'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்

 

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் இணையவழி நிகழும் 'தமிழே அமுதே' நிகழ்ச்சியில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்களின்  'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை அறிமுகம் செய்தேன். பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நூல். இந்நூலினைப் படிக்க வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டபடியுள்ளனர்.

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை தோறும் 'தமிழே அமுதே' எனும் நூல் பகிர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மார்ச் 15ஆம் நாள் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 21 வாரங்களில் 42 நூல்கள் பகிரப்பட்டிருக்கின்றன. ஐந்து பேர் கொண்ட தமிழே அமுதே செயற்குழுவில் ஒருவராக இருக்கிறேன். நூல் பரிந்துரைப்பது, நூல்கள் பட்டியலிடுவது, வாரவாரம் யார் பகிர்வது என்று முறைபடுத்தித்  திட்டமிடுவது முதலான பணிகளும் எங்களுக்கு. பத்து வாரங்களுக்கு ஒருமுறை சிறார் வாரம் என்று பள்ளிக் குழந்தைகள் தமிழ் நூல்களை வாசித்துப் பகிர ஊக்குவித்துப் பயிற்சியும் அளிக்கிறோம். அப்படி இரு சிறார் வாரங்கள் நிறைவுற்றது. அவ்வப்போது விருந்தினர் வந்து பேசுவதும் உண்டு.

 முதல் இரு வாரங்களிலும் நான் 'ஆதிச்சநல்லூர்-கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம்', ஆசிரியர் அமுதன், எனும் நூலை நண்பர்களுடன் பகிர்ந்தேன். முதல் சில வாரங்கள் தொல்லியல் என்று முடிவெடுத்துப் பகிர்ந்தோம்.

 பின்னர் மரு.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பற்றி மகளிர் வாரச் சிறப்புத்  தமிழே அமுதே நிகழ்ச்சியில் பகிர்ந்தேன். ஏறக்குறைய இருபது பேர் இருக்கும் குழுவில், எனக்கு மூன்றாவது வாய்ப்பு தமிழே அமுதேவின் 21ஆம் வாரத்தில் அமைந்தது.

இந்த வாய்ப்பில் நான் அன்பு அண்ணன் கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்கள் எழுதிய 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே' எனும் நூலை பெருமகிழ்வுடன் அறிமுகம் செய்தேன். கல்விக்கொள்கை, அமெரிக்காவில் கல்வியாண்டு தொடக்கம் என்று இந்நூலினைப் பகிரச் சரியான நேரமாகவும் அமைந்தது. இங்கு கல்வி தரும் அழுத்தம் பற்றி ஒன்றிரண்டு பதிவுகள் எழுத எண்ணுகிறேன். ஒரு பதிவு போதாது!! :)

நிகழ்ச்சி இந்திய நேரம் ஆகஸ்ட் 9ஆம் நாள், காலை 6 மணிக்கு என்ற போதிலும் நிலவன் அண்ணாவும் அண்ணியும் தங்கையும் முதலிலேயே இணைந்து கொண்டனர். இன்னும் சில நண்பர்களும் 'அறம்' குழுவின்  சில நண்பர்களும், அக்குழுவின் தலைவர் திரு. உமர் பாரூக் அவர்களும் கலந்து கொண்டது எனக்குப் பெருமகிழ்ச்சி! நிகழ்ச்சியைச் சிறப்பித்த இவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

நிகழ்வில் பங்கு கொண்ட அனைவருக்கும் இந்நூல் மிகவும் பிடித்துப்போனது. கட்டாயம் படிக்கவேண்டிய நூல் என்று சொல்லி என்னிடம் கேட்கவும் செய்கிறார்கள். அண்ணன் நூலின் PDF கோப்பைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னது மகிழ்ச்சி.  அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் சொன்னது போல இந்நூலை எழுதிய நிலவன் அண்ணாவிற்குக் கோடி நன்றிகள்! அனைவரின் நூல் அலமாரியிலும் இருக்க வேண்டிய நூல்!