Monday, January 20, 2014

ஐங்குறுநூறு 17 - புதர் மேலாடும்

ஐங்குறுநூறு 17 - ஓரம்போகியார் 
மருதம் திணை - தலைவி தலைவனைப் பற்றி சொன்னது
"புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே"


எளிய உரை: வானில் பறக்கும் வெண்குருகுகளைப் போல புதர்களின் மேலே நாணலின் வெண்மையானப் பூக்கள் காற்றிலாடும் ஊரைச் சேர்ந்தவன் புது மகளிரை விரும்பித் தேடிச் செல்வதால் என் கள்ளமில்லா உள்ளம் துயரடைகின்றது.

விளக்கம்: தலைவன் பிறமகளிரை விரும்பி அவர்கள் பின்னே செல்வதால் வாடிய தலைவி தன் மனம் மிகவும் வருந்துவதாகச் சொல்கிறாள். நாணல் நிலையில்லாமல் காற்றில் ஆடுவதைப் போலத் தலைவனும் நிலையில்லாமல் பல மகளிரைத் தேடிச் செல்வது குறிப்பால் சொல்லப்படுகிறது.

சொற்பொருள்: புதர் மிசை - புதருக்கு மேலே, நுடங்கும் - காற்றிலாடும், வேழ வெண்பூ - நாணலின் வெண்மையான பூ, விசும்பு ஆடு குருகின் - வானில் பறக்கும் குருகு, தன்றும் - பின்னால் செல்லும், ஊரன் -ஊரைச்சேர்ந்தவன், புதுவோர் - புதுமகளிர், மேவலன் ஆகலின்  - விரும்புவன் ஆனதால், வறிதாகின்று - வருந்துகின்றது, மடங்கெழு நெஞ்சே - கள்ளமறியா நெஞ்சே 

என் பாடல்: 
"வானில் பறக்கும் குருகைப் போல 
நாணல் வெண்மலர்கள் புதர் மேலாடும்
ஊரன் புதுமகளிரை விரும்பிச் செல்ல
வருந்திப் பிளக்கின்றது என் கள்ளமில்லா உள்ளம்"

21 comments:

 1. சொற்பொருளுடன் விளக்கம் அருமை... உங்களின் பாடலுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 2. எப்டிங்க இப்டி எல்லாம் எழுதுறிங்க !!
  பள்ளி நாட்களிலே இதோபோல பாடல்களை பார்த்தால்
  தலைசுற்றும் .நீங்க விளக்கம் போட்டு அதே பொருளில் ஒரு பாட்டும் போட்டிருகிங்க !கிரேட் !!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மைதிலி..பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் சற்று கடினமாகத்தான் இருந்தது. இப்பொழுது வீட்டில் இருப்பதால் சங்க இலக்கியப் புத்தகங்கள் அதிகம் படிக்கிறேன், குறிப்பாக திருமதி.வைதேகி அவர்களின் நட்பு கிடைத்து அவர்களின் புத்தகங்கள் சில வாங்கினேன். அவை எனக்கு மிகவும் உதவியாக உள்ளன. அவர்களின் வலைத்தளம், http://learnsangamtamil.com/. சங்க இலக்கியப் பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதை நான் எளிய தமிழில் அனைவர்க்கும் புரியும் வண்ணம் படைக்க விரும்புகிறேன், அவ்வளவே. அதை ஊக்குவிக்கும் அவருக்கும் என் நன்றி!

   Delete
  2. கண்டிப்பாக பயன் படுத்திக்கொள்கிறேன்
   பகிர்வுக்கு நன்றி கிராஸ் !

   Delete
 3. வணக்கம் சகோதரி. ஐங்குறுநூறு பாடலோடு தங்களது பாடலையும் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் பாடல் மிக அருமை. அனைவருக்கும் விளங்கும்படி விளக்கிய விதம் மனம் கவர்ந்தது. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   உங்கள் பாராட்டிற்கு நன்றி பல.

   Delete
 4. Replies
  1. நன்றிங்க ஜெயக்குமார்!

   Delete
 5. கலக்கல் கிரேஸ்.. அருமை. :)

  ReplyDelete
 6. இதை ஒரு பயிற்சியாக ஆர்வலர்களிடம் கொண்டு சேர்த்தால் தமிழ் உணர்வு பாதுகாப்படும்..

  மிக அருமையான முயற்சி இம்மாதிரி முயற்சிகள் கயாஸ் கொள்கையைப் போல் ஒரு மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மது. நீங்கள் சொல்வது சரிதான், பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
   உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி! ஏதேனும் ஆலோசனை இருந்தாலும் தயவுசெய்து சொல்லுங்கள்.

   Delete
  2. ஐங்குறுநூற்றின் ஐநூறு பாடல்களையும் தமிழில் எளிதாக விளக்கி, ஒவ்வொன்றுக்கும் என் பாடலையும் சேர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உங்களைப் போன்ற நண்பர்கள் ஊக்கத்தினாலும் கடவுள் அருளாலும் அது நடந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

   Delete
 7. தலைவியின் நிலையைச் சொன்ன பாடல்.... சிறப்பு. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. எளிய உறையும், விளக்கமும் சிறப்பு அக்கா...

  காற்றில் ஆடும் நாணல் புல்லை, பிரிந்து சென்ற தலைவனுக்கு உவமையாக கொள்ளாமல், தலைவனது பிரிவால் வாடும் தலைவிக்கு உவமை கொண்டால் சிறப்பாக இருக்குமே அக்கா.... அதாவது, தலைவனை பிரிந்த தலைவி அந்த நாணல் புல் போன்று தல்லாடுகிறாள் என்று பொருள் கொண்டால் இன்னும் சிறப்பாக அல்லவா இருக்கும்....

  வார்பிலக்கியம் சிறப்பாக உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வெற்றிவேல்..ஆனால் நாணல் நிலையில்லாமல் இருப்பதுபோலத் தலைவனும் தலைவியுடனான உறவில் நிலையில்லாமல் இருப்பதால், நாணலை அதற்கு ஒப்புமையாகப் பாடியுள்ளனர்..
   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...