புத்தாண்டு நினைவலைகள்


சத்தமின்றிச் சலிப்பின்றி சுழன்றுக் கொண்டிருக்கும் காலச்சக்கரத்தில் சமூகம் சார்ந்து, தனிமனிதன் சார்ந்து, இடம் சார்ந்து, மதம் சார்ந்து, பருவங்கள் சார்ந்து பல விழாக்கள், நிகழ்வுகள். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக மகிழ்வாக ஆங்கிலப் புத்தாண்டு. புத்தாண்டுக்குத் தெரியுமோ மொழிகள் என்ற  கேள்வி எழுந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் இனத்திற்கும் இடத்திற்கும் அவரவர் ஆண்டின் தொடக்கம் உண்டு, ஒரு புத்தாண்டு உண்டு. பரங்கியர் தயவால் ஆங்கிலம் உலகில் பரந்த இடத்தைப் பிடித்ததால் ஆங்கிலப் புத்தாண்டு உலகமுழுவதும்!


சரி, கல்விக்கூடம் சேர விண்ணப்பிக்கும் குழந்தைபோல பிடரிசுற்றி காதைத் தொடப் பார்க்கிறேன். நேராக காதிற்கு, இல்லை, பதிவிற்கு வருகிறேன். புத்தாண்டு நாள் உலைகிண்டும் கரண்டிபோல என் ஆழ்மனம் வரைத் தொட்டுக் கிளறிவிட்டு சூரியனோடு மறைந்துவிட்டது. மனதின் நினைவுகளோ சுழன்று கொண்டேயிருக்கிறேது. மன உலையின் நினைவலைகளை இங்கே பரிமாறலாம் என்றே இப்பதிவு.


பிராக், அங்கி (frock, gown) அணிந்து சுற்றிய குழந்தமைக் காலத்தில் புத்தாடை அணிந்து இரவு வழிப்பாடிற்கு ஆலயம் சென்றது தவிர வேறு அதிக நினைவில்லை. கொடைக்கானலில் தாத்தா டிசெம்பர் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் மரத்திற்கு பசுமரம் ஏற்பாடு செய்வது நினைவுண்டு. சில உடுப்புகள் இன்னும் நினைவில் இருப்பது மகிழ்வுதான். நினைவாற்றல் அப்படி!

பாவாடைச் சட்டை, தாவணி, சுடிதார், சேலை  என்று வளர்ந்த காலத்தின் நினைவலைகள் அதிகமாகவே இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு என்று புத்தாடைகள் வாங்கி, அக்கம்பக்கம் பிரித்துப் பிரித்துக் காட்டி, பலமுறை மடித்து மடித்து வைத்திருப்போம். ஆடைக்குப் பொருத்தமாகக்  கம்மல், வளையல், ஊசி, பாசி என்று அதற்கான கடையேற்றமும் காட்சி படைப்புகளும் தனி! சுபாக்கடை அண்ணாச்சி, 'இது புதுவரவு தங்கச்சி, உங்களுக்காகவே தனியா எடுத்துவச்சேன்' என்பார். நம்புவதுபோல வாங்கி எங்களுக்கும்  நம்பவைத்தது போல அவருக்கும் குறைவில்லாமல் மகிழ்வுதான்.

புத்தாடை அணிவதற்கு முன் அம்மாவோ பெரியம்மாவோ சந்தனம் வைத்துக் கொடுப்பார்க்ள. ஆஹா! அதுவே ஒரு கவின் காட்சி! பாயை விரித்துப் புத்தாடைகளைப் பரப்பி, கிண்ணத்தில் சந்தனம் கலந்து, ஒவ்வொரு ஆடையிலும் உட்பக்கமாக ஒரு பொட்டுவைத்து! புத்தாடையும் அணிகலன்கள் அணிந்து கூந்தல் நீளத்திற்கு இருமடங்கு அளவிற்குப் பூ வைத்து,  ஒவ்வொருவரிடமாகக் காண்பிக்க ஒரு உலா. அப்பப்பா!! அதுவன்றோ பண்டிகை, திருநாள்!


நள்ளிரவு வழிபாட்டிற்கு ஆலயம் சென்றுவிட்டு மகிழ்வுடன் வீடு வந்தவுடன் ஒரு மரபு, வழக்கமாக இருந்தது. கிறிஸ்து பிறப்புக் குடிலின் முன் குடும்பத்தினர் அனைவரும் கூடி விளக்கேற்றி பிரார்த்தனை. பிறகு கேக் வெட்டுதல். காபி, அரட்டையுடன் ஒரு புகைப்படம் எடுக்கும் படலம். ஒரே சிரிப்புதான்.

பின்னர் வாசலடைத்துக் கோலமிட்டு, என் தங்கைகளில் ஒருத்தி  அழகாகக் கோலமிடுவாள். பின்னர் நாங்கள் அனைவரும் வண்ணப்பொடிகள் தூவி அலங்கரித்து, கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு வாழ்த்து எழுதி, பூரித்து ஐந்து மணிக்கு உறங்கச் செல்வோம். பக்கத்துவீட்டுச் சொந்தம், தங்கைகளும் சேர்ந்து கோலமிடுவோம். தீபாவளி பொங்கலுக்கும் அதிகாலை எழுந்து ஒன்றாகச் சேர்ந்து கோலமிடுவோம்.

காலையில் எழுந்து குளித்துப் புத்தாடை அணிந்து அலங்கரித்து அக்கம்பக்கம் வீடு வீடாக பலகாரப் பரிமாற்றம். ஒவ்வொரு வீட்டிலும் வாழ்த்துகளும் புத்தாடை பற்றிய பாராட்டுகளும் என்று ஒரே மகிழ்வுதான்.

அரட்டை,பலகாரம், விளையாட்டு, சொந்தம் பந்தம் நண்பர்கள் என்று இனிமையாகக் கழியும் அந்நாட்கள்.

இப்பொழுதோ கடல்கடந்து கண்டம் கடந்து நாங்கள் மட்டும், அதாவது என் குடும்பம் மட்டும். சொந்தபந்தம் அருகில் இல்லா ஏக்கம் அழுத்தினாலும் எனக்கிருப்பது போன்ற இனிய நினைவுகள் என் பிள்ளைகளுக்கும் அமைய வேண்டும் என்று சிரத்தையெடுத்துப் பலகாரங்களும் அலங்காரங்களும் செய்வேன். இப்பொழுது ஆண்டுகள் பல கடந்ததால் இங்கு கிடைத்த இனிய நண்பர்களுடன் கொண்டாடுவது மகிழ்வு சேர்த்தாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், பக்ரீத், ரம்ஜான், தீபாவளி என்று அனைத்துப் பண்டிகை நாட்களும் மன உலை கிண்டி அமுதாக்கியே கடக்கின்றன. கரும்பாய் மனம் நிறைத்துப் பாரமாக்கும் கரும்புச் சக்கைகள்.


20 கருத்துகள்:

  1. நினைவலைகளை மீட்டிய விதம் அழகு சகோ. இவ்வாண்டு தங்களுக்கு அனைத்து மகிழ்ச்சிகளையும் வழங்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றி சகோ. நீங்கள் நலமா? உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      நீக்கு
  2. அண்டை அயலார்,நட்பு உறவு , என அறிந்தவர் தெரிந்தவருடன் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்ந்த நாட்களின் சந்தோசம் மட்டுமே மனத்தில் நினைவுகளாய். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும், உங்களது குடும்பத்தார் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தமிழ்முகில். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  3. கடந்த காலத்தை நினைத்து பார்த்து இந்த காலத்தில் ஒப்பிட்டு பார்க்கிறோம் ஆனால் இந்த காலமும் ஒரு நாள் கடந்த காலமாக மாறி ஒரு நல்லதோர் நினைவலைகளை மீட்டு தரும் சகோ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமை......பதிலாக எழுதியமைக்கு வாழ்த்துகள்.விழாக்களில் நாம் அடைந்த பரவசங்கள் தற்கால சந்ததிகளுக்கு இல்லை என்பது உண்மை..... வாழ்த்துகள் மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. ஆமாம் கீதா, வருத்தம் தான்.
      பின்னாளில் அசைபோட்டு மகிழ்வார்களோ என்னவோ.

      நீக்கு
  5. இனிய நினைவுகள். புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இனிமையான நினைவலைகள்.

    பல பண்டிகைகள் குடும்பத்தினருடன் கொண்டாட முடியாத நிலையே இங்கும். சில விஷயங்களை நாம் விரும்பினாலும் செய்ய முடிவதில்லை....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் - சற்றே தாமதமாகச் சொல்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா..நகரமயமாக்கல், இயந்திர வாழ்க்கை என்று நாம் பலவற்றை இருக்கிறோம்.

      பகிர்விற்கும் வாழ்த்திற்கும் மனம் நிறைந்த நன்றி அண்ணா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.

      நீக்கு
  7. இனிய பல பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது... இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி அண்ணா. நன்றி
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  8. துளசிதரன்: நினைவலைகள் சொன்ன விதம் அருமை. புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி

    கீதா: நினைவலைகள் க்ரேஸ் நீங்கள் அங்கிருந்து கொண்டு சொல்றீங்க ஆனா இங்குள்ளவர்களுக்கும் பெரும்பாலும் அப்படியாகிப் போனது...அதில் நானும் அடக்கம்... அப்படியாகிப் போனது! புத்தாண்டு வாழ்த்துகள் க்ரேஸ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா, கீதா.
      ஆமாம் கீதா, வெங்கட் அண்ணாவும் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா?
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கீதா மற்றும் துளசி அண்ணா .

      நீக்கு
  9. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் சகோரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  10. பழைய நினைவுகளைப் பகிரும்போது கிடைக்கும் மகிழ்வு அதிகமானது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...