கரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்


எங்கும் பதட்டம், பயம், குழப்பம். விழிப்புணர்விற்காகச் சில விசயங்களைப் பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
1. கரோனா வைரசைப் பற்றி தெரியாதவையே நிறைய இருக்கின்றன. அதனால் அவற்றைப் பற்றி யோசித்துப் பதட்டமோ பயமோ அடைவதில் பயனில்லை.
2. தெரிந்த விசயங்களுக்கு வருவோம்:
அ) நோய்க்கிருமிகளை ஒருவர் சுவாசித்தாலோ, கைகளில் பட்டிருக்கும் கிருமிகளை முகத்தில், அதாவது மூக்கு, வாய், கண்ணில் தேய்த்தாலோ நோய்த்தொற்று ஏற்படும்.
ஆ) சுவாசிக்காமல் இருப்பதற்கு நோய்க்கிருமிகள் இருப்பவரிடம் இருந்து தள்ளி, அதாவது குறைந்தது மூன்றடி தள்ளி இருக்க வேண்டும்.
இ) யாரிடம் கிருமி தாக்கம் இருக்கிறது என்பது எளிதாகத் தெரியாததால் அனைவரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்பதே பரிந்துரை. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லை என்றாலும், அவர்களுள் யாருக்கேனும் நோய் ஏற்பட்டால் தள்ளி இருக்கவேண்டும்.
ஈ) கைகளை எங்கு தொட்டோம், கிருமி கை சேர்ந்ததா இல்லையா என்று உறுதியாகத் தெரியாது. ஆதலால், அடிக்கடி, கைகளைச் சோப்பு உபயோகித்து உள்ளங்கை, புறங்கை, விரலிடுக்கு, எல்லாம் நன்குத் தேய்த்துக் கழுவ வேண்டும்.


உ) எப்பொழுதெல்லாம் கை கழுவ வேண்டும்: உண்ணும் முன்னர், முகத்தில் கை வைக்கும் முன்னர், வெளியே இருந்து வீட்டிற்கு வந்தவுடன், குடும்பத்தில் சளி, காய்ச்சல், இருமல் என்று நோயுற்றவர்கள் இருந்தால் அவர்களுக்குக் கவனத்துடன் பணிவிடை செய்தபின்னர், நமக்குச் சளி பிடித்திருந்தால், வேறு எந்த பொருளையும் தொடும் முன்னர், மூக்கு சிந்தியவுடன்,....


ஊ)நமக்கு சளித் தொந்தரவு (தொண்டை வலி, இருமல், தும்மல், தலைவலி) ஏற்பட்டால், பயப்படத் தேவையில்லை. எப்பொழுதும் எடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டு, ஓய்வெடுக்க வேண்டும். வெளியே செல்வது, மற்றவர்களைச் சந்திப்பது, பொதுவிடங்களுக்குப் போவது கூடாது. வீட்டிற்குள்ளேயும், எச்சரிக்கையாக, முடிந்த அளவு தள்ளி இருக்கவேண்டும்.(கொரோனா அல்லாத உடல்நலக் குறைவு என்றால் சரியாகிவிடும், அல்லது வீரியம் குறையும், சாதாரண சளி, காய்ச்சல் சரியாவதைப் போல; கொரோனா பாதிப்பாக இருந்தாலும் பலருக்குச் சரியாகி விடும். ) ஒரு வாரத்திற்கு மேலும் சரியாகவில்லை என்றாலும், நோயின் பாதிப்புக் குறையாமல் அதிகரித்தாலும் மருத்துவரிடம் கொரோனா தொற்றிற்குப் பரிசோதனை செய்வது பற்றி ஆலோசிக்க வேண்டும். காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக (முதல் நாளே ஆனாலும் கூட) மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். உங்கள் உடம்பிற்குச் செவி கொடுங்கள், உங்களுக்கே தெரியும்.
எ) நோய்த்தொற்று ஏற்பட்டோர் வெளியே சென்று மற்றவருக்கும் பரப்பும் ஆபத்து இருப்பதால் முடிந்தவரை அதனைத் தவிர்க்கவே வீடுகளில் இருக்கச் சொல்கின்றனர்.
ஏ) ஏனென்றால், எளிதாகப் பரவும் கொள்ளைநோயினைத் தடுக்க வேண்டும். திடகாத்திரமாக பூரண உடல் நலத்துடன் இருப்பவரை நோய்க்கிருமி தாக்கினாலும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவரிடம் உள்ள கிருமி உடல்நலன் நலிந்தோரைத் தொற்றினால் அவரது உயிருக்குக் கூட ஆபத்து வரலாம். உதாரணம்: கான்செர் நோயாளிகள், நீரிழிவு பாதிப்புள்ளோர், இதய பாதிப்பு உள்ளவர்கள் போல
ஐ) நோயின் தாக்கம் அதிகம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலைக்குச் செல்பவர்களைக் காப்பாற்ற சுவாசக் கருவிகளும் மருந்துகளும் மருத்துவர்களும் தேவை. இவை அதிகமதிகமாக இல்லாததால் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். வளர்ந்த பணக்கார நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளிலேயே பூதாகரமாக இருக்கிறதென்றால், மக்கள் தொகை அதிகம் உள்ள வளரும் நாடான இந்தியாவில் அதிக எச்சரிக்கை தேவை.
ஒ) அப்பொழுதுதான் நம்மையும் காத்து, பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றப்படவும் வழி அமையும்.
ஓ) அதிகம் தெரியாத இக்கொள்ளை நோயினை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் இணைந்துச் செயலாற்றக் கடமைப் பட்டிருக்கிறோம்.


3. வெப்பமான இடங்களில் நோய் பரவாது என்பது உண்மையல்ல. எங்கும் பரவலாம் என்றே உலக சுகாதார மையம் எச்சரிக்கிறது. அதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
4. அதிகக் குளிரோ அல்லது பனிப்பொழிவோ கிருமியை அழிக்காது. வெளியே என்ன வெப்பநிலை இருந்தாலும் நம் உடம்பின் சராசரி வெப்பநிலை ஒன்றே, 36.5/ 37 C.
5. கொசுவால் கரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை.
6. விமான நிலையங்களிலும் பொதுவிடங்களிலும் செய்யும் பரிசோதனை காய்ச்சலைக் கண்டறியவே. நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அந்நேரத்தில் காய்ச்சல் தொடங்கவில்லை என்றால் பரிசோதனை பலன் தராது. அதனால் வெளிநாடு பயணித்திருந்தால் இரண்டு வாரங்களுக்குக் கண்டிப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.
7. முதியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருந்து உட்கொள்பவர்கள் என்று இவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகம் ஏற்படலாம் என்றாலும், அனைத்து வயதினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப் படலாம். ஆதலால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
8. உலக சுகாதார மையம் மீண்டும் மீண்டும் மீண்டும், திரும்பத் திரும்ப பரிந்துரைக்கும் ஒரே விசயம் - கைகளை அடிக்கடி நன்றாகக் கழுவுங்கள் என்பதாகும். இல்லையென்றால் கிருமி நாசினி (sanitizer) பயன்படுத்தவேண்டும்.
9. மஞ்சள், பூண்டு, இஞ்சி, என்று பற்பல விசயங்கள் இருந்தாலும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்திக் கொள்ள பயன்படுத்தலாமே தவிர அவற்றால் நோய் தொற்றாது என்று நம்பி மெத்தனமாக இருக்கக் கூடாது. இது புதுவகையான நோய் என்பதை மனதில் இருத்த வேண்டும்.
10. பின்னால் நொந்து கொள்வதை விட முன்பே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
11. நோயால் பாதிக்கப் பட்டவர்களை அன்புடன் கவனியுங்கள். கவனம் வேண்டியதுதான் ஆனால் ஒதுக்குதல் ஆகாது.


12. மிக முக்கியமானது: சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தையும் நம்பாதீர்கள். இணையப் பயன்பாடு கிடைக்கும் எவரும் எதை வேண்டுமானாலும் பரப்ப வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலக சுகாதார மையம் மற்றும் உங்கள் ஊரின் சுகாதார மையம் மற்றும் மருத்துவர்கள் சொல்வதை மட்டுமே கேளுங்கள்.


13. உலகில் ஒருவருக்குமே இக்கொள்ளை நோயினைப் பற்றியோ கொரோனா கிருமியைப் பற்றியோ முழுமையாகவோ தெளிவாகவோ இப்பொழுது வரை (மார்ச் 17, 2020) தெரியாது என்பதே முகத்திலறையும் உண்மை. எப்பொழுது தெரியும் என்பதும் இப்பொழுது தெரியாது!!

14. நம்மால் செய்ய முடிந்தது இரண்டே இரண்டு: சுத்தம் பேணுவது, குறிப்பாகக் கைகளைக் கழுவுவது. தேவையில்லாமல் பொதுவிடங்களுக்குச் செல்லாமல் இருப்பது.

உசாத்துணை:

இது ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பதிவு. முழுமையான தகவல் கட்டுரை அல்ல.

விரைவில் நலம் உண்டாகட்டும்
அன்புடன்
கிரேஸ் பிரதிபா

22 கருத்துகள்:

  1. ஒவ்வொரு விளக்கமும் மிகவும் தெளிவாக சொல்லி உள்ளீர்கள்... நன்றி...

    இங்கு இன்றே ஊர் அடங்கிக் கிடக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன் அண்ணா. மிக்க நன்றி.

      அப்படியா? நல்லதுதான்.

      நீக்கு
  2. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கரோனா – அறியவும் தவிர்க்கவும் வாழவும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பயனுள்ள பதிவு... ஆனால் இப்படி டைம் செலவழித்து பதிவு போட்டாலும் வாட்ஸ் அப்பில் வரும் தெய்திகளை படித்துவிட்டு இதை மறந்து போய்விடும் சமுகமாக இன்றைய சமுகம் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.
      நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ. சிலராவது பயன் பெற்றால் மகிழ்வே என்ற எண்ணத்தில் தான் நாம் எழுதுகிறோம் அல்லவா? வேறென்ன செய்வது?

      நீக்கு


  4. நான் இங்கே நீங்க சொன்னபடி தான் நடந்து வருகிறேன் ஆனால் எனது வேலை என்பது தினமும் பல பொதுமக்களை சந்தித்து வரும் வேலைதான்..... முன்பு கை குலுக்கி ஹக் செய்து கொள்வோம் ஆனால் அது மட்டும் இப்போது நின்று இருக்கிறது.. அவ்வளவுதான் முடிந்த வரை பாதுகாப்பாக இருக்க முயற்சிக்கிறோம் அதன்பின் கடவுள் சித்தம் இதனால்தான் நாம் சாக வேண்டும் என்று நம் விதியாக இருந்தால் சாகப் போகிறோம் அதனால் பயம் ஏதும் இல்லாமல் தினமும் புன்னகையுடன் எல்லோரையும் சந்தித்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் சகோ. நானும் பொதுமக்கள் வந்து போகும் பணியிடம் தான். ஆனால் அவர்களை நேரில் சந்திக்கும் பணி அல்ல. ஒரு மணி நேரப் பேருந்து பயணம். நீங்கள் சொல்வது போலத்தான் நான் இங்கே சொல்லிக்கொண்டிருந்தேன். என்று என்னை அழைக்கப்போகிறார்,எப்படி அழைக்கப்போகிறார் என்பது ஆண்டவர் ஏற்கனவே திட்டமிட்டது.. இதில் பயப்பட என்ன இருக்கிறது என்று. இப்பொழுது வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லி விட்டார்கள். உங்களுக்காகவும் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  5. சிறப்பான பதிவிது
    நல்வழிகாட்டலும் கூட

    பதிலளிநீக்கு
  6. அருமையான விழிப்புணர்வுப் பதிவ
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  7. நல்ல விழிப்புணர்வு பகிர்வு ...

    பதிலளிநீக்கு
  8. நல்ல, பயனுள்ள தகவல்கள்.... பாராட்டுகள்.

    //மிக முக்கியமானது: சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தையும் நம்பாதீர்கள். இணையப் பயன்பாடு கிடைக்கும் எவரும் எதை வேண்டுமானாலும் பரப்ப வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். // இன்றைக்கு பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா.

      ஆமாம் அண்ணா, இதனால் மக்களுக்கு எதை நம்புவது என்ற குழப்பமும் சேர்ந்து விட்டது.

      நீக்கு
  9. நல்ல அறிவுரை
    நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...