தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் திரு.யாழ்பாவாணன் ஐயா நடத்தும் கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பும் கவிதைகள் கீழே!
கீழிருக்கும் படத்திற்கு ஒரு கவிதை எழுத வேண்டும்..தோழி தாய்க்குச் சொல்வதுபோல எழுதிவிட்டேன். (சங்க இலக்கியத் தாக்கம் :) ). தீபத்திருநாளிற்கு ஊருக்கு வரும் தலைவனை மணம் முடித்து வையுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாள் தோழி.


"உண்ணாமல் உறங்காமல் வாடியிருந்தவள் 
உண்கண் கலங்க வருந்தியிருந்தவள்
பட்டுவிலக்கிப் பாதை பார்த்திருந்தவள் இன்று 
பட்டாடையும் பகட்டு இழைகளும் அணிந்தனளே 

மையிட்ட புருவ வில்லின் நடுவே செஞ்சாந்திட்டு 
மையல் விழிகள் ஒளிரப் பார்ப்பது எங்கே?
உள்ளகம் மலர் வேண்டுமென்று  நீ அழைக்க 
உள்ளம் உகளப்  புதவில் நிற்பது ஏன் தாயே?

மலர் கொண்ட மஞ்சிகைத்  தன்னிடமே வைத்து 
மயில் இயல் வஞ்சியவள் வாசலில் சிலையானாளே  
செறிதொடி கரங்கள் மாலை சூட்டக் காத்திருக்கே 
செங்காந்தள் அவிழும் ஊரன் தீபத்திருநாள் வருகிறானே"

சொற்பொருள்: உண்கண் - மையிட்ட கண், இழை - அணிகலன், மையல் - காதல், உள்ளகம் - உட்புறம், உகள - துள்ள, புதவு - வாயில், மஞ்சிகை - கூடை, மயில் இயல் - மயில் போன்ற, வஞ்சி - பெண், செறிதொடி - நெருக்கமாய் அணிந்த வளையல்கள்

அடுத்த கவிதை நான் சாலையில் பார்த்த ஒரு தாயும் குழந்தையும் ஏற்படுத்திய தாக்கம். வாகன நெரிசலில் இருசக்கர வண்டியில் முன்னால் குழந்தையை நிறுத்திச் சென்றுகொண்டிருந்த தாய் தடுமாறி விழப்போனார்.. பதறிவிட்டேன், தலைக்கவசமும் போடவில்லை. ஒரு புறம் லாரி, மறுபுறம் சாலையின் நடுவில் இருக்கும் டிவைடர். உழற்றிக்கொண்டே ஓட்டிக்கொண்டிருந்தார். புதிது போல,,தலைக்கவசம் அணிய வேண்டுமல்லவா? எதிர்மறையாக எழுதுவதற்கு மனம் ஒப்பவில்லை என்றாலும் இதைப் படிக்கும் ஒருவரேனும் தலைக்கவசம் தவறாமல் அணிய ஆரம்பித்தால் நலமே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

WEAR HELMET! Image:Thanks Google

தலைக்கவசம் குடும்பக்கவசம் 

"வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தானே வந்தாய்
வீதியில் அழவைத்து எங்கு சென்றாய் அம்மா?

முன் சென்ற வண்டி நம் முன்னால் வர
முட்டி விழுந்தோமே அம்மா

நான் இந்த பக்கமும்  நீ அந்த பக்கமும் 
நடுவில் இருந்த கல்லில் இடித்துவிட்டாயாமே

தலைக்  கவசம் அணியவில்லை என்றே
தலைக்குத் தலை ஏதோ சொல்கின்றனரே

தலைக்குப் பூ வாங்கினாயே அம்மா
தலைக் கவசம் ஏன் வாங்கவில்லை?

மிட்டாய் கேட்டு அடம் பிடித்த நானும்
மினுக்கும்  தலைக் கவசம் கேட்கவில்லையே

தனியாக அழுகின்றேன் வருவாயோ அம்மா 
தலைக்கவசம் வாங்கியே வீடு செல்வோம் அம்மா

வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தானே வந்தாய்
வீதியில் அழவைத்து எங்கு சென்றாய் அம்மா?"

Image: Thanks Google


46 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி
    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் இரண்டுகவிதையும் நன்றாக உள்ளது போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் த.ம2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே!
      உங்கள் கருத்திற்கும் போட்டி நடத்தி வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி!

      நீக்கு
  2. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    தோழியின் செப்பலும், குழந்தையின் கேள்வியும்....அருமையான இரு கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  3. அட..அட.. அற்புதம் தோழி!
    இலக்கியப் பாடல் எழுதும் திறமை உங்களிடம்
    உள்ளதை அருமையாக வெளிக்காட்டினீர்கள்!

    இரண்டாவது கவிதையும் காலத்தின் தேவையான
    நல்ல கருத்தோடு அருமை!

    வெற்றி உங்களுக்கேயாக உளமார வாழ்த்துகிறேன் தோழி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாகப் பா புனையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா தோழி? மகிழ்ச்சி எனக்கு..உங்கள் இனிய கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி

      நீக்கு
  4. கூடையில் அவல்
    உண்ணாமல் அவள்
    வெற்றியே இவள்
    எதிர்ப்பது எவள்
    * * * * * * * * * * * * * *
    தாயின் பாசம்
    தந்தையின் நேசம்
    தலையில் கவசம்
    இல்லையேல் திவசம்
    * * * * * * * * * * * * * * * * * *
    கவிதை வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைப்போட்டிக்கு நீங்கள் எழுதிய கவிதைகளும் அருமையாய் இருந்தன..இங்கே கருத்துரையிலும் கவிதை அருவியாய்க் கொட்டுகிறதே,,இரண்டும் மிக அருமை சகோதரரே! உங்கள் வாழ்த்திற்கு நன்றி, வெற்றி உங்களுக்குக் கிடைக்கட்டும்.

      நீக்கு
  5. அருமையான கவிதைமா..வெற்றி பெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. இரண்டு கவிதைகளுமே "தேன் மதுரம்" தான்

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரையும் தேனாய் இருக்கிறதே..வாழ்த்திற்கும் நன்றி சகோதரரே

      நீக்கு
  7. சும்மா நம் மனம் போன போக்கில் ஒரு கவிதை எழுதுவதே கடினம். ஒரு ஓவியத்தைப் பார்த்து கவிதை எழுதுனா நான் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன். :)))

    Facing the challenge is the tough part. Winning is easy part and it is not that important as far as I am concerned. The challenge has been faced bravely and confidently by coming up with the beautiful poem, Grace! So the tough part is done! Congrats! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படியே வருண்..ஓவியத்தைப் பார்த்து எங்கே எழுதுவது என்றுதான் முதலில் நினைத்தேன்..இன்று எழுதிவிடலாம் என்று தோன்றவே ஒரு பத்து நிமிடம் ஓவியப் பெண்ணை முறைத்து முறைத்துப் பார்த்தேன் :)
      பாவம்..ஆனால் நல்ல கவிதை கொடுத்து விட்டாள்.
      True, winning is not as important as trying. By trying, two poems are added to my list (not a great list, though). Thanks for your nice comment and wishes Varun.

      நீக்கு
    2. முறைத்துப் பார்த்ததினால் அந்தப்பெண் கவிதை கொடுத்தாளா ? அப்படியானால் நீங்கள் எழுதவில்லையா ? இது தெரியாம நான் வேற உங்களை வாழ்த்தி விட்டேனே...

      நீக்கு
    3. ஹாஹா ஆமாம் சகோ..கூடையில்தான் வைத்திருந்தாள். தலைவனுக்காய் மலரை மட்டும் வைத்துக்கொண்டு கவிதையை எடுத்துக்கோ என்றுவிட்டாள்..
      எப்படியோ வாழ்த்திவிட்டீர்கள், அதுவரைக்கும் எனக்கு மகிழ்ச்சியே.. :)

      நீக்கு
  8. கிரேஸ்!! இப்படி ஆளாளுக்கு கலக்கின ரிசல்ட் எப்டிவரப்போகுதொன்னு பார்க்கின்ற எனக்கு தான் படபடப்பா இருக்கு:))) அருமை டியர்!! அப்புறம் ஹெல்மெட் மேட்டர் :(( கந்துவட்டிக்கு கடன்வாங்கியாச்சும் ஹெல்மெட் வாங்கனுத்தா, இப்படி டரியல் ஆக்குறாங்களே:))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படபடப்பு சரியாக நீங்களும் களத்தில் இறங்கி கவிதைகளை எழுதிடுங்க டியர்.. :) மிக்க நன்றி.

      என்னது!! நீங்க ஹெல்மெட் போட மாட்டீங்களா? நோ நோ...சீக்கிரம் வாங்கிருங்க டியர்..

      நீக்கு
    2. பூரிக்கட்டையை தூக்குபவர்கள் ஹெல்மெட் போட மாட்டாங்க நான் சொல்வது சரிதானே மைதிலி

      நீக்கு
    3. பாத்துங்க..உயரத் தூக்கும்பொழுது தலையில் இடித்துவிடாமல் ஹெல்மெட் போட்டுக்கலாம் :)

      நீக்கு
  9. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமை, அருமை, அருமை... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. கவிதைகள் இரண்டும் அருமை
    வெற்றிக் கனிக்கு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. தீபாவளிக் கவிதைப் போட்டி - தங்கள்
    திறமையை வெளிக்கொணர உதவியிருக்கிறது.
    தாங்கள் எடுத்துக்கொண்ட பாடுபொருள்
    நன்றாக அமைந்து இருக்கிறது.
    வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
    முடிவு நடுவர்களின் தீர்ப்பே!

    பதிலளிநீக்கு
  14. போட்டி கவிதை மிக அருமை.. சங்க பாடல் படித்தது போன்ற உணர்வு... உங்கள் தமிழ் வியக்க வைக்கிறது... வெற்றி பெற வாழ்த்துகள்.

    ஹெல்மெட் கவிதையும் சூப்பர்... ரொம்ப உண்மை ...

    பதிலளிநீக்கு
  15. ருசித்து ரசித்து படித்தேன். அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. கவிதை அற்புதம் சகோதரி. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள். கவிதைக்கு சமமாக தெளிவுரையும் அருமையாக இருந்தது...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரி!

    தங்களின் இரு கவிதைகளும் மிகவும் அருமையாக உள்ளது. போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி!
      உங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. என்னம்மா தோழி இப்படி அசத்தினா நான் என்னடா செய்வது நான் பேசமா கவிதையை எடுத் திடட்டுமாம்மா என்ன , ஹா ஹா சும்மா .....சும்மா.... இரண்டுமே அசத்தல் தான் உயிரைக் காக்க அவசியமானதை அலட்சியம் பண்ணுபவர்களுக்கு
    நிச்சயம் தேவையான கவிதை. பாராட்டுக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...! தோழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இது என்ன காமெடி!! கரும்பாக் கவிதைய எழுதிட்டு இப்படி சொல்றீங்களே!! :) எடுக்கிறதா இருந்தா நான்தான் எடுக்கணும் போல, இருந்தாலும் இனியாவோட போட்டி போட்டேனாக்கும் அப்டின்னு சொல்லிக்கவாவது வேணாமா? அதுனால விட்டுறேன். ;-)
      உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி

      நீக்கு
  19. அருமையான கவிதைகள்....வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. சிறப்பான சிந்தனைகள் அடங்கிய அருமையான கவிதை வரிகள்
    வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே போட்டியில் வெற்றி பெற !

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் !
    அடடா கவிதையில் இலக்கியம் புகுது விளையாடும் அழகே அழகு !
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புத் தோழியே .

    பதிலளிநீக்கு
  22. இரண்டு கவிதைகளுமே அருமை.

    " தலைக்கவசம் குடும்பக்கவசம் " அனைவருமே உணர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியமான கருத்து.

    போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  23. தங்களது போட்டி கவிதையை இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது....பாடுபொருள் ஆழமானது.....ஹெல்மட் கவிதை காலத்துக்கேற்ற பொக்கிஷம்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

நான் அமைதி காக்கிறேன் - கவிதை உறவு இதழில்

நன்றி கவிதை இதழ் ஆசிரியர் குழுவிற்கும் என்னைக் கவிதை எழுதக் கேட்ட அன்புத்தோழி புனிதஜோதி அவர்களுக்கும்!