Wednesday, September 30, 2015

அலையும் நுரையும் கடலல்ல   சுற்றுலா என்று மலைப்பிரதேசத்திற்கும் கடற்கரைக்கும் செல்கிறோம். பசுமையைப் பார்த்து பரவசமாகிறோம். அலைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறோம். ஆனால் இவ்விடங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசிப்பதில்லை. நம் தாத்தா பாட்டன் காலத்திலும் அதற்கு முன்னும் எப்படி இருந்திருக்கும்? வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்
இயற்கை எவ்வளவு மாறியிருக்கிறது, மாற்றப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.   கடல்சார்ந்த உயிரியல் வல்லுநரும் (marine biologist) கடல் விஞ்ஞானியுமான டாக்டர்.ஜெரெமி ஜாக்சன் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு வெகு அருகில் இருக்கும் பவழத்தீவுகளைப் பார்க்கச் சென்றார். அவற்றில் ஒன்றான கிறுஸ்துமஸ் தீவில் மக்கட்தொகை ஐந்தாயிரம். அங்கு சுறா மீன்களோ, பெரிய மீன்களோ எதுவும் இல்லை. பவளப் பாறைகளும் உயிரற்றுப் போயிருந்தன. அடுத்ததாகப் பான்னிங் தீவில் மக்கட்தொகை இரண்டாயிரம், அங்கு சில மீன்கள் இருந்தன. பால்மைரா தீவில் நூற்றுக்கும் குறைவாகவும் மக்கட்தொகை. பவளப்பாறைகள் கடலில் சேரும் உரக்கழிவுகளாலும் வெப்பத்தினாலும் வெளிறியிருந்தன, ஆனால் அவை மீண்டும் பசுமையாக வழியுண்டு. அடுத்ததாகச் சென்ற கிங்மேன் ரீப் (kingman reef), டாக்டர் ஜெரெமி ஜாக்சனை அதிர்ச்சியடைய வைத்தது. எத்தனை சுறா மீன்கள்! மற்ற மீன்களை உணவாகக் கொள்ளும் பல பெரிய மீன்கள்! மீன்கள் ஏராளமாய் நீந்திக் கொண்டிருக்கப் பவளப்பாறைகளும் வளமையுடன்! பெரிய மீன்களுக்கு உணவாகவென்றே சிறிய மீன்கள் விரைவாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன. சிறிய மீன்களால் பவளப்பாறையும் சுத்தம் செய்யப்பட்டு வளமையாக இருக்கிறது. இயற்கையின் உணவுச் சங்கிலி அருமையாக செயல்படும் இடம் கிங்மேன் ரீப். இது எப்படி சாத்தியம்! இது தான் இயற்கையா! அப்படியானால் மனிதர் வாழுமிடங்களில் எந்த அளவு இயற்கையைச் சுரண்டியிருக்கிறோம்!
   டாக்டர்.ஜாக்சன் அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் நாற்பது வருடங்களின் மீன்பிடி விளையாட்டுப் புகைப்படங்களைத் தேடி எடுத்துப் பார்த்தபோது விடை கண்டார். முன்னர் அதிகமிருந்த பெரிய மீன்கள் ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டேவந்து இப்பொழுது விரல்விட்டு எண்ணிவிடும் அளவில். மிதமிஞ்சி மீன்பிடித்து பெருங்கேடு செய்தோம் என்கிறார். சிறு மீன்கள் பவளப்பாறைகளின் மேலிருக்கும் நீர்ப்பாசியை உண்டு அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். மீன்கள் இல்லாமல் நீர்ப்பாசி அளவுக்கதிமாகப் பெருகிப் பவளப்பாறைகள் அழியக் காரணமாகின்றன. பவளப்பாறைகள் கடலின் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுவன. ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இவை பல கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம். மேலும் பவளப்பாறைகள் கரைகடக்கும் புயலின் சீற்றத்தைக் குறைக்கக் கூடிய இயற்கையான தடுப்புகள். இன்றையக் கடும்புயல்களும் இயற்கைச் சீற்றங்களும் முன்பைவிட எண்ணிக்கையிலும் வீரியத்திலும் அதிகமாவது மனித இனத்தின் பலன்கள் தான்.
   டாக்டர்.ஜாக்சன் பல வருடக் கடல் செல்வத்தின் ஆதாரப்பூர்வத் தகவல் பதிவுகளை ஆராய்ந்து கண்டது என்னவென்றால் பெரிய மீன்களைப் பிடித்து உட்கொண்டுவிட்டோம். சதுப்பு நிலங்களை தரைமட்டமாக்கி விட்டோம், இதன் பயனாகக் கடலில் நுண்ணுயிர்க் கிருமிகள் அதிகரித்துவிட்டது என்ற அச்சுறுத்தும் உண்மையை! கடற்கரைக்குக் காற்று வாங்கச்சென்று நுண்ணுயிர்க் கிருமிகளால் நோய் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுவிட்டது. ப்ளோரிடாவில் கடற்கரையோர ஊர்களை மக்கள் காலிசெய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனராம். இதைப் பற்றியெல்லாம் அறியாமல் நாம் கடற்கரை ஓய்விடங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். சூழல் மாசினாலும் கடற்கரை அபிவிருத்தியாலும் கடலில் சேறு அதிகமாகி வருகிறது என்றும் வருந்துகிறார் ஜாக்சன் அவர்கள். 
   மேலும் நுண்ணுயிர்க் கிருமிகளை உணவாக உட்கொள்ளும் ஜெல்லி பிஷ் என்ற இழுது மீன்கள் அதிகரிக்கின்றன. பல இடங்களில் மீனவர்களின் வலையில் நிறைவது இந்த ஜெல்லி மீன்கள் தான். சுற்றுச்சூழல் கேடு, இயற்கைச் சீற்றங்கள், வானிலை மாற்றம் என்று தொடரும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த நாம் செய்ய வேண்டியது மீன்பிடித் தொழிலை சீர்படுத்துவது. அதிகப்படியான மீன்பிடித்தலைத் தடுத்தும், மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் மீன்பிடிக்காமல் இருக்கச் செய்யவும் வேண்டும். செயற்கையான சூழலை உருவாக்கினால் சிறிதளவு நேர்மறை மாற்றம் இருக்கும் என்றாலும் முற்றிலும் பழைய நிலைக்குச் செல்வது கடினம் என்றும் கூறுகிறார் டாக்டர்,ஜாக்சன்.

   இயன்ற அளவு இயற்கையை மீட்பது நம் கடமையன்றோ! இவ்வெண்ணத்தில் மெக்சிகோவின் கார்டெக்ஸ் கடற்பகுதியில் புதுவிதமான மீன்பண்ணை முயற்சிக்கிறார்கள். கடலுக்கடியில் கோளவடிவில் பெரிய மீன்பண்ணை. கடல்நீர் உட்புகுந்து செல்லும் வகையில் இருப்பதால் கழிவுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மீன்களும் கடல் நீரோட்டத்திற்கு ஈடுகொடுத்து நீந்திக் கொண்டிருக்க வேண்டியிருப்பதால் ஆரோக்கியமானதாக வளர்கின்றன என்கின்றனர் இந்த கடல் பண்ணை விஞ்ஞானிகள். இவ்வகைப் பண்ணையில் மீன்களுக்கு உணவளிப்பது சவாலாக இருந்தாலும் எதிர்கால நம்பிக்கைத் திட்டம் என்றும் தீர்வுகள் கிடைக்கும் என்றும் கருதுகின்றனர். இதனால் கடலில் மீன்கள் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
டாக்டர்,ஜாக்சன் சொன்னதுபோல் கடற்கரை வளர்ச்சியாலும் மிதமிஞ்சிய மீன்பிடித்தலாலும் சூழல்மாசினாலும் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரின் துறைமுகத்தில் சேரும் சகதியும் அதிகரித்தது. துறைமுகத்தில் பணியாற்றும் கேட் எனும் பொறியாளர் தன் முயற்சியால் இயற்கையை மீட்க எடுத்த முயற்சியில் இன்று அப்பகுதியில் கிளிஞ்சல்களும் நண்டுகளும் மற்ற மீன்களும் பெருகி வருகின்றனவாம். கிளிஞ்சல்கள் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இருநூறு லிட்டர் நீரைச் சுத்திகரிக்குமாம். சேறு உருவாவதற்குக் காரணமான நைட்ரோஜனை கிளிஞ்சல் உள்ளெடுப்பதால் நீர் சுத்தமாகிறது. நீர் தெளிந்தால் அவ்விடம் சார்ந்த இன்னும் பல உயிர்கள் மீண்டுவரும் என்கிறார் கேட். மனிதரும் இயற்கையும் அறிவியலும் பொறியியலும் இணைந்து வளமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை வருகிறது. அதற்கான நம் பங்கை நாம் ஆற்றவேண்டும்.
இது ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் லயன் பிஷ் என்ற ஒரு மீனை அதிகமாகப் பிடிக்க ஊக்குவித்தலும் நடக்கிறது. இது என்னடா கொடுமை என்று யோசிக்கிறீர்களா? உண்மைதான்! இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் சொந்தமான லயன் பிஷ் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு வந்தால் என்ன செய்வது? ப்ளோரிடா அருகே 1985இல் முதன்முதலில் தென்பட்ட இம்மீன்களுக்கு இயற்கை எதிரிகள் அட்லாண்டிக்கில் இல்லையென்பதால் பலுகிப்பெருகிச் சூழல் மண்டலத்திற்கு ஆபத்தாய் மாறிவிட்டன. இதுவும் மனிதன் அறியாமையினால் செய்த பிழையின் வருத்தும் விளைவு.
பஹாமாஸ் பகுதியில் படர்ந்திருக்கும் பவளப்பாறைகள் எல்லாம் அழிவதை அறிந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கினர். பவளப்பாறைகளை இருப்பிடமாகக் கொண்டு அவற்றைச் சுத்தம் செய்யும் கிளிமூக்கு மீன்களையும் இன்னும் பல சிறுமீன்களையும் இந்த லயன் மீன்கள் உணவாகக் கொள்வதால் சிறுமீன்கள் குறைந்துப் பவளப்பாறையின் நிலைக் கேள்விக்குரியதாகிறது. கார்ல் சபீனா எனும் கடல்சார்ந்த உயிரியல் வல்லுனர் லயன் பிஷ் இனத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு ஒரு சில பவளப்பாறைகளில் இருந்து இவ்வகை மீனை முற்றிலும் ஒழித்துச் சோதித்துப் பார்த்தார். வியப்பூட்டும் வகையில் பவளப் பாறைகள் மீண்டும் வளம்பெறத் துவங்கின. பின்னர் துவங்கியது லயன் பிஷ் வேட்டை! 
   REEF எனும் முக்குளிப்பவர் நிறுவனம் மூலம் முக்குளிப்பவர் தன்னார்வ குழுவினர் இதற்காகவே செயல்படுகின்றனர். முக்குளித்து லயன் மீனைப் பிடித்து வருகின்றனர். இப்படிப் படிக்கும் மீன்களை என்ன செய்வதென்று யோசித்துப் பின் அதை உணவாக உட்கொள்ளத் துவங்கியோடல்லாமல் அதைப் பிரபலப்படுத்தவும் செய்கின்றனர். டெர்பி என்று அழைக்கப்படும் நடவடிக்கையில் முக்குளித்துச் சென்று ஈட்டி எறிந்துக் கொல்கின்றனர். அட்லாண்டிக் கடலில் லயன் பிஷ் வேட்டை தீவிரமாக நடக்கிறது. அதை உணவாக அறிமுகப்படுத்தி மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்கின்றனர். 
   இன்று உணவாக விளம்பரப்படுத்தப்படும் இவற்றின் தேவை நாளை அதிகரித்தால்? பவளப் பாறை..!! சூழல் மண்டலம்!! என்று என் மனதில் எழும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். இயற்கையை அதனதன் இடத்தில் விட்டுவைத்தால் நலம்! ஏனென்றால் அழகிற்காக இந்தோனேசியாவில் இருந்தும் பிலிப்பைன்சில் இருந்தும் மீன்தொட்டிகளில் வைப்பதற்கென்று இம்மீன்களைக் கொண்டு வந்தனராம். பின்னர் இடம் மாறும்பொழுது கொல்ல மனமில்லாமல் கடலில் விட்டுவிட்டுச் சென்றனராம்! அறியாமையில் அன்பும் ஆபத்தாய் மாறிவிட்டது! ஆய்ந்தறிந்து சரியான இடத்தில் ஒப்படைத்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
'அலையும் நுரையும் கடலல்ல' என்ற தலைப்பில் இக்கட்டுரை, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-2 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காகவே எழுதப்பட்டது”. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன். 
நன்றி
                                                                              -வி.கிரேஸ் பிரதிபா

1.Earth the new wild -oceans என்ற தலைப்பில் தொலைக்காட்சியில் பார்த்த 1.a ஆவணப்படத்தின் இணைப்பு. (இப்படம்2/102015வரை மட்டுமே இந்த இணைப்பில் பார்க்க முடியும். ஆனால் யூ டியூபில் சிறு பகுதி பார்க்கலாம். அதன் 1.b இணைப்பு இது. டிவிடியாகவும்  கிடைக்கிறது.)
2. Earth the new wild தொகுப்பைப் பற்றி டாக்டர்.சஞ்சயன்
2.a.இணைப்பு 2
3..லயன் பிஷ் வேட்டைஇணைப்பு 1
4. இணைப்பு 2 

5.விக்கியில் டாக்டர்.ஜெரெமி ஜாக்சன் பற்றி 
6.கார்ல் சபீனாவின் தளம் 
7.பவளப்பாறைகளின் அழிவு மற்றும் காக்கும் வழிகள் 

12 comments:

 1. புதிய செய்திகள்..

  >>> அறியாமையில் அன்பும் ஆபத்தாய் மாறி விட்டது!..<<<

  வெற்றிக்கு நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
 2. அருமை
  அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
 3. வணக்கம் சகோ! கடலைப்பற்றி அறியாத பல புதிய தகவல்கள்! அருமை
  வாழ்த்துக்கள் நன்றி!

  ReplyDelete
 4. அருமையான கட்டுரை.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. அறிய புதிய தகவல்கள் .... சூப்பர் கிரேஸ்

  ReplyDelete
 6. ரசித்துப் படித்தேன் பல விசயங்கள் அறிந்துகொண்டேன்.....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. ரசித்துக் கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...