Monday, November 26, 2012

பாக்கெட் மணி

இன்றைய இளைஞர்கள் பாக்கெட் மணி மிகவும் அவசியம் என்கின்றனர். சரி, சில செலவுகளுக்கு கையில் பணம் இருப்பது நல்லதுதான். ஆனால் இளைஞர்கள் செய்யும் செலவுகள் அவசியமானதா? சேர்ந்து உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஊரைச் சுற்றுவதற்கும் நண்பர்களுக்கு அன்பளிப்பு வாங்குவதற்கும் பணம் வேண்டுமாம். பணம் வேண்டும் என்று சொல்வதில் கூட நான் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் அவர்கள் கேட்கும் தோரணையிலும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்பதிலும்  ஒரு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
அளவுக்கு அதிகமான பணம், அதுவும் அனாவசியச் செலவுகளுக்கு, இப்படி பணம் கேட்டு அதை நியாயப்படுத்துகிறார்கள். இளைஞர்களின் இந்த சிந்தனை இல்லாமை மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவராவது இல்லார்க்கு உதவி செய்ய எனக்கு பணம் வேண்டும், எனக்கு நிறைய பணம் இருக்கிறது அதனால் ஏழைகளுக்கு உதவுவேன் என்று ஒருவரும் சொல்லவில்லை. பெற்றோர்களின் தவறும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். பணத்தின் அருமையை, பணம் இருப்பதன் நன்மையை, வறியவரும் இருப்பதை, வறியவர்க்கு உதவுவதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றோமா? பணம் இருப்பதனால் அதிகச் செல்லம் கொடுத்து அதையும் இதையும் வாங்கிக்கொடுத்து ஒரு மாய உலகிலேயே குழந்தைகளை வளர்க்கின்றோமா? அளவோடு செலவு செய்து, தேவையானவற்றை வாங்கி, சமுதாயத்தில் பல நிலைகளில் உள்ளவரைப் பற்றிய ஒரு சிந்தனை உள்ளவராக குழந்தைகளை வளர்க்க வேண்டாமா?

பகுத்து உண்டு வாழ்வதை திருவள்ளுவர் இப்படிச் சொல்லிச்சென்றார்...
"பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல"
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருந்தாலும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. பிறருக்கு கொடுத்து வாழ்வதை,

"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் "
குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது (பயன்படுத்துவது) கையேந்தி இரத்தலைக் காட்டிலும் கொடுமையானது.

ஆனால் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் நமக்கு என்ன கவலை? வறியவரைப் பற்றி எதற்கு சிந்திக்க வேண்டும்? பணம் இருக்கிறது, உண்டு களித்து மகிழ்வேன் என்றுதானே நம் சிந்தனை இருக்கிறது!!!!

குழந்தைகள் கற்றுக்கொடுத்தால் அருமையாகக் கற்றுக் கொள்வார்கள். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இளைஞர்கள். அவர்களைச் சரியான வழி நடத்துவதில் பெற்றோரின் பங்கு தலையானது.
நல்லதொரு சமுதாயம் செய்வோம்!

8 comments:

 1. 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!!' என்ற வாலியின் வரிகள் நினைவுக்கு வருகிறது. காலத்திற்கு ஏற்ற பதிவு. நீங்கள் திருக்குறளை கோடிட்ட விதம் நன்றாக இருந்தது :-)

  ReplyDelete
 2. வளர்க்கும் விதம் அப்படி... முதலில் மாற வேண்டியது பெற்றோர்கள்... இன்று எத்தனை பேர்கள் துன்பப்படுகிறார்கள் என்று தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... (உறவினர்கள்)

  திருக்குறளுடன் ஒப்பிட்டு நல்லதொரு பகிர்வு... மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உண்மை!
   நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

   Delete
 3. நேற்றுதான் நிகழ்ச்சியைப் பார்த்தேன். பணம் என்ன மரத்திலா காய்க்குதுன்னு சொல்லத் தோன்றியது.

  அதிலும் மாசம் கைச்செலவுக்கு அம்பாதாயிரம் வேணுமுன்னு கேட்டதைப் பார்த்ததும் அரண்டு போயிட்டேன்.

  லஞ்சம் ஊழல் வளரத்தான் போகுது. செலவைச் சமாளிக்க வேற வழி?

  என்னமோ போங்க...........:(

  குறளை யார் இப்போ பொருட்படுத்தறாங்க? தேர்வுக்கு எழுதுவதோடு சரி. (அதன்) பொருளையாவது கவனிப்பாங்களா?

  உங்க ஒப்பீடு அருமை!

  ReplyDelete
  Replies
  1. உண்மை துளசி, ரொம்ப வருத்தமா இருக்கு...எங்க போயிட்டு இருக்கோம் நாம?

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete
 4. பாக்கெட் மணி வாங்குவதும் பிச்சை போலதான் என்று நினைத்து பெற்றோர்களிடம் அவசியமற்ற காரணங்களுக்கு பணம் கேட்பதை நிறுத்த வேண்டும் இளைஞர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இணையத் தமிழன்!

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...