முல்லைத் திணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைத் திணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐங்குறுநூறு 401 - இவ்வுலகிலும் மறு உலகிலும் அரிதே


ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்த பிறகு நடப்பதைக் குறிக்கும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிபொருளுக்குப் பொருந்தும் என்பார் திரு.பொ.வே.சோமசுந்தரனார். தலைவி தலைவன் வீடு சென்றபின்னர், தலைவியின் செவிலித்தாய் அவர்களைப் பார்க்கச் செல்வது மரபு. சென்று அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்து வருவார். தான் பார்த்து மகிழ்ந்த தம் மகளின் இனிய இல்லறத்தை நற்றாய் (தலைவியைப் பெற்ற தாய் ) மகிழுமாறு அவளிடம்   சொல்வார். அது தான் 'செவிலிக் கூற்று'.

Image: Thanks Internet


ஐங்குறுநூறு 401, பாடியவர் பேயனார் 
முல்லைத் திணை - செவிலி தலைவியின் தாயிடம் சொன்னது

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


எளிய உரை: மான் கன்று இடையில் படுத்திருக்கும் மான் இணையைப் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரிய காட்சியென்பது தெளிவாகும்.

விளக்கம்: செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்ந்த செவிலித்தாய் திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். நீலநிறம் சூழப்பட்ட என்பது நீல வானத்தையும் நீலக் கடலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சொற்பொருள்: மறி -மான் கன்று, இடை - இடையில், படுத்த - படுத்திருக்கும், மான் பிணை - மானும் (கலைமான்) பிணையும் (அதன் பெண் மான்) , புதல்வன் - மகன், நடுவணனாக - நடுவில் இருப்பவனாக, நன்றும் இனிது - இனிதிலும் இனிது, மன்ற - வெளிப்படையாய்த் தெரியும், அவர் கிடக்கை - அவர் படுத்திருத்தல், முனிவு - வெறுப்பு/சினம், இன்றி - இல்லாமல், நீல் நிற - நீல நிற, வியல் - அகன்று விரிந்த, அகம் - உலகம், கவைஇய - சூழப்பட்ட, ஈனும்  - இப்பொழுதும்/இந்த உலகிலும், உம்பரும் - அடுத்த உலகிலும், பெறலரும் - பெறுவதற்கு அரியதே, குரைத்தே - தெளிவாக

என் பாடல்:
"பிணை மான் இடையே மான் குட்டிபோல 
பிள்ளை நடுவில் கிடக்க
அவர்கள் இருப்பது இனிது  
நீல நிற அகன்ற வானம்
வெறுப்பின்றி அணைக்கும்
அகன்ற இந்நிலத்தும் மேல் உலகத்தும் காண்பது அறிதே"


தலைவனின் பரத்தமையையும் தலைவியின் துயரத்தையும் படித்து எழுதி, அலுத்து, உங்களுக்கும் அலுக்காமல் இருக்க 25லிருந்து 401ற்குத் தாவிவிட்டேன். :-)

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.