கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை


தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தோன்றிய காலத்தில் (1855) இருந்த தமிழின் நிலைக்கும் அவர்கள் மறைந்த காலத்தில் (1942) தமிழ் உயர்ந்துநின்ற நிலைக்கும் எவ்வளவோ வேற்றுமை உண்டு என்று கி.வா.ஜகநாதன் அவர்கள் திரு.உ.வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாறான ‘என் சரித்திரம்’ நூலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். தமிழ்த் தாத்தா தோன்றிய காலத்தில் புலவர்களுக்கும் பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த சங்க இலக்கியங்கள் பின்னர் தமிழ்த்தாத்தா மறைந்ததற்குப் பின்னான காலத்தில் பள்ளிக்கூடங்களிலும் கற்றுக்கொடுக்கப் படுகின்றன என்று சொல்லியிருப்பார்.
சென்ற நூற்றாண்டில் இருந்த நிலையைவிட இன்றையத் தொழில்நுட்ப நூற்றாண்டில் கணினியுகத்தில் நேர்மறை வேறுபாடு மேலும் அதிகம் என்று நினைக்கிறேன். தமிழ்த் தாத்தா அவர்களால் வெளிக்கொணரப்பட்ட சங்க இலக்கியங்கள் பற்றி பல்வேறு வெளிநாட்டினர் படித்திருந்தாலும் அங்கும் இங்கும் சிதறியிருந்த நம் செல்வத்தை ஒன்றுசேர்த்து எளிமையாகக் கிடைக்கச் செய்வதில் இணையம் பெரும்பங்காற்றுகிறது. தமிழ் என்று தேடினால் இணையத்தில் கிடைக்கும் நூல்களும் வரலாறும் எத்தனை எத்தனை! தமிழரின் இலக்கியச் செல்வத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துக் செல்லும் இணையம் வெற்றிபெறக் கணினி மூலக்காரணமல்லவா?

தமிழ்ப் பாடங்கள், காணொளிகள், பாப்பாப் பாடல்கள் என்று மிகுந்திருக்கும் இணையத் தளங்கள் வெளிநாடுகளில் தம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் உதவுகின்றன. அன்று சிலேட்டுப் பலகையில் குச்சியால் அ, ஆ எழுதப் பழகியதுபோய் இன்று ஐபேடிலும் டேப்லட்டிலும் வரும் மென்பொருள் பயன்பாடுகள் மூலம் பிஞ்சு விரல்களால் அ, ஆ எழுதப் பழகுவது வீட்டுக்கு வீடு வந்தாயிற்றே. பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும் எளிமையாய் இல்லாததால் ஈர்க்காமல் பயமுறுத்திய இலக்கியமும் இலக்கணமும் இன்று இணையத்தில் எளிமையாகச் சொல்லப்பட்டு பலரையும் ஈர்க்கின்றன என்பதை நேர்மறை வளர்ச்சியாக எண்ணுகிறேன். 

தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிப் பகிரவும் தமிழில் விசைப்பலகை, மென்பொருட்கள், சொல்லகராதி உருவாக்குதல் என்று தமிழைத் தகவல் தொழில் நுட்பத்தில் வளர்ந்த மொழியாக ஆக்குவதில் இணைந்திருக்கும் அறிஞர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து நடத்தும் கணித்தமிழ்ச் சங்கம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் முன்னோரின் பாத சுவடுகளில் தமிழைக் கட்டாயம் மேலும் உயர்த்தும். 

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் மின்னஞ்சல் அனுப்பலாம் என்ற அளவிற்கு முன்னேறியிருந்த நாம் இன்று வெளிவரும் புதிது புதிதான ஊடகங்களிலும் உடனடியாகத் தடம் பதித்துவிடுகிறோமே. யூ டியூப் காணொளிகள், விக்கிபீடியா, குறும்படங்கள், திரைப்படங்கள், வலைத்தளங்கள் என்று இணையம் முழுதும் தமிழ் நிறைந்திருப்பது கணினியும் இணையமும் கொடுத்த வளர்ச்சி! அச்சு உலகில் எத்தனை பேரால் தங்கள் எழுத்துத் திறமையை வெளிக்கொணர முடிந்தது? ஆனால் வலைத்தளம் வயதுவரம்பின்றி பலரின் எழுத்தாக்கத்தை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறதே. ஊக்கமும் பாராட்டும் கூர்படுத்திக் கொள்வதற்கான வெளியும் அனைவருக்கும் எளிதாய் அமைகிறதே! இன்று இந்த அளவிற்கு வலைப்பதிவர்கள் ஒன்று சேர்வதோடல்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் போட்டிகளும் கருத்துகளும் நூல் வெளியீடுகளும் குறும்பட வெளியீடுகளும் என்று களைகட்டுவது கணினியில் தமிழ் வளர்வதற்கான ஒரு எடுத்துக்காட்டு. 

மின்தமிழ் இலக்கியப் போட்டிகளை சேர்ந்து நடத்தும் தமிழ் இணையக் கல்விக்கழகம் கணினித் தமிழில் ஒரு மைல்கல். விசைப்பலகை தரப்படுத்துதல், தரவுத்தளங்களை உருவாக்குதல், எழுத்துத் தமிழிற்கு மட்டுமல்லாமல் பேச்சுத் தமிழிற்கும் தரவுத்தளங்கள் உருவாக்குதல், தானியங்கி மொழிபெயர்ப்பு மற்றும் மனிதர்-கணினி உரையாடல் ஆகியவற்றிற்கான பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குதல் என்று கணித்தமிழ் வளர்ச்சிக்கான பல செயல்திட்டங்களை தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியிருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது. 

மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆகவேண்டும் என்று இலாடம் கட்டப்பட்டு ஓடிய பலருக்குத் தங்கள் தமிழ்க் காதலை பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் உணர முடியவில்லை. அவர்களில் பலரும் இணையத்தில் தேடி இன்று நம் தமிழ்ச் செல்வங்களைப் படிக்கின்றனர் என்பதே உண்மை.

சரி, தமிழைத் தேடித்தேடிப் படிப்பது வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழரிடையே அதிகமிருக்கிறது. தமிழ் நாட்டை விட்டுச்சென்றவுடன் தமிழ்ப்பற்று எங்கிருந்து கொட்டுகிறது என்று ஆச்சரியப்படுவோமேயானால் அதற்கு பரந்த அனுபவ அறிவும் காரணம் என்று சொல்லலாம். உள்ளூரில் இருக்கும்பொழுது மதிப்பெண் மட்டுமே நினைவில் இருந்து அதற்குத் தகுந்தவாறு ஓடவைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பிற மொழியினர் தங்கள் தாய்மொழியைப் போற்றுதல் பார்த்து நமக்கும் சற்று உரைத்துவிடும். உடனே முன்பு அதைப் பற்றிச் சிந்திக்காதவர்களும் தமிழ் வகுப்புகள் பற்றிச் சிந்திக்கத் துவங்கிவிடுவர். உள்ளூரில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் முதலில் உதவுவது இணையத் தமிழ். இன்றையத் தலைமுறையினரைக் காணொளிகள் அதிகம் ஈர்க்கின்றன என்பதில் ஐயமில்லை.
 
நம்மூரில் மதிப்பெண் அதிகமெடுக்க வேண்டும் என்ற காரணத்தால் தமிழை விலக்கி மற்ற மொழிகள் கற்கிறோம். இந்நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் பாடத்தில் இத்தனை மதிப்பெண் இருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும். இதற்கு எதிர்ப்புகள் இருக்கலாம், ஆனால் வேறு வழியில்லை. வெளிநாட்டுக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு ஸ்பானிஷ் வேண்டும், மேண்டரின் வேண்டும் என்று தேவை இருந்தால் அதைப்படிக்க முனையும் நம்மால் தாய்மொழியைப் படிக்க முடியாவிட்டால், அது கடினம் என்று சொன்னால் உலகினர் சிரிப்பார்கள். வேண்டுமானால் கற்பதை எளிமைப் படுத்த அரசு ஆவணசெய்யலாம். இளங்கலைப் பட்டப் படிப்புகளில் தமிழ் கட்டாயம் இருக்கவேண்டும். மொழியைக் கற்கும் மாணவர்களால் தகவல்களை அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ளமுடியும் என்பதே உண்மை. ஆக, மொழிக்கல்வி என்பதே முழுமையான கல்வி! இன்றும் ஜப்பானில் ஜப்பானிய மொழியில்தான் கல்வி கற்றுக்கொடுக்கின்றனர். அவர்களால் செய்ய முடியும்போது நம்மால் அதில் பாதியைச் செய்யமுடியாதா? அவர்களைப் போல் ஆங்கிலத்தை முற்றும் ஒதுக்கவும் வேண்டாம், தூக்கிவைத்துக் கொண்டு ஆடவும் வேண்டாம் என்பது என் கருத்து. கணினியும் இணையமும் துணையிருக்கையில் உலகளவில் மொழிக்கல்வி எப்படி இருக்கிறது என்று ஆராய்வது நமக்குக் கடினமில்லை. பின்னர் நம் பாடத்திட்டங்களையும் மெருகேற்றலாம். இணையவழிப் பாடங்களையும் பட்டங்களையும் அதிகம் கொடுத்தால் பலர் பயனுறுவர். 

தரமான கற்றல் விளையாட்டு மென்பொருட்களையும் உருவாக்கினால் குழந்தைகள் விருப்பமுடன் கற்பர். அறிவியல், வரலாறு சம்பந்தமான தரமான காணொளிகளையும் ஒருங்கிணைத்து இணையத்தளத்தில் கொடுக்கலாம். 

மருத்துவம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்றவாறு புதுச்சொற்களை அறிமுகப்படுத்தி உயர்நிலைப் பள்ளியிலேயேக் கற்றுக்கொடுத்தால் பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர் கல்லூரிக்கும் வாழ்விற்கும் தயாராய் இருப்பார்கள். ஆனால் இதற்கும் மதிப்பெண்ணைக் காரணம் காட்டித் தடையேதும் சொல்லாமல் இருக்கவேண்டும். மதிப்பெண் சாராது மொழிவளர்ச்சிக் கல்வியாக வருடத்திற்கு சில மணிநேரங்கள் ஒதுக்கினால்கூட போதுமானது.

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளிகளில் வேற்றுமொழிகள் கண்டிப்பாகக் கற்க வேண்டும். கல்லூரிகளுக்கிடையேயும் பல்கலைக் கழகங்களுக்கிடையேயும் வரைமுறைகள் மாறுபட்டாலும் பெரும்பான்மையாக, சேர்க்கைக்கு வேற்றுமொழி கற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்பானிஷ், சைனீஸ், இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் வரிசையில் சில இடங்களில் நேபாளி, பஞ்சாபி மொழிகளும் உண்டு. இங்கு அட்லாண்டாவில் தமிழை அந்த வரிசையில் சேர்க்க ஒரு குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இது அமெரிக்கா முழுவதும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பரவலாம். அப்படி நடக்கும்பொழுது இன்னும் பலர் தமிழ் படிக்க முன்வருவார்கள். அதற்குத் தரமான எளிமையான பாடத் திட்டங்களைப் பல கிளைகளின் கீழ் பல்கலைக் கழகங்கள்  இணையத்தில் கொடுக்க வேண்டும்.

விரல்நுனியில் கணினி மட்டுமல்ல, இணையதளம் தாண்டி மேகப்  பயன்பாட்டியல் வரை இருக்க எங்கும் எதிலும் தமிழ் என்று நாம் நினைத்துச் செயல்படுவது தமிழ்த் தாய்க்கு நாம் ஆற்றவேண்டிய கடமை!


------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்குமுன் இக்கட்டுரை எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்.

நன்றி!
வி.கிரேஸ் பிரதிபா 

தகவல் உசாத்துணை: http://www.tamilvu.org

56 கருத்துகள்:

 1. வரவேற்கத் தக்க - இனிய கருத்துகள்..

  வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு

 2. தலைப்புகேற்ற அருமையான கட்டுரை ...கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.அப்பதான் எனக்கும் கொஞ்சம் ஏதாவது பங்கு கிடைக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ
   ஹாஹா இன்னுமா உலகம் என்னை நம்புது :)) (பங்கு கொடுப்பதில்)

   நீக்கு
 3. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் வசதிகளை நம்மால் உணர முடிகிறது். அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான தொகுப்பு ,
  கல்வியில் இணையும் இணையும் நாள்,,,,,,,,,
  எதிர்காலம் நோக்கிய நல்ல கட்டுரை, வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான அலசல் சகோ போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 6. சிறப்பாக எழுதி உள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. விரல்நுனியில் கணினி மட்டுமல்ல, இணையதளம் தாண்டி மேகப் பயன்பாட்டியல் வரை இருக்க எங்கும் எதிலும் தமிழ் என்று நாம் நினைத்துச் செயல்படுவது தமிழ்த் தாய்க்கு நாம் ஆற்றவேண்டிய கடமை!

  அருமை அருமை சகோதரியாரே
  வெற்றி பெற வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடித்த வரியைக் கோடிட்டுக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி அண்ணா

   நீக்கு
 8. அருமையான கருத்துகளின் தொகுப்பு. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
 9. கட்டுரை அருமை...
  வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. அருமையான கருத்துக்கள் தேனு வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 11. "தரமான கற்றல் விளையாட்டு மென்பொருட்களையும் உருவாக்கினால் குழந்தைகள் விருப்பமுடன் கற்பர். அறிவியல், வரலாறு சம்பந்தமான தரமான காணொளிகளையும் ஒருங்கிணைத்து இணையத்தளத்தில் கொடுக்கலாம்." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான கட்டுரை கிரேஸ்.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான ஆக்கம்! வாழ்த்துகள் நன்றி!

  பதிலளிநீக்கு
 14. கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம் வென்றமைக்கு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனடியாக வந்து தகவல் சொல்லி வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி ஐயா

   நீக்கு
 15. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
 16. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..மா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனமார்ந்த நன்றி கீதா ..புதுகை விழாக்குழுவினர்க்கு சிறப்பு நன்றி சொல்லவேண்டும்..உங்கள் அனைவரின் உழைப்புக் கொடுத்த ஊக்கம் தான் காரணம்

   நீக்கு
 17. போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. கிரேஸ் டியர்!! வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டியர்..மேலே கீதாவுக்கு சொன்னதுதான்..நீங்கள் அனைவரும்தான் காரணம்

   நீக்கு
 19. போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. போட்டியில் பெற்ற 'வெற்றிக்கு எங்கள்' வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 21. மின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகுகள் சகோ!

  பதிலளிநீக்கு
 23. வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்யா.

  பதிலளிநீக்கு
 24. வெற்றிப்பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கு முதல் நன்றி நண்பரே! வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி

   நீக்கு
 25. அன்புள்ள சகோதரி,

  போட்டியில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 26. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 27. வாழ்த்துக்கள் கிரேஸ் :). அருமையான கட்டுரை

  பதிலளிநீக்கு
 28. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள் தேனு ...!

  பதிலளிநீக்கு
 29. ஆஹா..அருமை, வாழ்த்துக்கள் கிரேஸ்..

  பதிலளிநீக்கு
 30. பதிவர் திருவிழாவில் என் அருகில் அமர்ந்திருந்த நண்பர் மேகக் கணிய தொழில்நுட்பம்னு சொல்றாங்களே, அப்படினா வானத்தில இருக்குமான்னு வெள்ளந்தியாய் கேட்டார். அவருக்கு புரியும் வகையில் என்னால் முடிந்த விளக்கத்தை சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார். அநேகமாக இந்த கட்டுரைக்கு பரிசு அறிவிக்கும்போது கேட்டிருப்பார் என நினைக்கிறேன். தேடல்பொறி மேகக் கணியத்தில்தானே இயங்குகிறது. தமிழுக்கு மொபைல் செயலிகள் எழுதும்போது மேகக் கணிய தொழில்நுட்பம் பின்புலமாக செயல்படும். கூகுள் மேப்ஸ் போன்ற இணைய வரைபடங்களிலும் தமிழ் வரும் நாளுக்காக காத்திருக்கிறோம். அந்த காத்திருப்புகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது உங்கள் கட்டுரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ராஜ்குமார். உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன், மேகக்கணியம் பற்றி விளக்கி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
   நீங்கள் சொல்வது போல் மேகக்கணியம் முக்கியப் பங்காற்றப்போகிறது.
   மனமார்ந்த நன்றி

   நீக்கு
 31. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற விருப்பம் தமிழ்நாட்டில் நிறைவேறும் வாய்ப்பு குறைவே. அடிப்படை மொழி இலக்கணப்பிழைகள் இன்றி ஆசிரியர்களே எழுதுவதில்லை - ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ எழுத்துகள் இல்லாமல் குழந்தைகளுக்குப் பெற்றோர் பெயர் சூட்டுதல் அருகி வருகிறது - பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக அமைவதான விருப்பம், ஆர்வம், உணர்வு குறைந்து கொண்டே வருகின்றன.ெ யர் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்று சோதிடர்கள் தீர்மானிக்கிறார்கள். நல்ல தமிழ்ப் பெயர் க வில் தொடங்குமாறு கூறும்படிப் பல முறை தொடர்பு கொண்டவர்மனைவியின் விருப்பப்படி இட்ட பெயர் ஷிவானி - நாம் தமிழில் பெயர் வைத்தாலும் அவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள் - எனக்கு Google account உண்டு. ஆனால் அதில் பதிவிடக் கற்கவில்லை - என் Facebook அடையாளம் Ilango Krishnan. தமிழில் அடைப்புக் குறிக்குள் சேலம். இளங்கோ. email ID உண்டு - ilango.ki@ gmail.com.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கனவின் இசைக்குறிப்பு - மைதிலி கஸ்தூரிரங்கன்

பிப்ரவரி 2, 2024. 'கனவின் இசைக்குறிப்பு' கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திர...