப்பேன். இப்பொழுது ஓராண்டாகத் தான் குறைந்திருக்கிறது.
   தோழமை உணர்வு வீட்டில் இருந்தாலே பிள்ளைகள் ஜொலிப்பார்கள். ஆழ்ந்த அருமையான கருத்திற்கு மனமார்ந்த நன்றி கீதா.

   Delete
 16. வேதனைக்குறிய விடயம் சகோ

  ReplyDelete
 17. நாளைய தலைமுறை குறித்த விழிப்புணர்வோடு மிகவும் அத்தியாவசியமான அலசலும் தீர்வுகளும். அருமை கிரேஸ். இங்கு ஆஸியில் என் மகன் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே போதைப்பொருட்கள் பற்றிய வகுப்பெடுத்து அசைன்ட்மெண்ட் எல்லாம் கொடுத்தார்கள். அவற்றின் அபாயங்களை விளக்குவதோடு எப்படி அத்தகைய சூழல்களைக் கையாள்வது என்றும் அறிவுறுத்தினார்கள். நாமெல்லாம் அவற்றைப் பற்றி பிள்ளைகளோடு பேசுவதையே பாவமாக நினைக்க, பிள்ளைகளிடம் அவற்றைப் பற்றிய தெளிவை உண்டாக்குவதுதான் நல்லது என்ற முடிவில் பள்ளிகள்.. ஆரம்பத்தில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவை செய்வது சரிதான் என்று பிறகு புரிந்தது. இப்பதிவு குறித்த நட்புகளின் பின்னூட்டப் பார்வைகள் கூடுதல் சிறப்பு.

  ReplyDelete
 18. மனத்திற்கு மிகவும் வருத்தமான நிகழ்வுகள் ...ஆராய்ந்து மனதை திறந்து செயல்பட வேண்டும் ...

  நல்ல விழிப்புணர்வு பகிர்வு ...

  ReplyDelete
 19. We cant blame parenting alone for these kind of habits , but a good parent can help his/her child to overcome addictions . பொதுவாக குழந்தைகளுடன் பெற்றவர்கள் வாழ்க்கைப் பற்றிய புரிதல்கள் சம்பந்தமான பேச்சுகளை மிக ஆரம்ப வயதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், தொடர வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் நல்ல நன்பனாக, ஆசானாக இருக்க வேண்டும், தலைமுறை இடைவெளிகள் என்பதை பொய்யாக்கி புரிந்துண்ர்வுடன் காலத்திற்கேற்ற Adoptive mind உடன் குழந்தைகளுடன் சேர்ந்து Update ஆக வேண்டும், எந்த நேரம் பார்த்தாலும் செல்போனையும்,லேப்டாப்பையும்,சிஸ்டத்தையும்,.... நோண்டிக்கிட்டே இருக்கான் னு குழந்தைகளை குறை சொல்லாம, Why he avoids parents என்பதற்கான காரணத்தை கண்டறிந்து களைய வேண்டும். வாழ்க்கையில் பிடிமானம் இல்லாதவர்கள் தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்பது என் கருத்து .

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...