அறச்சீற்றம் கொள் - பொங்கல் கவியரங்கக் கவிதை

 

தமிழ் அமெரிக்கா மற்றும் ஆலந்தூர்
கோ.மோகனரங்கன்தமிழியல் ஆய்வு மையம் நடத்திய பொங்கல் கவியரங்கில் நான் வாசித்தக் கவிதையும், அதன் வலையொளிப் பதிவும்! பார்த்து உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள். 

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! மகிழ்வும், அன்பும், நலமும் வளமும் பொங்கட்டும்! பொங்கலோ பொங்கல்!

20 நாடுகளிலிருந்து 53 கவிஞர்கள் கவிபடைத்த இனிய நிகழ்வு! அன்புச் சகோதரிகள் கீதாவும் மைதிலியும் சிறப்பான கவிதைகளைப் படைத்தார்கள்.தமிழ் வணக்கம்:
நரம்பினில் ஓடும் உணர்வே! நற்றமிழே! 
அரங்கினில் ஆளும் தாயே! கொற்றமிழே! - வணக்கம் 
 
தலைமை வணக்கம்:
இன்தமிழில் சொல்படைத்து கவிச்சிறகில் வானளந்து  
புன்சிரிப்பில் உளம்கவரும் அருந்தலைமை   சாரதாவே  - வணக்கம்  

அவை வணக்கம்:
செந்தமிழின் சுவைமயங்கி செந்தேனில் சுரும்பெனவே 
பைந்தமிழில் கவிபடைக்க வந்தோரே அவையினரே  - வணக்கம்

முதன்மைத் தலைப்பு:
நன்னிலம் வணங்கி உழவர் போற்றி 
மன்னுயிர் மதித்து மகிழும் நன்னாள் 
நன்றியில் இயற்கை போற்றும் பெருநாள்
தன்னிக ரற்ற தமிழர் திருநாள்

 துணைத் தலைப்பு:

கலப்பை பிடித்து கலனை நிறைப்பார் 
பலனைப் பாராது பிறருக் குழைப்பார் 
நிலத்தில் முத்தாய் குருதியை விதைப்பார்
உலகிற்கே  உணவிடும் உழவர் போற்றிடு

அறச்சீற்றம் கொள் அநீதியை எதிர்த்திடு 
மறத்தமிழர் நாம் அச்சம் அகற்றிடு 
கறச்செயல் கண்டால் கனலென எரித்திடு 
குறள்வழி வாழ்ந்தே குன்றென உயர்ந்திடு

மங்கையர் போற்றிடு முதியவர் மதித்திடு 
இங்கவர்க்கு தீங்கெனில் பொங்கி எழுந்திடு 
எங்கோ எதற்கோ எனவிடுதல் கேடு 
மங்கா வாழ்விற்கு அறச்சீற்றம் கொள்

நிலத்தை மரத்தைக் காக்கத் துணிந்தனர் 
பலத்தை கரத்தில் கோர்த்து இணைந்தனர்
உலகம் வியக்கும் சிப்கோ இயக்கமாம் 
விலங்கைக் காக்கும் பிஷ்னாய் மக்களாம் 

நிறவெறி கண்டே வெகுண்டு எழுந்தனர்
அறச்சீற்றம் கொண்டு அறத்தை நாட்டினர்  
திறனெலாம் சேர்த்த காந்தி, மண்டேலா 
புறம்காட்டா லூதர், ரோசா பார்க்ஸ்  

வரலாற்றில் பலருண்டு அறச்சீற்றம் கொண்டோர்  
பெரியார் பாரதியார் அம்பேத்கர் - அன்னை 
தெரசா, மலாலா, மார்பறுத்த நங்கேலி 
தரமாய்ச் சட்டமும் மருத்துவமும் முத்துலட்சுமி

மெரினா கண்ட பெருங்கடல் முழக்கம் 
மரபுகாக்கப்  பொங்கிய தமிழர்  சீற்றம் 
பருவநிலை போராளி கிரெட்டா தூன்பெர்க் 
தீர வள்ளியம்மை வழிவந்த அறமோ?

எண்ணற்றச்  சான்றோர் உண்டு  வழிகாட்ட
எண்ணுதல் வேண்டும் அவர்தம் தீரத்தை  
துண்டாக்கும் கயமை அழித்து  மனிதத்தில் 
மண்ணிலம் மாண்புற அறச்சீற்றம் கொள்
-வி.கிரேஸ் பிரதிபா
 
தமிழ் அமெரிக்க தொலைக்காட்சிக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்த அதன் நிர்வாகிகளுக்கும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழாய்வு மையத்திற்கும் திரு. பாட்டழகன் ஐயாவிற்கும் தலைமை வகித்து  இன்முகத்துடன் நடத்திய அன்புத்தோழி சாரதா சந்தோஷிற்கும் மனம்கனிந்த நன்றிகள்! 
முழு கவியரங்கையும் தமிழ்அமெரிக்காவின் வளையொளி இணைப்பில் காணலாம்.4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...