வீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்


பாரியைப் பற்றி அறிந்துகொள்ள பறம்பேறிய கபிலர் உடனே நானும் பயணித்தேன். பறம்பையும் பாரியையும் அறிதலில் அவர் வியந்ததைப் போன்றே நானும் வியந்தேன். பாரியின் அன்பிலும் அறத்திலும் கட்டுண்ட பெரும்புலவர் போன்றே நானும் கட்டுண்டேன். பறம்பின், பறம்புத்தலைவனின் இயற்கை அறிவையும் வீரத்தையும் அணு அணுவாக ரசித்து மயங்கிக் காதலில் விழுந்தேன். ஆம் இதுவும் காதல்தான்!

பலவகைப்பட்ட செடிகளையும் கொடிகளையும் பறவைகளையும் விலங்குகளையும், ஏன், நிலத்தின் தன்மையையும் நீரின் தன்மையையும் கூடத் தெரிந்துகொண்டேன். பறம்பு மக்களின் கள்ளமில்லாத உள்ளங்களில் சிக்குண்டேன். அப்படிப்பட்ட ஓர் இனத்தையும் அறத்தையும் மக்களையும் இன்று சொன்னால் யாரேனும் நம்புவார்களா? மாட்டார்கள்! அது பொய்யென்று அல்ல, அந்த அறத்திலும் அன்பிலும் ஆயிரத்தில், ஏன் கோடியில் ஒரு பங்கு கூட இன்று இல்லை என்பதால். அறம் அழிந்த உலகில் வாழ்வோர்க்கு அறமே மனிதர்களாய் வாழ்ந்தது என்று நம்புவது கடினம்தான்.

பறம்பில் தஞ்சம் புகுந்து பறம்பு மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்ட பல தொல்குடிகளின் வரலாறுகள் மனதை நெகிழ்த்தின. எளிய மக்கள் மீது அக்கறை இல்லாமல் செல்வமோகமும் புகழ்மோகமும் வணிக நோக்கமும் கொண்ட இன்றைய அரசியல் மூவேந்தர்களின் அரசியலாகவும் உலகின் பல இடங்களின் அரசியலாகவும் இருந்துள்ளதும், இருக்கின்றதும் முகத்தில் அறையும். காட்டில் வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. நாம் மனிதர்கள் அல்ல.

பல இடங்களில் கடந்து செல்ல இயலாமல் நிறுத்தி உள்வாங்கிப் பின்னரே நகர்ந்தேன். முதலிலிருந்து இறுதிவரை பாரியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எப்படி ஓடினேன் என்று அறியேன், அவன் நிதானத்திற்கும் தான். ஆனால் அவனுடனேயே, அவன் அருகிருந்தே பார்த்து, ரசித்து, வியந்து கொண்டிருந்தேன்.
இறுதியில், பெரும் போர்க்களத்தில் பாரியின் பக்கம், பறம்பின் பக்கம் வீரமும் அறமும் நிலைகொண்டு போரிட மூவேந்தரின் பக்கம் சதியும் பயமும் பொறாமையும் போரிடக் கண்டு கபிலரைப் போன்று, திசைவேழரைப் போன்று கலங்கினேன். பாரியை விட்டகல முடியாமல் உறக்கத்தைத் தள்ளி வைத்தேன். பறம்பின் தளபதிகளுடன் போர்க்களம் எங்கும் இருந்தேன். அவர்களின் வீரம், காத்தலின் பொருட்டு அழித்தலின் பொருட்டல்ல!

இதோ, 'பனையன் மகனே' பாடலைக் கேட்டு அங்கேயே அமர்ந்து இருக்கிறேன், எழுந்து செல்லவோ எண்ணம் கலைக்கவோ மனமில்லை. பாரி, தேக்கன், பழையன், கூழையன், வாரிக்கையன், உதிரன், நீலன், முடியன், இரவாதன், பொற்சுவை என்று அவர்கள் அனைவரும் எண்ண அலைகளில்.
மனமும் இயங்குகிறதா சிலையாகிற்றா என்று இனம் காண முடியாமல் தவிக்கிறேன். கபிலரைப் போன்றே பறம்பைப் பிரிய மனமில்லை. மூவேந்தர்கள் கீழே இறங்கி விட்டனர். பாரி முகட்டில் அமர்ந்துவிட்டான், இறங்க மாட்டான்.

வியந்து சொல்வதற்கு நிறைய நிறைய இருந்தாலும் ஒவ்வொருவரின் வாசித்தல் இன்பத்தின் பொருட்டு அவற்றை நூலிலேயே விட்டுவிடுகிறேன். ஆசிரியர் திருமிகு சு. வெங்கடேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

#வேள்பாரி #Velpaari #myreadingcorner #என்வாசிப்பகம்

22 கருத்துகள்:

  1. விமர்சனம் அருமை.......உங்களின் விமர்சனத்திற்கு அப்புறம்புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் வருகிறது

    பதிலளிநீக்கு
  2. அவரின் பேச்சை மிகவும் ரசிப்பேன்... எழுத்தை ரசிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, நானும் யூடியூபில் பார்ப்பேன். எழுத்தையும் ரசிப்பீர்கள், மிகச் சிறப்பு அண்ணா.

      நீக்கு
  3. நல்லதொரு வாசிப்பனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான சுருக்கமான நூல் அறிமுகம் மா! உன்போலும் இல்லக் கடமை மற்றும் பணிச்சுமைகளுக்கிடையே 1400பக்க நாவலைப் படித்துக் கருத்தும் இடும் பொறுப்பு என்னை வியக்கவும் மகிழவும் வைக்கிறது.
    நான் சு.வெங்கடேசனை இன்றைய கபிலராகத்தான் பார்க்கிறேன். நாட்டை வணிகமயமாக்கிவரும் இன்றைய “மூவேந்தர்கள்” நம்மை விற்கப்பார்க்கும் சூழலில் நாம் பறம்பின் குடிகளாவதைத் தவிர்க்க முடியவில்லை மா! இந்த அரசியலை எத்தனைபேர் புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை! பின் அட்டையில் கவிஞர் வெய்யில் சொன்ன வரிகள் நூறு விழுக்காடு உண்மை! நாம் நமது இயற்கையைக் காப்பாற்ற (போா்தொடுக்க அல்ல) தற்காத்துக் கொள்ளும் போரைத் தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா. மிகச் சிறப்பான நாவல். நூலில் பல இடங்களில் ஹைலைட் செய்தும் குறிப்புகள் எழுதியும் வைத்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் படிக்க ஆசை:-)
      திரு சு.வெங்கடேசன் அவர்கள் இன்றைய கபிலர் என்று நீங்கள் சொல்லியுள்ளது சிறப்பு அண்ணா. அவருடைய முயற்சிகள் வெற்றி அடைய விழைகிறேன். அவரால் பலர் பறம்பின் குடிகள் ஆவது திண்ணம். நாவல் மட்டுமல்ல அறத்தைக் தூண்டும் தூண்டுகோலும் கொடுத்திருக்கிறார். ஆமாம் தற்காத்துக்கொள்ளும் போரை கண்டிப்பாகத் தொடர்வோம். உங்கள் ஆழமான கருத்திற்கும் பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா.

      நீக்கு
  5. இந்த இணைப்பை சு.வெ.அவர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். பலநூறு பணிகளில் தொடர்ந்து இயங்கும் அவருக்குப் பதில் தர நேரமிருக்குமா தெரியவில்லை. எனினும் உனக்கு நேரமிருக்கும்போது அவருடன் பேச வேண்டுகிறேன். நம்மால் தர முடியும் டானிக் இதுதானே? மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி அண்ணா, வேறென்ன வேண்டும்! அவர் வாசிப்பார் என்பதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக அண்ணா. மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான நூல்
    படித்து மகிழ்ந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    பதிலளிநீக்கு
  8. அறிமுகம் நன்று கிரேஸ். நீங்கள் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொரு அத்தியாயமும் வெகு சிறப்பாய் இருக்கும்.மிகவும் ரசித்து படித்த ஒரு புத்தகம் . மிகப் பெரும் புலவராய் கபிலர், அவரையே வார்த்தைகளால் மடங்கடிக்கும் நீலன் , வேட்டூர் பழையனின் வயது கணக்கு , காட்டுக்கு புதியவரை இனங்காட்டும்  நாவல் பழ கணக்கு,  தாய்மைக்கு முன் ஆண்கள், குகை வாயிலில் பாரியின் வருகையும் அதன் வர்ணனையும் , அவரது அறிமுகமும் அற்புதமாக இருக்கும் . பறம்பின்  வானியல் அறிவும் , ஒளி வாளும் அருமை. முருகன் வள்ளியின் ஐ வகை நிலங்களிலும் நடக்கும்  காதல். ஏழிலைப்பாலை மலரும் அற்புதம். காடறிதல், காலம்பனுடன் மோதும் பாரி, வைப்பூர் எரிப்பு, திரையர்களை பாடும் முதல் பாடல் , காலம்பன் சபதம். சொல்லிக்கொண்டே போகலாம் நாள் முழுக்க .. இப்படி ஒரு அருமையான புத்தகமாக வரக்  காரணம் . இதற்கான  தகவல் திரட்டலும், மெனக்கெடுதலும், அர்ப்பணிப்பும் தான். எழுத்தாளர்  சு.வெ  க்கு கணக்கிலா  நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராபர்ட். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      ரசித்த, ஈர்த்த ஒவ்வொன்றையும் அழகாகப் பட்டியலிட்டுவிட்டீர்கள். ஒவ்வொரு நிகழ்வும் மீண்டும் மனதில் விரிந்தது. ஆமாம், அளப்பரிய தகவல் திரட்டலும் கடின உழைப்பும் திரு.சு.வே அவர்களின் நாவலில் தெரிகிறது.
      கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  11. அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் மா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...