ஐங்குறுநூறு 201 - என்ன மரமது சொல்வாய்


"என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!"
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், What tree is it my friend.


ஐங்குறுநூறு 201
தலைவி தோழியிடம் சொன்னது,  செவிலித்தாய் கேட்கும்படி
அன்னாய் வாழி வேண்டு அன்னை என்னை
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம் கொல் அவர் சாரல் அவ்வே.
பாடியவர் கபிலர், 'அன்னாய்ப் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப்  பாடல்களுள் ஒன்று. தலைவி தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ள பாடல். தலைவியும் தோழியும் ஒருவரையொருவர் அன்புடன் 'அம்மா' என்ற பொருளில் 'அன்னாய்' என்று அழைப்பது வழக்கில் இருந்தது. "அன்னை என்னை என்றலும் உளவே", என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார். வாருங்கள் பாடலைப் படிப்போம்.
 
எளிய உரை: அன்னையே வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக. என் தலைவனின் மலைச்சாரலில் பொன்னைப் போன்றதும் மணிகளைப் போன்றதுமான மலர்கள் மலரும் மரத்தின் தழைகளைத் தானும் அணிந்திருப்பான்; எனக்கும் ஆடையாகும்படி அம்மரத்தின் தழைகளைக் கொடுத்தான். அந்த மரம் என்ன மரமென்று நீ அறிவாயா?
விளக்கம்: தலைவி தலைவன் பால் காதல்கொண்டு அவனுடன் வாழ்வதற்கு உறுதி பூண்டிருந்தாள். இந்நிலையில் தலைவியின் பெற்றோர் அவளுக்கு மணம் செய்விக்க எண்ணிச் சுற்றத்தாரிடம் பேசுவதையறிந்து கலங்குகிறாள். தலைவனைத் திருமணம் செய்ய எடுத்திருந்த தன் முடிவுக்குப் பிரச்சனை வருமோ என்று அஞ்சுகிறாள். அதனால் தன் காதலைப் பெற்றோரிடம் தெரிவிக்க எண்ணுகிறாள். நேராகச் சொல்வதற்கு நாணம் இடம் கொடாததால், செவிலித்தாய்அருகிருக்கும் பொழுது, அவள் காதில் விழும்படியாகத் தன் தோழியிடம் கூறுகிறாள். அப்படி அவள் தன் தோழியிடம் சொன்னதே இந்தப் பாடல். தழையையும் மலரையும் வியப்பவள் போன்று இத்தனை அழகான மரம் எது என்று அறியாதவள் போலக் கேட்கிறாள். இதனைச் செவிமடுக்கும் செவிலி தோழியிடம் விசாரித்தால் அவள் தன் காதலை எடுத்துச் சொல்வாள் என்று நினைக்கிறாள். 
உடல்மொழியைப் போலவே பாடலுக்கும் மெய்ப்பாடு உண்டு. இப்பாடலின் மெய்ப்பாடு அச்சம் என்பார் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார். இப்பாடலின் பயன் அறத்தொடு நிற்றல் என்பதாகும். தன் காதலை வெளிப்படுத்தி திருமணத்திற்கு வழிசெய்யும் முறை என்பதாகும்.
சொற்பொருள்: அன்னாய் வாழி - வாழ்க அன்னையே; வேண்டு அன்னை - கேட்பாயாக அம்மா; என்னை - என் தலைவன் (என் ஐ), தானும் மலைந்தான் - அவனும் அணிந்தான்; எமக்கும் தழை ஆயின - எனக்கும் தழை உடையாகின தழைகள்; பொன் வீ மணி - பொன்னிற மணிகளைப் போல மலர்கள்; அரும்பினவே - மலர்ந்தனவே; என்ன மரம் கொல் - என்ன மரம் , கொல்  அசைநிலை; அவர் சாரல் - அவர் வாழும் மலைச்சாரல்; அவர் என்பது பன்மை அன்று, மலையில் வாழ்வோரை மனதில் இருத்தி அப்படிச் சொன்னதால் ஒருமை பன்மை மயக்கமல்ல என்பார் பெருமழைப்புலவர். மலைந்தான் என்று ஒருமையிலும் அவர் என்று தலைவனைப் பன்மையிலும் குறிப்பிடுவதால் - ஆனால் அவர் என்பது மலையில் வாழும் மக்களைச் சேர்த்தே என்பது பெருமழைப்புலவர் கருத்து.

என் பாடல்:
அன்னையே வாழ்க! செவிகொடு அன்னாய்!
பொன்னிற மணிகளைப் போல கிளைகளில்
மொட்டுகள் முகிழ்க்கும் அன்னாய் ;
என்னவன் அணிந்தான் தழைகளை
எனக்கும் கொடுத்தான் ஆடையாய்;
அவன்மலைச் சாரல் வளர்ந்திடும் மரம்
என்ன மரமது தோழி, சொல்வாய்!

(ஒழுகிசை அகவல், இணைக்குறள் ஆசிரியப்பா)

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...