'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வு

 


பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் 

நூல் திறனாய்வு  - வி. கிரேஸ் பிரதிபா 

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி கடந்த ஆண்டு (2020) நடத்தப்பட்ட 'பெண் ஏன் அடிமையானாள்?' நூல் திறனாய்வுப்போட்டியில் நான்காம் பரிசு பெற்ற என் கட்டுரை.

தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற இந்த நூல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.  1992இல் முதற்பதிப்பு வெளிவந்து, ஜனவரி 2004 இல் 22ஆம் பதிப்பு கண்டது.

பெண்ணடிமை ஒழிக்க வந்த பெரியார் அவர்கள் எழுதியச் சீர்சிந்தனைக் கட்டுரைகளின் தொகுப்பே  இந்நூல். கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை' அழிய வேண்டும் ஆகிய தலைப்புகளில் பத்துக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் ஆண்களுக்கு குற்றேவல் செய்யும் நிபந்தனை அற்ற அடிமைகளாக நினைக்கும் போக்கையும், பெண்கள் பயனற்றப் பதுமைகளாக இருக்கும் நிலையையும் மாற்றுவதற்குப்  பாடுபட்ட பெரியார் அவர்கள் எழுதியக் கட்டுரைகளின் தொகுப்பு. பகுத்தறிவுச் சுடர்காட்டிக் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து, பெண்கள் வாழ்வில் ஒரு தலைகீழ் புரட்சியை உருவாக்கச் சிறந்த நூலாகும் என்று சுயமரியாதைப் பிரச்சாரக் குழுவினர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சாலப் பொருத்தம்.

முகவுரை வழங்கியிருக்கும் பெரியார் அவர்கள் அதன் தேவையை அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது இந்நூலில் சொல்லப்படும் புரட்சிகரமான கருத்துகளைச்  சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளமுடியாதபடி சமூகம் இருப்பதாலும், பழக்கவழக்கம், மதக்கொள்கை என்று சொல்லி அடிமைத்தனத்தைத்  தொடரச்செய்வர் என்பதாலும் எதை எதை எதற்காகச் சொல்கிறேன் என்று சொல்லி மெய்ப்பிக்க வேண்டி இருப்பதாகச் சொல்கிறார். இங்கு பெரியார் மேலும் உயர்ந்து நிற்கிறார். ஏதோ சொல்லிவிட்டுப் போவோம் என்றில்லாமல், அதற்கான எதிர்ப்புகளையும் சிந்தித்து, எதிர்ப்பிற்கான காரண காரியங்களையும் சிந்தித்து, அவற்றை எதிர்கொள்வதற்கான தெளிவான நியாயங்களையும் எடுத்துச்சொல்லிச்  சமூக மாற்றத்திற்கான தன் பங்களிப்பை முழுமையாகச் செய்கிறார் பெரியார். இந்தச் சிந்தனை, இந்தப் பகுத்தறிவு இந்தக் கிழவனை மென்மேலும் வியக்க வைக்கிறது. இன்றும் வாழும் துடிப்பைக் கிழவன் என்று சொல்வது முரணாகவும் தோன்றுகிறது. ஒவ்வொரு கட்டுரை எழுதியதன் நோக்கத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது சிறப்பு.

கற்பு என்ற சொல்லை ஆராய்ந்து அதன் பொருளையும் ஆராய்ந்து சுத்தம் என்ற பொருளே பொருந்துவதாகவும் அதனோடு தொடர்புடைய ‘சேஸ்டிடி’ என்ற  ஆங்கிலச் சொல்லோடு இணைத்துப் பார்த்து, கற்பு என்னும் சொல் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது என்று விளக்குகிறார். ஆரிய மொழியில் தான் கற்பை பதிவிரதை, ஆணுக்கு அடிமை என்பது போல் மாற்றிவிட்டதாகச் சொல்லும் பெரியார் காமம், அன்பு என்று வரும்பொழுது நாயகன்-நாயகி என்று இருபாலினரையும் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்தும் ஆரிய மொழி, கற்பு என்று வரும்பொழுது பெண்ணிற்கு மட்டும் வைத்துப்  பெண்களை அடிமைப் படுத்தியதும் ஆண்கள் மூர்க்கர்களாக வழிவிட்டதும் ஆணாதிக்கச் சிந்தனை அன்றி வேறென்ன என்று கேட்கும் பெரியாரின் கேள்விக்கு சரியான, உண்மையான பதில் ‘ஆம்' என்பதாகத்தானே இருக்க முடியும்? 

மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் பெண்களும் ஆணுக்குக் கட்டுப்பட்டு அடிமையாய் இருப்பதைத் தாங்களாகவே ஏற்றுக்கொண்ட விசயமாக மாறிப்போனதை பெரியார் குறிப்பிடுகிறார். உண்மைதானே? இன்றும் கூட கணவனுக்குப் பணிவிடையும், வீட்டின் அத்தனை வேலைகளையும் செய்யாவிட்டால் ஒரு பெண்ணே வருந்தித் தான் தவறு செய்கிறோம் என்பதாகக் கலங்குவதும் தொடர்கிறதே? சமையலும், வீடு மற்றும் குடும்பத்தின் பராமரிப்பும் பெண்ணின் பொறுப்பு என்றல்லவா பதியப்பட்டிருக்கிறது? கற்பு, அதாவது மாசற்றத் தன்மையை வேண்டாம் என்று பெரியார் சொல்லவில்லை. கட்டுப்பாடுகள் இல்லாமல் இயற்கையாகக்  கற்பு அமையவேண்டுமே ஒழியச் சட்டத்தாலும் நிர்ப்பந்தத்தினாலும் உண்மையான கற்பு நெறியைக் காணமுடியாதென்று சொல்கிறார். உண்மையில்லாத நிர்ப்பந்திக்கப்பட்ட கற்பு மனிதச் சமூகத்தில் வெறுக்கத்தக்க ஒன்று என்று பெரியார் சொல்வதை மறுக்கமுடியுமா? 

விபச்சாரம் என்பதும் பெண்களின் குற்றமாகப் பார்க்கப்படுவதைச் சாடும் பெரியார், அதைச் செய்யும் ஆணிற்கு ஏன் குறிப்பிட்ட அடைமொழியோ பாதகமோ இல்லை என்று கேட்கிறார். அட, பெரியார் பெண்களின் குரலாக, அதுவும் பெண்களின் ஆழ்மனதின் குரலாக அல்லவர இருந்திருக்கிறார், இன்னும் இருக்கிறார்!

நான் ஒரு கத்தோலிக்க கிறித்தவர். பெரியார் சொல்லும் பல கருத்துகள் திருஅவையின் கற்பிதங்களோடு ஒத்து இருப்பது என்னை வியப்பிலும் மகிழ்விலும் ஆழ்த்தியது. குறிப்பாகத் திருமணம் பற்றியக் கருத்துகள். ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி எவ்வித வற்புறுத்தலும் இன்றி ஏற்றுக்கொள்வதுதான் திருமணம் என்றே திருஅவையால் அங்கீகரிக்கப்படுகிறது. சொல்லப்போனால், சுய சம்மதமின்றி செய்துவைக்கப்படும் திருமணம்,  திருமணமே இல்லை, அதற்கு எதற்கு விவாகரத்து? பெரியார் அவர்கள் சொல்வதுபோலச் சமூகத்தில் திருமணத்தை சம்பந்தப்பட்டவர் முடிவு செய்யாமல் மற்றவர் முடிவு செய்வதே அனைத்துப் பிரச்சனைகளின் மூலம்! 

சண்டை சச்சரவுகளால் விவாகரத்து செய்துகொண்டு போய்விடலாம் என்று சொல்வதும்கூட ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. விட்டுக்கொடுத்தல், அனுசரித்தல் தேவை அல்லவா? ஆனால் அது பெண்ணின் தலையில் மட்டும் ஏற்றிவைக்கப்படக் கூடாது, இருபாலாருக்கும் வேண்டும். ஒருவர் மட்டும் சமூகக் கற்பிதம் கருதி கொடுமை அனுபவித்துக் கொண்டிருப்பது ஆகாது. இதைத்தான் பெரியார் சொல்கிறார். வீரம், கோபம், ஆளுந்திறம், வன்மை, அன்பு, சாந்தம், பேணுந்திறம் முதலிய குணங்கள் ஆண் பெண் இருவருக்கும் இருக்க வேண்டியவை!

எவ்விதக் கட்டுப்பாடும் கற்பிதங்களும் பெண்ணுக்கு இருக்குமேயானால் அது ஆணுக்கும் சரிசமமாகப் பொருந்த வேண்டும். இந்நூலின் அனைத்துக் கட்டுரைகளின் சாரம் இதுவே! சொத்துரிமை, மறுமணம் என்று வாழ்வின் அனைத்து அங்கங்களிலும் சமநிலை வேண்டும். பிள்ளையைச் சுமந்து பெறுவதைத் தவிர வேறெந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்று பெரியார் சொல்வது தானே இயற்கையின் நியதியும்? ஆகா! இதனாலன்றோ திரு.ஈ.வே.ரா. அவர்கள் பெரியாராக உயர்ந்து நிற்கிறார்! செயர்கரிய செய்வார் பெரியார் என்று திருவள்ளுவரின் சொல்லுக்கேற்பச்  சிந்தனையிலும் செயலிலும் பெரியார் பெரியார்தான்! 

வள்ளுவரின் கணவனைத் தொழுது எழும் மனைவியும் அவ்வையாரின் ‘தையல் சொல் கேளீர்’ என்ற மொழியும் ஒப்பவே ஒப்பாது என்று சொல்கிறார் பெரியார். அன்றையச் சமூகச் சூழலையோ அல்லது ஆரிய ஆதிக்கத்தினாலோ அப்படிச் சொல்லியிருக்கவேண்டும் என்கிறார். நீதிநெறி என்றாலும் ஆராய்ந்து பகுத்துணர்ந்துகொள் எனும் பெரியாரின் அறிவுரை நாம் அனைவரும் சிரமேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டியதாகும். வாழ்க பெரியார்!

( A4அளவில் இரண்டு பக்கங்கள் என்ற வரம்புக்குள் எழுதிய கட்டுரை.)

6 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...