Image: Thanks Pixabay (link) |
நதிக்கு இப்போது எண்பத்தாறு வயது! ஓரளவு நடையுடையாய் இருக்கும் முதியவர்கள் வாழும் குடியிருப்பில் சிறு வீட்டில் குடியிருக்கிறார். சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை, குளியலறை என்று கச்சிதமாய் இருக்கும். தன் வீட்டில் இருந்த மர அலமாரிகள் இரண்டைக் கொண்டு வந்து வைத்து, அவற்றுள் அழகழகான அலங்காரப் பொருட்களும் வைத்திருப்பார். குடும்பப் படங்களும் இருக்கும்.
அங்கு ஏதாவது புதிதாக இருந்தாலோ மாறியிருந்தாலோ அவரிடம் கேட்பேன், அவருக்குப் பிடிக்கும் என்று அறிந்திருப்பதால். மகிழ்வுடன் சொல்வார், அந்தச் சில நிமிடங்கள் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை எண்ணி எனக்கும் மகிழ்ச்சி! சொல்ல மறந்துட்டேனே... வாழ்க்கை என்ன கொடுத்தாலும் தன் வழியில் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போல மகிழ்வுடன் வாழ்வதால் இவருக்கு நதி என்று பெயரிட்டேன், உண்மைப் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்பதால்.
மற்றொன்று நாற்பது வயதானாலே வயதாகிவிட்டது என்று முடங்கி தனிப்பட்ட விருப்பங்களை அடக்கியும் ஒதுக்கியும் வாழும் நம் நாட்டு முதியவர்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.
குடியிருப்புக்குள் செல்வதற்கு நுழைவாயிலில் குறியீட்டு எண்ணைச் சொடுக்கினால் அவருக்குத் தொலைபேசி அழைப்பு போகும். நாம் யாரென்று சொன்னால் அவர் திறக்க அனுமதியளிக்கலாம். அப்போதுதான் வாகனம் உள்ளே செல்ல முடியும். நதியைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் பலமுறை அழைக்க வேண்டும். தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகுமளவிற்கு ஆகும். கதவைத் திறந்து விடாமல் வைத்துவிடுவார். கோபமாகக் கூட வந்திருக்கிறது, இனிமேல் இவரைப்பார்க்க வரக்கூடாது என்று! ஆனாலும் சனிக்கிழமை அவரை அழைத்து ஞாயிறன்று எத்தனை மணிக்கு வரலாம் என்று ஓரிரு நேரங்கள் சொல்லிக் கேட்பேன்.
எப்பொழுதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருப்பார், பெரும்பாலும் ஏதாவதொரு படம் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சத்தத்தைக் குறைத்தால் என்ன என்று கோபம் வரும். ஆனாலும் ஒரு நாளும் அவரிடம் சொன்னதில்லை. எப்படியோ தொலைபேசி பிரச்சனை என்று வேறு மாற்றி வைத்திருக்கிறார். இப்போதெல்லாம் ஓரிருமுறையில் கதவு திறக்க அனுமதி கொடுத்துவிடுவார்.
கணவரை எப்போது முதன்முதலில் சந்தித்தார், எப்படித் திருமணம் செய்தார்கள் என்று அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார்.
கணவரை இழந்து, அவருடைய இனிய நினைவுகளுடன் வாழும் நதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அவ்வப்போது மகன் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பழங்கள் வாங்கக் கடைக்குச் செல்வார். சென்ற ஞாயிறன்று மகனுடன் வெளியே சென்றதால் மாலையில் சந்திக்கச் சென்றேன். அழகான இளங்கத்திரிப் பூ நிறத்தில் மேல் சட்டையும் அதற்குப் பொருத்தமாய்ப் பதக்கத்துடன் கூடிய ஒரு மெல்லிய சங்கிலியும் அணிந்திருந்தார். "உங்கள் சங்கிலி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அழகாக இருக்கிறீர்கள்" என்று சொன்னேன். அந்தச் சங்கிலி தன கணவர் பரிசளித்தது என்றார். "அவ்வப்போது இப்படி ஏதாவது ஒன்றைப் பரிசளிக்கும் பழக்கமுடையவர் என் கணவர்" என்று சொன்ன நதி அப்படியே தன் கணவரைப் பற்றிச் சொல்லத்தொடங்கினார்.
"என் கணவர் பணி ஒய்வு பெற்ற சில மாதங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டார். அது வரைக்கும் பெரிதாக எதுவும் வந்தது இல்லை, ஆரோக்கியத்துடனே இருந்தார். ஆனால், பின்னர் அடுத்தடுத்து சிறுநீரகத்தில் புற்று, மாரடைப்பு, பக்கவாதம் என்று ஒன்று மாற்றி ஒன்று பாதிக்கப்பட்டுத் துன்பப்பட்டார்" என்று சொன்ன நதி சில விவரங்களையும் பகிர்ந்துகொண்டார். பின்னர், "அதனால் நான் எல்லாரிடமும் இப்போது சொல்வது, 'ஓய்வு பெற்றபின் உலகைச் சுற்றி பார்ப்பேன், அங்கு செல்வேன், இங்கு செல்வேன் என்று தள்ளிப் போடாதீர்கள். உடல்நலமும் வாழ்வும் இருக்கும்போதே சுற்றிப்பாருங்கள்.' என்பதே. பணத்தைச் சேர்த்துவைத்து பெட்டிக்குள் எடுத்துச் செல்லவா போகிறோம்" என்றார்.
பேசிக்கொண்டிருக்கும் போது ஓர் இரவில் தன் கணவருக்குப் பக்கவாதம் பாதித்தபொழுது தான் ஒரு தோழியை அழைத்ததாகவும் அவர்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் சொன்னார். பின்னர், இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
அந்தத் தோழிக்கு இப்போது தொண்ணூற்றி இரண்டு வயது, அவர் கணவருக்குத் தொண்ணூற்றி ஆறு. தோழிக்குக் கண் பார்வை போனதால் அவர் கணவருடைய அலைபேசிக்குத் தான் அழைத்துப் பேசுவாராம் நதி. நான்கு மாதங்கள் ஆகிவிட்டன இவர் பேசி. அப்போதே தோழியும் அவர் கணவரும் தனித்தனி இடங்களில் இருந்தனர்.."எப்படி ஒன்றாக இருந்த அன்புத் தம்பதி" என்றார் நதி. "ஏரிக்கு அந்தப் பக்கம் நடந்து சென்றிருப்போம். அவள் கணவர் அழைத்து எங்கு இருக்கிறாயம்மா? என்று கேட்பார். நதியுடன் தானே நடந்து கொண்டிருக்கிறேன் என்பாள்." என்று சொன்னதிலிருந்து எவ்வளவு அன்னியோன்னியமான தம்பதி என்று தோன்றியது. காலம் என்னவெல்லாம் செய்கிறது என்று மனம் கனத்தது.
இப்போது அழைத்தால் பதில் இல்லை, அப்படி என்றால் என்று ஒரு பார்வை பார்த்து வருந்தியவரிடம் குறுஞ்செய்தி அனுப்பிப் பார்க்கலாமா என்று கேட்டேன். எனக்குத் தெரியாதே என்றார். அவருடைய அலைபேசியை வாங்கி கற்றுக்கொடுத்தேன். அவருடைய டயரியை எடுத்து, நண்பரின் எண்ணைத் தேடி அழைத்துப் பார்த்தோம். பதில் இல்லை. எண் உபயோகத்தில் இல்லை என்றே வந்தது. சரி, தோழிக்கே அழைக்கலாம், யாராவது எடுப்பார்கள் என்று அழைத்தேன், பதில் இல்லை. வீட்டு எண்ணிற்கு அழைத்தால் அந்த எண்ணைத் தற்பொழுது வேறு யாரோ வைத்திருக்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை, "சாரி, நதி" என்றேன். "பரவாயில்லை, இவ்வளவு முயற்சித்தோம் என்ற திருப்தி இருக்கிறது." என்றார். தோழியின் அலைபேசியில் தவற விட்ட அழைப்பைப் பார்த்து யாராவது நதிக்கு அழைப்பார்களா? தெரியவில்லை.
ஒரு வாரமாக அவர்கள் என் மனத்தைவிட்டு அகலவில்லை.
மனம் எதுவும் சொல்ல முடியாத நிலை ஆகி விட்டது...
பதிலளிநீக்குஆமாம் .. கருத்திற்கு நன்றி அண்ணா.
நீக்குமனம் எதுவும் சொல்ல முடியாத நிலை ஆகி விட்டது...
பதிலளிநீக்குமனம் கனக்கிறது...
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி சகோ .
நீக்குஎன் மனதைவிட்டும் அகலவில்லை
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி சகோ .
நீக்குமனம் கனத்துப் போய்விட்டது,
பதிலளிநீக்கு///////////நாற்பது வயதானாலே வயதாகிவிட்டது என்று முடங்கி தனிப்பட்ட விருப்பங்களை அடக்கியும் ஒதுக்கியும் வாழும் நம் நாட்டு முதியவர்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்////////
உண்மை
ஆமாம். கருத்திற்கு நன்றி அண்ணா.
நீக்குமனம் என்னவோ போல் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குதுளசிதரன்
கருத்திற்கு நன்றி அண்ணா.
நீக்குமனம் கனத்துப் போய் மனதில் என்னென்னவோ ஊகங்கள் வருகின்றன...
பதிலளிநீக்குநம்மூர் முதியவர்கள் பற்றிச் சொன்னது உண்மை. ஆனால் இப்போதும் கொஞ்சம் மாறி வருகிறது கொஞ்சமே கொஞ்சம்தான்...
கீதா
ஆமாம் கீதா..இந்த வாரமும் முயற்சி பலனளிக்கவில்லை. வேறு எப்படி முயல்வது என்று எனக்கும் தெரியவில்லை.
நீக்குஆமாம், கொஞ்சம் மாற்றம் வருகிறது மகிழ்ச்சி..முழுவதும் வர வேண்டும். நன்றி கீதா.