வேதராஜ் தாத்தா


கரும்பாறையினைக் கல்லினால் உராய்ந்ததைப் போல வானில் ஒரு ஒளிக்கீற்று. மனதில் ஒன்று, இரண்டு, மூன்று, நா.. எண்ணுவதற்குள் ஒலித்தது இடி. மூன்று மைல் தொலைவில் மையம் கொண்டிருத்த புயலினால் ஏதோ மரமுதிர்த்த இலைகள் திசை அறியாமல் என் வண்டியின் முன் கண்ணாடியில் தஞ்சம் புகவந்தன. ஆனால் எனக்குச் சாலை காட்டத் துடித்துகொண்டிருந்த முன்துடைப்பான் இலைகளை நொடியில் தள்ளிவிட்டது.


இவற்றை என் கண்கள் பார்த்திருக்க, என்  கரங்கள் சக்கரத்திருப்பியைப் பிடித்திருக்க நினைவோ என் வண்டி சேர்ந்த இலைகளைப் போல எங்கோ சென்று கொண்டிருந்தன.


வேதராஜ் தாத்தா, என் அப்பாவின் அப்பா. சீராகத் தேய்த்து மடிக்கப்பட்ட வெள்ளை வேட்டி சட்டை, இடமிருந்து வலம் சீவி அதில் ஒரு அலையாய், வரப்பாய்த் தூக்கி சீவப்பட்ட ஒரு கற்றை, அதுதான் அன்றைய பாணியென்று நினைக்கிறேன். என் அப்பாவும் அப்படித்தான் தலைவாருவார். ஒரே வித்தியாசம் அன்று தாத்தாவின் முடி வெண்மையாக இருக்கும்.

வேதராஜ் தாத்தா வெளியே கிளம்பி செல்வதே ஒரு தனித்துவமாக இருக்கும். சீராகக் கிளம்பி, வாசல் சென்றவுடன் நின்று இருபுறமும் நிதானமாக ஒரு பார்வையிடுவார். இரு விரல்களால் வேட்டியின் நுனியை மடித்துப் பிடித்திருப்பார். பின்னர் உடையினை மற்றொரு முறை சரிசெய்து கொண்டபின் நடந்து செல்வார். மிடுக்காக இருக்கும்.

நான் கொடைக்கானலில்  இரண்டாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது தாத்தாவிற்குக் கடிதம் எழுதினேன். ஆங்கிலத்தில்! ஆமாம், நான் ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தது அவ்வளவு பெருமை அன்றைக்கு! ஆங்கிலப் புலமையைக் காண்பிக்கத் தாத்தாவிற்குக் கடிதம் அனுப்பிவிட்டு மறந்தும் போனேன். தாத்தா வந்து என் காதைத் திருகும் வரை!

ஆமாம், தாத்தா நான் எழுதியக் கடிதத்துடன் நேரில் வந்துவிட்டார். என்னை அழைத்துக் கடிதத்தை வாசித்துக் காட்டினார். 'It is raining hear' என்று எழுதியிருந்தேன். hear, here பற்றி ஒரு பாடம் எடுத்துவிட்டுத் தான் விட்டார். மறக்கவே மாட்டேனே! இன்றைக்காய் இருந்தால், இங்கு மழை பெய்வதை உங்களுக்காக அனுப்புகிறேன், கேட்கிறதா என்று சொன்னேன் என்று சவடால் விட்டிருப்பேன். அன்று தெரியவில்லை, ஒரு பக்கக் கட்டுரை எழுதிக் கொடுத்ததும் தான் விட்டார். உறவைத் தாண்டி hear என்ற வார்த்தையும், என் காதும், தாத்தாவும் இணைக்கப்பட்டன அன்று. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர் வேதராஜ் தாத்தா. அவருடைய சொல்லாற்றல் அவ்வளவு வளமையாக இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு முழுவதும் புரியாது.

நாங்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாலை வேளைகளில் முட்டை பப்ஸ் வாங்கி வருவார். மதுரை கோரிப்பாளையத்தில் இருந்த தமிழரசி பேக்கரியில் ஆர்டர் செய்துசூடாக வாங்கிவருவார். முட்டை பப்சிற்கு ஏகக்கிராக்கி, தீர்ந்துவிடும். அதனால் முன்பே சென்று ஆர்டர் கொடுத்துக் காத்திருந்து வாங்கி வருவார். தமிழரசி பேக்கரியும், முட்டை பப்சும் தாத்தாவின் அடையாளங்களாயின. பொருட்களை எங்களிடம் கொடுத்தபிறகு மஞ்சள் பையை அவ்வளவு நேர்த்தியாக மடித்து வைப்பார்.

நன்றாக நினைவிருக்கிறது, என்னுடையப் பத்தாம்வகுப்புப்  பொது தேர்வுநேரத்தில் தூய மரியன்னை பேராலயத்தில் இருப்பார், பேத்திக்காக வேண்டிக்கொண்டு.

கேரம், சீட்டாட்டம், தாயம் என்று தாத்தாவுடன் விளையாடிய நினைவுகளும் என் தங்கை அவருடன் கள்ளாட்டம் என்று சண்டையிடுவதும் காற்று அடித்துவந்த இலைகளைப் போலவே நினைவில் மோதிச் சென்றன.

தாத்தாவின் நினைவுகளோடு வண்டியோட்டிக் கொண்டிருந்த நான் இந்நேரம் இந்தியாவில் ஆகஸ்டு இரண்டாம் நாள் விடிந்துகொண்டிருக்கும் என்று கணக்கிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்நேரம் தாத்தாவின் அருகில் இருந்தோம். இரவெல்லாம் அவர் அருகில் இருந்தனர், அப்பாவும் அம்மாவும். தூக்கத்தில் விழித்தும், விழிப்பில் தூங்கியும் பேத்திகள் இரவைக் கடத்தினோம் என்று நினைக்கிறேன்.

விடிந்தது! ஹார்லிக்ஸ் கலந்து அம்மா கொண்டு வர, தாத்தாவை அழைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டினோம். அப்பா எங்கள் அனைவரையும் புகட்டச் சொன்னார். தாத்தா கண் மூடியிருந்தாலும் நாங்கள் அழைத்தது எல்லாம் கேட்டது என்பது எங்கள் குரல் வந்த திசையில் தலையைத் திருப்பியதில் தெரிந்தது. பெரிது பெரிதாக மூச்சுவிட்டார். பின்னர் ஒரு விக்கல் போல் ஒரு சத்தம். தாத்தா இவ்வுலகை விட்டு அன்றைய ஆறரை மணிக்கு  இறைவனிடம் சென்றுவிட்டார்.

உறவுகள் வரவும் பிரார்த்தனை செய்யவும் கண்ணீர்விடவுமாகக்கடந்தது நேரம். தாத்தாவைப் புதூர் லூர்து மாதா ஆலயத்திற்குக் கொண்டு சென்று வழிபாடு முடிந்தபின் நல்லடக்கம் செய்தனர்.  வீட்டிலிருந்து தாத்தாவைத் தூக்கிச் சென்றவர்கள் வாசலில் நிற்காமல் நேராக வண்டியில் ஏற்றிவிட்டனர். பின்னாலேயே சென்று உதிர்ந்திருந்த ரோஜா மலர்களைப் பார்த்தது என் நினைவில். பின்னர் பலமுறை அம்மா வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார், "எப்படி நின்று உடை சரிபார்த்து சாலையை ஆராய்ந்து மிடுக்காகச் செல்வார். ஒரு நிமிடம் நின்றுவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது" என்று.

நான் பனிரெண்டாம் வகுப்பில் இருந்த ஆண்டு அது. பொதுத்தேர்வின் போது எனக்காக வேண்டிக்கொள்ள வேதராஜ் தாத்தா இல்லை. அப்பொழுது நினைக்கவில்லை, ஆனால் பின்னர் மதிப்பெண்கள் வந்தபொழுது குறைவாக வாங்கி பள்ளி ரேங்க் பட்டியலில் இடம்பெறாததால் தாத்தாவை நினைத்துக் கொண்டேன். பத்தாவதில் தாத்தா இருந்தபொழுது ரேங்க் வாங்கினோம் என்று. அது ஏதோ சிறுபிள்ளைத்தனமான எண்ணம், தாத்தாவைத் தேடும் ஏக்கமே அது.

வானம் பார்த்து எத்திசையிலாவது மழை பொழிகிறதா என்றும் மழை வருமா வராதா என்றும் சொல்லும் அவரை நம்பாமல் சிரித்ததாக என் தங்கை நினைவுகூர்கிறாள்.
தோல் சுருங்கியபிறகு தாத்தாவை நவாப்பழத்தாத்தா என்று கிண்டல் அடித்திருக்கிறோம். தங்கையும் நினைவுகளைப் பகிர்ந்ததில் இப்பத்தியைச் சேர்த்தேன்.

எப்பொழுதும் தாத்தா பாட்டி நினைவுகள் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவர் இறந்த நாளைச் சுற்றி அதிகமாக நினைவலைகள் எழும். கடந்த ஒரு வாரகாலமாக வேதராஜ் தாத்தாவின் நினைவுகள் அதிகம்.



am fine thatha, it's raining here, hear thatha :) அமைதியில் இளைப்பாறுங்கள்.


14 கருத்துகள்:


  1. எனது தாத்தாவும் இப்படித்தான் ஒரு விக்கலோடு இறந்து போனார் அதிக பேரப்பிள்ளைகள் இருந்து அருகில் இருந்தது நான் மட்டுமே.... இப்போது தாத்தா பாடியின் நினைவுகள் எல்லாம் வெகு தூரமாகி போகின அம்மாவின் நினைவுகள்தான் அடிக்கடி வந்து போகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சகோ..
      புரிகிறது, அம்மா இறந்து ஓராண்டு அல்லவா?
      எப்பொழுதும் உங்களுடன் இருப்பார், பிரார்த்தனைகள் சகோ.

      நீக்கு
  2. // இரு விரல்களால் வேட்டியின் நுனியை மடித்துப் பிடித்திருப்பார். பின்னர் உடையினை மற்றொரு முறை சரிசெய்து கொண்டபின் நடந்து செல்வார். மிடுக்காக இருக்கும்... //

    காட்சிகள் கண் எதிரே... கண்ணீருடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, இன்றும் மனதில் பசுமையாய் அக்காட்சி!
      நன்றி .

      நீக்கு
  3. மனதைத் தொட்ட பதிவு. என் தாத்தாவின் நினைவு வருகிறது. எங்களுக்காக ஓவியம் வரைவது, படித்துச் சொன்னது என பலதும் செய்திருக்கிறார். நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய, ஆனால் ஏங்கச்செய்யும் நினைவுகள், இல்லையா அண்ணா! தாத்தாவின் ஓவியத்திறமை உங்கள் பெண்ணிற்கு வந்துவிட்டதே :-)

      நீக்கு
  4. க்ரேஸ்....ஹையோ எனக்கும் என் தாத்தாவின் நினைவுகள்! தாத்தா பாட்டி படத்திற்கு எழுதிய கதையில் இருக்கும் தாத்தா அப்படியே என் தாத்தாதான்.

    உங்கள் வரிகள் பல அவது நினைவுகளை என் மனதில் எழுப்பி விட்டது. ஒரு வாரம் நினைவு தப்பி இருந்தார். நான் அவர் அருகில் தினமும் இருந்து கொண்டு அவர் தினமும் கீதை வாசித்து வந்ததால், அதுவரை அப்புத்தகம் அருகில் கூடச் சென்றிருக்காதவள் அவருக்காக அதை தினமும் காதருகில் வாசித்தேன். ஒரு வாரம்தான் ...

    அவரும் இப்படித்தான் எங்களுக்கு கடலை மிட்டாய், குச்சி ஐஸ் என்று எல்லாம் வாங்கித் தருவார். வள்ளியூரில் இருந்த சமயம்..

    உங்கள் தாத்தாவின் மொழிப்புலமை உங்களுக்கும் அப்படியெ வந்திருக்கிறது! க்ரேஸ். காட்சிகள் கண் முன்னே!! அருமை க்ரேஸ்''

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் கீதா.

      தாத்தாவின் நினைவுகள் நெருக்கமானவை, இல்லையா? தாத்தா பாட்டி கதை படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் பார்க்கிறேன் கீதா.
      அவரருகில் இருந்து கீதை வாசித்தது ஒரு திருப்தியும் ஆசிர்வாதமும்! கேட்டு மகிழ்ந்து வாழ்த்தியிருப்பார். உங்கள் நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி கீதா.
      அப்படிப் புலமை வந்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். மனம் நிறைந்த நன்றி கீதா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. ம்ம்ம்..
      உங்கள் தந்தையார் பற்றி நீங்கள் எழுதியதும் நினைவு வருகிறது அண்ணா.

      நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...