எதிர்பார்ப்பார்களோ


என்ன பேசினாலும்
புன்னகை மட்டுமே உதிர்ப்பார்
வாசிக்கவா என்றால்
ஆம் என்று தலை ஆட்டுவார்
புரிகிறதா இல்லையா
என்றுகூட ஐயம் எழும்

கிளம்பவா என்றாலும்
கண்பார்த்துத் தலை ஆட்டுவார்
அடுத்தவரை பார்க்கப் போக வேண்டுமே என்று
மனமில்லாமல் அகல்வேன்
இத்தனை நாட்களில் சென்ற முறை தான்
கையை பிடித்துக்கொண்டு
நன்றி என்று வலிதிரட்டிச் சொன்னார்
அழகிய மலர் பெயர் கொண்டவர்

இவரோ இதய சிகிச்சை நிபுணர்
வயோதிகத்தின் வழுக்கல்களில்
நெஞ்செலும்பை உடைத்து
நடக்கமுடியாமல் சக்கர நாற்காலியில்...
அன்பான குடும்பம்
தனித்து விட்டுவிடவில்லை
சிகிச்சையின் பொருட்டு
அங்கே தங்கி இருக்கிறார்
பிள்ளைகள் உடன் இருப்பதையும் உடற்பயிற்சிக்கு உதவுவதையும் கண்ணாரக் கண்டிருக்கிறேன்
ஆலயம் வர முடியாததால்
ஆண்டவரை அப்பத்தில் எடுத்துப் போவேன்
தன் பிள்ளைகள் பற்றியும் பேரப்பிள்ளைகள் பற்றியும்
பாசத்துடன் பகிர்ந்து கொள்வார்
தன் காதல் மனைவி பற்றியும்தான்
அறையிலிருக்கும் புகைப்படங்களைக் காட்டிப் பேசுவார்
கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்
நோயுற்றவரையெல்லாம் ஆசிர்வதிக்கட்டும்
ஏழைகளை ஆசிர்வதிக்கட்டும்
இவரின் பிரார்த்தனைகளில்
ஒருநாளும் அவர் இருந்ததில்லை
அவர் முடித்தவுடன் அவருக்காக நான் வேண்டி விடைபெறுவேன்

இவரோ ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்வார்
முதலில் அனைத்தும்  உண்மையென நம்பினேன்
போகப்போக புரிந்துகொண்டேன்
மனப்பிறழ்ச்சியின் பேச்சுகளை
என்னுடன் வெளியே வந்துவிட வேண்டும் என்றே துடிப்பார்
வெளியே செல்லப் பேருந்து காத்திருக்கிறது
தயாராக இருக்கிறேன் பார் என்பார்
இரவுடையில் தான் இருப்பார்
பேருந்தொன்றும் இருக்காது
அவர் சொல்வது தவறென்றும் சொல்ல முடியாது
உடைந்துபோய் விடுவாரே
போக்குக் காட்டி பணியாளரிடம் சொல்லிவிட்டு கனத்த மனத்துடன் வருவேன்

இவர் என் கையைப் பிடித்துக்கொண்டு
கண் பார்த்தபடியே
தன் வாழ்க்கை கதைகளைச் சொல்வார்
இல்லை இல்லை
கதைகளை அல்ல
கதையை மீண்டும் மீண்டும் சொல்வார்

கொரோனாவால்
முதியவர்களுக்கு ஆபத்ததிகம்
 பார்வையாளர்களுக்குத் தடை
கேட்டதில் இருந்து
இவர்கள் எல்லாம்
என் மனக் கண்ணிலிருந்து
நகர மாட்டேன் என்கிறார்கள்
நாளை ஞாயிற்றுக்கிழமை
எதிர்பார்ப்பார்களோ?




13 கருத்துகள்:

  1. கொரோனாவால்
    முதியவர்களுக்கு ஆபத்து அதிகம்
    என்பதால் பார்வையாளர்களுக்குத் தடை

    வேதனைதான்
    முதுமையில் தனிமை கொடுமை
    அக்கொடுமையை கொரானா அதிகரிப்பது
    வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா :-(

      உடன் வாசித்துக் கருத்திட்ட உங்கள் ஊக்கத்திற்கு உளமார்ந்த நன்றிகள் அண்ணா.

      நீக்கு
  2. வேதனை தான்.

    விரைவில் நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான எண்ணப்பகிர்வு
    சிந்திப்போம்

    பதிலளிநீக்கு
  4. மனதை நெகிழச் செய்துவிட்டது இந்த பதிவு.....

    பதிலளிநீக்கு
  5. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தங்கள் வலைத்தளம் 15ஆவது தளமாக எமது 'வலை ஓலை' வலைத்திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, தங்களது எதிர்பார்ப்பார்களோ பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  6. வைரஸ் ஒன்று வந்தது, வையகமே பயத்தில் நிற்கிறது.  மனிதர்களுக்கு சகமனிதர்களைக் கண்டே பயம்.    என்று விலகும் இந்த கொரோனா கொடுமை...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...