உள்ளத்தை என் செய்வேன்

பட்டுப் போல நான் கையில் ஏந்திய என் குழந்தை
அழுவது எதற்கென்று நான் தடுமாறி கற்றக் குழந்தை

இவனுக்கு ஒரு வயதாகி விட்டதா
என்று தோன்றியது முதல் வருடம்

இவனுக்கு இத்தனை வயதாகி விட்டதா
என்று தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும்

பள்ளி நேரம் தவிர்த்து நான் பிரியா
என் பிரியக் குழந்தை

பள்ளி ஏற்பாடு செய்த முகாம் செல்கிறான் இன்று
பெற்றோர் இல்லாமல் தனியாக

பத்திரமாகக்  கற்றும் மகிழ்ந்தும் வா என்றேன்
என் இதயமும் உடன் சென்று உருகி நிற்கிறேன்!

இன்று மாலை எப்படிப் போகும்
இன்று இரவு எப்படி உறங்குவேன்
என்று அறியேன்

என் பிள்ளை வளர்கிறான்
என்று புரிந்தேன்!!

மூளை சொல்வதை ஏற்காத
உள்ளத்தை என் செய்வேன்!

அப்பாயி மாதிரியாம் நான்

 
படம்: நன்றி இணையம்

இன்று
நீ கடந்து சென்ற நாள்
எல்லோரும் அழுதார்கள்
நான் விழித்தேன்
அப்பாவும் தாத்தாவும்
கட்டிக்கொண்டு அழுதார்கள்
நானும் அழுதேன்
கை பிடித்து எண்ணெய் சியக்காய்
வைத்தார்கள்
கூந்தல் நீளம் என்று
முன் உச்சியில் கொண்டை போட்டார்கள்
உனக்குப் பெட்டியில் அழுத்தும் என்றோ?
மூன்றாம் நாள் பாலூற்ற
அனைவருடனும் கல்லறை வந்தேன்
எல்லோரும் செபிக்க
பேய் வருமோ என்று சுற்றும்முற்றும்
பார்த்துக் கொண்டிருந்தேன்
முதல் முறை சேலை கட்டியதிலிருந்து
தெரிந்தோர் சொல்கிறார்கள்
அப்பாயி மாதிரியாம் நான்
எனக்கு மகிழ்ச்சியே
ஆனால், பார்க்க நீயில்லையே!
ஐந்தாறு வயதில் 
நடனமாடச் சொன்னபோது நான் ஆடவில்லை 
நீ மறந்திருப்பாய்
என் திருமணம் பார்த்துச் சென்றிருக்கலாமே
என் பிள்ளைகளையும் பார்த்திருக்கலாமே
பிற பாட்டிகள் பார்க்கும் பொழுது
இப்படித் தோன்றும் எனக்கு
ஆண்டுதோறும் 
உன்னை நினைத்து
உன் அதிரச மாவையும் தான்
அன்று செய்யாத செபத்தை
இன்று செய்கிறேன்!
உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்!
--உன் அன்பு பேத்தி
கிரேஸ் பிரதிபா

வரையறை



நிலம் நீர் வானம்
இக்காட்சியில்

காற்று அசையும்
இம்மூன்றில்

நெருப்பு வேண்டாம்
இக்காட்சியில்

பஞ்சபூதங்களிலும் வேண்டுமே
வரையறை!

இதுதான் காலக் கணக்கு

வைகறையில் தினமும் பாட்டன்
கைபிடித்து சென்ற முக்குக்கடை

அவருக்கு நாளிதழும் பழமும்
அவர் பேத்தி எனக்குப் பழமும்

வாங்கி மெல்ல நடந்த நடை
அதற்கு இல்லை ஈடு இணை

ஓர்நாளில் அவர் காலைக் குத்தியதே
சாலையில் கிடந்த ஓர் ஆணி

துண்டால் குருதி ஒழுக்கைக் கட்டிவிட்டு
ஒன்றுமில்லை என்றே  நடந்தார் என் கைபிடித்து

நான்காம் வகுப்பில் நான் படிக்க
ஏன் தான் கேட்டாரோ ஆசிரியர்

பாட்டன் யாருக்கு உண்டு என்று
பட்டென சொன்னேன் எனக்கு என்று

மறுநாளே வந்தது கொடுஞ்செய்தி
சென்றாரே பாட்டன் இயற்கை எய்தி

வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு
வெறுத்தேன் அந்த ஆசிரியரை அன்று

ஆசிரியர்மேல் தப்பில்லை வளர்ந்தபின் புரிந்தது
ஆண்டுபல ஆனாலும் பாட்டன் நினைவு அழியாதது

சாலையும் இருக்கே ஆணியும் இருக்கே
பாட்டன் இல்லையே இன்று

இதுதான் காலக் கணக்கு
அதுதான் பிடிக்கவில்லை எனக்கு 

இன்றும் வந்தான் அவன்

இன்றும் வந்தான் அவன்
என் உணர்வுகளைத் தட்டிச் செல்ல
என் மனக் கதவுகளைத் திறந்திட
என்னை ஒரு நிமிடமேனும் சிலையாக்கிட
என்னை, என்னை மறக்க வைத்திட
கொண்டல் மகனவன், மழை என்பவன்!
என்னை எப்பொழுதும் மகிழ்விப்பவன்
இன்றும் வந்தான் அவன்!

மகள், மருமகள் - இரண்டு பார்வை

"நீ செய்வ...என் பொண்ணு செய்ய மாட்டா" என்று தன் மாமியார் சொன்னதும் அமலாவிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. "நீ செய்வ.." அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மதிய உணவிற்கு டப்பாவில் கட்டிக்கொண்டு விரைந்து சென்று பேருந்தில் ஏறினாள். பேருந்து முன்னே செல்ல அவள் மன உந்து பின்னே சென்றது.

"அம்மா, காபி" என்ற அமலாவிற்கு காபி கலந்து கொடுத்த அம்மா கூடவே இரண்டு வடையும் கொண்டு வந்தாள். "சாப்பிட்டு விட்டு படி அமலா, சிறிது நேரம் கழித்து சாப்பாடு வைக்கிறேன்", என்றபடியே போனாள். படிப்பில் மூழ்கிய அமலா அம்மா வந்து காலி குவளையை எடுத்துச் செல்லும்பொழுது சிறு புன்னகையொன்றை தந்து விட்டு படிப்பைத் தொடர்ந்தாள்.
...

அன்று விடுமுறை,  நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த அமலாவிற்கு "விடுமுறை தினத்திலாவது வீட்டைப் பெருக்கினால் என்ன?" என்று சொல்லிக்கொண்டே அம்மா வீட்டைப் பெருக்கியது தெரியவில்லை.
...

கல்லூரி முடிந்து மூன்று மணிக்கு வீடு திரும்பிய அமலா அம்மா அசதியாக படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு பூனை போல அடுமனையில் நுழைந்தாள். சத்தம் வரக்கூடாதே என்று சிரத்தை எடுத்து மெதுவாக இரண்டு கோப்பைகளைக் கழுவியிருப்பாள். அம்மா வந்துவிட்டாள்! உடம்பின் தொப்புள் கொடி தான் அறுக்கப்பட்டது போல, மனதிலும் ஒரு கொடி இணைப்பு இருக்கும் போல என்று எண்ணினாள் அமலா. பிறகு எப்படி அம்மா எழுந்து வந்தாள்? "அமலா, விடு நான் கழுவிக் கொள்கிறேன்" என்று வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டாள். பிறகு என்ன? அமலா, நாவல், அமலா!

ஒரு குழியில் ஏறி இறங்கிய பேருந்து அமலாவை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது. இன்றைய நிகழ்ச்சியையும் கண் முன் கொண்டு வந்தது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சமையலை ஆரம்பித்து காலை உணவு, மதிய உணவு என்று எல்லாம் செய்து முடித்தாள். நேற்று  வீட்டு வேலை செய்யும் வேணி வந்து, "அக்கா, பண்டிகைக்கு ஊருக்குப் போகணும், நான்கு நாட்கள் விடுப்பு வேண்டும்", என்றாள். அமலாவும், "போய்  விட்டு சரியாக வந்து விடு வேணி" என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அதனால் அவசர அவசரமாக பாத்திரங்களைத் துலக்கிவிட்டு வீட்டையும் பெருக்கிய அமலா தன் நாத்தனார் இன்னும் உறங்கிக்கொண்டிருந்ததால் அத்தையிடம், "அத்தை, இந்த அறை மட்டும் பெருக்கவில்லை, நான் அலுவலகம் கிளம்புகிறேன், .." என்று சொல்வதற்குள் இடைமறித்த அவள் மாமியார், "அமலா, வீட்டுவேலை எல்லாம்  நீ செய்வ..என் பொண்ணு செய்ய மாட்டா, செல்லமா வளந்த பொண்ணு, அவளுக்குப் பழக்கமில்ல, அதனால் மாலை வந்து நீயே செய், அவ எதுவும் ஒத்தாசை செய்வான்னு நெனச்சுடாத!" என்று சொல்லிவிட்டு நாளிதழுடன் சென்று உறங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.

அமலா விக்கித்து நின்றாள். எனக்கும் பழக்கமில்லையே, நானும் செல்லமாகத் தானே வளர்ந்தேன். இந்த வேலையெல்லாம் திருமணத்திற்குப் பின் இரண்டு வாரங்கள் தானே செய்தாள்..அதுவும், வேலைக்காரி அமையும் வரைக்கும், நம் வீடு நாம் செய்வோம் என்று தானே செய்தாள்? விடுமுறை முடிந்து இங்கு வருவதற்கு முன்னும் ஊரில் மாமியார் வீட்டில் யதார்த்தமாக உதவி செய்யலாம் என்று சில வேலைகள் செய்தாள். ஆனால் அதுவெல்லாம் நல்ல பெயர் எதுவும் சேர்க்கவில்லை போலவே...தான் ஏதோ வேலைக்காரி என்றும் தன் மகள் செல்லப்பெண் என்றும் மாமியார் பேசுவதைக் கேட்டால்....

வேலை செய்வது அமலாவை சிறிதும் வருத்தவில்லை, அது தன்  வீடு. ஆனால் மாமியாரின் எண்ணம்?  மகளுக்கு ஒரு பார்வையும் மருமகளுக்கு ஒரு பார்வையும் இருக்குமா? தன்னைச் செல்லமாக வளர்த்த அம்மாவிற்கு தெரிந்தால் என்ன செய்வாள்?

தன் நிறுத்தம் வந்ததை உணர்ந்து இறங்கிய அமலாவின் மனம் பட்ட பாடு யாருக்குப் புரியும்?

இவன் மேல் எனக்கு காதலா?

தினமும் என்னை அழவைத்தாலும்
கண்கள் சிவக்க வைத்தாலும்
தினமும்...ஏன்
தினத்தில் பலமுறையும்
இவனை நாடிச் செல்கின்றேனே
இவன் மேல் எனக்குக்  காதலா?







கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.