வாசித்தல் - அமர்ந்திருக்கும்பொழுதே அண்டம் தாண்டியும் அழைத்துச் செல்லும், என்றோ வாழ்ந்தவரை அறிமுகம் செய்யும், வாழ்வை இரசிக்கச் செய்யும், நாளை வருபவர்க்கும் நல்வழி காட்டச் சொல்லும். எந்த வயதிலும் மகிழ்வூட்டும்.
பள்ளியில் இரண்டு வாரங்கள் தொடரும் புத்தகத் திருவிழா. ஆண்டுதோறும் இருமுறை இருக்கும். ஷ்கொலாஷ்டிக் நிறுவனம் (http://www.scholastic.com/home/) பள்ளிகளுடன் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். விலைக்கு வரித்தள்ளுபடி செய்யப்படும்.
இந்திந்த நாட்களில் இந்த நேரத்தில் இந்த வகுப்பு என்று திட்டமிடப்பட்டுப் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்படும். ஆசிரியர் மற்றும் உதவி செய்ய அந்த வகுப்பின் 'ரூம் மாம்' (room mom) என்று அழைக்கப்படும் அம்மாவும் (அந்த வகுப்பின் ஒரு குழந்தையின் அம்மா, தன்னார்வப் பணியாக அந்த வருடம் முழுவதும் ஆசிரியருக்குப் பல உதவிகள் செய்பவர்) சேர்ந்து பிள்ளைகளை அழைத்து வருவர்.
பெற்றோர் குழந்தைகளிடம் பணம் கொடுத்து விடலாம் அல்லது அந்த நேரத்தில் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளையுடன்(களுடன்) புத்தங்ககளைப் பார்வையிட்டும் பார்த்து வாங்கலாம். இதுபோக பிள்ளைகளின் மதிய உணவு இடைவேளையின் போதும் வந்து பார்த்து வாங்கலாம்.
வகுப்பறைக்கும் நூலகத்திற்கும் தேவையான புத்தகங்களின் அட்டவணையையும் அந்தந்த ஆசிரியரின் பெயருக்குக் கீழே வைத்திருப்பர். விருப்பமுள்ளோர் அதிலிருந்து தேர்வுசெய்து வாங்கிக் கொடுக்கலாம்.
மாணவர்கள் தங்கள் விருப்பப்படியும் வகுப்பறைக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம்.
விற்பனையில் ஒரு சதவிகிதம் பள்ளிக்கு நூட்கள் வாங்குவதற்காக ஒதுக்கிவிடும் ஷ்காலஷ்டிக் நிறுவனம். மாணவர், பள்ளி, நிறுவனம் என்று முத்தரப்பிலும் பயன்!
இந்தப் புத்தகத் திருவிழாவிற்கெனவே பெற்றோர்களால் ஆன தனிக்குழு இருக்கும். அனைத்துத் தயாரிப்பு வேலைகளும் இவர்களே! பிறகு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு விற்பனையில் உதவி செய்யப் பெற்றோர்கள் தன்னார்வமாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
புத்தகத் திருவிழாவில் விற்பனையைக் கவனித்துக்கொள்வது, பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் புத்தகம் அவர்கள் கொண்டு வந்திருக்கும் பணத்திற்குள் தேர்வு செய்ய உதவுவது என்று பணிகள் இருக்கும்.
ஆண்டு துவக்கத்திலேயே தன்னார்வ உதவி செய்ய ஆர்வமுள்ள பெற்றோர் எந்த எந்த பணிகளுக்கு என்று பதிவு செய்துவிட வேண்டும். அவர்களுக்கே அவ்வப்பொழுது அவர்களின் விருப்பத்திற்கேற்றபடி பற்பல பணிகளுக்கான மின்னஞ்சல் அனுப்பப்படும். அப்போதைய நிலைமைபொறுத்து உதவி செய்யலாம் அல்லது விட்டுவிடலாம்.
ஆமாம், நீங்கள் ஊகித்தது சரியே, பல அட்டவணைகளில் என் பெயர் இருக்கும்! பிள்ளைகளுக்காக வீட்டில் இருக்கிறேன் அவர்களுக்காகவே அதிகம் நேரம் செலவழிப்பேன் என்பதில் மிகத்தெளிவு! மகிழ்ச்சி!
என் மூத்தவன் கிண்டர்கார்டன் படிக்கும் பொழுதிலிருந்து (அவன் இப்பொழுது எட்டாம் வகுப்பு) இன்று வரை பள்ளியில் என் தன்னார்வப் பணி தொடர்கிறது. இந்தியாவில் இருந்த ஓர் ஆண்டு மட்டும் விடுப்பு. மூத்தவன் நடுநிலைப் பள்ளிக்குச் சென்றபிறகு இரண்டு பள்ளிகள்! ஆனால் ஆரம்பப் பள்ளியைவிட நடுநிலைப் பள்ளியில் குறைவு.
புத்தகத் திருவிழாவிற்கும் ஆண்டுதோறும் சென்றுவிடுவேன். பெரும்பாலும் விற்பனைப் பதிவு, சில நேரம் புத்தகம் கண்டுபிடிக்க உதவி என்று மாற்றி மாற்றிச் செய்வேன். ஆஹா! எவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன! அனைத்தையும் படிக்க ஆசை!
புத்தக விற்பனையில் உதவும் பெற்றோரின் பிள்ளைகளுக்குப் பத்து சதவிகிதத் தள்ளுபடியும் உண்டு. அதையும் கணக்கிட்டு அந்தப் பணத்திற்கும் நூல் வாங்கிவிடுவான் என் இளையவன்.
நான் விரும்பிச் செய்யும் பல பணிகளில் இதுவும் ஒன்று. புத்தகங்களுக்கு இடையில் இருக்க கசக்குமா என்ன? அதிலும் அரும்புகள் நூல் தேர்வு செய்வதையும், தங்களிடம் இருக்கும் பணத்திற்கு எதை வாங்கலாம் என்று கணக்கிடுவதையும், அதற்கேற்றார் போல் தெரிவு செய்வதையும் பார்க்க பார்க்க நன்றாக இருக்கும்.
நான் பார்த்தவரையில் பெற்றோர் உடன் இருந்தால் அதிக விற்பனை. ஐயோ! இவ்வளவு ஆகிவிட்டதா என்று அங்கலாய்த்துக் கொண்டே வாங்கிச் செல்வர்!
குழந்தைகள் எந்த மாதிரி புத்தகங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்
நீக்குபள்ளியில் புத்தகக் கண்காட்சி
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரிய செயல்
தங்களின் பணிபோற்றுதலுக்கு உரியது சகோதரியாரே
வாழ்த்துகள்
ஆமாம் அண்ணா. பெங்களூருவில் மகன் படித்த ஒரு வருடத்தில் அப்பள்ளிக்கூடத்திலும் இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிதாக இல்லை. அவர்களாக வந்து ஒரு சிறு நூல்தாங்கியில் (book stand?) வைத்திருந்தார்கள்.
நீக்குநன்றி அண்ணா. நான் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்கிறது அவ்வளவுதான் அண்ணா.
ஆகா...! குழந்தைகளுக்கும் வாழ்த்துகள் சகோதரி...
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குபயனுள்ள பணி. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு