ஐங்குறுநூறு 202 - குடுமி கொண்ட குதிரைகள்

 

அன்னாய் வாழ்க! சொல்வதைக் கேளாய்!
நம்ஊர் பார்ப்பனச் சிறுவர் போல
குடுமி கொண்ட குதிரைகள் பாராய்
நெடுமலைத் தலைவன் தேரில் பூட்டியே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், ஐங்குறுநூறு 202
தோழி தலைவியிடம் சொன்னது
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகன் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே. 
பாடியவர் கபிலர், 'அன்னாய்ப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப் பாடல்களுள் ஒன்று. தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ள பாடல். தலைவியும் தோழியும் ஒருவரையொருவர் அன்புடன் 'அம்மா' என்ற பொருளில் 'அன்னாய்' என்று அழைப்பது வழக்கில் இருந்தது. "அன்னை என்னை என்றலும் உளவே", என்று தொல்காப்பியர் நூற்பாவினால் அறியலாம். வாருங்கள் பாடலைப் படிப்போம்.
 
எளிய உரை: அன்னையே வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக. நெடிய மலைநாட்டின் தலைவனுடைய தேரில் பூட்டப்பட்டு ஊர்ந்து வருகின்ற குதிரைகள் நம்மூர்ப் பார்ப்பனச் சிறுவர்களைப் போலத் தாமும் தலையில் குடுமியுடன் இருக்கின்றன!
விளக்கம்: 
திருமணத்திற்குப் பொருள் ஈட்டத் தலைவன் பிரிந்து சென்றதால் தலைவி மனம் வருந்தி இருக்கின்றாள். அவள் நிலைகண்டு இறந்துவிடுவாளோ என்று வருந்துகிறாள் தோழி. இச்சூழலில் ஒருநாள், தலைவன் திருமணத்திற்குத் தேவையான பொருள் ஈட்டிக்கொண்டு தேரில் வருவதைக் காண்கிறாள். இனி என் தலைவி நலம் பெறுவாள் என்று மகிழ்ந்து ஓடிவந்து தலைவியிடம் தலைவன் வரும் செய்தியைக் கூறி அவளை ஆற்றுவிக்கிறாள். நெடிய மலைகளைக் கொண்ட குறிஞ்சி நாட்டின் தலைவன் தேரில் குதிரைகளைப் பூட்டி, திருமணம் செய்ய ஆயத்தமாக வருகின்றான். குதிரைகள் பூட்டிய தேரில் தலைவன் வருவது அவன் திருமணத்திற்குத் தேவையான பொருளீட்டி வருகிறான் என்பதை உணர்த்துகிறது. தலைவனின் தேரில் பூட்டப்பட்டு ஊர்ந்து வரும் குதிரைகளின் பிடரிமயிர் அவர்கள் ஊரில் இருக்கும் பார்ப்பனச் சிறுவர்களின் குடுமியைப் போல இருப்பதாக உவமைப்படுத்துகிறாள். அந்த அழகைக் காண வா என்று தலைவியை அழைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது எனலாம்.
உடல்மொழியைப் போலவே பாடலுக்கும் மெய்ப்பாடு உண்டு. இப்பாடலின் மெய்ப்பாடு உவகை என்பார் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார். தலைவன் வருகையைப் பார்த்து மிகவும் மகிழ்கிறாள் தோழி. இப்பாடலின் பயன் ஆற்றுவித்தல் ஆகும். தலைவனின் வருகை தலைவியை ஆற்றுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ‘நெடுமலை நாடன்’ என்றது தலைவனும் மலையைப் போன்று அளப்பரிய பொருளும் அசைக்கவியலா தோற்றமும் வறட்சியிலும் வளம் தரும் தன்மையும் கொண்டவன் என்று இயற்பட மொழிந்தாள் என்கிறார் பொ.வே.சோமசுந்தரனார். இது ‘இறைச்சி’ என்க.
சொற்பொருள்: அன்னாய் வாழி - வாழ்க அன்னையே; வேண்டு அன்னை - கேட்பாயாக அம்மா; நம்மூர் - நம்முடைய ஊர்; பார்ப்பனக் குறுமகன் போல - பார்ப்பனச் சிறுவரைப் போல; தாமும் குடுமித் தலைய - தாமும் குடுமித்தலையைக் கொண்டிருக்கின்றன, தலைய - பன்மை குறிக்கின்றன; மன்ற - அசைச்சொல்; நெடுமலை நாடன் - நீண்ட மலைகளின் நாட்டையுடைய தலைவன்; ஊர்ந்த மாவே - தேரில் பூட்டப்பட்டு ஊர்ந்து வந்த குதிரைகள்;

என் பாடல்:
அன்னாய் வாழ்க! சொல்வதைக் கேளாய்!
நம்ஊர் பார்ப்பனச் சிறுவர் போல
குடுமி கொண்ட குதிரைகள் பாராய்
நெடுமலைத் தலைவன் தேரில் பூட்டியே!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

6 கருத்துகள்:

 1. நா. முத்துநிலவன்18 ஜனவரி, 2024 அன்று 1:04 AM

  இடையிடையே இப்படி எழுதுவது தான் நிலையான ஆவணமாகும். தொடர்ந்து எழுதும்மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அண்ணா. தொடர்ந்து எழுதுகிறேன், மிக்க நன்றி அண்ணா

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!