தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்“உங்க பையன் தமிழ் பேசுவானா?!!”, “வீட்டுல தமிழ்தான் பேசுவீங்களா?!!”, “உங்க பசங்க நல்ல தமிழ் பேசுறாங்களே!!” இவையெல்லாம் யாரோ வேற்றுமொழியினரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்று நினைத்து விட்டீர்களானால் மன்னித்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் தமிழச்சியான என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் தான்!!!! கேட்பவர்களும் தமிழர்கள் (டமிழர்கள்) தான். “அப்படியா?!! இப்படியா இருக்கிறது, இன்றைய நிலைமை!!!?”, என்று ஆச்சரியப்படாமல் இன்றைய யதார்த்தம் இதுதான் என்று தள்ளிவிட்டுப் போகும் நிலை தான் இன்றைக்கு உண்மை நிலை!! தற்காலத் தமிழின் நிலை!

தமிழ்நாட்டில் அதுவும் பெருநகரங்களைத் தவிர்த்து வேண்டுமானால் இத்தகைய கேள்விகள் எழாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் இது தான் தமிழின் நிலையாக உள்ளது. தமிழ்க் குழந்தைகள் தமிழ் பேசத் தெரியாமல், வீட்டிற்கு வரும் தாத்தா பாட்டியிடம் கூட பேச முடியாமல் இருக்கின்றனர். நம் மொழி அறிந்திருக்க வேண்டும் என்று பெற்றோர் அல்லவா சொல்லிக் கொடுக்க வேண்டும். நாம் தான் அம்மா என்று அழைப்பதைவிட மம்மி என்று அழைப்பதைப் பெருமையாக எண்ணுகிறோமே.

தாய்மொழி, முதன்மை மொழி என்பதெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா? முன்னேறும் உலகத்தில் தாய்மொழியாவது ஒன்றாவது, எந்த வழியில் முன்னே செல்லலாம் பணம் பண்ணலாம் என்ற நிலை இருக்கிறதா? சற்று அலசிப் பார்ப்போம்.

பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது, அதுவே பலருக்கு பாரமாகவும் இருக்கிறது. பல பள்ளிகளில் தமிழைத் தவிர்க்க வழியுண்டு, வேறு மொழி தேர்ந்தெடுக்கும் வழியாக. தாய் மொழி கற்காமல் பல மொழி கற்பது சரியா? வேர் வேண்டாம், நான் பல திசையும் செழித்துப் பரவுவேன் என்று ஒரு மரம் சொல்ல முடியுமா? இனிய தமிழ் நம் தாய்மொழி என்ற உணர்வும் நினைவும் இல்லாமல் தமிழைப் படிக்கக் கடினமாக இருக்கிறதே, மதிப்பெண் வாங்க வேண்டுமானால் வேறு மொழி எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நிலையல்லவா பரவலாக இருக்கிறது? மதிப்பெண்ணை விட்டால் வாழ்வில் யோசிக்க வேறு ஒன்றும் இல்லையா? அது முற்றிலும் தனியாக விவாதிக்கக்கூடிய ஒரு தலைப்பானாலும் இங்குக் குறிப்பிட்டது தாய்மொழிக்கும் அது குறுக்கீடாக வரவேண்டுமா என்ற ஆதங்கம்தான்.

தமிழைத், தாய்மொழியைக் கற்றுக்கொள்ள கடினம் என்றால் எங்கு தவறு? பயில்பவரிடமா? பயிற்றுவிப்பவரிடமா? குடும்பத்திலா? சமூகத்திலா? ஆமாம், தமிழ் படித்து என்ன கிழிக்கப் போறோம் என்ற மனநிலையை முதலில் கிழிக்க வேண்டும். தாய்மொழியைக் கற்பதற்கு, அறிந்துகொள்வதற்கு ஒரு ஆதாயம் பார்ப்பதா? தமிழை அறிந்து, தமிழ் நூல்களைப் படித்தால் ஒரு இன்பம் பொங்குமே, உணர்வு சிலிர்க்குமே – அது தானே வேண்டும். படித்து உணர்பவர்களுக்கு இது நன்றாய்ப் புரியும். அனைவரும் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கையும் ஆசையும் நிறைவேறட்டும்.

என் பிள்ளைகள் தமிழ் படிக்கும் வாய்ப்பு பள்ளியில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு உண்டு. வீட்டில் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் அது நான் படித்த வேகத்தை விட குறைவுதான். வீட்டுப்பாடம், ஹிந்தி என்று நேரம் செல்கிறது. தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று என்னாலான முயற்சி செய்கிறேன், ஆனால் நேரம் ஒதுக்குவது கடினமாகத் தான் இருக்கிறது. பள்ளிப் பாடங்களுக்கு மேலாக இதுவும் ஒரு அழுத்தமாகப் பிள்ளைகள் உணர்வார்களோ என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடிகிறது. இதே வயதில் எனக்கு எவ்வளவு தெரியும் என்று யோசித்தால் மன வருத்தம் தான். சிறு துளி பெரு வெள்ளம் என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டியதுதான். எவ்வளவு தூரம் போகும் என்று என்று தெரியவில்லை. ஆனால் தமிழில் பேசுவது ஒன்றும் தடைபடவில்லை. வெளியில் பேசும் தொடர்ச்சியாக எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினால் புரியாத மாதிரி என்ன என்ன என்று கேட்போம். பிள்ளைகளும் புரிந்துகொண்டு தமிழுக்கு மாறி விடுவார்கள். இது என் வீட்டில் தற்காலத் தமிழின் நிலை. எதிர்கால நிலை இன்னும் முன்னேறியிருக்கும் என்று நம்புகிறேன். புத்தகங்களைப் படித்து அவர்களாகவே புரிந்து கொள்ளும் நிலை வரும்பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சமூகத்தில் சினிமா, ஊடங்கங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆங்கிலம் கலந்து பேசுவது தான் இன்றைக்கு அதிகம் உள்ளது, அதுவே யதார்த்தமாகவும் மாறி  விட்டிருக்கின்றது. ஆனால் மறுபுறம் தமிழ்ப் பாடல்கள் உலகமெங்கும் பிரபலமாகும் நிலையும் உள்ளது. சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளிளெல்லாம் தமிழ் பாடல்களைப் பாடியிருக்கின்றனர். இதனால் தமிழ் நிலைக்கும் என்றோ வளரும் என்றோ சொல்வதற்கில்லை, என்றாலும் தமிழ் மேல் ஒரு ஈர்ப்பும் அதனைப் பற்றிய ஒரு தகவேலேனும் பலருக்குச் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய தலைமுறையினர் தமிழைப் பேசாமல் படிக்காமல் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் தமிழ் தழைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் இக்கட்டுரைப் போட்டி எப்படி? இந்தக் கட்டுரை எப்படி? ஆமாம், வலைத்தளங்களின் ஊடாக பலரும் தமிழில் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். தமிழ் புத்தங்கங்கள் பல வெளியிடப்படுவதுடன், தமிழ்நூல்களைத் தேடித் படித்துப் பகிர்ந்து கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் நம் சங்க இலக்கியங்கள் பற்றியும் தமிழரின் வாழ்வுமுறை பற்றியும் தமிழர் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது நான் காணும் உண்மை. இன்றைய சமூகத்தின் ஒரு பகுதியினர் தமிழை நிராகரித்தாலும் ஒரு பகுதியினர் தமிழ் மேல் காதல் கொண்டு தமிழில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் உண்மையே. 

வெளிநாட்டுவாழ் தமிழ் மக்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்தும் தமிழ்ப் பள்ளிகள் வைத்தும் குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்றுக் கொடுக்கின்றனர். இலக்கியக் குழுக்களும் இருக்கின்றன. அவற்றில் தமிழ் இலக்கியத்தைப்  படித்துப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இணையத்திலும் தமிழின் பங்கு அதிகரித்துள்ளது. பல தமிழ் தளங்கள், இணைய நூலகங்கள் என்று பலவும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

கற்காலம் முதல் இருக்கும் நம் மொழியாம் தமிழின் தற்கால நிலை ஒரு கலவை நிலையாகத் தான் இருக்கிறது. சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் பலர் தமிழ்ப் பணி ஆற்றுகின்றனர். இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு சொற்களும் சேர்க்கப்படுகின்றன. பல நல்ல புத்தகங்கள் தமிழில் மொழிமாற்றமும் செய்யப்படுகின்றன. ஒதுக்கப்படுகிறதோ அழிந்து விடுமோ என்றெல்லாம் பயம் தோன்றினாலும் உண்மையில் தமிழ் மேலும் சீரும் சிறப்பும் பெரும் என்றே தோன்றுகிறது. தமிழ் தமிழர் பற்றிய வரலாறு என்று மக்களுக்கு ஒரு ஆர்வம் அதிகரித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியாம் தமிழைக் கற்றுகொடுத்து தாய்மொழி நன்கு தெரிந்தால் எதையும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தால் கற்காலம் முதல் இனிதாய் இருக்கும் தமிழ் தற்காலம் தாண்டி எதிர்காலத்திலும் எக்காலத்திலும் இனிமையாய்ச் சிறப்புடன் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
 ---------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு திரு.அ.பாண்டியன், திரு.தனபாலன் மற்றும் திரு.ரூபன் அவர்கள் இணைந்து நடத்தும் தைப்பொங்கல் கட்டுரைப் போட்டிக்காக நான் எழுதியது.

46 கருத்துகள்:

 1. நல்லதொரு பதிவு கிரேஸ்... கெட்டதை மட்டும் சொல்லாம.. நல்லதையும் சுட்டி காட்டிய விதம் அழகு. பரிசு பெற வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 2. தமிழை வளர்க்கணும், அப்படி செய்யணும், இப்படிச் செய்யணும்னு நடுவர்களை கவர முயலாமல் எதார்த்தமா உண்மையை எழுதி இருக்கீங்க, கிரேஸ்! பாராட்டுக்கள்!

  கட்டுரைப்போட்டியில் பரிசு பெறுவதுகூட எளிது ஆனால் என்னிடம் பாராட்டு வாங்குவது ரொம்ப கஷ்டமாக்கும்.. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வருண்.

   வசிஷ்டரிடம் பாராட்டு மாதிரியா? :) உங்களின் மனமார்ந்த கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி!

   நீக்கு
 3. அருமையான கட்டுரை தோழி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்து.
  நல்ல கட்டுரை. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, இனிய உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

   கருத்துரைக்கும் மிக்க நன்றி கோவைக்கவி!

   நீக்கு

 5. வணக்கம்!

  தமிழ்மணம் 3

  சேய்மொழி ஓங்கிச் செழித்திட வேண்டுமெனில்
  தாய்மொழிக் கல்வியைத் தா

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா!
   உண்மைதான்.
   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 6. நல்ல பதிவு,
  நேர்மையான பார்வை..
  ####
  வாழ்த்துக்கள் பரிசும் கிடைக்கும் என்று நினைக்கிறன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மது.
   உங்களைப் போன்ற நண்பர்களின் பாராட்டுகளே பரிசுதானே, மிக்க மகிழ்ச்சி!

   நீக்கு
 7. வணக்கம்
  சகோதரி

  தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப்போட்டிக்காக (தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும் )
  என்ற தலைப்பில் மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.
  கட்டுரைக்கான (இணைப்பு)அனுப்பிவையுங்கள் வரவி்லை... தனபாலன் (அண்ணாவுக்கு அனுப்பினால் சரிதான் ) பின்பு எனக்கு வந்து விடும்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன்!
   மிக்க நன்றி.
   உங்களுக்கும் இப்பொழுது இணைப்பை அனுப்பியுள்ளேன்..

   நீக்கு
 8. நல்லதொரு கட்டுரை... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ---------------------------------------------------------------------------------------------------------------------------------
  குறிப்பு-
  நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. . அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  ---------------------------------------------------------------------------------------------------------------------------------
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் கிரேஸ்..

  சிறப்பான கட்டுரை. சில காலங்களாக தொலைபேசியில் இணையம் உலாவுவதால், தொடர்ந்து கருத்திட இயலவில்லை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெற்றிவேல்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 11. பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது, அதுவே பலருக்கு பாரமாகவும் இருக்கிறது. பல பள்ளிகளில் தமிழைத் தவிர்க்க வழியுண்டு,

  நிதர்சனமான வர்த்தம் தரும் உண்மை..

  பரிசு பெற வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 12. தங்களின் தளத்திற்குத் தங்கள் கட்டுரை வழியாக வந்தேன். தமிழுடன் நட்பும் வளர்க. நன்றி வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி, மிக்க நன்றி முத்துநிலவன் அவர்களே! கண்டிப்பாக...
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி!

   நீக்கு
 13. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறாய் கிரேஸ்.. எதார்தத்தை உள்ளவாரே சுட்டிக்காட்டி உள்ளாய்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 14. அருமையான கட்டுரை கிராஸ்
  வெற்றி பெற வாழ்த்துக்கள்
  dec2 கு அப்புறம் எங்க போய்டிங்க ?
  நானும் ,என் கணவரும்(மது )உங்களை காணோமேனு கவலைப்பட்டோம்.
  நலம் தானே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மைதிலி.
   உங்கள் அன்பு கண்டு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பல காரணங்களினால் இணையம் வருவது தடைபட்டுப் போனது. நலம் தான் மைதிலி.
   மீண்டும் உளமார்ந்த நன்றி! :)

   நீக்கு
 15. தமிழ் செழித்தோங்குவதற்கு இந்த விழிவுணர்வு மிகவும் தேவை. நானும் இதைப்பற்றி ஒருசில விவரங்களை ஆய்ந்துகொண்டிருக்கிறேன்.
  அதற்கு உதவியாக தமிழ் வட்டார வழக்குகளைப்பற்றிய சில உண்மைகள் எனக்கு வேண்டும். அதற்கு உங்கள் உதவி மிகவும் தேவை. நன்றி.
  அறியவேண்டியது:
  "அவர்கள் வாழைப்பழம் வாங்க கடைக்குப்போனார்கள்"
  இந்த வாக்கியத்தை திருநெல்வேலி, சிவகாசி/விருதுநகர், தஞ்சாவூர், கோவை (கோயம்புத்தூர்), வேலூர், யாழ்ப்பாணம். மட்டக்களப்பு, போன்ற இடங்களிலுள்ள வட்டார வழக்குகளில் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை தயவுசெய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி. எனது மின்னஞ்சல் rbgrubh@hotmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ராபர்ட். அனைத்து வட்டார வழக்குகளும் எனக்குத் தெரியாது..நண்பர்களை வேண்டுமானால் கேட்டுச் சொல்கிறேன்..இந்தக் கருத்துரையைப் பார்க்கும் நண்பர்களைப் பதில் தெரிந்தால் இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

   நீக்கு
  2. மிகவும் நன்றி. காத்திருக்கிறேன்.

   நீக்கு
 16. உண்மை நிலையைச் சித்தரித்துக் காட்டும் சிறப்பான பகிர்வுக்குப்
  பாராட்டுக்களும் போட்டியில் வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்
  தோழி .

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரி
  மிக சிறப்பான கட்டுரை. நடுநிலைமையோடு எழுதிய விதம் மிகவும் கவர்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகோதரி. கவிதை போட்டியிலேயே அசத்தியவர்கள் நீங்கள் கட்டுரை போட்டியில் சொல்லவா வேண்டும்..
  ------
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே!
   உங்கள் மனமார்ந்த கருத்திற்கு மிகவும் நன்றி!
   உங்களுக்கும் தித்திப்பான பொங்கல் வாழ்த்துகள்! :)

   நீக்கு
 18. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 19. ஆழமான அலசலுடன் அற்புதமாக
  எழுதப்பட்ட கவிதை மனம் கவர்ந்தது
  சுவாரஸ்யமாக்ச் சொல்லிப் போனது
  கூடுதல் சிறப்பு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. //நாம் தான் அம்மா என்று அழைப்பதைவிட மம்மி என்று அழைப்பதைப் பெருமையாக எண்ணுகிறோமே. //

  அதானே.... :(

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரி
  ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..
  முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே. உங்கள் தளம் சென்று பார்த்துவந்தேன். மிக்க நன்றி.

   நீக்கு
 22. வணக்கம்.
  ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
  தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..
  http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

  சான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
  மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
  சந்திப்போம்.....
  இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன். பாண்டியன் அவர்களின் தளத்தில் முடிவுகளைப் பார்த்தேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். முகவரியை மின்னஞ்சல் செய்கிறேன்.

   நீக்கு
 23. தமிழ் வளருமா வளர்க்க வேண்டுமே என்ற ஆதங்கம் புரிகிறது, அனைத்தும் உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள். தற்போதைய நிலையை தத்ரூபமாக வெளியிட்டுள்ளீர்கள் பல கருத்துக்களை உள்ளடக்கி. அருமை!
  வெற்றி பெற்றமைக்கும் மேலும் மேலும் வெற்றி பெறவும் மனமார வாழ்த்துகிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி இனியா. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 24. வேர் வேண்டாம், நான் பல திசையும் செழித்துப் பரவுவேன் என்று ஒரு மரம் சொல்ல முடியுமா? ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கேள்வி!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!