தி டெவில்'ஸ் அரித்மெடிக்

நான் ஏன் கசப்பான கீரைகள் சாப்பிடவேண்டும்? எதற்காக நினைவில் வைத்திருக்க வேண்டும்? என்றோ நடந்ததை ஏன் ஆண்டு தோறும் பேசவேண்டும்? இப்படி எண்ணற்றக் கேள்விகள் ஹானாவின் உள்ளத்தில் குமுறின. வாதிட்டு அழுது அரற்றினாலும் தாயின் கட்டளைக்கிணங்கி  தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள். தாத்தா வில், பாட்டி பெல், வில்லின் தங்கை, ஆன்ட் ஈவா, தம்பி ஆரோன் எல்லோரும் இருக்கிறார்கள். தாத்தா வில் தொலைக்காட்சியில் பழைய காட்சிகளை ஓடவிட்டு திட்டிக் கொண்டிருந்தார். ஏன் பார்க்க வேண்டும்? ஏன் திட்ட வேண்டும்? ஹானாவிற்கு எரிச்சலாக இருந்தது.

தாத்தாவின் கையில் நீல நிறத்தில் ஒரு எண் இருக்கும். அது எப்படி வந்தது என்று தெரியாது. ஆனால் நாமும் அப்படி வரைந்து கொள்ளலாம் என்று முன்னொரு நாள்  தன்  கையில் ஒரு எண்ணை வரைந்திருக்கிறாள் ஹானா. அதைப் பார்த்த அக்கணமே தாத்தா வில் வெறி பிடித்தவர் போல் கத்தத் தொடங்கினார். அவரைச் சமாதானப்படுத்த பாட்டி பெல்லும், ஆன்ட் ஈவாவும் மிகவும் சிரமப் பட்டனர். 

சேடர் என்ற பாஸ்கா வழிபாடு முடிந்ததும் அனைவரும் உணவு மேசையைச் சுற்றி அமர்ந்தனர். பாரம்பரிய வழக்கப்படி ஹானா கதவைத் திறந்து பார்க்கிறாள். அங்கு தான் திருப்பம். காலத்தில் பயணித்து பல ஆண்டுகள் முன் சென்று விழிக்கிறாள், ஹாயாவாக! அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் ஹானா, ஆனால் அங்கு அத்தை கிட்டிலும்  சாமுவேல் சித்தப்பாவும் ஹாயா என்று அழைக்கிறார்கள். அன்பைப் பொழிகிறார்கள். தான் சொல்வதை எல்லாம் காய்ச்சல் கண்டிருந்ததால் உளருகிறாள் என்று புறந்தள்ளுகிறார்கள். சமீபத்தில் பெற்றோரை இழந்த பெண் என்று கரிசனம் காட்டுகிறார்கள்.

ஹாயா தன் சித்தப்பாவின் திருமணத்திற்காக வேறொரு கிராமத்திற்குப் பயணப் படுகிறாள். தன் வயதை ஒத்த தோழிகளுடன் உரையாடிக் கொண்டேச் செல்கிறாள். எஸ்தர், எண்டா, ரேச்சல், ஷிப்ரே ஆகியோர் ஹானா சொல்லும் கதைகளில் மயங்கி வனத்தின் வழி செல்லும் பயணத்தில் அவளைச் சுற்றியே வருகிறார்கள். இப்படியாக மணமகன் கிராமத்தார் மணமகளின் கிராமத்திற்கருகில் வந்து விடுகிறார்கள். எதிர் புறத்திலிருந்து இன்னிசைக் குழு இனிமையாக வரவேற்கிறது. அனைவரும் ஆடவும் பாடவும் செய்கிறார்கள். மணப்பெண் பாயிஜ் ஹானாவை தன்னுடைய வண்டியில்  ஏற்றிக் கொள்கிறாள். மதகுருவான அவள் தந்தையும் அதில் இருக்கிறார். சூல் என்று வழங்கப்பட்ட யூத கோயிலுக்குச் செல்லத் திரும்புகிறார்கள். 

என்ன, சூலிற்கு அருகே ஏதோ டிரக்குகள் இருக்கின்றன! ஏன் பாட்டியும் தாயும் எதிர்கொண்டு வரவில்லை? என்று குழம்புகிறாள் பாயிஜ். சாமுவேல் வந்து ஏதோ ஆபத்து என்று சொன்னாலும் மணமகளின் தந்தை தொடர்ந்து செல்லச் சொல்கிறார். ஹானா பதட்டமடைந்து கேட்கிறாள்..இது என்ன ஆண்டு? இவளுக்கு என்ன ஆயிற்று என்று அத்தை கடிந்து கொண்டாலும் சித்தப்பா சொல்கிறார் 1942. ஹானா அதிர்ச்சியடைகிறாள்! 

ஆம்! ஹோலாகாஸ்ட் காலத்திற்கு அவள் வந்திருக்கிறாள். இதோ அங்கு இருப்பவர்கள் நாசிப்படையினர். ஓடிவிடலாம், கொல்லப் போகிறார்கள், ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப் படுவார்கள் என்று எச்சரிக்கிறாள். ஆனால் பயன் இல்லை..ஓடுவதற்கும் இடம் இல்லை! அனைவரும் ட்ரக்கில் ஏறும்படிக் கட்டளை, இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அவ்வூரில் இருந்தவர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தனர். அனைவரும் நின்றுகொண்டே பல மைல் தூரம் பயணிக்க வேண்டியதாகிறது உணவும் இல்லாமல். 

பல மணி நேரங்கள் கடந்து ஓர் இரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். அங்கு அவர்களின் நல்ல அணிகலன்கள், பணம் அனைத்தும் பறிக்கப்பட்டு இரயில் பெட்டியில் ஏற்றப்படுகிறார்கள். பாயிஜ் தன்னுடைய பாட்டியின் மருந்து பை  அங்கு இருப்பதைப் பார்த்து அரற்றுகிறாள். பாவம், மணக்கோலத்தில் அழகாக இருந்த அழகான அவளின் உடை கிழிந்தபொழுது அழுகிறாள். 

அனைவரும் காற்றுக்கூடப் புகமுடியாத இரயில் பெட்டிகளில் ஏற்றப் படுகிறார்கள். வியர்வை நாற்றமும், மனிதக் கழிவின் நாற்றமுமாக நெருக்கி நின்றுகொண்டே அவர்கள் பயணம் தொடர்கிறது. ஹானாவிற்கு அருகில் பெட்டியில் சிறு துளை இருந்ததால் சற்று ஆசுவாசமாக இருந்தது. அனைவரும் கொல்லப்படவே அழைத்துச் செல்லப்படுகிறோம், எப்படி இதனை மாற்றுவது என்று தவிக்கிறாள். பயனில்லை!

வழியிலேயே மூச்சடைத்துச் சிலர் இறக்கிறார்கள். மிஞ்சிய அனைவரும் யூத வதைமுகாமிற்குக்  கொண்டு செல்லப்படுகிறார்கள். சண்டையிடுவோம், தப்பிப்போம், என்று ஹானா சொன்னாலும் அவள் அத்தை எதை கொண்டு சண்டையிடுவது? எங்கு தப்பித்துச் செல்வது? என்று கேட்க ஹானாவிற்குப் புரிகிறது. நடக்கப் போவதைச் சொல்லி அவர்களை மேலும் அச்சமுறுத்துவதில் பயனொன்றும் இல்லை. என்றாவது விடுதலை கிடைக்கும் என்ற அவர்கள் நம்பிக்கையைச் சிதைக்க வேண்டாம் என்று அமைதியாகிறாள். அவளுக்கு நினைவுகள் மங்கவும் செய்கின்றன. 

வதைமுகாமில் பெண்களும் குழந்தைகளும் ஒருபுறமும், ஆண்கள் மறுபுறமும் என்று பிரிக்கப்படுகின்றனர். அனைவரும் உடைகள் களைந்து குளித்தபிறகு ஆடையில்லாமல் குளிரில் நடுங்கி கூனிக்குறுகி நிற்கின்றனர்! பின்னர் அவர்களின் தலை முடி மழிக்கப்படுகிறது. பின்னர் ஒவ்வொருவருக்கும் கையில் ஓர் என் நீல நிறத்தில் குத்தப்படுகிறது. அதுதான் அவர்களின் அடையாளம் அந்த வதைமுகாமில்!

வதைமுகாமில் கேள்வி கேட்காமல் வேலை செய்தால் உயிர் பிழைக்கலாம். எதிர்த்தாலோ, உடல் நலம் குன்றினாலோ நச்சு வாயு கூடத்திற்குத் தான்! அக்கூடத்தின் புகைபோக்கியிலிருந்து பொழுதும் வெளிவரும் கரும்புகை வானில் கலந்து கொண்டிருந்தது. 

ஹானாவிற்கு அடுமனையில் பாத்திரம் தேய்க்கும் பணி. அங்கு முன்பே இருந்த ரிவ்கா என்ற பத்து வயது பெண் ஹானாவிற்கு நெருக்கமாகிறாள். அவளுடன் எஸ்தரும் ஷிப்ரேவும் இருக்கிறார்கள். ரேச்சல்  வரும்வழியிலேயே மூச்சுமுட்டி இறந்துவிட்டிருந்தாள். ரிவ்காவின் தாய்க்கு இருமல் வந்ததால் வாயுக்கூடத்திற்கு அனுப்பிவிட்டார்கள், அவளுடன் தங்கையும் அனுப்பப்பட்டாள் என்று ரிவ்கா சொல்கிறாள். அதன் பிறகே தான் சூப் பரிமாறும் பொறுப்பைச் செய்வதாகவும் குறிப்பிடுகிறாள் ரிவ்கா. நீர்த்த உருளைக் கிழங்கு சூப் பரிமாறிவிட்டு, பின்னர் பாத்திரம் தேய்க்கும் பொழுது அடிபிடித்திருக்கும் கிழங்குத் துண்டுகளைச் சுரண்டிச் சாப்பிட ஒரு வாய்ப்பு அடுமனை பணியில்!

குழந்தைகளும் முதியவர்களும் நோயாளிகளும் கொல்லப்படுவதைத் தடுப்பார் யாரும் இல்லை. சாவு என்ற வார்த்தையைச் சொல்லக் கூடாது என்று ரிவ்கா எச்சரிக்கிறாள். ஏனெனில் சுவடில்லாமல் அழிக்கப்படும் இடத்தில் இல்லாதவர் எப்படிச் சாகமுடியும்? அதுதான் அவ்விடத்தின் சாபம். நச்சுவாயுக் கூடத்திற்கு அனுப்பப்படுகிறவர்கள் பதனப்படுத்தப்படப் போகிறார்கள் என்று சொல்வழக்கு!! 

பதனப்படுத்த அனுப்ப வேண்டும் என்று அதிகாரிக்கு தோன்றும்போதெல்லாம் தேர்வு நடக்கும்..வரிசையாக நிற்க வைத்துத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 

வதைமுகாமில் நடந்த சொல்லொண்ணாக் கொடுமைகள் மனதைப் பிழிந்து கனமாக்கி விடுகின்றன. பத்து வயதிற்குக் குறைவான குழந்தைகள் இருக்கக் கூடாதாம். அன்றாடக் காவலர்கள் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அதிகாரி வரும்பொழுது குழந்தைகள் அனைவரும் ஓடிச்சென்று குப்பைத் தொட்டியில் குதித்து ஒளிந்து கொள்வர். அதிகாரி வருகிறார் என்றவுடன் இரகசிய ஒலி எழுப்பப்படுகிறது. பலரும், ஏன், காவலர்கள் சிலரும் கூட வேடிக்கையாக இணைந்து ஒலி எழுப்புகிறார்கள். குழந்தைகள் எங்கிருந்தாலும் ஓடிச் சென்று தங்கள் ஆடைகளைக் களைந்து நாற்றமெடுத்தக் குப்பைத்தொட்டியில் குதிக்கின்றனர். மற்ற இடத்திலும் நாற்றமே இருந்தாலும் குப்பைத்தொட்டியின் நாற்றம் அதிகம் என்று ஹானா சொல்கிறாள். ஜெர்மானியருக்கு குப்பை பிடிக்காதாம், அதனால் குப்பைத் தொட்டிக்கு அருகில் அதிகாரி வர மாட்டாராம். கண்டும் காணாமல் போய்விடுவாராம். ஒரு நாள் குழந்தை ஒன்று தொட்டியில் இருப்பதைப் பார்த்துச் சட்டென்று தூக்கிக் கொண்டு ஓடி யோசிக்காமல் குப்பைக்குள் குதித்து அமிழ்ந்து கொள்கிறாள் ஹானா. உடையைத் துவைக்க முடியாதக் காரணத்தால் தான் மற்ற சிறுவர்கள் களைந்துவிட்டுக் குதிக்கிறார்கள் என்று பின்னர் புரிந்து கொள்கிறாள். அத்தை மூலம் தனக்குத் தெரிந்த ஏழு வயது சிறுவன் ஒருவன் ஒருநாள் அதிகாரியிடம் சிக்கி வாயுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறான். ஹானா மிகவும் துன்பப்படுகிறாள். பாயிஜ், அவளுடைய தந்தை, சாமுவேல், அத்தையை மணக்க விரும்பி கேட்டிருந்தவர் என்று பலரும் கொல்லப்பட்டு விட்டார்கள்.

அந்த நாள் வருகிறது!! முகாமிற்கு வந்தபின்னர் ஹானாவிற்கு நினைவு வைக்க வேண்டியதன் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. அதனால் அன்று தன் தோழிகளிடம் பாத்திரம் தேய்த்துக் கொண்டேச் சொல்கிறாள், யார் பிழைத்துச் சென்றாலும் மற்றவர்களையும் நடந்த கொடுமைகளையும் நினைவில் வைக்க வேண்டும் என்று சொல்கிறாள். அப்பொழுது அங்கு வந்த புதிய காவலாளி ஒருவன் வாயுக்கூடத்தில் இன்னும் மூவருக்கு இடம் இருப்பதால் தான் தேர்ந்தெடுக்க வந்ததாகவும் இச்சிறுமிகள் வேலை செய்யாமல் பேசிக் கொண்டிருந்ததால் அவர்களைத் தான் தேர்வு செய்வதாகவும் சொல்கிறான். எஸ்தர் அரற்றி அவன் காலில் விழுகிறாள். ரிவ்கா வேலை செய்துகொண்டிருந்தோம் என்று சொல்கிறாள். ஷிப்ரே விட்டுவிடச் சொல்லி அரற்றுகிறாள். ஹானாவை விட்டுவிட்டு எதிர்த்துச் சத்தமிட்ட மற்ற மூவரையும் தன் பின் வரச்சொல்லிவிட்டு நடக்கிறான். 

ரிவ்கா சொல்லிக்கொண்டே செல்கிறாள், "இப்போது உனக்காக யார் நினைவில் வைப்பார்கள்?" என்று. ஹானா சட்டென்று முடிவெடுத்தாள். தான் இப்போது வாழ்கிறோம், எதிர்காலத்தில் வாழ்கிறோம். ரிவ்காவிற்கு இந்தக் கணம் தான் இருக்கிறது என்று நினைக்கிறாள். ஓடிச்சென்று ரிவ்கா தலையில் எப்போதும் கட்டியிருக்கும் துணியை அவிழ்க்கிறாள். "புதிய காவலாளிக்குக் கண்டுபிடிக்க முடியாது..முகாமிற்கு ஓடு! ஓடு!" என்று சொல்லிக்கொண்டே தன தலையில் கட்டிக் கொள்கிறாள். ரிவ்கா ஸ்தம்பித்துப் பின் அழுதுகொண்டே ஓடுகிறாள். அழுதுகொண்டே செல்லும் எஸ்தர் மற்றும் ஷிப்ரேவின் அருகில்  செல்லும் ஹானா அவர்கள் இருவரின் இடுப்பையும் அணைத்துக் கொண்டு கதை சொல்கிறாள். பள்ளிச் சிறுமிகள் விளையாடுவதைப் போன்று பாவனை செய்து பேசிக்கொண்டே தோழிகளுடன் நச்சு வாயுக்கூடத்தின் கதவைக் கடந்து செல்கிறாள். 

ஷிப்ரேவும் எஸ்தரும் காணாமல் போய்விடுகிறார்கள். தங்கள் வீட்டு வெராண்டவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பின்னால் உணவு மேசையிலிருந்து அவளை அழைக்கிறார்கள். 

ஆன்ட் ஈவா தான் ரிவ்கா. அவளுடைய அண்ணனும் அவளும் மட்டுமே பிழைத்து வந்தவர்கள். தன் உயிரைக் காத்தத் தன் தோழியின் நினைவாகவே தன் அண்ணன் வில்லின் பேத்திக்கு ஹானா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்! முகாமில் ஆன்ட் ஈவாவிற்கு கையில் குத்தியிருந்த எண்ணைச் சொல்கிறாள் ஹானா. ஆன்ட் இவா ஸ்தம்பித்துப் போகிறார்!

இத்துடன் கதை முடிகிறது! 'தி டெவில்'ஸ் அரித்மெடிக்' என்ற நூல். சாத்தானின் இடமாக வதைமுகாம்கள் இருந்ததால், அங்கு இடம் இல்லையென்ற காரணத்தினால் புதிதாக இரயிலில் வந்து சேர்ந்த பலர் நேராக வாயுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு அதனால் முகாமில் தேர்ந்தெடுத்தல் மூலம் நடக்கும் கழித்தல் கணக்குச் சற்று மாறியதும், என்று நூலின் பெயர்க்காரணம் புரியும்.

ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகனின் ஆங்கிலப் பாடம் இந்நூல்! என்னைப் படிக்கச் சொல்லி அவன் கேட்டதால் படித்தேன். அவன் முன்னரே கதையைச் சொல்லியிருந்தாலும் நான் வாசித்து முடித்த இரவில் அழுது விடிய விடிய விழித்துப் புரண்டுகொண்டிருந்தேன். 

ஹோலாகாஸ்ட் பற்றி எத்தனை நூல்கள் படித்திருந்தாலும் எத்தனை படங்கள் பார்த்திருந்தாலும் அட்லாண்டாவில் இருக்கும் யூத அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தாலும் தப்பிப் பிழைத்த இருவரை இருவேறு தருணங்களில் அவர்களுடைய நூறை நெருங்கும் வயதுகளில் சந்தித்து இருந்தாலும் அவர்களின் அனுபவங்களைக் கேட்டிருந்தாலும் (அவர்களும் நினைவில் இருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்) அதிர்ச்சியும் துக்கமும் வேதனையும் அளவில் சற்றும் குறைவதே இல்லை!!! அதிகரிக்கத் தான் செய்கின்றன!


ஹோலாகாஸ்ட் பற்றிய, என்னுடைய மற்றுமொரு பதிவின் இணைப்பு.

15 கருத்துகள்:


  1. குழந்தைகளால் இங்கு நாம் அதிகம் கற்றுக் கொள்கிறோம்.... சிறுவயதில் நாம் கற்றதைவிட இங்குள்ள குழந்தைகள் அதிகம் கற்று கொண்டு ஆக்கபூர்வமான வாதங்கள் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. வலை முகாம்கள் பற்றி படித்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனம் பதைக்கின்றது மா.... இன்று தூக்கம் வராது

    பதிலளிநீக்கு
  3. மனிதம் மறந்த நாட்கள் வேதனையைத் தருகின்றன

    பதிலளிநீக்கு
  4. மிகவும் கொடுமை.   நாஜிக்கொடுமைகள்,  இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு கொடுமைகள் இவற்றைப் படிக்கும்போதெல்லாம் மனம் கலங்கும்.  எவ்வளவு தூண்களை, கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்? 

     ஒரு விஷயம் இந்தக் கதைகளில்...    இப்போதுதான் அபியின் படைப்புகள் தளத்தில் கண்ணதாசன் எழுதிய முன்ஜென்மக் கதை ஒன்று பற்றி படித்து வந்தேன்.  அப்போது மரித்த உறவுகள் யாவும் இப்போதும் ஒரு வட்டத்தில் அவர்களுக்கு நெருக்கமாகவே எப்படி இருக்கிறார்கள் (என்று ஏன் படைக்கிறார்கள்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஸ்ரீராம், ஈவு இரக்கமற்ற எத்தனை வரலாற்று நிகழ்வுகள்!!
      ஓஓ..நானும் சென்று படிக்கிறேன்..குறித்து வைத்துக்கொண்டேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நாசியை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மனம் கனக்கும். துடிக்கும். Anne Frank திரைப்படத்தைப் பார்த்து ஒரு வாரம் தூங்காமல் இருந்திருக்கிறேன். என் மகன் படிக்கச் சொன்ன ஒரு ஆங்கிலப் புத்தகத்தைக் கூட நான் படித்ததில்லை. Feeling bad! Proud mom you are!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜெயா. கொடூரமான காலமது. Please don't feel bad, am sure you did/doing many other things for your kids.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...