Saturday, June 29, 2013

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத மறந்த காதல் கடிதம்

நண்பர் சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, நான் கற்பனையாக எழுதியக் கடிதமே இந்தப் பதிவு. போட்டியில் கலந்துகொண்டு கடிதம் பதிவு செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டியை அறியாத மற்றவரும் கலந்து கொள்ள கீழே இப்பதிவின் முடிவில் இணைப்பைக் கொடுக்கிறேன். இப்பொழுதே கொடுத்தால் என் கடிதத்தைப் படிக்காமல் போய்விட்டால்.. அதற்குத்தான் :)
சரி, கடிதத்தைப் பிரிக்கிறேன், வாசியுங்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------
அன்புத் தோழா,
எப்படி இருக்கிறாய்? சாப்பிட்டாயா? இன்று தானே பார்த்தேன், எதற்கு கடிதம் என்று நினைக்கிறாயா? என்ன செய்வது..சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் நேரில் தடுமாறுகிறது..அது தான் எழுதலாம் என்று..

என் இனிய இனியவனே!
மயக்கும் மன்னவனே!
இக்கடிதம் முழுவதும் படிக்கும் 
பொறுமை உள்ளவனே 
தைரியம் உள்ளவனே!

இப்படிப்  பாராட்டியதற்கு அப்புறம் முழுவதையும் படித்துவிடுவாய் என்றே நம்புகிறேன். நம்பிக்கையைக் காத்திடு தோழா! சரி, என்ன சொல்ல வரேன்னா..

என் ஆசிரியர்கள் மேல் எனக்கு ஒரே சினம் தெரியுமா?
புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி 
இவையெல்லாம் கற்றுக்கொடுத்தனர் 
இந்த ஈர்ப்பைப் பற்றிச் சிறுகுறிப்பும் கொடுக்கவில்லையே 
என் இதயத்தை நீ ஈர்த்ததைத்தான் சொல்கிறேன்! 

கோபப்பட்டுவிடாதே..கோபம் வராதென்றும் புன்னகையுடன் படிக்கிறாய் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கு. அச்சோ..புன்னகையை நினைத்தவுடனேயே மேலே எழுத முடியவில்லையே..மனம் மயங்கி நிற்கிறதே.
மயங்கு மயங்கு என்ற காதல்
இயங்கு இயங்கு என்றும் சொன்னதால்
தயங்கித் தயங்கித் துவங்கிய
கடிதத்தைத் தொடர்கிறேன் ..

ஈர்க்க மட்டுமா செய்தாய் அழகனே 
காந்தமாய்க் கவர்ந்து விட்டாய் குழகனே 
நீ அருகில் இல்லாவிட்டால் 
ஏற்காத மனதில் மின்சாரம் பாய்கிறதே 
மின்சாரம் தாங்காத கண்கள் உன்னைத் தேடுகின்றனவே

பரீட்சை வருது, அதனால ஒழுங்காப் படிக்கிற வேலையைப் பாக்கணுமாம், வகுப்பில் எனக்குப் பக்கத்துல இருக்காளே, அவ சொல்றா. நானா மாட்டேன்கிறேன்..படிக்கத்தான் முயற்சிக்கிறேன், முடியவில்லையே!

புத்தகம் பார்த்தாலும் கணிணி கண்டாலும் 
சச்சின் அடித்தப் பந்தாய் 
பறக்கின்றனவே கண்கள் 
பல திசைக்கு
ஆனால் ஒரே இலக்கிற்கு
அதாண்டா, அது நீதான்!

நான் என் படிப்புண்டு என் வேலையுண்டு என்று போய்க்கொண்டிருந்தேன். பல மாணவர்கள் என்னுடன் பேசுகையில் நீ மட்டும் ஏதோ வேறு கிரகத்தில் இருந்து வந்தது போல..இல்லை, இல்லை, அப்படிச் சொல்லக்கூடாது. படங்களில் எல்லாம் வேற்று கிரகத்தவரை பயங்கரமாகவும் அசிங்கமாகவும் தான் காண்பிக்கின்றனர். உன்னை எப்படி அவ்வாறு சொல்வது? ஒரு வேளை விதிவிலக்காக நீ மட்டும் அழகாய் இருக்கிறாயோ? சரி, எங்கிருந்து வந்தாயோ..பந்தா காட்டிக்கொண்டு உதட்டில் சிரிப்பில்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றாய்.

திமிர் பிடித்தவன் என்று நினைத்தேன்
என் இதயம் திமிறிக்கொண்டு 
உன்னுடன் சென்றுவிட்டதை அறியாமல்

சரி, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளடா எனதருமைத் தோழா...

ஈர்த்ததை நிலையாய் வைத்துக் கொள் 
இனிமையை நாளும் உணர்ந்து கொள்
என் இதயத்தை உன்னுள் பூட்டிக் கொள் 
மனதோடு மனது முயங்கிக்கொள்
கண்களைத் தேடலில் இருந்து தடுத்திடு
உன்னோடு காவியம் பேசும் ரசித்திடு 

என்னடா இவள் ஏதோ பிதற்றுகிறாள் என்று நினைக்கிறாயா? இவளுக்கு என்ன ஆயிற்று என்று புரியாமல் விழிக்கிறாயா? பரவாயில்லை...

எனக்கேப் புரியவில்லையே
ஏனிந்த மாற்றம் என்று!
உன்னைப் பார்த்தால் 
அட, உன்னை நினைத்தாலே 
தமிழும் கவிதையும் 
வற்றாச் சுனையாக ஊறுகிறதே
அருவியாகப் பொங்கிப் பாய்கிறதே
ஏன் இப்படி? இது எப்படி? 
எனக்கேப் புரியவில்லையே!!

உலகில் அனைத்துமா புரிந்து விடுகிறது? அதனால் அதை விட்டு விடு அன்பே! என்ன? 'அன்பே' என்று சொல்வது கூடப்  புதிதாக இருக்கிறதா? இப்பொழுது அப்படித் தான் இருக்கும், நீ என்னுடையவனாகிவிடு, பின்னர் 'அன்பே, உயிரே, தேனே' என்பதெல்லாம் உன் வாழ்வோடு ஒன்றானதாக மாறிவிடும்.
சரி, காதல் சொல்ல வேண்டாம்..பாடமாவது தெளிவு படுத்துடா..என்ன பாடமா? அதான் சொல்லப் போறேன், கேளுடா.

படித்ததோ பருவகாலங்கள் நான்கு 
ஆனால் 
பார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே
காற்றுப் புயலாகவும் வீசுமாம் 
ஆனால் 
தென்றல் மட்டுமே உணர்கிறேன்
இது புவியியல் மாற்றமா?
இல்லை, நம் இதய மாற்றமா?
என்ன மாற்றமோ..
ஆனால் அதை மாற்ற வேண்டாமடா 
வசந்தமும் தென்றலும் சுகம் தானேயடா!

உனக்கு ஒன்று தெரியுமா? இன்று கணினியில் முடிவில்லா சுழற்சியில் உன் பெயர் எழுத மென்பொருள் ஒருங்கு எழுதிவிட்டேன். கணினித் திரை முழுதும் உன் பெயர் எழுதி ஓடிக் கொண்டேயிருக்க, நான் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருக்க, பின்னால் வந்த திரு.ர.கே. முறைத்ததை நீ பார்த்திருக்க வேண்டும். அப்பொழுதும் நான் புன்னகைக்க அருகிருந்த அருமைத் தோழி ^C அழுத்தி நிறுத்திவிட்டாள். அவளை நான் முறைக்க திரு.ர.கே. நகர்ந்து விட்டார். உன்னை அழைத்து விசாரித்தால் அவரிடம் நம் காதலைச் சொல்லிவிடு! என்ன, என்னிடமே சொல்லவில்லையே என்று யோசிக்கிறாயா? பரவாயில்லை, எனக்குத்தான் தெரியுமே! என்ன, இனிதாக அதிர்ந்துவிட்டாயா? அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறாயா? அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏண்டா..எனக்கு ஒரு ஐயம்உண்டு...என் அனுமதி கேட்காமல் உன் இதயத்தை என்னிடம் அனுப்பிவிட்டு நடிக்கிறாயோ? ஏனென்றால்,

ஒவ்வொரு முறை உன்னைப் பார்க்கும்பொழுதும்
லபக்கு டபக்கு என்று அதிவேகமாக அடிக்கிறதே 
இங்கு அனுப்பி விட்டுத் தள்ளியே இருக்கிறாயே 
என்று கேட்கிறதோ? அருகிருக்கச் சொல்லித் துள்ளுகிறதோ?
இது உண்மையென்றால் வந்துவிடு
இல்லையென்றாலும் உண்மையாக்கிவிடு!

நட்பு பாழாகுமோ என்றோ, சிறிது நாள் போகட்டும் என்றோ அமைதி காத்திருந்தாயோ? ஆனால் நீ சாணக்கியனடா, காதல் சாஷ்திரத்தில்! நீ முடிவு செய்திருந்தாலும் என்னைக் கடிதம் எழுத வைத்துவிட்டாயே!! இதை நீ மறுத்தாலும் நான் நம்பப் போவதில்லை. என்ன, நான் சொல்வது சரிதானே? நாளை இந்தக் கடிதத்தோடு வந்து என் தலையில் செல்லமாகத் தட்டப்போகிறாய் தானே? சரி, சரி, போய் வேலையைப் பார்த்துட்டுத் தூங்கு..கனவில் எல்லாம் வர மாட்டேன்..நாளைக்குப் பார்க்கலாம்.


என்றும் காதலுடன் ,
உன்னவள் 
-------------------------------------------------------------------------------------------------------------------

திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் சொந்தக் கற்பனையில் எழுதியதே மேலே உள்ளக் காதல் கடிதம்.

போட்டியைப் பற்றிய அறிவிப்பும் விதிமுறைகளும் பார்க்க சீனு அவர்களின் தளத்தில் உள்ள இந்தப்பதிவைச் சொடுக்குங்கள். நன்றி!

நட்புடன்,
கிரேஸ் 
தேன் மதுரத் தமிழ் உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

34 comments:

 1. பரிசு பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜீ!

   Delete
 2. // 'அன்பே, உயிரே, தேனே' என்பதெல்லாம் உன் வாழ்வோடு ஒன்றானதாக மாறிவிடும்... //

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி திரு.தனபாலன்.

   Delete
 3. கவிதையும் காதலும் இங்கு ஒன்றோடொன்று போட்டி போடுகின்றனவே....போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி !!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி தமிழ்முகில்!

   Delete
 4. உனக்கு ஒன்று தெரியுமா? இன்று கணினியில் முடிவில்லா சுழற்சியில் உன் பெயர் எழுத மென்பொருள் ஒருங்கு எழுதிவிட்டேன். கணினித் திரை முழுதும் உன் பெயர் எழுதி ஓடிக் கொண்டேயிருக்க, நான் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருக்க.....
  நவீனக் காதல் ... அழகுங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்துக் கூறிய பாராட்டுக்கும் நன்றிங்க சசிகலா!

   Delete
 5. பரிசுபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியாழி அவர்களே!

   Delete
 6. அட.. அட. அருமை கிரேஸ். உங்கள் இனியவர் கொடுத்து வைத்தவர் இந்த மாதிரி கடிதம் பெற. அடிச்சு தாக்கிடீங்க :). இந்த கடிதம் தந்த மயக்கத்தில் இருந்து அவர் மீள்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் :)

  //மயங்கு மயங்கு என்ற காதல்
  இயங்கு இயங்கு என்றும் சொன்னதால்
  தயங்கித் தயங்கித் துவங்கிய
  கடிதத்தைத் தொடர்கிறேன் ..//

  //திமிர் பிடித்தவன் என்று நினைத்தேன்
  என் இதயம் திமிறிக்கொண்டு
  உன்னுடன் சென்றுவிட்டதை அறியாமல்//

  //படித்ததோ பருவகாலங்கள் நான்கு
  ஆனால்
  பார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே
  காற்றுப் புயலாகவும் வீசுமாம்
  ஆனால்
  தென்றல் மட்டுமே உணர்கிறேன்
  இது புவியியல் மாற்றமா?
  இல்லை, நம் இதய மாற்றமா?//
  சூப்பர்ஓ.. சூப்பர்!!.. எங்கேயோ போய்டீங்க :)

  பரிசு பெற வாழ்த்துகள் கிரேஸ் :)

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீனி, இது கற்பனைக்கடிதம்.. :)
   வாழ்த்துக்கு நன்றி!

   Delete
 7. சுவையான கடிதம். 'பார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே' வரி கொஞ்ச நாள் என்னைச் சுத்தி வரும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  (முதல் வரியின் 'சாப்பிட்டாயா?' கேள்வி, கடிதம் எழுதியவர் பெண் என்றுக் காட்டிக் கொடுக்கிறதே? பெண்கள் மட்டுமே அந்தக் கேள்வியை - காதல் கடிதமென்றாலும் - எடுத்தவுடன் கேட்பார்கள். தன்னைச் சார்ந்தவர் - பெற்றோரிலிருந்து பேரர்கள் வரை - சாப்பிட்டார்களா என்பதை நல விசாரிப்பில் சேர்ப்பது பெண்களுக்கு மட்டுமே இயல்பாக வருவதைக் கவனித்திருக்கிறேன்.)

  ReplyDelete
  Replies
  1. //சுவையான கடிதம். 'பார்ப்பதோ வசந்த காலம் மட்டுமே' வரி கொஞ்ச நாள் என்னைச் சுத்தி வரும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.// மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி பல ஐயா.
   ஆமாம், நீங்கள் சொல்வதுபோல பெண்கள் மற்றவரை சாப்பிட்டாயா என்று கேட்பது அதிகம் தான். தினம் பார்க்கும் தோழனிடம் என்ன கேட்பது..அப்படி யோசித்து எழுதினேன் :)
   உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்!

   Delete
 8. கவிதையும் கடிதமும் கலந்தே எழுதியே
  தவித்திடும் காதலைத் தந்திரமாய்க் காட்டினீர்
  படித்திடும் மனது பரிசுமக்கென்றே கூறும்
  வடித்திடுவேனே வாழ்த்து விரைந்து நான்

  வெற்றி உங்களுக்கேயாக நல்வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. //படித்திடும் மனது பரிசுமக்கென்றே கூறும்
   வடித்திடுவேனே வாழ்த்து விரைந்து நான்// நன்றிபல தோழி! என் கடிதத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி..பலரும் நன்றாக எழுதியுள்ளார்கள்..அதனால் இப்போட்டியில் கலந்துகொண்டு பலரின் பாராட்டைப் பெற்றதே எனக்கு மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி இளமதி!

   Delete
 9. //என் இதயம் திமிறிக்கொண்டு
  உன்னுடன் சென்றுவிட்டதை அறியாமல்//

  //இது உண்மையென்றால் வந்துவிடு
  இல்லையென்றாலும் உண்மையாக்கிவிடு!//

  "பன்ச்சு" டயலாக் கேள்விபட்டிருக்கிறேன் ...
  இது "பன்ச்சு" கவிதை.
  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே!
   // "பன்ச்சு" கவிதை.// இது நன்றாக இருக்கிறதே, நன்றி!

   Delete
 10. உணர்வுகளைக் கணினியில் கொட்டிக் காதல். அப்பாதுரை ரசித்த வசந்தகாலம் நானும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கடிதத்தை ரசித்து கருத்துரைத்ததற்கு நன்றி ஸ்ரீராம். வருகைக்கும் நன்றி!

   Delete
 11. //என் ஆசிரியர்கள் மேல் எனக்கு ஒரே சினம் தெரியுமா?
  புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி
  இவையெல்லாம் கற்றுக்கொடுத்தனர்
  இந்த ஈர்ப்பைப் பற்றிச் சிறுகுறிப்பும் கொடுக்கவில்லையே
  என் இதயத்தை நீ ஈர்த்ததைத்தான் சொல்கிறேன்!//


  லவ்வாலஜி சேக்க சொல்றீங்க நல்ல ஐடியா தான்

  கவிதை ஒவ்வொன்றும் அருமை அன்பரே

  ReplyDelete
  Replies
  1. //லவ்வாலஜி சேக்க சொல்றீங்க நல்ல ஐடியா தான்// ஹாஹா நல்ல பெயர் சூட்டிவிட்டீர்கள் :)

   மிக்க நன்றி பிரேம்!

   Delete
 12. //சச்சின் அடித்தப் பந்தாய்
  பறக்கின்றனவே கண்கள்...//
  அடடா! காதலிலும் கிரிக்கெட் வந்துவிட்டதே!

  நீங்கள் பார்த்த வசந்த காலமும், உணர்ந்த தென்றலும் - நாங்களும் பார்த்தோம், உணர்ந்தோம் உங்கள் கடிதம் மூலம்.
  வெற்றி பெற வாழ்த்துகள் கிரேஸ்!

  ReplyDelete
 13. உலக நடப்போடு ஒன்றிய காதலம்மா :)
  //நீங்கள் பார்த்த வசந்த காலமும், உணர்ந்த தென்றலும் - நாங்களும் பார்த்தோம், உணர்ந்தோம் உங்கள் கடிதம் மூலம்.// மகிழ்ச்சி கலந்த நன்றி பல!

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மா!

  ReplyDelete
 14. வாவ் ஒவ்வொரு சிகப்பு வரிகளும் மிகவும் அருமை வெற்றி நிச்சியம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஹிஷாலீ..

   Delete
 15. நல்லாயிருக்கு... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார்!

   Delete
 16. //என் ஆசிரியர்கள் மேல் எனக்கு ஒரே சினம் தெரியுமா?
  புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி
  இவையெல்லாம் கற்றுக்கொடுத்தனர்
  இந்த ஈர்ப்பைப் பற்றிச் சிறுகுறிப்பும் கொடுக்கவில்லையே
  என் இதயத்தை நீ ஈர்த்ததைத்தான் சொல்கிறேன்!//

  நம் ஆசிரியைகளை நினைத்துப் பார்த்தேன்.. யார் இதயம் ஈர்ப்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்க வேண்டியவர் ‍ என்று? :))

  அருமையாக இருக்கிறது கிரேஸ். வெற்றி பெற வாழ்த்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா .. யாரென்று அலைபேசியில் பகிர்ந்து கொள்வோம் :)

   Delete
 17. கற்பனை என்றால்...ஒத்துக்கொள்ளமறுக்கிறது! ஆனாலும்கற்பனை உண்மையைவிட அழகானது! நம்பாமலும் இருக்க முடியவில்லை! ஆழமான வரிகள்! நிச்சயம் வெற்றிப்பட்டியலில் இடம்பிடிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா
   உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   Delete
 18. இந்த கற்பனை....விற்பனைக்கன்று!

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...