முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா
2.மாரியன்
3.ஜிம்மி லீ ஜாக்சன்
4. ஜான் லூயிஸ்
எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத் தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.
