என் நண்பர் ஸ்ரீனி வழியாக அறிமுகமானவர் திரு.ராஜவேல். சென்னை ரேடியோ சிட்டி பண்பலையில் ரேடியோ ஜாக்கியாகப்(லவ்குரு) பணிபுரியும் அவர் தன் வேலை நெருக்கடிகளுக்கிடையிலும் என் கவிதைகளைப் படித்து உள்வாங்கி முகவுரை வழங்கியிருக்கிறார். திரைப்படத் துறையில் உதவி வசனகர்த்தாவாகவும்(கேடி பில்லா கில்லாடி ரங்கா, கப்பல்...) தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர் வழங்கிய முகவுரையை இங்கே பகிர்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர்கள் கவிதையாகவும் வாழ்கிறார்களா? – முகவுரை
கவிதையாய்
வாழ்வதற்கும் கவிதையோடு வாழ்வதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. கவிஞர்கள்
கவிதைகளோடே வாழ்பவர்கள். ஆனால் அவர்கள் கவிதையாகவும் வாழ்கிறார்களா என்பதற்கான
அடையாளங்களை, ஆங்காங்கே அவர்களின் படைப்புகளில் ஒளித்து வைப்பதில், இருக்கிறது சாமர்த்தியம்.
அந்த வகையில் எனக்கு தோழி.கிரேஸ் பிரதிபா மேல் ஒரு பொறாமையே வருகிறது.
தமிழை நேசிக்கிறார்,
பெற்றோரைப் பூசிக்கிறார், நட்பைக் கொண்டாடுகிறார், இயற்கையைச் சிதைக்காதே என சமூக அக்கறையோடு யாசிக்கிறார்..
புலரும் பொழுதை பாடுகிறார், மலரும் மலரை பாடுகிறார், நெடிதுயர்ந்த மரத்தை
கட்டிக்கொண்டு காதலிக்கிறார்... கூடவே கனவு கணவனுக்கான கட்டளைகள் இடுகிறார்.
என்னளவில் நான் உணர்வது, இந்த கவிதைகள் தான் கிரேஸ் பிரதிபா! கிரேஸ் பிரதிபா தான்
இந்த கவிதைகள் !!!
தோழி.கிரேஸ்
பிரதிபாவின் கவிதைகள் பல மரபின் வழிவந்தவை தான்.. ஆனால், மரபுகள் கட்டி
காக்கப்படவேண்டும் என நினைப்பவன் நான். ஆனால் எந்த மரபுகள்? தமிழ் பற்றிய பல
கவிதைகளில் ஒன்றில் சொல்கிறார்,
"இடையில் துவங்கி இடையில் போன மொழிபல உண்டு
இடையூறு பல தாண்டித்தொன்றுதொட்டு
என்றும் இளமையுடன் செம்மொழியாய் - இனிப்பினும்
இனிப்பது எம்தமிழ் அன்றோ!"
இன்றைய வேற்று மொழி மோகத்தைச் சொல்லி, மாற்று மொழிகள்
எல்லாம் வரும் போகும், ஆனால் இன்தமிழ் ஊற்று எம் மொழி, அது தமிழென்னும் செம்மொழி
என்று தாய் மொழி புகழைத் தரணிக்கு
உரைக்கின்றார்.
அவருக்கு எவ்வளவு தமிழ் பிடிக்கும் என்பதற்கான மற்றொரு
சான்று, அவர் தமிழை பாடியபின் தான் தந்தையை பற்றியே பாடுகிறார்.
அப்பாவை பற்றிச் சொல்லும்போது,
நீ
எல்லாம் தந்தாய்
எதுவும் எதிர்பாராமல்", என அப்பாவின் செல்ல மகள் தான், என்று சொல்லாமல்
சொல்கிறார். தந்தையைத் தொடர்ந்து தாயைப் பற்றிக் கவிபாடி,
"அவள் தான் எப்பொழுதும் பிள்ளைகளுக்காகவே வாழ்கிறாள்
முகம் சுழிக்காமல்!
அம்மா -
அவள்தான் நோயென்றால் கண்விழித்துக் கவனிப்பாள்
தன் வலி ஏதும் சொல்லாமல் !", என கண்ணோரம் ஈரம் சுரக்க வைக்கிறார். தமிழுக்கும்,
தந்தைக்கும், தாய்க்கும் அடுத்து அவர் கொடுக்கும் இடம் முக்கியமானதாய் நான்
பார்க்கிறேன்.
அது நட்புக்கான இடம்.
"நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன் தான் அனைத்து தினமும்!" என நட்புக்கு ஜே போடுகிறார். இப்படி ஒரு திரைப்பட திரைக்கதை
போல, ஒவ்வொரு கதை மாந்தராய் அறிமுகம் செய்து வைத்துவிட்டு, ஒரு கருவை நோக்கி கதை
நகரும் பாணியில், தன் கருத்துக்களை, ஆக்சன் ப்ளாக்குகளை, சமூக அக்கறை சார்ந்த
செய்திகளை பொட்டில் அடித்தாற் போல், முன் வைக்கிறது தோழி.கிரேஸ் பிரதிபாவின்
கவிதைகள்.
காகம், கொஞ்சமாய்
தண்ணீர் இருந்த பானையில் கூழாங்கல் போட்டு நீர் குடித்த கதையை வைத்து, "தண்ணீரும் எங்கே எங்கே?" என்ற கவிதை பாடும்
கிரேஸ்,
"கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும்
எங்கே? எங்கே?", என ஒரு சந்ததியின் குரலை, அடுத்த உலகப்போர் மூண்டால் அது
தண்ணீருக்காய்தான் இருக்கும் என்ற விஞ்ஞானிகளின் குரலை ஒரு கவிஞனின் பார்வையில்
சொல்லிப்போகிறார் என்றே எனக்குப்பட்டது.
அதோடு நில்லாமல், ஆறுகளின் உடலாம் மணலை வெட்டி வெட்டி
ஆறுகளை கூறு போடும், மனிதர்களுக்கு எச்சரிக்கையாய், இருக்கிறது " ஆறுகளும் காணாமல் போனால்" எனும்
கவிதை.
"ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?
வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்கள் எங்ஙனம் தழைக்குமோ?", என நடுக்கத்தோடு பயம் கொள்கிறார். இதுதான் ஒரு கவிஞனின்
சிறப்பு. அவன் கண்கள் சமூகத்தின் சார்பாய் தான் இந்த உலகை பார்க்கும். அந்த
தீர்க்கமான பார்வை, தோழி.கிரேஸ் பிரதிபாவுக்கு நிறையவே வாய்த்திருக்கிறது.
"மலரென்றும் நிலவென்றும்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்
..............................................
எதனோடும் உருவகிக்க வேண்டாம்
ஏதேதோ உவமையிலும் புகழவேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடு - என்பாதியே ", என்று சுயம் பற்றி பேசும்போது எனக்கு இந்த கவிதை
தொகுப்பின் மேல் மிகப்பெரிய மரியாதை, இன்னும் சொல்லப்போனால் காதலே வருகிறது. ஒரு
பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது, முதலில் மரியாதையை. அதுவும் அவள் சுயத்தை இழக்க
அவளை அழுத்தாமல், அதனை ரசிக்கும் மதிக்கும் அந்த மரியாதையை அழகாய் அறிவாய்
செறிவாய் சொல்கிறது இந்த வரிகள். சபாஷ்!!!
அதோடு, இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும்
அச்சுறுத்தல்களை சொல்லி ,
"வலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி?
அஞ்சி ஒளியச் சொல்லவில்லை
வஞ்சம் இருப்பதறிந்து விழிப்பாய் இரு தோழி!", என்று அறிவுரை சொல்கிறது. நீ அஞ்சி ஒளிய வேண்டாம் என
சொல்லுமிடத்தில் நாம் எதற்கு ஒளிய வேண்டும், இந்த கயவர்கள் தான் ஒழிய வேண்டும்,
ஆனால் நமக்கு பாதுகாப்பும் முன்ஜாக்கிரதையும் முக்கியம், அதை உணர்ந்துகொள் என்று
தோழிக்கு தோழியாய், மகளுக்கு தாயாய் சிநேகம் பாராட்டுகிறது கிரேஸ் பிரதிபாவின்
வரிகள்.
இப்படி தொகுப்பு நிறைய, வசீகரிக்கும் வரிகள் நிறைய, நிறைய!!!
இன்னும் நிறைய
எழுத, வாழ்த்துக்கள் நிறைய, நிறைய!!!
நிறையப் பிரியங்களுடன்
லவ் குரு
ரேடியோ ஜாக்கி (பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர்)
ரேடியோ சிட்டி 91.1 FM
தி.நகர்,சென்னை-17.
--------------------------------------------------------------------------------------------------------------
அன்புடனும் மகிழ்வுடனும்,
கிரேஸ்
Mika nanru.
பதிலளிநீக்குEniyavaalththukal.
Vetha.Langathilakam.
பதிலளிநீக்குசிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
கருத்திட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான முகவுரை. முதல் கவிதை நூல் வெளியீட்டிற்கு பாராட்டுக்கள். மேலும் மேலும் பல நூல்கள் வெளிவர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு