Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்

       வேலூரில் வாழும் அத்தை வீட்டில் தங்கி மேல்நிலைப் பள்ளியிலும் பின்னர் கல்லூரியிலும் படிக்கும் திட்டத்தில் சென்னையிலிருந்து வேலூர் செல்கிறான் கிச்சா. ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதனால் அக்கௌன்ட்டன்சி பாடத்திற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடு. வாத்தியார் வீட்டைத் தேடி செல்லும் அவன் தெருமாறிச் சென்று உமாவைச் சந்திக்கிறான். இச்சந்திப்பு கிச்சா மற்றும் உமாவின்  வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவந்தது என்பதை அவர்கள் குடும்பப் பின்னணியோடு இணைத்து தெளிந்த நீரோட்டம் போலச் சீராகச் சொல்கிறது Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் என்கிற நாவல்.
       வேலூரில் கிச்சா சந்திக்கும் இளைஞர்கள் பல குடும்பச் சூழல்களில் வாழ்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவர் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களிடையே இயல்பாக உருவாகும் சுயநலமில்லா நெருக்கமான நட்பு, நண்பர்கள் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் என்று ஓர் இனிய வாழ்வியலைச் சொல்கிறது இந்நாவல். தொன்னூறுகளில் அல்லது அதற்கு முன்பாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்க ஏதோ ஒரு வேர் இந்நாவலில் கண்டிப்பாக இருக்கும்.
       விஜய், எலி மாம்ஸ், ரகு, குரு இவர்களின் நட்பு கிச்சாவிற்குப் புதுஅனுபவமாக இருக்கிறது. பல பள்ளிகள் இடம்மாறி நிலையான நட்பு என்பதே இல்லாமல் இருந்த கிச்சா வேலூரில் கிடைத்த நண்பர்களின்  நட்பைப் பெரிதும்பாராட்டி விரும்புகிறான். அத்தோடு உமாவின் நட்பு, பெண்ணின் நட்பு. ஆங்கிலம் கலந்து நண்பர்கள் பேசிக்கொள்வது இயல்பாக நம் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களைக் கண்முன் நிறுத்தும். இந்நாவலில் பாசாங்கு இல்லை, தேவையற்ற ஒப்பனைகள் இல்லை.
       உமாவும் கிச்சாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் ரம்மியமாகவும் கண்ணியமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் ஒருவர்மேல் காட்டும் அக்கறையும், கோபமும், அன்பும் இலைமறை காயாக அவர்களிடையே மலரும் காதலைச் சொல்லும். பெங்களூரு செல்லும் ரயில் நகரத் துவங்கியதும் ட்ரெயினில் சென்றதே இல்லை என்று ஆசைப்பட்ட உமாவை கிச்சா ரயிலுக்குள் இழுத்துக் கொள்ளும் காட்சி அடடா, காதலின் மென்மை. பெங்களூருவில் வேலை முடித்து திரும்பும்போது ரயில் படிக்கட்டில் உட்கார்ந்து பயணிக்கும் சிறிய இன்பம் உணர்த்துவது என்று கிச்சா ஒரு காதல் மன்னன்.
       ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரமாதம் என்றாலும் நான் ஒரு பெண் என்ற ரீதியில் உமாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். தைரியமான பெண் உமா, தாயை இழந்தவள், வலிகளைத் தன்னுள் மறைத்துவைத்து உலா வருகிறாள். அவளுடைய நேர்கொண்ட பேச்சும், சீரிய சிந்தனையும், சி.ஏ. ஆகவேண்டும் என்கிற கனவும், தனது நோக்கத்தில் கவனமாக இருக்கும் குணமும் என்று உமா வெகுவாக ஈர்த்துப் போகிறாள். பொதுவாகப்  பெண்களை அச்சம் கொண்டவர்களாக,  இல்லை அதிக சீன் போடுபவர்களாக தனித்துவமில்லாமல் காண்பிக்கும் கதைகளில் இருந்து இந்நாவல் வேறுபடுகிறது.
       தெளிந்த அறிவிலும், ஆண் நண்பர்களுடன் இயல்பாகப்  பழகுவதிலும், படிப்பில் கவனமுடன் நண்பர்களையும் ஊக்குவித்து, தங்கை மற்றும் அப்பாவைக் கவனித்துக் கொள்ளும் அன்பிலும் உமா சிகரமாக நிற்கிறாள்.
கிச்சாவும் உமாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவர் ஒருவருக்காகச் செய்யும் சிற்சில விசயங்கள் மென்மையாய் மனம் தொடும். உதாரணத்திற்கு, உமா பிறந்த நாளை அறியாதவன் போலவே இருந்துகொண்டு அவளுக்குப் பிடித்தமான விசயத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறான் கிச்சா. உமா அவள் அம்மாவுடன் ஆண்டுதோறும் கைதிகளைச் சந்திக்கவரும் உறவினர்களுக்கு உணவும் குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான்களும் கொடுப்பது வழக்கம். அவள் அம்மா இறந்த பிறகு நின்றுபோன அப்பழக்கத்தினை மீண்டும் பரிசளித்து உமாவின் மனதில் சிம்மாசனம் கொள்கிறான் கிச்சா. காட்டுக்குள் சென்று அருவியில் குழந்தையாய் மாறி உமா விளையாட, தூரம் நின்று பாதுகாவலாய்க் கண்ணியம் காப்பதில் கிச்சா வாசகர் மனதில் சிம்மாசனம் கொள்கிறான்.
       உமா மட்டும் சளைத்தவளா என்ன? கிச்சாவை அவன் அம்மாவுடன் இயல்பாகப் பேசவும் அன்பு காட்டவும் செய்கிறாள். அவன் அம்மாவின் அன்பைப் புரிய வைக்கிறாள். கிச்சா தன் அத்தை மூலம் அறிந்து கொண்ட பங்கஜம் பாட்டியின் சாயலை உமாவிடம் பார்க்கிறான்.
       ஆமாம், பங்கஜம் இந்நாவலில் இணைக்கோடாகச் சொல்லப்படும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கதை நாயகி. பங்கஜமும் உமாவும் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக மிளிர்கிறார்கள். குருக்களின் மகளான பங்கஜம் சூழ்நிலை அமைத்துக் கொடுத்த காதலில், மீனவச் சமூகத்தைச் சேர்ந்த வீரனைக் காதலிக்கிறாள். அப்பப்பா! என்ன ஒரு தீரம் பங்கஜத்திற்கு! முடிவில் உறுதியாக உயிருக்கு ஆபத்து வந்தபோதிலும் தெளிவாகச் செயல்பட்டு காதலனையும் காப்பாற்றி அவன் கரம் பிடிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் பங்கஜத்தின் தீர்க்கமான முடிவுகள், அப்பப்பா, அபாரம்! பெண் என்றால் அவரைப் போல்தான் இருக்கவேண்டும்.
       உமாவும் கிச்சாவும் சி.ஏ. படிப்பை வெற்றிகரமாக முடித்து ஆடிட்டர் ஆனார்களா? லைசென்ஸ் இல்லாமல் காரோட்டி விபத்துக்குள்ளாகி ஒரு முதியவரின் உயிர் பிரிய காரணமாகும் உமாவின் படிப்பு தடைபட்டதா? உமா கிச்சாவின் காதல் வென்றதா? கிச்சாவின் நண்பர்கள் விஜய், குரு, எலி மாம்ஸ் என்ன ஆனார்கள்? அறிந்து கொள்ள ஒரே வழி 'Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்' உங்கள் கரங்களில் தவழ வேண்டும். அதற்கான வழியை இந்த இடுகையின் கடைசியில் தருகிறேன்.
       இரு கதைகளிலும் நடுநாயகமாய் பாலாறு. அவ்வளவு வெள்ளம் ஓடிய ஆறு இன்று மணல் மட்டும் கொண்டு, அதனையும் திருடும் காலத்தில் நாம் என்று நினைக்கையில் வேதனை கொள்கிறது மனம். திருத்தொண்டர் புராணத்தில் இருந்து ஒரு பாலாற்றைப் பற்றிய ஒரு பாடல் கொடுத்திருப்பது அழகு! குழந்தையின் கரம் வருடும்போது பால் பொங்கும் தாயின் மார்பைப் போல உழவர்கள் வேளாண்மை செய்யும் பருவத்தில் மண்ணைப் பிசைந்து பிடித்துவைக்கும் வாய்க்கால்களை நிரப்பி இருபுறமும் நிறைந்தோடி பண்ணை மடைகளின் வரப்பினை உடைத்து ஓடுமாம் பாலாறு! கண்முன் பாலாறு ஓடும் காட்சி அழகாக!
       பாலாற்று வெள்ளத்தில் பரிசல் ஓட்டும் கருப்பன், அவனுடைய திறமையில் நம்பிக்கை கொண்டு பயணிக்கும் பங்கஜம், தொலைந்து போகும் அவளுடையச் சங்கிலி. விறுவிறுப்பான காட்சிகள் கண்முன் விரிய வைக்கும் இந்நாவல். வெள்ளத்தில் பாய்ந்து சங்கிலியை எடுப்பானா கருப்பன் என்று கரையில் கால்கள் கட்டப்பட்டுக் காத்திருக்கும் பங்கஜத்தோடு நாமும் படபடப்பாய்ச் காத்திருப்போம். அந்தச் சங்கிலி இன்றைய கதையில் பொருந்தி வருவது அருமையான இணைப்பு.
        உமாவின் அப்பாவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரம். மனைவியின் மறைவினால் சோகத்தில் தன்னைத் தொலைத்தவர், மகளுடன் நட்பாக பழகுவதில் மனம் கவர்கிறார். கிச்சாவின் அத்தை கதை ஓட்டத்தில் தேவைக்கு வந்து போகும் மிதமான ஒரு கதாபாத்திரம்.
       வேலூரில் கிச்சாவின் உறவினர்கள் மருத்துவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் சொல்லும் போக்கில் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை துவங்கப்பட்ட வரலாற்றை இணைத்திருப்பது அருமை. ஆங்கில மருத்துவரின் மகள் ஐடா என்பவர் வேலூர் சுற்றுவட்டாரத்தில் இந்து முஸ்லிம் பெண்கள் தேவையான மருத்துவ உதவி கிடைக்காமல் பிரசவத்தில் உயிர்விடும் நிலைமை பார்த்து இலண்டன் சென்று மருத்துவம் பயின்று வருகிறார். தந்தையுடன் சேர்ந்து மக்களுக்குச் சேவை செய்த அவர், பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியை நிறுவுகிறார். ஆசியாவிலேயே பெண்களுக்கான முதல் செவிலியர் கல்லூரி துவங்கிப், பின்னர் பெண்கள் மருத்துவராகவும் ஆக வேண்டும் என்று முயற்சியில் இறங்குகிறார். எதிர்ப்புகளுக்கிடையே 1918ஆம் ஆண்டு பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி, வேலூர் கிறித்தவக் கல்லூரி துவங்கிப் பின்னர் அதில் 1945இல் இருந்து ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஐடாவின் முயற்சியால் வேலூர் பொது மருத்துவமனை 1928இல் நிர்மாணிக்கப்பட்டது. திருச்சபைகள் உதவி கரம் நீட்ட, வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடைகள் பெற்றுவந்தார் ஐடா.
       நீட் என்று மருத்துவக் கல்வி கேள்விக்குரியதாகும் நிலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கவேண்டும் என்று முயன்று வெற்றிகண்டு மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும் அமைத்த ஐடா அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவர்.
       மொத்தத்தில் 'Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்' நட்பும் காதலும் வீரமும் இயற்கையும் வரலாறும் ஒருங்கேப் படைக்கும் ஒரு பிரமாதமான புதினம். இசைப் பிரியர்களுக்கு இளையராஜாவின் பாடல் வரிகளும் நண்பர்களின் இசை அட்டகாசங்களினால் கிடைக்கும் போனஸ்.
       பாடல் வரிகள் எனக்குப் பரிச்சயம் இல்லாததால் அந்த இடங்களில் மட்டும் சற்று வறட்சியாக உணர்ந்தேன். பாடல்களைப் பாடி வளர்ந்திருந்தால் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
       நூலறிமுகம் செய்வது எளிதான காரியமல்ல! நூலைப் பற்றியும் என்னைக் கவர்ந்தவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டும், அதே நேரத்தில் அதிகம் வெளிப்படுத்தவும் கூடாது. வாசகரை நூலினை வாசிப்பதற்குத் தூண்டும் விதத்தில் இருக்கவேண்டுமே ஒழிய அவருடைய வாசிப்பனுபவத்தைச் சற்றேனும் குறைத்துவிடக் கூடாது. இவ்வகையில் சற்றுத் தடுமாறித்தான் போனேன். நாவலில் அத்தனை விசயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அந்நாளைய இயற்கைச் செல்வம், அன்றாட வாழ்வின் சாயல்கள், தமிழ் இனிமை, நட்பு, காதல் என்று பல. ஆனால் அனைத்தையும் பகிர்ந்துவிடக் கூடாது அல்லவா? இதோ, நூல் பற்றிய தகவல். வாசித்து மகிழுங்கள். நன்றி.

நூல் தலைப்பு: Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்1983-1920
ஆசிரியர் : மலர் - விசு;  viswanathanrichards@gmail.com
வெளியீடு: வாசகசாலை பதிப்பகம், சென்னை
மின்னஞ்சல்: vasagasalai@gmail.com

இந்நாவலை எனக்கு அனுப்பிவைத்த என் நண்பர், இந்நாவலின் ஆசிரியர்களில் ஒருவரான விசு அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்!

21 கருத்துகள்:


  1. எப்படிப்பா வேலைக்கும் போய், கதை புத்தகத்தையும் படித்து அதற்கு விமர்சனமும் எழுத உங்களால் முடிகிறது யூ ஆர் ரியலி ஸ்மார்ட் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கதையை பொறுத்து இருக்கு மதுர ! :)

      நீக்கு
    2. மதுரை சகோ, வேலைக்குப் போகாமல் இருந்திருந்தால் ஏப்ரல் மாதமே விமர்சனம் வெளிவந்திருக்கும். :)
      மிக்க நன்றி சகோ

      நீக்கு
    3. @விசு, ஹாஹா அதுவும் சரி..இதுவும் சரி :))))))))

      நீக்கு
  2. எழுதிய நாவலை மீண்டும் ஒரு முறை வாசித்தது போல் இருந்தது.
    நன்றி �� தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி, மலர். சிறந்த நாவலைப் படைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

      நீக்கு
  3. நல்லதொரு அறிமுகம். நண்பர் விசு அவர்களின் கைவண்ணத்தில் உருவானது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் ஆழ்ந்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை ஆழமான விமர்சனம் சொல்கிறது. நீரோட்டம் போல தங்கு தடையற்ற எழுத்து. வாழ்த்துகள் கிரேஸ். நூலாசிரியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. கிரேஸ் ...

    அருமையான விமர்சனம். மிகவும் ரசித்து படித்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விசு. அருமையான நாவலுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
      அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  6. நீங்கள் இட்டுள்ள புத்த படத்தில் பின்புறத்தில் அடியேனின் விசுவாசமின் சகவாசம் புத்தகமும் அமர்ந்துள்ளது இரட்டிப்பான மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  7. க்ரேஸ் மிக அருமையான விமர்சனம். அதுவும் உங்கள் தமிழ் மொழி பற்றிச் சொல்லவும் வேண்டுமா!!!

    மலர் - விசுவின் அருமையான நாவல். நான் ரசித்து வாசித்தேன்.

    மலரின் தமிழும் மிக அழகான மொழி நடை!! விசுவின் குறும்பு, நகைச்சுவையுடன் கூடிய எழுத்து என்று கலக்கலான ஒரு படைப்பு.

    உமா என்னையும் ஈர்த்தாள். முடிவில் கண்ணில் நீர் துளிக்கவும் வைத்தாள். மிக தைரியமான பெண். கேரக்டர் படைப்பு செமையா இருக்கும்..

    நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்ற வகையில் எங்கள் தளத்தில் எழுதினேன். ஆனால் உங்கள் அளவிற்கு எழுதவில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன். எனக்கு மொழி ஆளுமையும் கிடையாதே!!

    முதலில் எனக்கு எழுத வந்தால்தானே!!! அதுவும் நூல் விமர்சனம் என்பதெல்லாம் மிக மிகக் கடினமான ஒன்று.

    அருமையாக எழுதியிருக்கீங்க க்ரேஸ்! பாராட்டுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹே கீதா, எப்டி இருக்கீங்க? உங்கள் பாராட்டிற்கு மனம்நிறைந்த நன்றிகள் கீதா.
      நீங்கள் ரசித்தவற்றைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நம் ரசனை ஒன்றாகவே இருக்கிறது.
      உங்களுக்கு மொழி ஆளுமை கிடையாதா!!! கீதாஆஆஆஆ... :)))
      அன்பும் நன்றியும் கீதா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...