ஐங்குறுநூறு 281 - நூறுநூறு ஆயிரமாய்


படம்: நன்றி இணையம்
காதல் ஆழ்ந்த அன்பினது, காதலுக்குத் தோள்கொடுத்த எதனையும் மறக்காது நன்றி பாராட்டும்! இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த தமிழர் காதலோடுஇயற்கையும் போற்றினர்.


ஐங்குறுநூறு 281, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே, ஒள் இழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டியவ்வே.

இனிய இப்பாடலை ஆங்கிலத்திலும் படித்து மகிழ, என் மொழிபெயர்ப்பை இந்த இணைப்பில் பார்க்கவும் - Hundreds of thousands of eons.

எளிய உரை:
வெள்ளம் என்ற வரம்பின் அளவுடைய ஊழிக்காலங்கள் கடந்து போனாலும் கிளிகள் வாழ்க! ஒளிரும் அணிகளை அணிந்த, அடர்ந்த கருங்கூந்தல் கொண்டவளும் பெருந்தோள்களை உடையவளுமான கொடிச்சியைக் காவல் காக்க வைத்தனவே.

 விளக்கம்: வெள்ளம் என்று இப்பாடலில் குறிக்கப்படுவது ஒரு பேரெண்ணாகும். கோடிக்கணக்கிலான எண்களையும் தகுந்த பெயர்கொண்டு வழங்கினர் பண்டைத் தமிழர். அப்படி எட்டுமடங்குக் கோடிகளை வெள்ளம் என்றனர், வெள்ளம் எட்டுத் திக்கும் பாய்வதால். ஊழிக்காலம் என்பது உலகம் தோன்றி அழிவதன் கால அளவாகும். வெள்ள வரம்பின் அளவிலான ஊழிக்காலங்கள் வந்து போனாலும் கிளிகள் அழியாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறான் தலைவன். ஏனென்றால், வலிமையான தோள்களும் அடர்ந்த கருங்கூந்தலும் உடையவளாக ஒளி வீசும் பல அணிகலன்களை அணிந்த குறிஞ்சி நிலத்தலைவியைக் காவல் காக்க வைத்தனவே என்கிறான். தினையைக் கிளிகளிடமிருந்துக் காவல் காப்பது குறிஞ்சிநிலப் பெண்களின் இயல்பான பணியாகும். அப்படிக் காவல் காக்க வந்த தலைவியைக் கண்டுக் காதலித்தத்  தலைவன் அதற்குக் காரணமான கிளிகளை வாழ்த்துகிறான். குறிஞ்சிநிலப் பெண் 'கொடிச்சி' என வழங்கப்பட்டாள்.
 
சொற்பொருள்:
வெள்ள வரம்பின் - வெள்ளம் என்ற பேரெண்ணின் அளவிற்கும் மேற்பட்ட, ஊழி - உலகின் காலம், போகியும் – போனாலும் , கிள்ளை – கிளிகள், வாழிய - வாழட்டும், பலவே - பல, ஒள் - ஒளி பொருந்திய, இழை – அணிகலன்கள், இரும்பல் கூந்தல் – கருமையான அடர்ந்த கூந்தல், கொடிச்சி – குறிஞ்சி நிலத்தின் பெண்/மலையில் வாழும் பெண், பெருந்தோள் – பெரிய தோள், காவல் – காவல், காட்டியவ்வே – அவை காரணமாயின
  
என் பாடல்:


நூறுநூறு ஆயிரமாய்  ஊழிஎட்டுப் போனாலும்
நீடுவாழ்க  கிளிகள் - அணிகள் ஒளிவீச
காரடர்க் கூந்தல் பெருந்தோள் மலைமகள்  
காவல் வருதற்குக் காரணங் காட்டின வே 


12 கருத்துகள்:

  1. விளக்கம் கொடுத்ததால் எனக்கும்கூட புரிந்தது சகோ.

    பதிலளிநீக்கு
  2. புரியும்படியான எளிய விளக்கம். ஆங்கிலத்திலும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா. ஆங்கிலத்திலும் வாசித்து ரசித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  3. மிகச் சிறப்பான விளக்கம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    உங்கள் எளிய பா ஆக்கமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. மிக சிரிப்பு....எனக்கும் புரியதே கிரேஸ் தமிழ் 😁

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...