திருமதி.எம்,ஏ.சுசிலா (http://www.masusila.com/) அவர்கள் பாத்திமா கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர்(ஓய்வு). எழுத்தாளராகத் தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். நான் பாத்திமா கல்லூரியில் இயற்பியல் படித்தபொழுது எனக்கு நேரிடையாகப் பாடம் எடுக்காவிட்டாலும், அவரை நன்கு அறிவேன். அட்லாண்டாவில் இருக்கும்பொழுது வலைத்தளம் மூலமாகவே மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். என் கவிதைத் தொகுப்பு வெளியிடப்போகிறேன் என்று கூறி அணிந்துரை கேட்டபொழுது மகிழ்வுடன் ஒப்புகொண்டார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. அவர் வழங்கிய அணிந்துரையை இங்கே பகிர்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
தாய்மொழி என்பது எல்லோருக்குமே அணுக்கமானது….
மாறாத பிரியத்துக்கும் வற்றாத நேசத்துக்கும் உரியது. குறிப்பாக
மொழியைத் தாயாக தெய்வமாக தங்கள் உயிருக்கு நிகராகவே கொண்டிருக்கும் தமிழர்கள் மொழிப்பற்றில் வேறெந்த இனத்தையும்
விஞ்சுபவர்கள். பெயருடன் தேன்மதுரத்தமிழை முன்னொட்டாகச் சேர்த்துக்கொண்டிருக்கும்
இந்நூலாசிரியர் கிரேஸும் அப்படித்தான்.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உச்ச கட்டத்தை எட்டியிருக்கும்
சமகாலச்சூழலில் – அன்றாடப் பொருளியல் வாழ்வுக்குரிய பயன்பாடுகளின் மீது மட்டுமே
கவனம் குவிக்கிற இந்தக்கால கட்டத்தில் மொழி ,இலக்கியம்
,இயற்கை, மனிதம் ஆகியவற்றின் மீது தணியாத ஆர்வம்
கொண்டவராய்க் கவிதை படைக்க நினைத்து நூல் வடிவில் செயலாக்கவும் முனைந்து, தன்
முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட முன் வந்திருக்கும் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள்
பாராட்டுக்குரியவர்.
கிரேஸின் கவிதைகளில் முதலிடம் பெறுவது அவரது தமிழ்க்காதல்.
’’செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றிடினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்!’’
என்று முழக்கமிடும் அவர் வெறும் ஆரவாரத்துக்காக
மட்டுமல்லாமல் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தமிழை அணுகியிருக்கிறார் என்பதற்கு நூலில்
அவர் பயன்படுத்தியிருக்கும் இன்றைய வழக்கில் அரிதாய்ப்போன ’’உதுக்காண், பொலந்தொடி,பாண்டில்’’ போன்ற பலபழந்தமிழ்ச் சொற்களே தக்க
சான்றுகள். அவற்றுக்கான பொருளை அவர் அடிக்குறிப்பில் தந்திருந்தாலும் உண்மையில் அகராதி
கொண்டு அவற்றைத் தேடிப்பார்த்துக் கண்டடைய வேண்டியது வாசகர்களின் கடமையே.
மழை
,மேகம் ,நிலவு , வண்ணத்துப்பூச்சி என இயற்கை சார்ந்த கற்பனைகளைத் தன் தமிழில் விரித்துக்கொண்டே போனாலும் இலக்கியம் என்பது
வெறும் இளைப்பாறலுக்கானது
மட்டுமில்லை என்ற பிரக்ஞையும் இவரிடம் இணைந்தே இருக்கிறது.
’’உலக வெம்மை
உலகை உலுக்க,
இலக்கியமா படிக்க?’’
என்ற
வினாவை இவர் எழுப்புவது வினோதமாகத் தோன்றினாலும் ஏட்டுப்படிப்பு என்பது உலகியலுக்குப் பயனும் வளமும் சேர்க்க வேண்டும் என்ற கரிசனமே அந்தக்கேள்வியை இவர்முன் வைக்கக் காரணமாகிறது. மேலும் இன்றைய அறிவியல் கூறும் விளக்கங்கள் பலவும் அன்றைய இலக்கியங்களிலேயே இருந்ததையும் இவர் ஆங்காங்கே கோடிகாட்டிக்கொண்டு போகிறார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதன்
மேல் கிரேஸின் அக்கறை பெரிதும் குவிந்திருப்பதை
இவரது பல கவிதைகளில் காண முடிகிறது.
‘’ நிலக்கடலை கொறிக்கலாம் – ஆனால்
நீலக் கடலைக் குப்பையாக்கலாமோ?’’
நீலக் கடலைக் குப்பையாக்கலாமோ?’’
என்று
அங்கலாய்க்கும்
இவர் இன்றைய நெகிழிப்பொருள்களின் [பிளாஸ்டிக்] பயன்பாடு உண்டாக்கும் தீமைகளை
’’ஆழி சேரும் ஒரு
நெகிழி -
ஆமை ஒன்றைக் கொல்லலாம்!
பனிக்கடல் மிதக்கும் நெகிழி-
பறவை ஒன்றைக் கொல்லலாம்!’’ என்று தன் கவிதைகள் பலவற்றில் பட்டியலிடுகிறார்.
ஆமை ஒன்றைக் கொல்லலாம்!
பனிக்கடல் மிதக்கும் நெகிழி-
பறவை ஒன்றைக் கொல்லலாம்!’’ என்று தன் கவிதைகள் பலவற்றில் பட்டியலிடுகிறார்.
கரை
காணாக்காதலுடன் கடலைச் சேர்வது நதியின் இயற்கை; இயல்பான அந்த ஓட்டத்தில் – அந்த
சங்கமத்தில் தடையை ஏற்படுத்த மனிதர்களுக்கு என்ன உரிமை? நெகிழிக்குப்பைகளால்
நதியின் வேக கதியைத் தூர்த்து தன் காதலனான கடலுடன் சேர விடாமல் நாம் தடுக்கும்போது
‘’அழியா நெகிழி எங்கும் மிகுந்து
........அறிந்தும்
அறியாமலும் என்வழி தூர்ந்து,
ஆழி
சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து?’’
என்று பொங்கி
வரும் ஆதங்கத்தோடு புலம்புகிறது நதி..
மரம் வெட்டி மனை
கட்டத் துடிக்கும் மனிதர்களை
‘’ புள்ளினத்தின் வாழ்விடமாகும்
புள்ளி போல எறும்பும்
ஊரும்
விண்ணைத் தான்
தொட்டாலும்
மண்ணைத் தான்
சேரும்
மண் செழிக்க
உரமாகும்
மக்கியும்
மரமாகும் மரம்!
என்ற கவிதை கண
நேரமாவது சிந்திக்கவும் தயங்கவும் வைக்கும்.
இயற்கை
வருணனைகளோடு தாய்தந்தைப்பாசம்,நட்பு ஆகிய உணர்வுகளுக்கும் தன் கவிதைகளில் இடமளித்திருக்கும் நூலாசிரியர் வரதட்சிணை போன்ற சமூக அவலங்களை சாடும் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். அவற்றில் குழந்தை வளர்ப்பு குறித்த கவிதை முக்கியமானது. ’உங்கள் குழந்தை உங்களிடமிருந்து வந்திருந்தாலும் அது உங்களுடையது மட்டுமல்ல’என்பார் கலீல் கிப்ரான்; பெற்றோரின் விருப்பங்களைத் திணித்து குழந்தைகளுக்கென்று தனியானதொரு சுயம் இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில்
‘’அவளைப் போல ஆடு
இவனைப் போலப் பாடு
அவனைப் போலப் படி
இவளைப் போல விளையாடு
அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்
விளங்காமல் விழித்த குழந்தை
விளம்பியது விழிவிரித்து
நானாக நான் இருத்தல் எப்பொழுது
நானாக நான் இருத்தல் பிழையா?’’
என்று
குழந்தை ஒன்று அங்கலாய்ப்பது போல அமைந்திருக்கும் இந்தப்படைப்பு நம் கவன ஈர்ப்புக்கு உரியதாகிறது.
அக
ஆழத்தில் செறிந்து கிடக்கும் இனம் விளங்காத உணர்வுகளை படிமங்களாக
– மனக்காட்சிகளாக
உருவகப்போக்கில்
எடுத்துரைப்பது
ஒரு வகைக் கவிதை என்றால் எல்லோருக்கும் பரவலாக அறிமுகமான-பொதுவான செய்திகளை மொழி ஆர்வத்தோடு கவிதை வடிவில் வெளிப்படையாக….நேரடியாகத் தருவது மற்றொரு போக்கு. இவற்றுள் தேன்மதுரத்தமிழ் கிரேஸின் கவிதைகள் இரண்டாவது வகை சார்ந்தவை. சொல்லாட்சியும் பொருள் வளமும் கொண்டிருக்கும் கிரேஸ், கவிதையின் வடிவ
நேர்த்தியில், அதன் அழகியலில்
இன்னும் சற்று கூடுதல் உழைப்பைச் செலுத்தினால் கவிதைகள் தரத்தில் இன்னும் சற்று மேம்படக்கூடும். இது அவரது தொடர்ந்த வளர்ச்சிக்கான அன்பான ஆலோசனை மட்டுமே..
கிரேஸின்
தேன்மதுரத்தமிழ் , வளர்தமிழாகச் சிறந்து நல்ல பல ஆக்கங்களை அளிக்க என் வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா,
எழுத்தாளர்,
[பணி ஓய்வு-தமிழ்ப்பேராசிரியர்,பாத்திமாக்கல்லூரி,மதுரை]
17.10.2014
அன்புடனும் மகிழ்வுடனும்,
கிரேஸ்
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
நூலின் அணிந்துரை நன்றாக உள்ளது... அணிந்துரை வழங்கிய சுசிலா அம்மாவுக்கு எனது பாராட்டுக்கள்
புத்தகவெளியீடு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை...
பதிலளிநீக்குசிறந்த திறனாய்வுப் பார்வை
பதிலளிநீக்குதொடருங்கள்
அருமையான அணிந்துரை தோழி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழின் மீது கொண்ட பற்றையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தது. பாராட்டுக்கள்மா நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேற என் வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குமேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள் கிரேஸ் :)..
பதிலளிநீக்குவாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குவிரைவில் சாதனையாளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெர வாழ்த்துகள்! நூலின் மதிப்புரைகளே அப்படி!தொடரட்டும் தங்களின் தமிழ்ப்பணி!
பதிலளிநீக்குஅருமையான மதிப்புரை.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நன்றி.
வாழ்த்துகள்.