ஐங்குறுநூறு 206 - காவல் காரனாய் இருந்த உன்னை...

கொட்டும் மழையும் வழுக்கலானப் பாதையும் தடுக்குமோ கண்ணே, உனை நான் காண? மலையைக் காக்கும் காவலன் நான், கள்வனாய் வந்தேன் உனைக் காண...


ஐங்குறுநூறு 206
பாடியவர் கபிலர், தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்த குறிஞ்சித் திணை பாடல்.
"அன்னாய் வாழி வேண்டு அன்னை உவக்காண் 
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன் 
தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் 
பாசி சூழ்ந்த பெருங்கழல் 
தண்பனி வைகிய வரிக்கச் சினனே"

Please click here for the English translation, Sentinel of the rainy hills.



எளிய உரை: வாழ்க அன்னையே! அங்கே பார், மழைக்கால மலையிடத்தைக் காப்பவனைப் போல மழையில் நனைந்த ஒளி பொருந்திய வாளை அணிந்துகொண்டு, பாசி சூழ்ந்த வீரக் கழலும் குளிர்ந்த கச்சையும் அணிந்தவனாய் வந்துள்ளவனை.

விளக்கம்: தலைவன் இரவுக்குறிக்கண்  வந்தது கண்டு தோழி தலைவியிடம் அவன் வரவைச் சொல்கிறாள், இது வரவுணர்த்தல் எனப்படும். 
குளிர்ந்த பனி பொழியும் இரவு. தலைவன் தலைவியைக் காண இரவில் வருகிறான். யாரும் அறியா வண்ணம் வருவதால் காவல் காப்பவனைப் போல வாளைத் தன் குளிர்ந்த கச்சில் தொங்கவிட்டுக்கொண்டு வருகிறான்.  தலைவன் காலில் அணிந்துள்ள வீரத்தின் அடையாளமான கழல் (தண்டை), பாசி சூழ்ந்திருப்பதையும், அவன் இடையில் இறுக்கக் கட்டிய வரிகளுடைய கச்சில் பனி தங்கியிருப்பதையும் கண்ட தோழி, அவற்றைப் பொருட்படுத்தாது உன்னைக் காண வந்திருக்கிறவனைப் பார் என்று தலைவியிடம் பெருமிதமாகச் சொல்கிறாள். தேங்கிய நீர்நிலைகளில்  உள்ள நீர்ப்பாசி அவன் கழலில் ஒட்டியுள்ளது. தலைவன் மழையையும் பாசி படர்ந்த நீர்நிலைகளையும் பொருட்படுத்தாது, தலைவியைக் காண வந்துள்ளான். 
தன் தோழியை (தலைவியை) விரும்பும் தலைவன் அவளுக்காக இடர்களைப் பொருட்படுத்தாது வருகிறான் என்பது  தோழிக்கு மகிழ்வும் பெருமிதமும் தருகிறது.

சொற்பொருள்: அன்னாய் - தாய், வாழி - வாழ்க, வேண்டு அன்னை, கேட்பாயாக, உவக்காண் - அங்கே பார், மாரி - மழை, குன்றத்து - மலை, காப்பாள் - காவல் தொழிலைச் செய்யும் ஆள், அன்னன் - போல, தூவலின் நனைந்த - மழையால் நனைந்த , தொடலை - தொங்கவிடப்பட்ட, ஒள் வாள் - ஒளிவீசும் வாள், பாசி சூழ்ந்த - நீர்ப் பாசி சூழ்ந்த, பெருங்கழல் - வீரச் சிறப்புப் பொருந்திய கழல்,தண்டை, தண்பனி - குளிர்ந்த பனி, வைகிய - இறுக்கமாக, வரிக்கச் சினனே - வரிகளுடைய கச்சை அணிந்தவனே 

என் பாடல்:
"வாழிய தோழிஎன் வாய்மொழி கேளு
கார்மழை மலையின் காவலன் போல 
தூவலில் நனைந்த உடைவாள் மின்ன 
வீர கால்கழல் பாசி சூழ
கூதல் வரிக்கச்சை வந்தவர் பாராயோ "

32 கருத்துகள்:

  1. அருமை சகோதரி! உங்கள் எளிய விளக்கங்கள் வெகு எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகின்றது. மட்டுமல்ல உங்களின் பாடலும் அதை மிக அழகாக உணர்த்துகின்றது. எங்களைப் போன்ற சாமானியர்களும் அறிந்து கொள்ளும் வகையில். உங்களது பாடல்கள் தமிழ் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் நம் மாணவச் செல்வங்கள் ஒருவேளை தமிழை ஆர்வமுடன் கற்பார்களோ என்றும் தோன்றுகின்றது. ஏனென்றால் மனப்பாடப் பகுதி, தெளிவுரை என்று, அர்த்தம் என்று நம் பண்டைய இலக்கியங்கள் தற்போதைய குழந்தைகளை, அவற்றின் சுவை அறியவிடாமல் தூர வைத்துவிடுகின்றனவோ என்று தோன்றுவதால். தங்களின் பாடல்களை முதலில் சொல்லிவிட்டு, அதற்கான நம் இலக்கியப் பாடல் (ஒரிஜினல்) என்று புரிய வைத்தால் எளிதாகுமோ. அப்படியாவது இனி வரும் தலைமுறை தமிழ் கற்பார்களோ என்ற ஒரு நல்லெண்ணத்தினால் தான்.....

    இது தவறு, சரியல்ல என்றால் இங்கு வரும் தமிழ் பெருந்தகையோர் எங்களை மன்னித்துவிடுங்கள்.

    மிகவும் ரசிக்கின்றோம். உங்கள் பாடல்களை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன் சகோதரரே, என் மனமார்ந்த நன்றிகள். பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமோ இல்லையோ உங்கள் இந்த கருத்து என் ஊக்கத்தை அதிகரிக்கிறது. ரசித்து வாழ்த்தும் உங்களிருவருக்கும் மீண்டும் மனங்கனிந்த நன்றிகள்!

      நீக்கு
  2. வரவுணர்த்தல் விளக்கம் மிகவும் அருமை...

    மீண்டும் ஐங்குறுநூறு தொடர்வது மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் தோழி பள்ளிக்கூடத்தில் டீச்சரம்மாவாக இருக்கிறார் நீங்களோ வலைத்தளத்தில் டீச்சரம்மாவாக மாறி இருக்கிறீர்கள். இங்கு துளசி சார் சொன்னதையே நானும் இங்கு வழிமொழிகிறேன்... பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ, சிறந்த ஒரு டீச்சர் என் தோழி! :))
      உங்கள் இனிய கருத்திற்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      நீக்கு
  4. ரசனையான காட்சியும் உள்ளார்ந்த காதலும் தோழியின் கரிசனமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மனம் தொடும் அழகிய பாடலும் அதற்கான தெளிவான விளக்கமும் பகிர்ந்தமைக்கு அன்பான பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  5. வழக்கம் போலவே சங்கப்பாடல் ஒன்றிற்குச் சாமானியர்க்கும் புரியும் வகையில் எளிய தமிழில் இனிய விளக்கம்.
    அருமை சகோ!
    தங்களின் மறுகவிதை ஆக்கமும் அருமை!
    தொடருங்கள்.

    த ம 3

    பதிலளிநீக்கு
  6. சங்கப் பாடலுக்கு
    தங்களின் வரிகளிள்
    அருமையான எளிமையான விளக்கம்
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. டியர் !!! இந்த முறை உங்கள் கவிதை மிக மிக அழகாக இருக்கிறது. அதில் பல பொருளும் இருக்கிறது!! செதுக்கத் தொடங்கிவிட்டீர்கள், அருமையான பணி !! தொடருங்கள்!!

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான விளக்கம்! சிறப்பான கவிதை! அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஆங்கிலத்திலும் தரவும் இன்னும் விரிவாக எழுதலாம் ஆங்கிலத்தில் எழுதும் பொழுது அருமை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று ஆங்கிலத்தில் பதிவு செய்து விட்டேன் அண்ணா. இரண்டையும் ஒன்றாய்ப் போடா நினைத்தேன், நேரம் எப்படி அமையுமோ என்று நேற்று இங்கு வெளியிட்டுவிட்டேன். பார்த்துச் சொல்லுங்கள் :)
      நன்றி அண்ணா.

      நீக்கு
  10. எளிமை, அருமை கிரேஸ் ...
    உங்க ஹாலிவுட் தலைவரையும் இங்கே சேர்த்துட்டிங்களே.. ஹா ஹா :)

    பதிலளிநீக்கு
  11. ஒட்டு போட்டு விட்டேன் மா த ம+ 5

    பதிலளிநீக்கு
  12. அருமை சகோ... பாடலுக்கு கொடுத்த விளக்கத்துடன் நில்லாது ஒரு ஒரு வார்த்தைக்கும் தனித்தனியாய் பொருள் கூறியது அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ..

      நீக்கு
  13. அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  14. அருமை கிரேஸ்! அருமையான அழகான எளிய விளக்கம்.
    தாமத வருகைக்காக நான்தான் வருந்துகிறேன். ஆங்கில விளக்கமும், ஆங்கில ஆக்கமும் மிகவும் தமிழ்ப்பகுதியை விடவும் அருமை! அங்குதான் Grace becomes Greats! Keep it up ma. My Heartful greets.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா..
      உங்கள் வேலைப்பளு அதிகம் அண்ணா, வருந்தவேண்டாம்.... :)
      ஆனால் இலக்கியப் பதிவிற்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கவே செய்தேன் என்பது உண்மை :)) தங்கையின் தொந்தரவிற்கு மன்னிக்கவும்.
      ஆங்கிலத்திலும் பார்த்துக் கருத்திட்டதற்கு மனமார்ந்த நன்றி அண்ணா..

      நீக்கு
    2. தங்கையிடம் மன்னிப்புக் கேட்பதில் ஓர் அர்த்தமுண்டு மா.
      “அருமையாக எழுதியிருக்கேன் வந்து பாக்காம என்ன பண்றே?” என்று கேட்க உனக்கு நிறையவே உரிமை உண்டு டா. (ஏதாவது வேலைகளில் முழுகிக் கிடப்பதே என் வேலை) எனவேதான் சொன்னேன்.. தொடர்க.

      நீக்கு
  15. பாடலையும் பொருளையும் ரசித்தேன். வழக்கம்போல் அருமை. தொடர்பில்லாத வகையில் ஆங்கிலப்படக் கதாநாயகனின் புகைப்படம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. (தமிழகத்தில் பௌத்தம் தொடர்பான எனது கட்டுரையை வெளியிட்ட ஒரு இதழ் வெளிநாட்டில் காணப்படும் புத்தரின் புகைப்படத்தை அக்கட்டுரையில் வெளியிட்டிருந்தது. வீரனின் புகைப்படத்தைப் பார்த்ததும் அந்த நினைவு வந்தது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா..படத்தைப் பார்த்து ஒரு சிலர் வரக்கூடும் என்பதால் தான் ஐயா.

      நீக்கு
  16. அன்புள்ள சகோதரி,

    குறிஞ்சித் திணை பாட விளக்கம் நன்றாக இருந்தது. தங்களின் பாடல் மிகவும் எளிதாகவும் அருமையாகவும் இருந்தது கண்டு மகிழ்ச்சி.

    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...