ஜனவரி 14, 1991


மனக்கடலின் ஆழத்திலிருந்து மேலெழுந்து ஒருவாரகாலமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நினைவுகள். ஆழி தள்ளும் பலவிதக் கிளிஞ்சல்கள் போல உள்ளம்  நிறைக்கும் உணர்வுகள் தான் எத்தனை! ஏக்கம் சுரக்கும்  இந்நினைவலைகளை இதயத்துடிப்போடு விரல்வழிக் கொணர்ந்து எழுத்துகளில் கோர்த்துவிட்டால்  இதயம் இலேசாகுமோ என்னவோ என்றும் இருக்குமல்லவா?


கவலைகளில்லாப் பருவ வயது. என்ன பருவம் என்று பெயர்சொன்னால் வயதைக் கணக்கிடும் தொல்லை உங்களுக்கு வேண்டாமே என்று அதனை விட்டுவிடுகிறேன்.

பொங்கல் திருநாள்! அதிகாலை எழுந்து அம்மா செய்துவிட்டப் பொங்கலை உவப்புடன் உட்கொண்டு வாசல் அடைத்துப் போட்ட வண்ணக்கோலம் கண்டு கண்டு பெருமை கொண்டு கிரீடம் சூட்டிக்கொண்டாயிற்று. அக்கம்பக்கத்தினரும் தெருவில் போவோர் வருவோர் பாராட்டாமல் சென்றதில்லை எங்கள் வண்ணக் கோலத்தை! புத்தாடையும் வளையலும் பாசியும் அணிந்து தலைவார அம்மா முன் அமர்ந்திருந்தேன்.

அப்போதெல்லாம் விதவிதமாக அம்மாவைத் தலைவாரிவிடச் சொல்வேன். . சரியாக இருக்கிறதா என்று கண்ணாடி முன் இப்படியும் அப்படியும் திரும்பி திரும்பிப் பார்ப்பேன். ஒரு முடி பிசிறியது போல் எனக்குத் தோன்றினாலும் அம்மா மீண்டும் வாரி அணிசெய்ய வேண்டும். எத்துனைக் கோவம் வரும் தெரியுமா எனக்கு? பாவம் அம்மா என்று இன்று தோன்றுவது அன்று தோன்றாமல் போனது தான் வாழ்க்கை.

அப்படி இந்த இளவரசி சிகை அலங்காரத்திற்கு அமர்ந்திருந்த வேளை அப்பா அலுவலகத்தில் வேலைசெய்த ஒரு மாமா வந்தார். நண்பர்கள் வருவது புதிதில்லை என்றாலும் அன்று வந்தவர் புதிது. அவர் பெயர்கூட எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. இனிப்பும் வாசனையும் இணைந்த பெயர். வந்தவர் கொண்டு வந்த செய்தியோ இனிக்கவுமில்லை, மணக்கவுமில்லை, இதயத்தில் கல்லெறிந்தது. அந்தக் கல் கசப்பாயிருந்தது. அதன் சிற்றலைகள் இன்றுகூட உயிர்ப்பது தான்..உறவுகள் உடைவதில்லை என்கிறது.

செய்தி கொண்டுவந்தவர் மீது பல ஆண்டுகள் கோவமாய் இருந்தேன் என்பது வேறுகதை. அவரைப் பார்த்தாலே அப்படி ஒரு கோவம் வரும். நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது இன்று. அப்படி அவர் என்ன செய்தி கொண்டு வந்தார்?

என் அம்மாச்சி, அதாவது அம்மாவைப் பெற்ற அம்மா இறைவனிடம் சென்றுவிட்டார் என்பதே அன்று வந்தவர் கொண்டுவந்த செய்தி. அழுகையும் வேதனையுமாக கொடைக்கானலுக்குக் கிளம்பினோம். வத்தலக்குண்டில் பேருந்து மாறி அமர்ந்தபொழுது உடன் வந்த பெரியம்மாவிடம் நெஞ்சு வலிக்கிறது என்று சொன்னேன். மடியில் சாய்த்துக்கொண்டு அழுதார். வேறென்ன செய்வார். அம்மாவும் பெரியம்மாவும் சித்தியும் அரற்றியபடி அழுது கொண்டே அல்லவா இருந்தனர்?

வீடு சேர்ந்ததும் அழுததும் உறவுகளைப் பார்த்ததும் பெரியவர்கள் தாத்தாவை அடுத்த அறையில் அமரச் செய்து ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்ததும் இறுதியில் அம்மாச்சிக்குச் சீயக்காயும் எண்ணெயும் வைத்ததும் வழியனுப்பி வைத்ததும் என பலபல நினைவுக் கிளிஞ்சல்கள்! அம்மாச்சியின் வார்த்தைகள், உணர்வுகள், உடல் நலக்குறைவு  என்று பல நினைவுகள்.

அன்றும் இன்றும் என்றும் ஒரு நினைவு மட்டும் பசுமரத்தாணியாய்! என்றோ ஒரு நாள், எனக்கு ஏழெட்டு வயதிருக்கும் பொழுது  அரிசிகளைந்து கொண்டிருந்த அவர் அருகே சென்று ஏதோ கதைத்தது நிழலாடிக் கொண்டேயிருக்கிறது.  அவர் அரிசி களைந்து கொண்டிருக்கிறார், பெயர்த்தி நான் ஏதோ கேட்டுக் கொண்டிருகிறேன்.  என்ன பேசினோமோ, ஆனால் அவர் பார்வையும் அருகாமையும் நீரில் கைவிட்டு நான் களைந்ததும் கலையா நினைவுகளாய்!

அம்மாச்சி! என் அன்பு அம்மாச்சி!


பொங்கல்பதினைந்தாம் தேதியாம், அதனால் இன்று இப்பதிவு இடலாம் என்று நினைத்தேன்.

17 கருத்துகள்:

  1. உங்களின் கவலையில்லா பருவத்தை எனக்கு தெரிந்த மேத் மூலம் கூட்டி கழித்து பெருக்கி கணக்கிட்டு பார்த்தேன் உங்களது இன்றைய வயது 60 என்று வருகிறது சரிதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயகோ! விசுவின் உதவியைத் தான் கேட்கவேண்டும் உங்கள் கணக்கைச் சரி செய்ய!
      :)

      நீக்கு
    2. இம்மாதிரி அரட்டையடித்து ரொம்ப நாளாகிவிட்டது சகோ.

      நீக்கு

    3. விசுவிற்கு பணக் கணக்குதான் தெரியும் ஆனால் அவருக்கு என்னை போல இந்த மாதிரி மனக் கணக்கு போடதெரியாதே சகோ

      நீக்கு
  2. பாட்டிகளுக்கு பேத்திகள் அடுத்த தலைமுறை பிள்ளைகளாக வருகிறார்கள் & சந்தோஷத்தை தருகிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை

    பதிலளிநீக்கு
  4. நினைவுகள் ! என்றும் மனத்தின் அடியாழத்தில் உழன்று கொண்டே தான் இருக்கும். எனக்கு ஆச்சியுடன் அந்த நினைவுகள் கூட கிடையாது. ஆச்சி, தாத்தா இருவரையும் பார்த்தது கூட கிடையாது. இருவருமே நான் பிறக்கும் முன்னே இறையடியை அடைந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் நினைவுகள். நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. அம்மாச்சியின் நினைவுகள் அழகாய் பகிர்ந்திருக்கிங்க கிரேஸ் .பாட்டி தாத்தாவுடன் வளரும் பிள்ளைகள் நிஜம்மா கொடுத்துவைத்தவர்கள் .
    // பாவம் அம்மா என்று இன்று தோன்றுவது அன்று தோன்றாமல் போனது தான் வாழ்க்கை.//
    ஹ்ம்ம் அதேதான்
    எனக்கே இப்போதான் என் பொண்ணு ஒவ்வொன்னையும் உணர்த்தரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சல்.

      ஆமாம்..நாம் படும்போதுதான் பின்னோக்கிச் சென்று புரிகிறது

      நீக்கு

    2. @ஏஞ்சல் பெண்களுக்கு எல்லாம் காலம் சென்ற பிந்தான் புத்தி வருகிறதோ

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...