எல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. அதிலும் அண்ணனுக்கு வலிமை அதிகம். இப்பொழுது பெய்யும் மழைக்கும் எல் நினோ காரணமாய் இருக்கலாம்.
எல் நினோ சௌதெர்ன் ஆசிலேசன் சைக்கிள் (El Nino Souther Oscillation Cycle - ENSO) என்பது கிழக்கு மத்திய பசிபிக் பகுதியில், கடலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையில் ஏற்படும் வெப்ப மாற்றங்களைக் குறிக்கும் அறிவியல் பெயராகும். இது ஒரு புயல் அல்ல, பருவ மாற்றத்தையும் புயலையும் ஏற்படுத்தும் ஒரு காலநிலை. இதில் வெப்பத் தறுவாய் (warm phase) 'எல் நினோ' என்றும் குளிர் தறுவாய் (cold phase) 'லா நினோ' என்றும் வழங்கப் படுகிறது. ஏன் ஏற்படுகின்றன என்று கண்டுபிடிக்க முடியாத இவ்விரண்டும் ஏறக்குறைய இரண்டிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒன்பது மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை கூட நீடிக்குமாம். இதில் 'எல் நினோ' 'லா நினோ'வை விட அதிகம் ஏற்படுகிறது. இவற்றின் தாக்கத்தைப் பார்க்கும் முன் இவை என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
'எல் நினோ' முதன்முதலில் தென்அமெரிக்காவின் பெரு நாட்டு மீனவர்களால் 1600களில் அடையாளம் காணப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக கடல்நீர் வெம்மையாக இருந்தது. 'எல் நினோ' என்றால் ஸ்பானிஷில் சிறுவன் என்றும் கிறிஸ்துவின் பிள்ளை என்றும் பொருள்படும். பெரும்பாலும் டிசெம்பரில் உணரப்பட்டதால் இப்பெயர். 'லா நினோ' என்பது எல் நினோவின் சகோதரி, 'லா' என்பது ஸ்பானிஷில் பெண்மையைக் குறிக்கும். லா நினோ என்பது சிறுமி என்று பொருள்படும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த பருவ மாற்றம், உலகளாவிய தாக்கத்தைத் தரவல்லது. பொதுவாக கிழக்கிலிருந்து மேற்காக நகரும் வெப்ப நீர், திடீரென்று திசை மாறி மேற்கிலிருந்து கிழக்காக நகரத் துவங்கும். இந்த வெப்ப நீர் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அருகில் சேரும். எல் நினோவின் போது வெப்பமண்டல பசிபிக்கில் (tropical pacific) தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் கடல் நீரின் வெப்பம் அதிகமாகிறது. மத்திய மற்றும் மேற்கு பசிபிக்கில் மேற்கு நோக்கி வீசும் பருவ காற்று vவழக்கத்திற்கு மாறாக வலி குன்றும். (எல் நினோ அல்லாத சாதாரண காலங்களில் வெப்பமண்டல பசிபிக்கில் பருவ காற்று மேற்கு நோக்கி வீசும். ) வெப்ப நீரின் திசை மாற்றத்தால் வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றமே எல் நிநோவிற்குக் காரணம். இப்படி கடல் நீரின் வெப்பம் மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்தால் 'எல் நினோ' என்று அனுமானம் செய்கின்றனர். ஆனாலும் கடல் வெப்பம் மட்டுமல்லாமல் வளிமண்டலத்தின் மாற்றங்களையும் ஆராய்ந்தே எல் நினோ முடிவு செய்யப்படுகிறது. கடல்நீரின் வெப்ப மாற்றத்துடன், வளிமண்டலத்தின் வெம்மை சுமாராக 0.5 டிகிரி அளவில் மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து அதிகமாக இருந்தால்விஞ்ஞானிகள் 'எல் நினோ' என்று அறிவிக்கின்றனர்.
தென் அமெரிக்காவின் தென்மேற்கில் கடல் நீரின் வெப்பம் அதிகமாகி புயலுக்கு வழிவகுக்கிறது. கடல் நீரின் வெப்பமே, நீர் ஆவியாவதற்கு வழிவகுத்து மழையைக் கொணரும். ஆக, வெப்பமண்டல பகுதியில் புயல்கள் மேற்கிலிருந்து கிழக்கிற்கு நகரும். எல் நிநோவில் கடல் நீரின் வெப்பம் அதிகமாவதால் பூமியெங்கும் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கைச் சீற்றங்களும் அதிகமாகும்.
ஒரு பக்கம் வறட்சியும் பஞ்சமும் என்றும் மறுபக்கம் மழையும் வெள்ளமும் என்றும் தாக்கம் இருக்கும்.
'எல் நினோ' ஏற்படுவதற்கான காரணங்கள் தெளிவாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறைக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, எல் நினோ. இதனாலேயே சரியாக முன்னுரைக்க முடிவதில்லை, ஆனால் கடல் மற்றும் வானிலை மாற்றங்களை வைத்து வானிலை முன்னறிவிப்பு செய்யலாம். கடலின் மேற்பகுதியில் 200 அடி வரையிலான நீரின் வெப்பத்தை விஞ்ஞானிகள் கவனிக்கின்றனர். அதில் மாற்றம் ஏற்பட்டு, பருவ காற்றும் புயலும் வந்தால் எல் நினோ என்கின்றனர்.
பொதுவாக வசந்த காலத்தில் துவங்கும் எல் நினோ டிசெம்பர், ஜனவரியில் உச்சம் அடைந்து அடுத்த மே மாதத்தில் முடிவடையும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக இருக்கும் எல் நினோ இதற்கு முன் 1997இல் மிகவும் வலிமையானதாக இருந்தது.
பல மில்லியன் ஆண்டுகளாக எல் நினோ ஏற்பட்டிருப்பதன் ஆதாரங்களைப் பவளப் பாறைகள், மரங்களின் வளையங்கள், குகைகள், கடலின் அடிமட்ட மண்ணில் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆண்டும் வசந்த காலத்தில் எல் நினோ இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
உலகளாவிய அளவில் சராசரியாக 0.1 டிகிரி அளவில் அதிக வெப்பம் இருக்கும் என்று அனுமானிக்கின்றனர்.1997இல் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய எல் நினோவை விட இவ்வாண்டு அதாவது 2015இல் எல் நினோவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
எல் நினோ அட்லாண்டிக் கடலில் புயல் உருவாவதற்கான சூழ்நிலையை மாற்றுகின்றது. அதனால் அட்லாண்டிக்கில் பெரும்புயல் உருவாவது குறைகிறது. ஆனால் கிழக்கில் வழக்கத்திற்கு மாறாக அதிகவெப்பம் அடைந்திருக்கும் கடல்நீரால் அதிகமான புயல்கள் உருவாக வழிவகுக்கும்.
அதற்குத் தகுந்தார் போல் கிழக்குப் பசிபிக்கிலும் அட்லாண்டிக்கிலும் மாற்றங்கள் இருந்தது. பசிபிக்கில் 24 புயல்களும் 15 சூறாவளிகளும் அலைக்கழித்தது. ஆனால் அட்லாண்டிக்கில் வழக்கத்தைவிடக் குறைவாக நான்கு சூறாவளிகளும் பதினொரு புயல்களுமே ஏற்பட்டது.
சரி, எல்நினோவின் தாக்கம் இந்தியாவில் எப்படி இருக்கும்? எல் நினோ சௌதெர்ன் ஆசிலேசன் சைக்கிளுக்கும் இந்திய வானிலைக்கும் நேரிடையாகத் தொடர்பு உண்டு. இந்தோனேசியப் பகுதியில் அதிகரிக்கும் கடல் வெப்பம் புயலை உருவாக்கும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் புயல்கள் இந்தியா மட்டுமல்லாமல், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தாக்கம் ஏற்படுத்தும். 1880 இல் இருந்து 2006 வரை ஏற்பட்ட எல் நிநோக்களில், பனிரெண்டு முறை குறைந்த மழை வந்திருக்கிறது. ஆனால் இதை வைத்து எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. சமீப காலங்களில் நடத்திய ஆராய்ச்சியில் மத்திய பசிபிக்கில் வெப்பம் அதிகரித்தால் குறைந்த மழையுடன் வறட்சியும் கிழக்குப் பசிபிக்கில் வெப்பம் அதிகரித்தால் அதிக மழையும் வெள்ளமும் ஏற்படும் என்று சொல்கின்றனர்.
அப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு அதிக மழை தான்! உலகின் வானிலையைப் பார்த்து எல் நினோவின் தாக்கங்களை உணர்ந்து செயல்பட்டிருந்தால் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் வெள்ள அபாயத்தில் இருந்து சிறிதளவேனும் தப்பியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. வசந்த காலத்தில் துவங்கிய எல் நினோ தயார் செய்வதற்கான அவகாசத்தைக் கொடுத்து உள்ளது என்றே நான் நினைக்கிறேன். அதிக மழை வந்தால், வடிகால் எங்கே என்று யோசித்துச் செயல்பட்டிருந்தால்....!!!!?
நம்மூரை மட்டும் பார்க்காமல் உலகளவில் ஏற்படும் மாற்றங்களையும் அறிந்து அதற்கேற்றார்போலத் தயாராக இருக்கவேண்டும் என்றே பூமித்தாய் சொல்கிறாள் போலும். எங்கோ புயலடித்தால் நமக்கென்ன என்ற சிந்தனை நிச்சயம் உதவாது, ஆபத்தையே ஏற்படுத்தும்.
இன்னும் மே மாதம் வரை எல் நினோ இருக்கிறதே!!! மக்களே, என்ன செய்வது என்று யோசிப்போம், கைகொடுப்போம் . அரசையும் செயல்பட வைப்போம்.
லாஸ் ஏஞ்சல்சில் எல் நினோவின் தாக்கத்திற்குத் தயாரிக்கிறார்களாம். என்ன ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது என்று நகரக் கவுன்சில்களிடம் அரசு கேட்டு வழிநடத்துகிறது. மக்களுக்கு எச்சரிக்கை செய்யவும், அவசர கால தகவல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கின்றனர். கோடையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டப் பகுதிகளையும் பார்த்து, புயல் வந்தால் இடிபாடுகளும் குப்பைகளும் எங்கு சேரும் என்றெல்லாம் யோசித்துத் தயாரிக்கிறார்களாம். எவ்வளவு தூரம் பயன் தருமோ, ஆனால் தயாரிக்கிறார்களே!! நாம் கொஞ்சம் தூர் வாரியிருக்கலாமே!!! இந்த ரீதியில் யோசித்து மனம் அடையும் வேதனைக்கு அளவில்லை. மக்களின் துயரத்தை ஒரு அளவிற்காவது குறைத்திருக்காலாமே!!
'லா நினோ' என்பது 'எல் நினோ'விற்கு எதிர்மாறானது. இதில் கிழக்குப் பசிபிக் பகுதியில் கடல் மட்ட நீர் குளுமையடையும். பருவ காற்று பலமாக வீசும்.
கீழே உள்ள தளங்களின் உதவியுடன் தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.
1. http://oceanservice.noaa.gov/facts/ninonina.html
2. http://www.livescience.com/3650-el-nino.html
3. http://news.nationalgeographic.com/2015/11/151125-el-nino-hurricanes-drought-climate-science/
4. http://la.curbed.com/archives/2015/11/los_angeles_el_nino_preparations.php
5. http://science.opposingviews.com/effect-el-nino-monsoon-rain-21042.html
6. http://www.theweathernetwork.com/news/articles/whats-up-in-climate-change-el-nino-2015-could-rival-strongest-events-on-record-noaa/55667/
// வடிகால் எங்கே என்று யோசித்துச் செயல்பட்டிருந்தால்....!!!!? // 45 டிகிரி வெயில் அடிக்கும் போது யோசிக்க வேண்டுமா சகோதரி...?
பதிலளிநீக்குஆமாம் அண்ணா..அதிகவெப்பமும் எல் நினோ தாக்கம்தான். எல் நினோ என்று அறிந்திருக்கும் பொழுது வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் தயாராக இருந்திருக்கவேண்டும்.. முந்தைய எல் நினோ அதிக மழை கொடுத்தது என்றால் யோசிக்கத்தானே வேண்டும்?
நீக்குஇங்கும் கலிபோர்னியாவில் வெம்மை அதிகமாகி காட்டுத்தீயும் அதிகமாக இருந்தது கோடையில். ஆனால் அங்கும் இப்பொழுது வெள்ளம் எதிர்பார்க்கப்பட்டுத் தயார் செய்கிறார்கள்
செம சகோ.. இதைப்பற்றி எழுதுவதற்காகத்தான் என்னுடைய பதிவில் இன்று ஒரு முன்னுரையை கொடுத்திருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமான தகவல் என்ன என்றால் இதுவரை கண்டறியப்பட்ட எல்னினோக்களிலேயே கொடுமையானதாக சொல்லப்பட்ட 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் சராசரியை விட அதிக மழைப்பொழிவு. அதே போல மிதமான எல்னினோ வருடமான 2002 ல் கடும் வறட்சி. இந்த வேறுபாடுகள் + எல்நினோவுக்கும் இந்தியன் மான்சூனுக்குமான நேரடித் தொடர்பு குறித்து நானும் விரிவாக எழுதுகிறேன்.. இன்னும் பல ஆச்சர்ய தகவல்கள் இருக்கிறது...
பதிலளிநீக்குஓ அப்படியா சகோ, உங்கள் பதிவினையும் பார்க்கிறேன். ஆமாம் சகோ, முந்தைய எல் நிநோக்களை ஆராய்ந்து பார்த்தாலே அரசு தயார் செய்திருக்கலாம்.. உங்கள் பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்..
நீக்குஇப்பதிவை மழை துவங்கிய ஓரிரு நாட்களிலேயே எழுத ஆரம்பித்து, பின்னர் படிப்பதில் மூழ்கிவிட்டேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
பதிவின் மூலமாக நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
அரிய தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குநல்லது சகோ
நீக்குநன்றி
எல் நினோ.... லா நினோ..... மழை நின்னா சரி....
பதிலளிநீக்குஎவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் மக்கள்..... பாவமாக இருக்கிறது. இனிமேலாவது நீர் நிலைகளை ஆக்ரமிக்காமல் இருக்க வேண்டும் என்பது அரசுக்கும் மக்களுக்கும் புரிய வேண்டும்.
ஆமாம் அண்ணா
நீக்குபாடம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
வணக்கம்
பதிலளிநீக்குபிரமிக்க வைக்கும் தகவல்கள் ..தகவல் திரட்டுக்கு வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்.
நீக்குமிக்க நன்றி சகோ
அருமையான பதிவு. “பல பொறுப்புள்ள மனிதர்கள் தூக்கத்தினால் ....”
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா
நீக்குவிக்கிபிடியாவில் எழுதும் திறமை உங்களுக்கு வந்ததுவிட்டது இந்த மாதிரியான பதிவுகளை அங்கு பதிவு செய்யுங்கள்
பதிலளிநீக்குஆஹா!! நன்றி சகோ. விக்கிபீடியாவில் எழுத ஆசைதான் சகோ, நேர மேலாண்மை கற்கவேண்டும்.
நீக்குஎவ்வளவு செய்திகள்...! எவ்வளவு தகவல்கள்..!
பதிலளிநீக்குஓரளவிற்கே அறிந்திருந்தாலும் தமிழில் இவ்வளவு செறிவான கட்டுரையொன்றைக் காணும்போது மனம் மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது.
உங்கள் உழைப்பிற்கும் சேவைக்கும் பாராட்டுகள் சகோ.
த ம எப்போதுமே...!
தொடர்கிறேன்.
நன்றி
செறிவான கட்டுரை என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது அண்ணா. வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி
நீக்குபருவநிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் இடர்களும் பற்றியெல்லாம் எவ்வித சிரத்தையும் இன்றி வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இதுவரை இருந்துவிட்டோம். காரணம் எப்போதும் பாதிக்கப்படுபவர்கள் எதுவுமில்லாத ஏழைகள் மட்டும்தான். இம்முறைதான் மழையும் வெள்ளமும் பாரபட்சமில்லாமல் எல்லோரையும் பாடாய்ப்படுத்தியெடுக்கிறது. இனியேனும் விழித்துக்கொண்டு செயலில் இறங்கினால்தான் நல்லது. நீண்டகாலத்திட்டங்களின் தேவை நமக்கு அதிகமாகவே உள்ளது.
பதிலளிநீக்குபெருமழைக்கான காரணங்களை வெகு எளிய வரிகளால் அனைவரும் அறிந்துகொள்ளும்வண்ணம் தெளிவாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் கிரேஸ்.
சரியாகச் சொன்னீர்கள் கீதமஞ்சரி.. எங்கோ வெள்ளம், எங்கோ வரட்சி என்று இருந்தவர்களுக்கு இயற்கையே பாடம் கற்றுக்கொடுக்கத் தீர்மானித்ததோ என்னவோ..செய்திகளைப் பார்க்க பார்க்க வருத்தம் அதிகரிக்கிறது.
நீக்குகருத்திற்கும் அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி
அறியாத பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
அறியாத தகவல்கள் சகோதரி. அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி! சகோதரி!
பதிலளிநீக்குகீதா: க்ரேஸ் எல் நினோ லா நினோ பற்றி நானும் மகனும் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தோம். நானும் அதை வாசித்தேன். ஆனால் எனக்குத் தமிழில் அதைச் சரியாக மொழிபெயர்க்கத் தெரியவில்லை. நீங்கள் அதை அழகாகச் செய்து பதிந்துள்ளீர்கள். இந்த மழை வரும் முன்னர் இங்கு செம வெய்யில் இடையில் சிறு சிறு ஆனால் பலத்த மழைகள். பருவ நிலை மாறுவதற்கான அடையாளங்கள். அப்போதுதான் மகன் இதைப்பற்றிச் சொல்ல வாசித்து இதைப் பற்றிப் பேசினோம்.
அப்போது அவன் சொன்னதாவது இம்முறை இங்கு மழை அதிகம் பெய்ய சான்ஸ் இருக்கிறது என்று. கடலுக்கு அடியிலான வெப்ப நீரோட்டம் அதைச் சொல்லுகின்றது என்று. மகன் சொல்லுவான் பல விலங்குகள் பறவைகள், மீன்கள் எல்லாமே நமக்கு பல எச்சரிக்கைகள் விடுக்கின்றன. ஆனால் நாம் தான் அதைக் கவனித்து உள்வாங்காமல் சுயநலத்துடன் திரிந்து கொண்டிருக்கின்றோம் என்று.
பூமித்தாய் நமக்குப் பல விதங்களில் எச்சரிக்கை விடுக்கின்றாள். அங்கு வெதர் சானலில் பார்த்ததுண்டு. எத்தனை முன்னெச்சரிக்கையாக வார்னிங்க் வந்து கொண்டே இருக்கும். இங்கு நமக்கு எத்தனை முறை இயற்கை அறிவுறுத்தினாலும் திருந்தாத மக்கள். என்ன செய்ய?
அருமை தோழி. மிக மிக அருமை! நீங்கள் அறிவியக் கட்டுரைகள் தமிழில் எழுதலாம் இங்குள்ள குழந்தைகள் படிக்கவும் ஏதுவாக இருக்கும். மனமார்ந்த பாராட்டுகள் க்ரேஸ்.
நன்றி அண்ணா, கீதா
நீக்குஹ்ம்ம் ஆமாம் கீதா...விலங்குகள், பறவைகள், மீன்கள் எச்சரிக்கை செய்தும் நாம் உணரவில்லை..அந்த அளவிற்கு இயற்கையிடம் இருந்து தள்ளி வாழப் பழகியிருக்கிறோம்..ஆனால் எவ்வளவு முட்டாள்தனமானது என்று இயற்கை சொல்வது போல் இருக்கிறது. அரசு செய்யவில்லை என்று குறை சொல்லிக்கொண்டிருக்கும் மக்கள் தங்கள் அளவில் செய்யவேண்டியதைச் செய்தார்களா என்றால் இல்லை தான்.. வருத்தமாக இருக்கிறது.
உங்கள் அன்பான ஊக்கத்திற்கு மனம் நெகிழ்ந்த நன்றி கீதா..என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.
விரிவான ஆழமான கருத்திற்கு நன்றி
கீதா: இந்த வருடம் எல் நினோ வருடம் ....கொலராடோவில் ஸ்னோ ஸ்டார்ம்...பசிஃபிக்கில் (கலிஃபோர்னியா) ஹரிக்கேன் பயம் காட்டியது எல்லாமே இந்த மாற்றத்தினால்தான்..அன் யூஷுவல் பேட்டர்ன் என்றும் நானும் மகனும் பேசிக் கொண்டிருந்தோம்...தமிழகம் ...சென்னையும் உள்ளாகியுள்ளது...
பதிலளிநீக்குஇதில் என்ன வேதனை என்றால்..அங்கு ஹரிக்கேன் வரப்போவது பற்றிப் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து பல முன்னேற்பாடுகள் ...இங்கு..பாருங்கள் ஹும் என்ன சொல்ல...ரூ 5000 கொடுத்து மக்களின் வாயை மூடத் தொடங்கிவிட்டார்கள்...
ஆமாம் கீதா..இங்கு வராது என்றும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றும் இருப்பதும் தவறு..இப்பொழுதாவது பாடம் கற்றுக் கொண்டால் பிழைக்கலாம்.
நீக்குஅடக் கொடுமையே!! மக்கள் வாங்காமல் இருக்க வேண்டுமே...என்று தான் உணர்வார்களோ மக்கள் ...வருத்தமாக இருக்கிறது
ஹ்ம்ம் ..செம கிரேஸ்.. பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்
பதிலளிநீக்குதங்களின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ள பதிவாகும்.அலட்சியமின்றி இருந்தால் அவஸ்தைகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.நன்றி சகோ
பதிலளிநீக்குபடித்தேன் பல செய்திகள்!அறிய முடிந்தது நன்றி!
பதிலளிநீக்குசிறப்பான கட்டுரை. எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வகையில் எழுதியமைக்கு பாராட்டுக்கள் .இயறகையின் சில ரகசியங்கள் நமக்கு சரியாக பிடிபடுவதில்லை. அவற்றை தடுக்க இயலாதெனினும் ஓரளவிற்கு கணித்தவற்றை வைத்து எச்சரிக்கும்போது நிச்சயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அழிவைக் குறைத்திருக்கலாம், உயிரிழப்ப்புகள் ஏற்படாமல் தடுத்திருக்கலாம்.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
சரியான, அறிவு சார்ந்த ஆட்சியாளர்கள் அமையாதது நமக்குக் குறை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாமா? நீர் ஒட்டிக் கடலில் கலக்க வழி இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். மழை பொய்த்து விட்டால் வரட்சியில் மாட்டிக் கொள்வோமோ என்று நீரைத் தேக்கி வைக்க வேண்டிய குழப்பமும் ஒரு புறம். மண்டை காய்கிறது சகோதரி..
பதிலளிநீக்குஆமாம் சகோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் தாக்கத்தின் அழிவைக் குறைத்திருக்கலாம்தான். நிர்நிலைகளைத் தூர்வாரி தயார் செய்திருக்கலாம். நீர் சேமிக்கப்பட்டு உபரி நீர் மட்டுமே வெள்ளமாய் ஓடியிருக்கும். மக்களுக்கும் இப்படி ஒரு இயற்கைச் சூழல் இருக்கிறது, தயாராக இருங்கள் என்று அறிவுருத்தியிருக்கலாம். சிலராவது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருப்பார்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தயாராக இருந்திருப்பார்கள். ஆமாம் நீரைத் தேக்கிவைப்பது அவசியம்தான்..ஆனால் பெருமழை பொழிந்து இன்னும் மழையிருக்கும் என்ற நிலையில் சுதாரித்திருக்க வேண்டும். இங்கு கலிபோர்னியாவில் பெருமழை என்று எதிர்பார்த்துத் தயார் நிலையில் இருக்கிறார்கள். விசு அவர்களின் பதிவைப் பார்த்தீர்களா? இதோ இணைப்பு:
நீக்குhttp://vishcornelius.blogspot.com/2015/12/blog-post_11.html
இதுபோக நகர நிர்வாகிகள் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தயாராக இருக்கிறார்கள். மணல் மூட்டைகள், மக்களுக்குத் தங்குமிடங்கள் என்று...
அறிவு சார்ந்த ஆட்சியாளர்களும் நிர்வாகிகளும் தேவை..ஆனால் ஒன்று சகோ, இவர்களை நம்பிக் கொண்டிருக்காமல் நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்லி நாமும் தயாராக இருந்துகொள்ள வேண்டும். முன்பு சொன்னபொழுது பலர் கேட்கவில்லை, இனி கேட்பார்கள் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ
தமிழ் மணத்தில் வாக்களிக்க முடியவில்லை. "No such post" என்கிறது!
பதிலளிநீக்குநானும் முயன்று பார்த்தேன், என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. டிடி அண்ணாவிடம் கேட்டுள்ளேன், பார்க்கலாம் சகோ. வாக்களிக்க நினைத்ததற்கும் அதில் இருந்த சிக்கலைத் தெரியப்படுத்தியதற்கும் மிக்க நன்றி சகோ
நீக்கு