Tuesday, November 17, 2015

குன்று நோக்கத் தணியும் நோய்

இது வேறொன்றுமில்லை தாயே, மந்திரவாதி வேண்டாம். தெய்வத்தால் என்று நினைத்துப் பலிகொடுத்ததால் புலால் நாற்றமெடுக்கும் கல்லின் மீது ஏறி நின்று அவருடைய அழகிய மலையைப் பார்த்தாலே போதும்.

image:thanks google


ஐங்குறுநூறு 210
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
புலவுச் சேர் துறுகல் ஏறி அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று
மணி புரை வயங்கிழை நிலைபெறத்
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே


பாடியவர் கபிலர், 'அன்னாய் வாழிப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப்  பாடல்களுள் ஒன்று

இனிய இப்பாடலை ஆங்கிலத்திலும் படித்து மகிழ, என் மொழிபெயர்ப்பை இந்த இணைப்பில் பார்க்கவும் - Feast her eyes.

எளிய உரை: வாழ்க அன்னையே, கேட்பாயாக! நம் தோட்டத்தில் இருக்கும் புலால் நாற்றம் எடுக்கும் குண்டுக்கல் மீது ஏறி நின்று பூக்கள் நிறைந்த அவர் நாட்டுக் குன்றைக் கண்டால் நீலமணி போன்ற ஒளிபொருந்திய இவளுடைய அணிகலன் நெகிழாமல் நிலைபெற்றிருக்க இவள் கொண்டிருக்கும் நோயும் தணியும்.

விளக்கம்: தலைவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி வருத்தத்தில் மெலிந்து பசலை கொண்டு இருக்கிறாள். இது தெய்வத்தினால் ஆனது என்று எண்ணியச் செவிலித்தாய் வெறிவிலக்குவதற்கு (மந்திரித்தல்) ஏற்பாடு செய்கிறாள். இதை அறிந்த தோழி, செவிலித்தாய்க்குச் சொல்வதாக அமைந்த பாடல். தெய்வத்தினால் என்று கருதி தெய்வத்திற்குப் பலிகொடுக்கப்பட்டப் புலால் நாறும் குண்டுக்கல் மேல் இவள் ஏறி நின்று, பூக்கள் நிறைந்த தலைவனது குன்றைப் பார்த்தாலே போதும், ஒளிபொருந்திய இவளுடைய அணிகலன் நெகிழாமல் நிலைபெறுவதோடு இவள் உற்ற நோயும் தணியும் என்று சொல்கிறாள். தலைவி தலைவன் மீது காதல் கொண்டுள்ளதைச் சொல்லி அறத்தோடு நிற்றல் என்பதாம். காதல் கொண்ட தலைவிக்குத் தலைவன் சம்பந்தப்பட்ட எந்த பொருளும் இடமும் மகிழ்வு தருவதாகும். அதனாலேயே தலைவனின் குன்றைப் பார்த்தால் போதும், சரியாகி விடுவாள் என்கிறாள் தோழி. இதன் மெய்ப்பாடு வெளிவிலக்குவதன் அச்சத்தோடு சேர்ந்த பெருமிதம். தலைவியின் நோய் தெய்வத்தினால் அன்று, காதலால் என்று குறிப்பாக உணர்த்துகிறாள் தோழி. தெய்வத்தினால் என்று கருதி பலிகொடுப்பது வழக்கில் இருந்து, அப்பொழுது பலி கொடுக்கப்பட்டதால் புலால் நாற்றம் எடுக்கும் குண்டுக்கல் என்றாள்.

குன்று மறைந்ததால் வருந்திய தலைவி இங்கு இருக்கிறாள். :)

சொற்பொருள்: அன்னாய் வாழி - வாழ்க அன்னையே, வேண்டு அன்னை - கேட்பாயாக, நம் படப்பை - நம் தோட்டத்து, புலவு சேர் - புலால் நாற்றமெடுக்கும், துறுகல் - குண்டுக்கல், அவர்நாட்டுப் பூக்கெழுக் குன்றம் - அவர் நாட்டின் பூக்கள் நிறைந்த குன்று, மணி புரை - நீலமணி போன்ற, வயங்கிழை - ஒளி பொருந்திய அணிகலன், நிலைபெற - நெகிழாமல் நிலைபெற்று இருக்க, தணிதற்கும் உரித்து - சரியாகி விடும், அவள் உற்ற நோயே - அவள் கொண்ட நோயே

என் பாடல்:
அன்னையே வாழ்க! சொல்வதைக் கேள்!
நம் தோட்டத்தின் புலால்நாறும் கல்மீதேறி 
பூக்கள் நிறைந்த அவர் குன்றைக் கண்டால் 
நீலமணி போன்று ஒளிரும் இவள் அணிகலன்
நிலைபெற்றுத் தணியும் இவள் கொண்ட நோயே


image: thank google

26 comments:

 1. விளக்கம் கொடுப்பதால் என்றைப் போன்ற பாமரனுக்கு புரிகின்றது சகோ
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   Delete
 2. ஒரிஜினல் சற்றுப் புரிந்தாலும், உங்கள் விளக்கமும், உங்கள் பாடலும் எளிதாய் புரிந்துவிடுகின்றது....அருமை சகோ./க்ரேஸ்

  ReplyDelete
 3. ஆகா.. என்ன இனிமை!

  ஐங்குறுநூறுப் பாடலும் அதனோடு தந்த விளக்கமும் அருமையென்றால்
  நீங்கள் அத்தனை இலகுவாக, இனிமையாகத் தந்த
  உங்கள் ஆக்கப்பாடல் அதிசிறப்பன்றோ!..

  மிகவும் ரசித்தேன் தோழி!
  உளமார்ந்த வாழ்த்துக்கள்!
  தொடருங்கள்!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அன்புத்தோழி இளமதி

   Delete
 4. அருமையான பகிர்வு... விளக்கத்துடன் பாடல் பகிர்வு...
  ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. அருமையான விளக்கம், பகிர்வு.

  ReplyDelete
 6. உங்கள் வலைத்தளத்துள் மீண்டும் ஐங்குறுநூறு. இலக்கியத் தொடர். நூலாக வந்திட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா. உங்கள் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி ஐயா. அதற்கான வழிகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

   Delete
 7. மறுபடியும் சங்க இலக்கியத் தொடர் ஆரம்பம் கண்டு மகிழ்ந்தேன். பாடலும் பொருளும் அருமை.

  ReplyDelete
 8. அருமையான விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
 9. சங்கத்தமிழ், உங்கள் கரங்களில் தங்கத்தமிழாகும் மாயம்...பொங்கும் புனலே...இன்னும் தருக...

  ReplyDelete
  Replies
  1. இனிய ஊக்கம் தரும் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 10. அருமையான பாடல்! அழகான விளக்கம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வணக்கம்
  பாடலும் நன்று விளக்கமும் நன்று வாழ்த்துக்கள் த.ம 10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. வழக்கம் போல அருமை :)

  ReplyDelete
 13. அருமையான பாடலும் விளக்கமும்.... நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 14. பண்டிதத் தமிழைப் பாமரரும் புரிந்துணரப் பாவாக்கிக் பொருளுரைத்த பாங்குமிக நன்று

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...