ஓவியத்திலா காட்ட வேண்டும்?


பல ஆயிரமாய்
காடுகளில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்தோம்

சில ஆயிரமாய்
சரணாலயங்களில் சரண் அடைந்துள்ளோம்

அகன்று பரந்த  காட்டை விட்டு
அடிகள் சிலவற்றில் சுருங்கியிருப்பது ஏன்?

எம் பசிக்கு நீ வீசுவதை எதிர்பார்ப்பது ஏன்?
எம் இனத்தைக் காண்பது அரிதாய் இருப்பது ஏன்?

வாழ்வின் ஆடம்பரத்திற்கு காடழித்த மனிதனே
வாழ்வின் ஆதாரமே எமக்கு காடுதான் மறந்தது ஏன்?

அழிந்து விட்டனவாம் பல உயிரினங்கள்
அந்த வரிசையில் சேர வேண்டுமா யாம்?

காட்டை மட்டுமல்ல பல விலங்குகளை மட்டுமல்ல
வேட்டை ஆடுவது நீ இயற்கை சமன்பாட்டை

அறியாயோ மனிதா?  கண்ணைத் திறவாயோ மனிதா?
உன் சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்ட வேண்டும்?

தோலிற்கு எம்மையும் மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே

புலிகளை அழிவிலிருந்துக்  காத்திடு
புவியில் விலங்குகளும்  வாழட்டும் விடு

காட்டில் யாமும் நகரில் நீயும் என்று
சூழல் மண்டலம் இனிது சிறக்க வாழ்ந்திடு!

9 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை, கிரேஸ். ஆறறிவுள்ள நாம்தான் அவைகள் நிலையிலிருந்து சிந்தித்து செயல்படணும்.. அவைகளுக்கு வக்காலத்தும் வாங்க வேண்டும்! :)

    பதிலளிநீக்கு
  2. இயற்கை பற்றி அழகாக கூறியுள்ளீர்கள் தோழி... அழகான சிந்தனைக் கவிதை... உயிரினங்களை அழித்து அவற்றை ஓவியங்களாக வரைந்து காட்டுவதில் பயன் ஏதும் இல்லை என்பதை அழகாக கூறியுள்ளீர்கள்...

    பாராட்டுகள்... வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான சிந்தனை!
    இயற்கையை அழித்து இனத்தையே தொலைக்கின்ற மனிதம்!

    எதிர் காலத்தில் ஓவியமாய் மட்டும்....
    உள்ளமதில் உணர்த்தும் கவிதை!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  4. புலிகளை அழிவிலிருந்துக் காத்திடு
    புவியில் விலங்குகளும் வாழட்டும் விடு//உண்மைதான்

    பதிலளிநீக்கு
  5. மனிதனின் பேராசைக்குத்தான் எல்லை ஏது?
    அருமையான கவிதை சகோதரி. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை. மிக உயரிய சிந்தனை கிரேஸ். சின்ன வயதிலிருந்தே புலிகள் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது. நான் பார்த்து பிரமித்த புலிகள் அழியும் தருவாயில் இருக்கிறது என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது :(. நாம் சுதந்திரம் அடைந்த பொழுது 50,000+ புலிகள் இருந்தன, 66 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 95 சதவிதம் குறைந்து, இப்பொழுது இருப்பதோ 1300 மட்டுமே :(. அரை நூற்றாண்டில் தன் ஆடம்பரத்திற்காக ஒரு இனத்தை அழித்த மனிதன், வயிற்று பசிக்காக கொல்லும் புலியை கொடூர குணம் கொண்டது என்று கூறுகிறான்.. என்ன வேடிக்கை !!.

    பதிலளிநீக்கு
  7. //புவியில் விலங்குகளும் வாழட்டும் விடு//

    உலகத்தில் மனிதனுக்கு மட்டும் தான் இடம் என்று வாழும் மனிதன், என்று தன் தவறை உணருவனோ என்று தெரியவில்லையே கிரேஸ்..

    பதிலளிநீக்கு
  8. புலிகள் பற்றி, புலிகள் சார்பாக எழுதப்பட்ட கவிதை ஒன்றை முதல் முதலாக என் வாழ்வில் படிக்கிறேன்! வாழ்த்துக்கள் சகோ!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...