உன் வாசம் நுகர்ந்தவுடன்

புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்

பழகியதே என்றாலும்
உன்னைப் பார்த்தவுடன்
மகிழும் என் கண்கள்

புதிதல்ல என்றாலும்
உன் தழுவல் உணர்ந்தவுடன்
சிலிர்க்கும் என் தேகம்

பழகியதே என்றாலும்
உன் வாசம் நுகர்ந்தவுடன்
உயிர்க்கும் என் அணுக்கள்

பழகிய மழையே
நீ என்றும் அழகே
எப்பொழுதும் இனிமையே !

என் செய்வான் இருந்தால் ...

தேசியக்கவி பாரதி அவன்
பேசியமொழி இனியமொழி

கவி படைத்தான் கன்னித் தமிழில்
புவி மறைந்தாலும் வாழ்வான் புகழில்

தொலை நோக்கிப் பார்த்தான்
பெண்ணடிமைச்  சாடினான்

விடுதலை உணர்வை ஊட்டினான்
சமுதாயச் சிறுமை சாடினான்

எதைப் பாடவில்லை அவன்
எளியக் கவிபடைத்த உன்னதன்

பன்மொழிப் பாவலன் ஆனால்
தமிழ் மொழிக் காதலன்

அவன் இன்று இல்லை இப்புவியில்
என் செய்வான்  இருந்தால்

இன்றும்! இன்றும்  நிலை கெட்டே
இருக்கும் மானிடரைப் பார்த்து!!!

தமிழே உதவ மாட்டாயா

நெஞ்சம் எல்லாம் நிறைந்திட்டான்
கொஞ்சம் பேச மறுக்கிறான்

தெரிந்து கொள்ள சில கேள்விகளும்
புரிந்து கொள்ளடா  என்று சில கேள்விகளும்

கடமையாய் கேட்டுவிட்டு பாவம்
மடமையாய் விழிக்கிறது உள்ளம்

பதிலை அறியவா கேட்டேன்
காதலை அறிவிக்கத்  தவிக்கிறேன்

புரிந்து தான் கொண்டானா?
புரியாதது போல நடிக்கிறானா?

அலைநுரையில் பந்தொன்று செய்து
தலையில் பட்டென்று போடவா?

மயிலிறகு கொண்டு வந்து
கன்னத்தில் இரண்டு போடவா?

சினம் எரிமலையாய்ப் பொங்கி
தேனாய் வழிகிறதே என்ன விந்தை

எண்ணம் பலவிதமாய் தோன்றி
அவனையேச் சுற்றுகிறதே சிந்தை

தமிழே உதவ மாட்டாயா
கவியாய் காதலைச் சொல்வாயா


இலை பல வடிவில்


இலை இல்லை என்றால் 
கலை இல்லை உலகில் 
இலை தனியில் திரளில் 
இலை பல வடிவில் 


வீட்டில் போரடிக்கிறது என்று தொந்திரவு செய்த மகனை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தேன். பத்தே அடியில் பல இலைகளைக் காட்டினேன். சிலவற்றைச் சேகரித்துக்கொண்ட அவன் வீட்டிற்குச் சென்று அதை வைத்து கைவேலை செய்யலாம் என்றான். உடனே வீடு வந்து நாங்கள் செய்ததுதான் படத்தில் உள்ளது. இலை மாதிரி வடிவம் வரைந்து "Leaves Show" என்று எழுதினான். பிறகு எங்கு சொன்னானோ அங்கு பசை போட்டேன், அவன் இலைகளை ஓட்டினான்.

அவன் மிகவும் ரசித்த தொட்டாச்சிணுங்கி இலை அவன் கொண்டுவரவில்லை, அதுதான் சுருங்கிக்கொண்டு விட்டதே. அது ஏன் அப்படி மூடிக்கொள்கிறது என்று என்னைத் துளைத்து விட்டான். அதன் அசைவைப் பார்த்து எந்த மிருகமும் பயந்துகொண்டு சாப்பிடாது, அதனால் என்றேன். உடனே அவன், "நான் ஒன்றும் செய்யமாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே தொட்டான். கேட்குமா அச்செடி? சுருங்கிக்கொண்டது. ஏன்? ஏன்? என்று நூறு கேள்வி கேட்டவனை சீக்கிரம் கைவேலை செய்யலாம் வா என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். :) அவன் தயவில் எனக்கு ஒரு கவிதை வந்தது! ஒரு நடையில் இரண்டு மாங்காய் :)

ஆசிரியர் தினம்

வீட்டில் சில பள்ளியில் பல
குழந்தைகள் ஆசிரியர்களுக்கு

வார்த்தைகள் சில நன்றி பல
அவர்தம் பணிக்கு

நாட்கள் பல அதனில் ஒன்றே
முக்கியமாக ஆசிரியர்களுக்கு

வணக்கம் வரையில மதிப்பு மிக
வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கு

நினைக்க சர்வபள்ளி ராதாகிருட்டிணன்
முன்னாள் குடியரசு தலைவர்
தத்துவ மேதை, ஆசிரியர்

அவர் பிறந்த நாளை
ஆக்கினார் ஆசிரியர் தினம்
நன்றிகூற சிறப்பிக்க

ஆசிரியர் தினம்
ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து, இனிப்பு
அதுவல்ல சிறப்பு

காரணம் அறிந்து
வரலாறு தெரிந்து
போற்றுவோம் கொண்டாடுவோம்

அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஐங்குறுநூறு 11 - தோள் காட்டிக்கொடுக்கிறதே...

ஐங்குறுநூறு 11, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே"


எளிய உரை:  மனையில் நடப்பட்ட பசலைக் கீரை படரும், அழகிய நீர்நிலை உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை நாணி நல்லவன் என்றே சொல்கிறேன். அல்ல என்கிறது என்னுடைய அகன்ற மெல்லிய தோள்கள்.

விளக்கம்:  தலைவியை விட்டு பிரிந்து சென்ற தலைவனுடைய கொடுமையை எண்ணி வருந்தி நாணினாலும் அவன் நல்லவன் என்றே சொல்கிறாள் தலைவி. ஆனால் அவளுடை அகன்ற மெலிந்த தோள்கள் தலைவன் நல்லவன் இல்லை என்று சொல்கின்றன என்று சொல்கிறாள் தலைவி. வருத்தத்தில் தோள்  மெலிந்ததை அவ்வாறு சொல்கிறாள் போலும்.

சொற்பொருள்:  மனை நடு வயலை வேழம் சுற்றும் -  வீட்டில் வளர்க்கப்பட்ட பசலைக்கீரை படரும் (வயலை - பசலை), துறை கேழ் ஊரன் - அழகிய கரைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நாணி - கொடுமையை எண்ணி நாணி, நல்லன் என்றும் யாமே - நல்லவன் என்கிறேன் நானே, அல்லன் என்னும் - நல்லவன் இல்லை என்று சொல்லும், என் தடமென் தோளே - என்னுடைய அகன்று  மெலிந்த தோள்கள், தட - அகன்ற, பெரிய, வளைந்த என்று மூன்று பொருள் தரும் 

என் பாடல்:
வீட்டில் நடப்பட்ட பசலைக்கொடி சுற்றும் 
அழகிய கரைகள்  இருக்கும் ஊரைச் சேர்ந்தவன் 
என்னைப் பிரிந்து சென்றதை எண்ணி நாணினாலும் 
நல்லவன் என்றே சொல்கிறேன் 
என்னுடைய மெலிந்த தோள்கள் இல்லை என்று பறைசாற்றுகின்றனவே 

தாயகம் தந்த வரவேற்பு

தாய்நாடு சேர்ந்திடுவேன் என்றே உவப்புடன் வந்த என்னுடைய சில அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்தே இப்பதிவு. நேரம் தவறி அயர்ந்த கண்களை அரற்றிவிட்டு முதலில் சென்றது பள்ளி சேர்க்கைக்கு. பெரியவன் மூன்றாம் வகுப்பு, சிறியவன் LKG. (LKG என்பதைத் தமிழில் எழுதலாம் என்று பார்த்தால் விளையாட்டுமுறை கல்வி என்று உள்ளது..பெயரில் ஒன்றும் வகுப்பில் ஒன்றுமாய் இருப்பதால் விட்டுவிட்டேன், பொறுத்துக்கொள்ளுங்கள்).

வெகு தூரம் ஒரு பள்ளி 
மிகு கட்டணம் ஒரு பள்ளி 
இடையிலே சேர்க்கை இல்லை 
சில பள்ளிகளில் 
ஹிந்தி பாடம் நிறைய இருக்கே 
எழுத்துகள் தெரிந்தால் பத்தாது (மெனக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்தது பலன் இல்லையா!!!)
சில பள்ளிகளில் 
பள்ளிகளில் இத்தனைப் பேதங்களா 
பேதலித்து போனேன் பேதை நான் 
சுதாரித்து பெரியவனை சேர்த்தாச்சு ஒரு பள்ளியில் 
45 நிமிடம் பேருந்தில் ஆகும் என்பதால் 
மறுத்துவிட்டேன் இளையவனை சேர்க்க 
அருகில் ஏதாவது பார்த்துக் கொள்ளலாம் என்று 
ஆனது ஒரு திங்கள் 
இன்று தான் முடிந்தது LKG சேர்க்கை 

விமானம் ஏறி வருவது மட்டும் அல்ல தாய்நாடு சேர்வது, பல திங்கள் கடக்கும் வேலை  ஆகிவிட்டது. மற்ற பாடங்கள் கடினமில்லை என் சிங்கக்குட்டிக்கு, ஹிந்தி ஒன்றுதான் இப்பொழுது முட்டவும், உதைக்கவும் செய்கிறது. அதையும் வழிக்கு கொண்டுவந்து விடுவோம் என்று நம்புகிறேன்.

சரி, பள்ளியை தவிர்த்து என்னை  திகைக்க வைத்த ஒரு நிகழ்வு..

என் தங்கையின் திருமணம் - அதில் என்ன திகைக்க என்று கேட்கிறீர்கள? திருமணம் நன்றாக நடந்தது. மேடையில் கவரில் வைத்து அன்பளிப்பு கொடுப்பார்கள் அல்லவா? அவற்றையெல்லாம் ஒரு பையில் வைத்திருந்தேன். உடன் என்னுடைய கைப்பை, அதில் என்னுடைய iphone5, கணவரின் அலைபேசி, சில சிறிய நகைகள்! மேடையில் ஏறிய நண்பர்கள் விசாரித்ததற்குப் பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால் இரண்டு பையையும் காணோம்..ஒரே நிமிடத்தில் மேடையில் இருந்து எங்கள் பின்னாடியே திருடப்பட்டுவிட்டன. என் தவறு  பைகளை கீழே வைத்தது, ஒரே நிமிடம் தான்..அருகில் திருடன் இருக்கிறான் என்று அறியவில்லை நான்..போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம்...
இப்படியும் திருட்டு நடக்கிறது நண்பர்களே, சில வினாடிகள் போதும் திருடுபவர்களுக்கு..கவனமாக இருங்கள், தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்..அதற்காகவே இதைப் பகிர்கிறேன். 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.