பொன்னியின் செல்வன், என் பொன்னியின் செல்வன்

 பொன்னியின் செல்வன் - இந்தச் சொற்றொடரில் தான் எத்துனை வலிமை! எத்துனை இனிமை! வன்வாள் பாய்ந்தது தேனிமை நிறைந்தது என்று சொல்லலாம்!

இந்தச் சொற்றொடர் மனம்கவர் பெயர் மட்டுமல்ல, காலம் கவர் கால உந்தி!
ஏரியின் அழகை இரசித்துக்கொண்டே குதிரையில் வரும் இளைஞனின் எண்ண ஓட்டங்கள் சுழலாய் உள்ளிழுக்கும்! ஆனால், மூச்சுத்திணராமல் பல சுழல்களுக்குள் பயணிக்கவைக்கும்! குளிர் சோலைகளைக் காட்டும், சிலிர் சதிகளையும் காட்டும்!

பொன்னியின் செல்வன் எனும்போதே மனத்திரையில் மங்காதக் காட்சிகள் முன் துலங்கும்!

அருள்மொழி தேவரின் அருள் நிறைந்த அகத்தில் அண்ணன் ஆதித்த கரிகாலரின் கொலைக்குக் காரணமானவர்களைப் பழிதீர்த்துவிடத் துடிக்கும் கனலும், பீலியிறகாய் மென்காதலும் ஒன்றாய்க் கோலோச்சுவதும்; தலைமைப் பண்புகளும் நிர்வாகத்திறமையும் ஒருங்கிணைந்து தீர்க்கமாகச் செயல்படும் குந்தவைப்பிராட்டியும், அனிருத்தப்பிரமராயரையே கேள்விக்குள் வைக்கும் அவர் எண்ணங்களும்; மேலே சலனமற்றக் குளமாய் ஆழமான அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட அனிருத்தப்பிரமராயரும்; உடல்நலம் குன்றினும் மனநலத்தால் துயருறும் சந்தரச்சோழரும்; குடந்தை சோதிடரிடம் வரும் வானதியும் யானையில் வரும் அருள்மொழியும், வானதியும்  வெள்ளமும்; நாகப்பட்டினம் புத்தமடமும்; படகுவலிக்கும் பூங்குழலி யும் "ஆழ்கடலும் அமைந்திருக்க அகக்கடலும் பொங்குவதேன்" எனும் அவள் பாடலும்,
கோடியக்கரை கலங்கரை விளக்கமும் கொள்ளிவாய்ப் பிசாசும்;  மயங்கிய இளவரசனைச் சமயோசிதமாகக் கரைசேர்ப்பதும் அவள் மனத்திடனும்;  ஆழ்வார்க்கடியானின் இடக்குமுடக்குகளும் வந்தியத்தேவனுடனான சந்திப்புகளும்; பழுவேட்டரையர்களின் விசுவாசமும் வீரமும் அவர்களிடையேயான வேறுபாடுகளும்;
நந்தினியின் எழிலும் உள்ளிருக்கும் வஞ்சகமும்; இரவிதாசன் மற்றும் கூட்டத்தின் சதித்திட்டங்களும் மண்டபமும் பாறைகளும்; 
இலங்கையில் இடிந்துவிழும் மண்டபமும் அருள்மொழி வர்மரைக் காக்கும் மந்தாகினியும், புத்த பிக்குகளின் சதிகளும்;
ஆதித்தக் கரிகாலன் பாண்டியனைத் துரத்திச்செல்லும் வயல்வெளியும் அவனைக் கொல்லும் குடிசைக்காட்சியும்; ஆபத்து தவிகளும்; கடம்பூர் அரண்மனையில் சதிக்கு இரையாகும் இதயம் படபடக்கும் அந்த இரவும் இருண்ட படிகளும்; சேந்தன் அமுதனின் அமைதியான குணமும்; செம்பியன் மாதேவியின் அன்பும் பரிதவிப்பும் கொடையும்; பொன்னி நதியின் வனப்பும் வளமும், என்று இத்துனைக் காட்சிகளும் இமைநொடிப்பில் திரையாகிவிடும் கண்களில்! 

நான் மூன்று முறை முக்குளித்த இக்கடல் ஒவ்வொரு முறையும் முத்துமாலை அணிவிக்கத் தவறியதில்லை;  இன்னும் பல முறையும் அணிவிக்கும் என்பதிலும் ஐயமில்லை!

படம் பார்க்க ஆவல்வரினும் ஆழ்மனத்தில் ஒரு தயக்கம் , எங்கே என் நாயகர்கள் முகம் மாறிவிடுவார்களோ! என் காட்சிகள் களவாடப்படுமோ! என் முத்துகள் ஒளி பறிக்கப்படுமோ என்று!

வி.கிரேஸ் பிரதிபா
அட்லாண்டா
27 செப்டம்பர் 2022
  

8 கருத்துகள்:

 1. இறுதியில் வைத்த தங்களது தயக்கத்தின் காரணத்தில் உண்மை இருக்கிறது சகோ.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் தயக்கம் எனக்கும் இருக்கிறது. கல்கி நம் மனதில் ஏற்படுத்தி இருக்கும் காட்சியமைப்புகளைக் காட்சிப் படுத்தி திரையில் ஓடவிடுவது என்பது சாதாரண காரியமல்ல. கதையினையும் மாற்றாமல் சொதப்பாமல் இருப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை அண்ணா, சரியாகச் சொன்னீர்கள்! சோழனின் கதையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு முதல் நன்றி. கதை எ ப்படி என்று பார்க்கவேண்டும். பலதரப்பட்ட கருத்துகள் வருகின்றன

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம் அண்ணா :) நான் இன்னும் பார்க்கவில்லை. பல விதமாகக் கருத்துகள் வருகின்றன. மொத்தத்தில் நன்றாக இருக்கிறது என்று..மகிழ்ச்சி அண்ணா. நன்றி

   நீக்கு
 4. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்நாள் நெடுக பதினைந்து தடவைகளுக்கு மேல் இந்த புதினத்தின், கல்கியில் இனிமையான நடையில் மெய்மறந்திருக்கிறேன்.
  எனக்கும் உங்கள் சந்தேகம் உண்டு. ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் மேற்கத்திய இசையின் தாக்கம் சில பாடல் காட்சிகளில் இருக்கிறது. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா. பதினைந்திற்கும் மேலா!! கரந்தை ஜெயக்குமார் அண்ணா சொல்லியிருப்பது போல கல்கியின் காட்சிகளைக் கொண்டுவர முடியாது! பார்க்கலாம் ..பலரது எதிர்பார்ப்புகளை இந்தப் படம் என்ன செய்கிறது என்று! :)

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி

  தமிழ் இனி தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ் அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் ச...