Friday, April 4, 2014

ஊர் நுழையச் சிலிர்க்கும் இரயில் பயணம்

பணியில் சேர்ந்த பெங்களூருவில்
பனித்துளிகளைக் கண்ணில் கொண்டு
வீட்டிலிருந்து அழைப்பு வந்தால்
விசும்பல் மட்டுமே இப்பக்கம்


அரவத்தில் உறங்கமுடியா என்னை 
அலாரமாகக் கொண்டனர் தோழிகள்
ஊர்சென்று அதிகாலை திரும்புபவரை
வரவேற்கவும் விழித்திருப்பேன் நான்

சாலையில் யாரேனும் பேசினால்
"கன்னடா கொதில்லா" என்று இரண்டே வார்த்தைகள்
இடப்பெயர் சொல்லி "ஹோகுதா" என்றால்
நடத்துனர் பெயர்பலகையைக் சுட்டிக்காட்டுவார் (படிக்கத் தெரிந்தா ஏன் கேக்குறோம்?)

இப்படியாக அலுவலகம் சென்று வந்து
திங்கள் ஒருமுறை வார இறுதிக்கு ஊர்ப்பயணம்
இரயிலில் மேல் தட்டில் உறங்கியும் உறங்காமலும்
திண்டுக்கல்லில் கீழே வந்திடுவோம் மகிழ்ச்சியில்

கடந்து செல்லும் வேப்ப மரம்
கடத்தும் இன்பம் அணுவெங்கும்
நம்மூரு என்றே களிப்பூட்டும் காட்சியும்
நாசி சிலிர்க்கச் செய்யும் மண்வாசனையும்

வறண்டு இருந்தாலும் உளம் உகளும்
வைகையைக் கடக்கும் போதில்
நேரம் ஓடிவிட மறுநாளிரவில் மதுரைவிட்டு..
திண்டுக்கல்லில் மேல்தட்டுச்  சென்றிடுவோம் மனபாரத்தில் !


இப்பதிவை எழுதத் தூண்டிய தோழி  மைதிலிக்கு இப்பதிவு அர்ப்பணம். :)
52 comments:

 1. வணக்கம் சகோதரி
  அப்படிப் போடுங்க! இந்த வாரம் பயணக்கட்டுரை வாரமோ!! மிகச் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி. தங்கள் ஊர் திண்டுக்கல்லா? அப்படியானால் மணப்பாறை பக்கம் தான். ஒரு நாள் நமது இல்லத்திற்கு வருகை தரவும். தங்கள் பயணக்கட்டுரையும், பாசை தெரியா அந்த தருணங்களும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. நன்றீங்க சகோதரி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.
   அப்படித்தான் போல, மைதிலியின் பதிவைப் படித்தவுடன் இதை எழுதத் தோன்றியது. மதுரை சகோ, திண்டுக்கல் காலை ஆறேகால் மணியளவில் வரும், அப்பொழுது மேலே இருந்து இறங்கி அமர்ந்து கொள்வோம், வெளியே பார்க்கவே மகிழ்ச்சியாய் இருக்கும். மதுரையிலிருந்து திரும்பும்பொழுது இரவு 9 மணியளவில் திண்டுக்கல் வரும், மனதை பாரம் அழுத்த மேலே ஏறிடுவோம்..அப்போதெல்லாம் மேல்தட்டு தான் தேர்ந்தெடுப்பது, சற்றுப் பாதுகாப்பாக உணர்வோம், மேலே.
   கண்டிப்பாக சகோதரரின் இல்லத்திற்கு வருகிறேன் ஒரு நாள், நன்றி. நீங்களும் சகோதரியின் இல்லத்திற்கு பெங்களூருக்கு வாருங்கள்.
   உங்கள் இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி.

   Delete
  2. விரைவில் மணவிருந்து போடுங்கள் பாண்டியன்,
   வலைநண்பர்கள் எல்லாருமே உங்க வீட்டுக்கு வந்திடுவோம்ல?
   என்ன சகோதரீ? சரிதானே நான் சொன்னது? அதுக்காக இப்ப நீங்க வரும்போது மணப்பாறை போகவேணாம்னு சொல்லல, தாராளமாப் போய்வாங்க தாயி! நான், நம்ம கஸ்தூரி, மைதிலியெல்லாம் போய்ட்டு வந்தாச்சு அன்பான குடும்பம்.. அருமையான நட்பு பாண்டியனுடையது.

   Delete
  3. சரிதான் ஐயா, கண்டிப்பா போயிருவோம்.
   அதுக்கு முன்னாடி நேரம் கூடினா கண்டிப்பாப் போய்வரேன். நீங்கள், மது,மைதிலி, கீதா அவர்களையும் பார்க்கவேண்டும். உங்கள் அனைவரது நட்பும் அருமையானது.

   Delete
  4. இன்னும் சில வலையுலக நட்புகளையும் காண ஆவலாக இருக்கிறேன்.

   Delete
  5. வருகை தருவேன் என்று சொன்ன அன்பு சகோதரிக்கும், நமது குடும்பம், நட்பைப் பற்றி நல்லவிதமாக சொன்ன கவிஞர் திரு.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள். சகோதரி வரும் போது கண்டிப்பாக நாம் அனைவரும் (நான், நீங்கள். கஸ்தூரி அண்ணா. மைதிலி சகோதரி) நமது வீட்டில் சந்திப்போம் ஐயா. அனைவரின் அன்புக்கும் நட்புக்கும் மிக்க நன்றி..

   Delete
  6. உங்களனைவரின் நட்புக்கும் என் உளம்கனிந்த மகிழ்ச்சியின் நன்றிகள்.

   Delete
 2. வணக்கம்

  தங்களின் பயண அனுபவம் நன்றாக உள்ளது......வாழ்த்துக்கள்.
  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன். உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

   Delete
 3. அருமை கிரேஸ்! பத்தாண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்று விட்டாய்! வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தியானா. மைதிலி இரவு நேரப் பயணம் என்று எழுதியவுடன் எனக்கு நினைவில் வந்துவிட்டது. :)

   Delete
 4. நல்ல கவிதை
  படைப்பு சொந்த வாழ்வின் அனுபவத்தில் இருந்து கசியும் பொழுது
  ஒரு வசீகரிப்பு இருப்பதாக, ஓர் மென் சோகம் இழையோடும் உங்கள் பதிவு சொல்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மது. ஆமாம், முதல் முறை வீடு பிரிந்துவந்த அந்நாட்களில் ஒரு சோகம் இருக்கும், அது இங்கே வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

   Delete
 5. இலக்கிய உலகில் இதற்குப் பெயர் பழமை தாகம் (நஸ்தால்ஜியா) எல்லாருக்கும் இது சுவையானதாகவே இருக்கும். “ம்...அந்தக் காலத்துல... எங்க ஊருல... அப்பல்லாம்...“ என்னும் பெருமூச்சுடனேயே முடியும்... இதுவும் கடந்து போகும்... யாதும் ஊரே யாவரும் கேளிர் இவற்றுக்குள் இது தவிர்க்க முடியாததுதான்... நினைவுப் பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க ஐயா..கடந்த காலத்தை அசைபோடுவதில் சிலநேரம் சுவைதான். உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.

   Delete
  2. க்ரேஸ், நானும் நீங்கள் திண்டுக்கல் என்று ஒரு நிமிடம் அசந்துவிட்டேன். மதுரையானால் என்ன திண்டுக்கல் ஆனால் என்ன. ஒரே பக்கம் தான். திண்டுக்கல் ரயில் நிலையத்தை இன்னும் மறக்கவில்லை.மதுரையையும் தான்.பிறந்த மண்பாசம் யாரைவிட்டது..அருமையான பகிர்வு.

   Delete
  3. ஆமாம் இரண்டு ஊரும் ஒன்றாகவேத் தோன்றும் எனக்கு,,நான் பிறந்தது திண்டுக்கல்லில் தான். பிறந்த மண் பாசம் மண்ணாக ஆனாலும் போகாது.
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோதரி

   Delete
 6. அட... சொல்லவே இல்லை...

  கோபித்துக் கொள்கிறேன்... (ஹிஹி...)

  ReplyDelete
  Replies
  1. இப்போ சொல்லிடுறேன், நான் பிறந்தது திண்டுக்கல்லில் தான்.
   சகோதரர் கோபித்துக்கொண்டாலும் பொய்க் கோபம்தானே, பரவாயில்லை :)

   Delete
 7. நற்பயணம் இங்கே அமுதாய் கவியானது...
  அருமை அருமை சகோதரி...

  ReplyDelete
 8. அனுபவக் கவிதை நல்லாருக்கு கா... இன்னும் எழுதுங்க...

  ReplyDelete
 9. கூட பயணித்தது போல் இருந்தது ...

  ReplyDelete
 10. கிரேஸ் உண்மையா சொல்லனும்ன இதுக்கு நான் இனியாவின் தலைப்பைத்தான் கடன்வாங்கணும் , ஆம் "நன்றி சொல்ல வார்த்தையில்லை". ஒரு குழந்தையின் சிரிப்பு நம்மையும் பற்றிக்கொள்வது போல, ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு ஒளியை ஏற்றுவது போல விகடன் "சபீதா" இதை தொடங்கிவைத்திருக்கிறார்! அப்புறம் நான் சொல்ல நினைத்த எல்லாத்தையும் என் அண்ணனும் , தம்பியும் சொல்லீட்டாங்க! (நிலவன் அண்ணா, பாண்டியன் சகோ). உங்களை பாண்டியன் சகோவின் திருமணத்தில் பார்த்தாலும் சரி, அதற்கு முன் நீங்கள் நம் வீட்டிற்கு வந்தாலும் அந்த நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்! ரொம்ப நன்றி கிரேஸ் செல்லம்!!!:))

  ReplyDelete
  Replies
  1. //ஒரு குழந்தையின் சிரிப்பு நம்மையும் பற்றிக்கொள்வது போல, ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு ஒளியை ஏற்றுவது போல// அழகாச் சொல்லிட்டீங்க. நானும் உங்களை சந்திக்கும் நேரத்திற்கு காத்திருக்கிறேன்..நன்றி மைதிலி.

   Delete
 11. பயணங்கள் இனிமையானவை
  அருமையான கவிதை சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete

 12. வணக்கம்!

  ஊா்சொல்லும் பாப்படைத்தீா்! உண்மையொளி உள்ளத்தின்
  சீா்சொல்லும் பாப்படைத்தீா் சோ்த்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. உங்கள் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

   Delete
 13. ரயில் பயணத்தில் ஊரின் நினைவுகள் அருமை.

  ReplyDelete
 14. சூப்பர் கிரேஸ் ... நானும் பல முறை அனுபவித்துள்ளேன் :)
  பெங்களூரில் இருந்து 'HOSUR' கடந்து வருகையில் சுவரோட்டிக்களில் தமிழை பேச தொடங்கும் போது நம்ம ஊருடானு ஒரு பூரிப்பு ஏற்பட்டும் பாருங்க.. அந்த மாதிரி ஒரு உணர்வு இந்த கவிதை படிக்கும் பொழுது வருது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஸ்ரீனி..உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 15. ஊர்ப் பயணம் சிறப்பாக சொன்னீங்க. வரும் போது எங்களையும் பார்க்க மறக்காதிங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சசிகலா. கண்டிப்பா, பாத்துருவோம்.

   Delete
 16. பயணங்கள் பல சமயங்களில் இனிமையானவை தான். சொந்த ஊர் செல்லும்போது இருக்கும் மகிழ்ச்சி அங்கிருந்து திரும்பும்போது இருப்பதில்லை பலருக்கு.....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்,

   Delete
 17. சொந்த ஊரின் சுகமே தனிதான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. "அரவத்தில் உறங்கமுடியா என்னை
  அலாரமாகக் கொண்டனர் தோழிகள்
  ஊர்சென்று அதிகாலை திரும்புபவரை
  வரவேற்கவும் விழித்திருப்பேன் நான்" என
  அழகாக உள்ளம் பகிர்வதைக் காண முடிகிறதே!

  ReplyDelete
 19. ரெயில் பயணங்களில் – அதுவும் வேலைக்குச் சென்று வந்த நாட்கள் என்றாலே இனிமையான நினைவுகள்தான். படிப்பு, பணி என்று எட்டு ஆண்டுகள் ரெயிலில் பயணம் அமைந்தது எனக்கு.
  தனது அனுபவத்தினைக் கவிதையாகத் தந்த சகோதரிக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ஐயா? அப்போ உங்களுக்கு நல்லாத் தெரியும்.
   உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...