ராணி முகர்ஜி நடித்து 2018இல் வெளியான இந்தித் திரைப்படம் 'ஹிச்கி'. வித்தியாசமான உடல்நலக் குறைபாட்டை சமூகத்தில் அனைவரும் அறிந்திருப்பதில்லை. அது பரவாயில்லை, அனைத்தையும் அறிந்திருக்க முடியாது என்பதை நம் பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, "கற்றது கைமண் அளவு" என்று! ஆனால் ஒரு நோயை அறிய வரும்பொழுது எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் சான்றாண்மை இருக்கிறது!
பொதுவாகச் சமூகத்தில் புதிய ஒரு நோயைக் காணும்பொழுது அதனைக் கிண்டல் செய்வதையும் பாதிக்கப்பட்டவரைச் சாதாரணமாக, சக மனிதராக நடத்தாத நிலையையும் பேசும் இப்படம் இன்னும் சில விசயங்களையும் சிறப்பாக எடுத்துக்காண்பிக்கிறது.
குறையை நினைத்து வருந்தித் தன்னையே சுருக்கிக்கொள்ளாமல் அதனை ஏற்றுக் கொண்டுத் தன்னுடைய குறிக்கோளில் சாதித்துக் காண்பிக்க முடியும் என்பதொன்று. சமூகத்தின் கீழ்மட்டத்திலிருக்கும் குழந்தைகளின் கல்வி நிலைமை, அதில் சமூகம் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டம் என்பதொன்று. அக்குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கிறதென்று மற்றவருக்குப் புரிய வைக்கும் முயற்சியொன்று. ஆசிரியர் பணியைச் தவமெனப் போற்றும் ஆசிரியர்கள் செய்யும் தியாகங்களும் சாதனைகளும் கணக்கிலடங்காதவை என்பதொன்று. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் சமூகத்தின் முதுகெலும்பைப் பேணிக் காக்கிறார்கள் என்பதொன்று.
Image: From the net with thanks |
இப்படிப்பட்ட குறைபாட்டைக் கொண்ட நைய்னா சிறுவயதிலிருந்தே ஒதுக்கப்பட்டும் கேலி செய்யப்பட்டும் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார். அவருடைய தாயும் தம்பியும் தக்க உறுதுணையாக இருக்கிறார்கள். ஆசிரியர் பணிக்குத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் நைய்னா டூரெட் சின்றோமைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுகிறார். ஆனாலும் விடாமுயற்சியுடன் ஆசிரியராக வேண்டும் என்ற குறிக்கோளில் தளராமல் முயற்சிக்கிறார்.
அவருக்கு ஆசிரியப் பணி கிடைக்கிறது. அதில் ஒரு சவாலும் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற சேரிக் குழந்தைகள் இருக்கும் ஒரு வகுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அடாவடித்தனத்தில் மிஞ்சும் அக்குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதில்லை. அதனால் அவ்வகுப்பிற்கு வரும் ஆசிரியர் ஒவ்வொருவரும் ஒரு மாதம் கூட நீடிக்காமல் சென்றுவிடுகிறார்கள். அந்த வகுப்பை மகிழ்வுடன் ஏற்கும் நைய்னா அவர்களின் மனக்குமுறல்களையும் திறமைகளையும் உணர்ந்து அவர்களை அன்பாலும் அக்கறையாலும் வெல்ல முயற்சிக்கிறார். அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும் அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதும் திரைப்படத்தின் கதை.
சேரியிலிருந்து வரும் குழந்தைகளை மற்றவர் மட்டமாக எண்ணுவதும், ஏற்றுக் கொள்ளாததும், அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் கொந்தளிப்பும் வேதனையும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஒரு விசயம், எனக்கு ஏற்கமுடியவில்லை. ஒரு பாடலில் சேரிக் குழந்தைகளைச் சித்தரிக்கும் பாடல் வரிகள் தமிழில் இருக்கின்றன. சேரியைக் கீழாக நான் நினைக்கவில்லை. ஆனால் படிக்காமல் ரவுடித்தனம் செய்யும் பிள்ளைகளாகச் சித்தரிக்கப்படும் பிள்ளைகள் தமிழ் என்று குறிப்பிட்டுக் காண்பித்திருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை. அந்தப் பாடல் இதோ:
அனைத்து இடங்களிலும் கீழ்நிலையில் இருக்கும் மக்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களைச் சமூகம் ஏற்காமல் வேதனைப் படுத்துவதும் அதனால் சிலர் தங்கள் மனக் குமுறல்களை எதிர்மறையாகக் காண்பிப்பதும் உண்டு என்றாலும் கூட இப்படித் தமிழ் என்று தனித்துக் காண்பிப்பது எதற்கோ? ஒருவேளை, தமிழர் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ!
அந்தக் குழந்தைகளிடம் இருக்கும் அறிவும் திறமையும் வியக்க வைக்கின்றன. நாம் தான் அவர்களை நிராகரித்து சமூகத்தில் உடைக்கக் கடினமான ஒரு ஏற்றத்தாழ்வுச் சுவற்றைக் காத்துக்கொண்டே இருக்கிறோம் என்பது வருத்தமானது!
இப்படத்தில், குழந்தைகளின் குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து தெரிந்து கொண்டு, அவர்களின் வாழ்விடத்திற்குச் சென்று பார்த்து, அவர்களை முன்னேற்றத் துடிக்கும் நைய்னாவைப் பார்த்தபொழுது எனக்கு என்னுடைய ஆசிரிய நண்பர்கள் மனக்கண்ணில் வந்தார்கள். நம் வலையுலகில் நன்கு அறிமுகமானவர்கள் தான் அவர்கள். அவர்களுடைய நட்பு கிடைத்ததை எப்பொழுதும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கொள்வேன்.
முத்துநிலவன் அண்ணா, மு.கீதா, கஸ்தூரிரங்கன் அண்ணா, மைதிலி கஸ்தூரிரங்கன், மகாசுந்தர் அண்ணா, ஸ்ரீமலையப்பன் முதலிய ஆசிரிய நண்பர்களுக்கு இப்படம் சமர்ப்பணம். (யார் பெயராவது விட்டுட்டா மன்னிச்சிருங்க :) , எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர்கள் அனைவரும் இப்படிப்பட்டச் சிறந்த ஆசிரியர்களே! )
யஷ் ராஜ் பட நிறுவனத்தின் ஹிச்கி திரைப்படத்தில் ராணி முகர்ஜி தன்னுடைய நடிப்பில் எப்பொழுதும் போல மிளிர்ந்திருக்கிறார். சமூகக் கருத்துகளை எடுத்தியம்பும் படங்களில் நடிப்பது பாராட்டுக்குரியது. குழந்தைகளும் நன்றாகவே நடித்துள்ளனர். நண்பர்கள் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அருமையான விமர்சனம் பார்க்க வேண்டும் மா.
பதிலளிநீக்குநன்றி கீதா. ஆமாம், கட்டாயம் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.
நீக்குநல்லதொரு அறிமுகம். திரையுலகில் பாராட்டுகளையும் பெற்ற ஒரு திரைப்படம். நான் இதுவரை பார்க்கவில்லை. பார்க்க விரும்பினாலும் வாய்ப்பு இல்லை!
பதிலளிநீக்குநன்றி அண்ணா. ஓ!
நீக்கு'தாரே ஜமீன் பர்' பாணி திரைப்படம் என்று தோன்றுகிறது. பார்க்கும் ஆவல் வருகிறது.
பதிலளிநீக்குகொஞ்சம் அதைப் போன்ற கதை. பல கருத்துகளைச் சேர்த்துச் சொல்கிறது. நன்றி ஸ்ரீராம்
நீக்குஉண்மையிலேயே புதுமையான படம்தான்! இப்படி சமுக அக்கறையுள்ள ஒரு படத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
பதிலளிநீக்குசேரிக் குழந்தைகளைத் தமிழர்களாகக் காட்டிய காரணம் மும்பையின் தாராவி எனும் மாபெரும் சேரிப் பகுதியில் இருப்பவர்கள் தமிழர்கள் என்பதால் இருக்கலாம் என்பது என் கணிப்பு. படமும் பார்க்காமல் நீங்கள் இங்கு பகிர்ந்துள்ள காணொலிகளையும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக இப்படிச் சொல்வது தவறுதான். இப்பொழுது மேற்படி காணொலிகளைப் பார்க்க நேரமில்லாததால் சட்டென மனதில் தோன்றியதைச் சொல்லி வைக்கிறேன், அவ்வளவே!
ஆசிரியர் பணியைத் தவமெனப் போற்றும் ஆசிரியர்கள் என்கிற வரியைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தவர் நம் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அவரையும் மதிப்பிற்குரிய முத்து நிலவன் ஐயா முதலான பிறரையும் பதிவின் முடிவில் நீங்கள் பட்டியலிட்டு நினைவூட்டியது கண்டு மகிழ்ச்சி!
ஓ! நீங்கள் சொல்வது பொருத்தமாகத் தான் இருக்கிறது. தாராவி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்லிவிட்டீர்கள். சிறந்த ஆசிரியர் என்றவுடன் நீங்களும் மைதிலியை நினைத்தது மகிழ்ச்சி. இவர்களை நட்பாகப் பெற்றது பெருமகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா 🙏
நீக்குஅம்மா வணக்கம்
நீக்குஉங்கள் கருத்து படம் பார்க்கத் தூண்டுகிறது...சமர்ப்பணம் என்று என் பெயரையும் சேர்த்துள்ளீர்கள்..என் தங்கையின் அன்புக்கு நன்றி...ஆனால் நான் நல்ல ஆசிரியராகப் பணிபரிய முயல்பவன் மட்டுமே...
வணக்கம் அண்ணா. மாணவர்களின் நலம் நாடி பணி செய்யும் நீங்கள், முயற்சிக்கிறேன் என்று சொன்னாலும் வணங்கத்தக்கதே. கஜா புயலின் பாதிப்பைச் சரிசெய்ய பள்ளிக்காக நீங்கள் செய்த பணிகளை அறிவேன் அல்லவா? நன்றி அண்ணா.
நீக்குமும்பை என்றதும் எனக்கும் தாராவியோ எனத்தான் தோன்றியது!!
பதிலளிநீக்குதன் மாணவர்களுக்காக பெரிய பெரிய முன்னெடுப்புகளில் ஈடுபடும்
உழைக்கும் பல முன்னோடிகள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தொடங்கி வீட்டிலேயே ஒரு அர்பணிப்பு மிக்க ஆசிரியர், சமீபமாக இ.புவின் அம்மா வரை எத்தனையோ Inspiration. என்னாலான அளவு அவர்களை அடியொற்ற நினைக்கிறேன். அவ்ளோ தான். உங்க அன்புக்கு நன்றி நன்றி @Dear, @சகா☺ படம் பார்த்துவிட வேண்டும் என ஆவல் தூண்டுகிறது உங்கள் எழுத்து!! இந்த படம் Primeல் இருக்கும் என நினைக்கிறேன். அவசியம் பார்த்துவிடுகிறேன்.
அருமை டியர்! சரியாய் நினைத்துவிட்டீர்கள். உங்களைப் போன்ற உங்களை inspire செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இப்படம் அர்ப்பணம் :). இ.பு. சகோவின் அம்மாவும் ஆசிரியர் என்பதறிந்து மகிழ்ச்சி.
நீக்குநன்றி டியர், ஆமாம் Primeஇல் இருக்கிறது.
மோசமான படங்களை திட்டிக்கொண்டே இருப்பதைவிட இது போலும் நல்ல படங்களை அறிமுகப் படுத்துவதே நல்லது.
பதிலளிநீக்குநன்றி மா பார்த்துவிட்டு சொல்கிறேன்
ஆமாம் அண்ணா. நன்றி.
நீக்கு***அவருக்கு ஆசிரியப் பணி கிடைக்கிறது. அதில் ஒரு சவாலும் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடம்பெற்ற சேரிக் குழந்தைகள் இருக்கும் ஒரு வகுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அடாவடித்தனத்தில் மிஞ்சும் அக்குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதில்லை. அதனால் அவ்வகுப்பிற்கு வரும் ஆசிரியர் ஒவ்வொருவரும் ஒரு மாதம் கூட நீடிக்காமல் சென்றுவிடுகிறார்கள். **
பதிலளிநீக்குயு எஸ் ல இன்னர் சிட்டி ஸ்கூல்ஸ்னு சொல்லுவாங்க. அமெரிக்காதான். உலகிலேயே சிறந்த நாடுதான். ஆனால் இன்னெர் சிட்டி பள்ளியில் எல்லாம் பாடம் சொல்லிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம மாதிரி இந்தியன் இம்மிக்ரன்ட்ஸ்க்கு அப்படி ஒரு உலகம் இருக்குனே தெரியாது. தெரியந்தாலும், இருந்துட்டுப் போகுது நம்ம வேலையைப் பார்ப்போம்னு போயிடுவாங்க. ஒரு சில ஆசிரியர்கள் "கிவ் அப்" பண்ணிடுவாங்க. ஒரு சிலர் வேற இடத்தில் வேலை கிடைக்காததால் அங்கேயே இருப்பாங்க. பல நேரங்களில் நல்ல மாணவர்கள் கிடைக்க மாட்டேன் என்கிறார்களே என்கிற ஏக்கமும் வெறுப்பும்தான் பல ஆசிரியர்களுக்கு மிஞ்சும். நம்ம சும்மா மாணவர், ஆசிரியர் னு பொத்தாம் பொதுவா சொல்லி விடுகிறோம். அதில்தான் எத்தனை ஆயிரக்காணக்கான சூழல்கள் இருக்கின்றன. என்னதான் நல்ல எண்ணத்துடன் படித்து வந்து பாடம் சொல்லிக் கொடுக்க முயன்றாலும் ஒரு சிலரால் ஒரு சில சூழல்களில் சர்வைவ் ஆக முடியாது. யாரையும் குறை சொல்வது கஷ்டம். மாணவர்கள் சூழலில் இருந்து பார்த்தால் அவர்கள் நியாயம் தெரியும்- அதுபோல் இருக்கும் அவர்கள் பவளரும் வீட்டு சூழல். ஆசிரியர்கள் சூழலில் இருந்து பார்த்தால் அவர்கள் பிரச்சினையும் புரியும்.
பல நேரங்களில் எது சரி எது தப்புனு சொல்ல முடியாத அளவுக்குப் போய்விடும்..
சாரி வருண், தாமதமான பதிலுக்கு. ஆமாம், எனக்குத் தெரிந்த ஒருவர் இன்னர் பள்ளி ஆசிரியர். தன் கைக்காசை போட்டு வேறெங்கும் பணி மாற்றம் வேண்டாம் என்று அர்ப்பணிப்புடன் பணி செய்கிறார். என் பிள்ளைகள் நோட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வது சரிதான். அவர் அவருக்கான சூழல் எல்லாம் அமைய வேண்டும்.
நீக்கு