என் கவிதைத் தொகுப்பான 'துளிர் விடும் விதைகள்' வடிவம் பெற்று அச்சுக்குச் செல்ல பெரிதும் உதவிய திரு.முத்துநிலவன் அண்ணா அன்புடன் முன்னுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அவர் வழங்கிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையாளமும்“ தமிழிலிருந்து கிளைத்தெழுந்த மொழிகள் என மனோண்மணீயம் பெ.சுந்தரனார் பாடுகிறார். மொழிநூல் வல்லுநர்களும் அவ்வாறே சொல்கிறார்கள். ஆனால் அதனால் தமிழுக்கென்ன பெருமை என்று எனக்குத் தெரியவில்லை. “உலகின் மிக அதிக வயதானவர் என் தாத்தா” என்று சொல்வதில் பேரனுக்கு உள்ள பெருமையன்றி, பேரனின் இன்றைய நிலை என்ன? என்பதல்லவா முக்கியம்?
மலையாளத்தின் புகழ்பெற்ற நாவல் ஒன்று “என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது”என்பார்கள். இன்றைய தமிழ்ப்பேரன், ஆயிரம் மனிதவீரம் கொண்ட அந்த யானையைப் பேருந்து நிலையத்தில் பிச்சையெடுக்க விடுகிறானே என்னும் கோவம் எனக்குண்டு. பழந்தமிழ்ப் பெருமையைப் பேசிப் பேசியே இன்றைய நிலையைத் தமிழர் கோட்டை விட்டுவிட்டார்களே? என்னும் கவலையும் எனக்குண்டு!
1965ஆம் ஆண்டிலிருந்து, இந்திய அளவில் தரப்படும் உயர்ந்த விருது ஞானபீட விருது. இந்த ஞானபீடவிருதை, தமிழ்த்தாயின் “வயிற்றில் உதித்த“ மலையாள மங்கை 1965, 80, 84, 95, மற்றும்2007 ஆக ஐந்துமுறை பெற்றிருக்கிறாள். சுந்தரத் தெலுங்குச் செல்வியோ 1970, 88, மற்றும் 2012 ஆக மூன்று முறை பெற்றுவிட்டாள். கன்னடத்துப் பைங்கிளியோ 1967, 73, 77, 83, 90, 94, 98, மற்றும் 2010 என ஏழுமுறை தட்டிச் சென்றிருக்கிறாள். ஆனால் நம் தமிழ்த்தாய் இரண்டுமுறை மட்டுமே பெற முடிந்தது ஏன்?
இதிலும் இந்திய அளவிலான அரசியல் மாச்சரியங்கள் உண்டெனினும், இன்றைய கன்னட மற்றும் மலையாள மொழியின் கலை-இலக்கிய வளர்ச்சி, தமிழை விடவும் அதிகம்தான் என்பதை மனச்சாட்சியுள்ள தமிழ் எழுத்தாளர் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதுதான் தமிழுக்கும் நல்லது.
இந்த விருதுக்கும்- அந்தந்த மொழிவளர்ச்சிக்கும் –கல்லூரியில் முதன்மைப் பாடமாகத் தமிழை எடுத்துக்கொண்டு தமிழை முறையாகப் படித்த- தமிழர்களின் கலைஇலக்கியப் பங்களிப்பிற்கும் தொடர்பு உண்டு. அதுதான் முக்கியம். தமிழ் எழுத்தாளரின் தாய்மொழி ஆளுமை மற்றும் மொழிபற்றிய பார்வைக்கும் மற்ற மொழிகளின் எழுத்தாளர்களின் பார்வைக்கும் உள்ள வேறுபாடுதான் அது.
மொழியைத் தாயாக, பெயரோடு இணைத்துக் கொள்ளும் அளவிற்கு வெறியாக வேறெந்த மொழியினரையும் பார்க்க முடிவதில்லை. உதாரணமாக செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசி, என்பன போல கன்னட, மலையாள பிற மொழியினரின் பெயர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மொழிக்காகப் போராடி, ரத்தம்சிந்தி, உலகமாநாடுகள் பலகண்ட தமிழர்களைப் போல மொழிக்கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை என்பதை இதனோடு சேர்த்துப் பார்த்தால் இரண்டு நிலைகளுக்குமான தொடர்பும் புரியும். இதுபற்றி இன்னும் பேசலாம்..
சரி இது ஒருபுறம் இருக்கட்டும்.
தங்கை வி.கிரேஸ் பிரதிபாவின் கவிதைத் தொகுப்புக்கு வருவோம்.
வி.கிரேஸ் பிரதிபா தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவரல்லர்.
தமிழ்ப் பாடத்தை (ஆங்கிலவழி) பள்ளியோடு விட்டுக் கணினியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
எனினும், இவருக்கிருக்கும் தமிழார்வம் என்னை இவ்வளவு யோசிக்க வைத்தது.
ஒரு வேளை கிரேசும் என்னைப் போலத் தமிழை முதன்மைப்பாடமாக எடுத்துப் படித்திருந்தால் இவரது இன்றைய அறிவியல், அழகியல், சூழலியல் பார்வையை இழந்து வெறும் தமிழ்ப்பாடியாகவே இருந்திருப்பாரோ என்றும் யோசிப்பதுண்டு. ஆனால், தமிழையே படித்த வள்ளுவர், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, சிற்பி, வைரமுத்து போன்றோரின் பார்வையில் தெளிவு இருப்பது போல கிரேசும் பரிணமித்து இருக்கவும் வாய்ப்புண்டு.
இவரது கவிதையில் பாசாங்கில்லை. செயற்கையான ஜாலமில்லை. கவிதைக்கான வடிவில் இன்னும் கொஞ்சம் கவனம் வேண்டியிருந்தாலும் கருத்தில் எந்த இடத்திலும் சோடை போகவில்லை என்பதே மகிழ்ச்சி தருகிறது.
உயர்கல்வி கற்றோர், அதைக்கற்கத் தமிழ் உதவவில்லை என்பதாலோ என்னவோ, வெளிநாட்டில் பிறந்து வெளிநாட்டிலேயே வளர்ந்தது போல, பாசாங்கு வாழ்க்கையாகப் பம்மாத்துப் பண்ணுகிறார்கள். உயர்கல்வி தமிழில் இல்லைதான். அதற்குத் தமிழென்ன செய்யும்? தமிழரல்லவா வெட்கப்பட வேண்டும்? ஆயிரம் ஆண்டுக்கு முன் –ஆங்கிலம் என்னும் ஒரு மொழி இந்தியாவுக்கு வருமுன்பே -- சுற்றிலும் 50கல் தொலைவிற்கு மலையே இல்லாத தஞ்சையில் -- ராஜராஜன் கட்டிய கோவிலில் பக்தியை மட்டுமே பார்க்கிறோம்! அதன் கட்டுமானப் பொறியியலை, எந்திரப் பொறியியலைத் தொலைத்து விட்டு, இப்போது ஆங்கிலத்தில்தான் பொறியியல் படிக்கவேண்டிய நிலை யாரால் வந்தது? தமிழ் என்ன பிழை செய்தது? தமிழைப் பயன்படுத்தாத இத்தமிழரை கிரேஸ் வேண்டுவது நெஞ்சைத் தொடுகிறது-
“செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம் சென்றிடினும் தமிழ்கொண்டு சென்றிடுவாய்” என்னும் கிரேசின் வேண்டுகோளை உலகத்தமிழர் எல்லாரும் ஏற்கத்தானே வேண்டும்?
உலகின் எந்த மூலையிலேனும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் சந்தேகமில்லாமல் தமிழர்கள்தாம் என்று அடையாளம் காணலாம் என்பது ஜோக் அல்ல, இப்போது உண்மை எனினும், வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட தமிழர்களின் தமிழார்வம் அனைவரும் அறிந்ததே. இதில் என்ன முரண்பாடு என்றால், வெளிநாட்டுத் தமிழர்கள் தமது பணி மற்றும் வாழ்நிலை சார்ந்த சூழலில் தமிழுக்காக ஏங்குவதில் வியப்பில்லை. அவர்கள் தமிழ்ப்பற்றோடு, தம் குழந்தைகளைத் தமிழில் பேசவும் பாடவும் எழுதவும் பயிற்றுவிப்பதைப் பல வெளிநாடுகளுக்கும் போனபோதெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். இலங்கை சிங்கப்பூர் மலேயா பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. துபாய் தமிழ்ச்சங்கம், சிஷெல்ஸ் தமிழ்சங்கம், மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் வாழும் தமிழர்களும் தமிழைத் தம் குழந்தைகள் பேசப்பேச மகிழ்ந்து போவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!
ஆனால், இன்னும் ஓரிரு வாரத்தில் அமெரிக்க நாட்டிற்குச் செல்லவிருந்தாலும், இங்கிருக்கும்போதே மிகுந்த தமிழார்வத்துடன், தமிழில் கவிதைகள் எழுதுவதும், தான் படித்த கணினி மென்பொருள் அறிவைக் கொண்டு, தமிழ்வலைப்பக்கம் உருவாக்கித் தமிழில் படைப்புப் பல படைத்துப் பகிர்வதும் என்னை வியப்பிலும் உவப்பிலும் ஆழ்த்தியது!
“மென்பொருள் பொறியாளராய்ப் பணிபுரிந்து, இப்பொழுது குடும்பத் தலைவியாய், என் ஆர்வங்களையெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க்காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்“ எனும் முன்னுரையைப் பார்த்து வியந்து இவரது வலைப்பக்கத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.
2012 முதல் வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார். அதற்கு அவருக்கு அமைந்த வலைநண்பர்கள்தான் காரணம் என்று அவரே சொல்வதும் உண்மைதான். வலையுலகம்தான் பெங்களுரில் இருந்தவரைத் தமிழுலகம் அறியவும், நட்புக்கொள்ளவும், இப்போது உலகம் முழுவதும் தமிழை நேசிக்கும் ஏராளமான சகோதர சகோதரிகளைத் தமிழ்வலைவழி அறிமுகம் கொள்ளவும் காரணமானது என்பதால் நானும் வலைப்பூவுக்கு நன்றி கூறுகிறேன். தொடர்ந்து எழுதி இதோ ஒரு தொகுப்புடன்...!
இதில் இவர் எடுத்துக்கொண்டிருக்கும் பாடுபொருள்கள் பற்பல விதத்திலானவை.
“முன்னேறும் புவியில்
அறிவியல் வேண்டும்,
இலக்கியம் எதற்கு?” எனும் எதார்த்தமான கேள்வியோடு ஒரு கவிதை தொடங்குகிறது.
இது இன்றைய தலைமுறையிடம் பெற்றோரே கேட்கும் கேள்விதான். இதை எதார்த்தமாகவே அணுகி, ஆங்கில வழி அறிவியல் கணிதம் பொருளியல் எல்லாம் படித்தாலும் வாழ்வியல் அறியத் தமிழ் வேண்டுமல்லவா? என்று முடிப்பது மிகவும் சரியான பதில். பாருங்கள் –
“இலக்கியம் மொழிமட்டுமல்ல
நம் உள்ளுரின் வாழ்வியல்,
நம் அடையாளம், வரலாறு!“ இந்தச் சின்ன வயதில் என்ன ஒரு தெளிவு! இந்தத் தெளிவு நம் இளைய தலைமுறைத் தமிழர் எல்லார்க்கும் வந்துவிட்டால் தமிழ்நாடு உலகத்துக்கே தலைமை தாங்குமே?
பெரும் பெரும் படிப்புப் படித்துக் கைநிறையச் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை, வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல் இளம் வயதிலேயே தற்கொலையில் முடிப்பதும் அல்லது மணமுறிவில் முடிவதுமான கசப்பான நடப்புகளைப் பார்க்கத்தானே செய்கிறோம்?
ஆங்கிலம் படித்தா வள்ளுவன் வாழ்வியல் படைத்தான்? கணிதம் படித்தா ஜெயகாந்தன் வாழ்வியல் நுட்பங்களை எழுதினார்? பொருளியல் படித்தா காமராசர் பாலங்களைக் கட்டினார்?
எனவே, படிப்பு வேலைக்கு எனில், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளத் தமிழ்மட்டுமே வாழ்நாள் முழுவதும் வரும் என்னும் புரிதல் உள்ள தங்கை கிரேஸின் கவிதைகள் என்னை மட்டுமல்ல, வாழ்வியல் சிக்கலைப் புரிந்துகொள்ளாத இளைய தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுவோர் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமென்ன?
அடுத்து, தாய்-தந்தையை உண்மையாக நேசிக்கும் யாரும் உலகத்தை நேசிப்பது உறுதி. அதையும் வெளிப்படுத்தும் அழகிய கவிதைகள் இதில் உள்ளன. அதிலும், இவரது ஆங்கில அறிவைத் தமிழுக்குப் பயன்படுத்தும் விதத்தில் சங்க இலக்கியப் பாடல்களைத் தேர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிகப்பெரிய தமிழ்த்தொண்டு! அதற்கு இவரது தந்தையார் எடுத்துத்தந்த பாடல்சில உதவியிருப்பதைப் பார்க்கும்போது அவரை வணங்கத்தான் வேண்டும்.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்றான் பாரதி. அது ஒரு தமிழ்ப்பணி எனில், மற்றொரு பணி, நம் பழந்தமிழ்க் கருவூலங்களை உலகறியச் செய்யும் பணி அவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்தெழுதும் அரிய பணியே ஆகும். அதைச் செய்ய ஊக்குவிப்பதோடு, சிலபல பழந்தமிழ்க்கருவூலங்களை அடையாளம் காட்டும் தந்தையார் வாய்க்கப் பெற்றது தங்கை கிரேசுக்குக் கிடைத்த பெரும் பெறுபேறாகும்.
“மக்கியும் மரமாகும் மரம்“ என்பது, “மரமது மரத்தில்ஏறி மரமதைத் தோளில் வைத்து“ என்னும் செய்யுள் போல, மரம் மனித வாழ்வில் பெற்ற இடத்தை அறிவுறுத்துகிறது.
இன்னொரு கவிதை, காந்திக்கு மட்டுமல்ல எளிமையும் கடமையும் நம் எல்லோருக்கும் உரியதே என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. தலைவர்களை எடுத்தெடுத்துப் பேசிவிட்டு அவர்களின் வாழ்க்கையை நம் வாழ்க்கைக்கு முன்னோடியாகக் கொள்ளாத சிக்கல்தானே நம் நாட்டுப் பிரச்சினைகளின் அடிப்படை? இந்தக் கவிதையைப் பாருங்கள் -
“ஒரு கரண்டி கழுவ
ஒரு சட்டித் தண்ணியா?“
என்றேன் நான்.
“அடப்போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா“
என்றாள் அவள்.
“நான்தான் இல்லை,
நானும்தான்“ என்றேன் நான்
சரியான புரிதல் உள்ள காதலரிடம், “கிளி மயில் புறா அன்னம்“ எனும் உலுத்துப்போன பெண்ணுவமைகள் எடுபடாதது மகிழச்சியே
“எதனோடும் உருவகிக்க வேண்டாம்,
ஏதேதோ எவமையிலும் புகழ வேண்டாம்,
என்னை நானாகவே விரும்பிடு என் பதியே” என்பதும், வேறொரு கவிதையில் –
“என் அன்பே, நேசத்தின் நித்தியத்திற்காகவும்,
எனக்காகவும் மட்டுமே என்னை நேசி” என்பதும் வெகுசிறப்பு. தன்மானம் தனக்கு மட்டுமல்ல தன் காதலர்க்கும் வேண்டும் எனும் மற்றொரு கவிதையும் இப்படித்தான் சிறப்பாக உள்ளது. எங்கள் ஊர்க் கவிஞர் ஆர்.நீலா இப்படித்தான், “வீணையல்ல நான் உனக்கு” எனும் தனது கவிதைத் தொகுப்பில், “என் தவறுகளை நானே சரிசெய்துகொள்கிறேன்“ என்றது நினைவில் வருகிறது தன்னை உணர்வதிலும் சரியாக உணர வைப்பதிலும் இன்றைய பெண்கவிகள் நம்பிக்கையூட்டுகிறார்கள்!
இவரது தமிழ்ப்பற்று ஆங்காங்கே சில புதிய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவது நான் வேறெந்தத் தமிழ்க்கவிதைத் தொகுதியிலும் காணாத புதுமை! இதுவே அதிகரிக்கும் போது, கவிதையைச் சுவைக்க இடையூறாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மரம், இயற்கை, மழை, புலிகள், புறாக்கள், மான்கள், புத்தகம், வண்ணத்துப் பூச்சி கையெழுத்தை மறந்த விரல்கள், காலை மற்றும் அந்தி மாலை, நெகிழி, ஆறு, கடல் என இயற்கையை ஆராதிக்கும் இவர் “நற்றிணைக் காதலி“ யின் இன்றைய வடிவம் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இதில் உள்ள “இச்சை“ எனும் கவிதை, அபியின் புகழ்பெற்ற “ராப்பிச்சைக் காரன்“ கவிதையை நினைவூட்டுகிறது. இந்தத் தொகுதி முழுவதும் நல்ல நல்ல கவிதைகள் பற்பல இருந்தாலும், கவிதை செய்நேர்த்தியிலும் முன்னேறி, இவற்றினும் மிகச்சிறந்த கவிதைகளைத் தமிழ் உலகிற்கு மேலும் தருவார் எனும் நம்பிக்கையை இந்தக் கவிதைகள் தருகின்றன.
இவரது தமிழ்ப்பற்று இக்கவிதைகளின் வழியாக மட்டுமின்றி, நமது பழந்தமிழ்க் கருவூலங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவரது தமிழார்வத்தின் இயல்பைச் சரியாகவே புரிந்துகொண்டு ஊக்கப்படுத்திவரும் அன்பான கணவர் திரு வினோத் அவர்களுக்கும், இருவரின் பெற்றோருக்கும் எனது நன்றிகலந்த வணக்கங்கள். கவித்தங்கை கிரேசுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்புகலந்த வாழ்த்துகள்.
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” – பாரதி.
அன்பு அண்ணன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை – 622004.
15-10-2014
http://valarumkavithai. blogspot.in
-------------------------------------------------------------
-------------------------------------------------------------
அன்புடனும் மகிழ்வுடனும்,
கிரேஸ்
ஒரே மூச்சில் முன்னுரை படித்தாயிற்று ..
பதிலளிநீக்கு‘பாவிற் கணிபோல் பனுவல் தெளிவுணர்ந்தோர்
நாவிற்கு வாய்மைபோல் நாரணமாம்-தேவிற்கு
வாய்ந்த அருள்போல வாய்ந்ததே நூலகத்தாய்
ஏய்ந்த பொருட்பா யிரம்’
என்னும் மாறனலங்காரச் செய்யுள் நினைவு வருகிறது.
அதுவே இங்கு முன்னுரையாய்......
மீண்டும் புலமிக்கவரின் புலமை தெரிதல் தான்!
வாழ்த்துகள்!
அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குத.ம இரண்டு
பதிலளிநீக்குமுன்னுரை ஆஹா! வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குஇனிய தமிழால் வாழ்த்துகிறோம்!
பதிலளிநீக்கு