Friday, August 21, 2015

நீலமலர்க் கண்கள்

அவர் நாட்டு நீலநிற மலை கண்களில் இருந்து மறையும் போதெல்லாம் இவள் கண்கள் நீரால் நிறையும். அக்குறையை நீக்கி வைத்துவிட்டீர்கள்.


ஐங்குறுநூறு 208
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர்நாட்டு
மணிநிற மால் வரை மறைதொறு இவள்
அறைமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே

For the English translation of this song, please click Eyes like blue flowers.
 
பாடியவர் கபிலர், 'அன்னாய் வாழிப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்துப் பாடல்களுள் ஒன்று.

எளிய உரை: வாழ்க அன்னையே, கேட்பாயாக. காட்டில்லுள்ளோர் கிழங்கு எடுப்பதற்காகத் தோண்டிய பெரிய குழிகள் நிறையுமாறு வேங்கை மரத்தின் பொன்போன்றப் புது மலர்கள் வீழும் அவருடைய நாட்டில் இருக்கும் நீலநிற மலை பார்வைக்கு மறையும் பொழுதெல்லாம் இவளுடைய பெரிய கண்கள் நீரால் நிறையும்.

விளக்கம்: தலைவியின் காதலைப் பற்றி செவிலிக்கு அறத்தோடு நிற்ற தோழி, செவிலியின் உதவியால் தலைவனின் வரவு நிகழ்ந்தபின்னர் மகிழ்ச்சியோடு உன்னால் தலைவியின் வருத்தம் தீர்ந்தது என்று செவிலியிடம் சொல்வதாக அமைந்த பாடல். அறத்தோடு நிற்றல் என்பது தலைவியின் காதலைப் பற்றி மறைக்காமல் சொல்லும் தன்மையைக் குறிக்கும்.  கிழங்கு அகழ் குழி வேங்கை மலர்களால் நிறைவது என்பது மற்றவருக்குக் கொடுப்பதால் தனக்கு ஏற்படும் குறையைத்  தன் புகழ் நிறைக்கும் பெருமை உடையவர் என்று உணர்த்துவதாகும். அத்தகையப் பெருமை உடையவன் தலைவன் எனக் கொள்க. தலைவனைப் பிரிந்திருந்தக் காலத்தில் தூரத்தில் தெரியும் அவனுடைய நாட்டின் உயர்ந்த நீல நிற மலையைப் பார்த்துத் தலைவி ஆற்றியிருந்தாள். அப்பொழுது அம்மலையும் பார்வைக்கு மறைந்தால் சுனையில் இருக்கும் நீல மலர்களைப் போல் தலைவியின் பெரிய கண்கள் வருத்தத்தில் கண்ணீரால் நிறையும். நீ தலைவனை வரச் செய்ததால் தலைவியின் வருத்தம் நீங்கிற்று என்று தோழி செவிலியிடம் மகிழ்ச்சியாகச் சொல்கிறாள். அறைமலர் என்பது சுனையில் இருக்கும் நீல மலர்கள் தலைவியின் கண்களைக் குறிக்கப் பயன்படுவதால் ஆகுபெயர் ஆகும். (ஒரு பொருள் தன்னைக் குறிக்காமல் வேறு ஒன்றைக் குறிப்பது ஆகுபெயர்)
சொற்பொருள்: அன்னாய் வாழி - வாழ்க அன்னையே, வேண்டு அன்னை - கேட்பாயாக, கானவர் - காட்டில் வாழ்வோர், கிழங்கு அகழ் - கிழங்கிற்குத்  தோண்டிய, நெடுங்குழி - பெரிய குழி, மல்க - நிறைய, வேங்கைப் பொன்மலி - வேங்கையின் பொன்னிறமான மலிந்த, புதுவீ  - புதுப்  பூக்கள்,  தாஅம் - வீழும், அவர்நாட்டு - அவருடைய நாட்டு, மணிநிற - நீல மணியைப் போன்ற நிறமுடைய, மால் வரை - உயர்ந்த மலை, மறைதொறு - மறையும் பொழுதெல்லாம், இவள் அறைமலர் - இவளுடைய சுனையில் இருக்கும் நீலமலர்களைப் போன்ற, அறை  - ஆகுபெயர்,  நெடுங்கண் - பெரிய கண்கள், ஆர்ந்தன - நிறைந்தன, பனியே - கண்ணீரே

என் பாடல்:

அன்னையே வாழ்க செவிசாய்த்துக் கேட்டிடுவீர்   
பொன்புது வேங்கை மலர்வீழ்ந்து கானவர்தம்
கிழங்ககழ் பள்ளம் நிறைக்கும் அவர்நாட்டு 
நீலமலை மங்குதோறும்  நீலமலர் போன்று
இவள்பெருங் கண்கள் நிறையும் பனியே


31 comments:

 1. Replies
  1. உடனே வருகை தந்து கருத்திட்டதற்கு மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பாடலுக்கான விளக்கமும் அதற்கு தகுந்த தங்கள் பாடல் வரிகளும் மிகவும் சிறப்புங்க தோழி.
  தங்களைப்போல் எல்லாம் எழுதக்கற்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்பான கருத்திற்கு நன்றி தோழி. கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க.. அது ஏத்துக்கவே முடியாது.. உங்களைப் போல் எழுதமுடியாதுனு நான் நினச்சிட்டு இருந்தா...
   உங்கள் தன்னடக்கம் தவிர வேறில்லை தோழி

   Delete
 3. பாடல் எதை வேண்டுமானாலும் உணர்த்தட்டும்..

  எத்தனை அழகான காட்சி - கவியாகியுள்ளது!..

  இனியும் வாய்க்குமோ - அப்படியொரு காலம்!?..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா, காட்சியை நினைத்து லயிக்காமல் இருக்க முடியாது
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 4. ஆஹா..!!.

  அற்புதம்! இலக்கியப் பாடலை தங்களின் பாடலாகக் காணும்போது
  அதன் சுவை பன்மடங்காகக் கண்டேன்!

  இலக்கியத்தில் இருக்கும் அருமையான பல பாடல்கள்
  அதன் பொருள் தேட முடியாமல் படிக்காமல் போவதை
  தங்கள் முயற்சியால் தடுத்தீர்கள். படித்து அதன் சுவையறிந்தேன்!

  தொடருங்கள் தோழி!
  வாழ்த்துக்கள்!

  த ம 3

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி
   உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்

   Delete
 5. வணக்கம்,
  அருமையான விளக்கம்,
  தாங்கள் ஆக்கிய பா வும்,,,,,,,,
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி
   கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

   Delete
 6. நல்ல விளக்கம். ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. மிக சிறப்பு.

  ReplyDelete
 8. அருமை! அழகாய் சொல்லிச் செல்கின்றீர்கள் சகோதரி! ரசித்தோம்...தங்களின் பாடலும்...

  ReplyDelete
 9. அருமை
  ரசித்தேன் சகோதரியாரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
 10. அருமையான பாடல்! விளக்கமும் தங்கள் கவிதையும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்தன! நன்றி!

  ReplyDelete
 11. விளக்கம் அருமை! உங்கள் பாடல் அதனினும் இனிமை!

  ReplyDelete
 12. மிகவும் ரசித்தேன் தோழி... உங்கள் தேடல்கள் அனைவருக்கும் பயன்படுகிறது.. மிக்க நன்றி! :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி, தொடர் வருகைக்கும் அன்பான கருத்திற்கும்!

   Delete
 13. அற்புதமான பாடலை ரசித்தேன் தங்களின் விளக்கம் அருமை இப்படி பள்ளியில் சொல்லித்தரவில்லை என்ற ஏக்கம் வருகின்றது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ
   ஆமாம், பள்ளியில் எளிமையாகச் சொல்லிக் கொடுத்தால் அனைவரும் ஆர்வமுடன் படிப்பர்

   Delete
 14. அட உங்க பாடலும் சங்க பாடல் மாதிரியே இருக்கே. (10 வாடி படிச்சா தான் நம்ம மூளைக்கு புரியுது :) ). செம்ம கிரேஸ்

  ReplyDelete
  Replies
  1. அச்சோ! என்ன ஶ்ரீனி இப்படிச் சொல்லிட்டீங்க! அப்போ நான் இன்னும் எளிமையா எழுதனும்

   நன்றி ஶ்ரீனி

   Delete
 15. அருமையம்மா. மிகவும் அழகான சரியான விளக்கம். இடையில் ஆகுபெயர் இலக்கண விளக்கம் மகிழ்வளித்தது. உண்மையில் இப்படித்தான் இலக்கியத்தோடு சேர்த்தே இலக்கணம் தரவேண்டும். நம் பாடநூல்களில் இவை தனியே தரப்படுவதால் அது மாணவர்க்குக் கசப்பாகிறத. படமும் அழகு. என் இனிய பாராட்டுகள் பா. (தாமதத்திற்கு வழக்கம்போல மன்னிப்புக்கோருகிறேன்)

  ReplyDelete
  Replies
  1. அண்ணா, ரொம்ப நன்றி அண்ணா . :-)
   இலக்கியப் பதிவிற்கு உங்கள் கருத்து அதிக மகிழ்வூட்டும்.

   ஆமாம் அண்ணா , இரண்டிற்குமான தொடர்பு தெரிந்து படித்தால் எளிமையாய் இனிமையாய் இருக்கும்

   Delete
 16. பாடல் வரிகளும் தெள்ளிய விளக்கவுரையும் அந்நாளையக் காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. சங்கப்பாடல்களை சுவைக்க விரும்பும் யாவர்க்கும் இனியதொரு வரப்பிரசாதம் உங்கள் பதிவுகள். பாராட்டுகள் கிரேஸ்.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...