மழையின் இன்பம்

கருங்கொண்டல் கண்டு ஓடி ஒளிவதா
கானமயில் போல ஆடிக் களிப்பதா;
வெள்ளித்துளி வீழ்வது கண்டு குடை விரிப்பதா
இலையைப்போல் பூவைப்போல் லயித்து சிலிர்ப்பதா;
இத்தயக்கங்கள் விலக்கி மழைநீர் முகத்தில் ஏந்தி
வதனம் பூவாய் மலர உள்ளம் சிலிர்த்து
மனச்சிறகை விரித்து துள்ளி ஆடுவதல்லவா
இன்பம், மட்டற்ற இன்பம்!

என் தமிழே, கண்ணுறங்கு!

அன்பே ஆருயிரே முத்தே மாணிக்கமே
விலைமதிப்பில்லாக்கற்கள்  பல உண்டு, என் வைரமே!
ஒவ்வொன்றாக சொல்லிக் கொஞ்ச ஆசையுண்டு நேரமில்லை, நடவுக்கு போகவேண்டும்
அதனால் என் தங்கத் தமிழே! நீ கண்ணுறங்கு!

-நடவு செய்யப்போகும் ஒரு தமிழ்த்தாயின் தாலாட்டாக நான் எழுதியது.

'
விலைமதிப்பில்லாக்கற்கள்  ' இந்தச் சொல்லின் இடத்தில் இரத்தினங்கள் என்று முதலில் எழுதினேன், பின்னர் அது வடமொழி என்று அறிந்து இப்படி மாற்றினேன்.

வருக இனிய தமிழ் புத்தாண்டே!

பனிவிடைபெற இளவேனில் தாலாட்ட
பழையன புதுப்பொழிவு பெற
புதியன இனிதாய் மலர
வருக புத்தாண்டே!

வண்ணமலர்கள் அசைந்தாட தும்பி ரீங்காரமிட
குருவிபல இன்னிசை எழுப்ப
மாந்தர்தம் மனம் பூரிக்க
வருக புத்தாண்டே!

வீடும் நாடும் செழிக்க
மகிழ்ச்சியும் சமாதானமும் பெருக
உள்ளங்கள் உவகை கொள்ள
வருக புத்தாண்டே!

தேன்மதுர தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும் செந்தமிழ் கமழ
தமிழும் தமிழரும் வளம்பெற
வருக எம் இனிய புத்தாண்டே!

இயல்வது கரவேல்

ஆற்றோரமாய் இருந்த ஒரு ஊரில் வேதன் என்று ஓர் ஏழை தன் மனைவியுடன்  வாழ்ந்துவந்தான். ஆற்றில் மீன் பிடித்து வாழ்ந்து வந்தான். சில நாட்கள் நிறைய மீன்கள் கிடைத்தாலும் பல நாட்கள் ஒன்றும் இல்லாமல் திரும்பி வருவான். ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான் வேதன். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வான். ஒரு நாள் வேதனுக்கு இரண்டு மீன்கள் மட்டுமே கிடைத்தன. அவன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் கொடுத்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு வயதானவர் ஒரு குச்சியை ஊன்றிக்கொண்டுத் தள்ளாடி நடந்து வந்தார். வேதன் ஓடிச்சென்று அவரைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தான். அந்த முதியவர் பல நாள் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்தார். வேதன் உள்ளே ஓடிச்சென்று மனைவியிடம் ஒரு மீனை வாங்கி வந்து அம்முதியவருக்குச் சாப்பிடக் கொடுத்தான். அந்த ஒரு சிறிய மீன் முதியவருக்குப் போதவில்லை. இன்னும் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று கேட்டார். வேதன் உள்ளே ஓடினான். இன்னும் ஒரு மீன்தான் இருந்தது. ஆனால் இருப்பதை மறைத்து முதியவரிடம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வேதனுக்கு மனமில்லை. அவன் மனதை அறிந்த அவன் மனைவியும் மீதமிருந்த ஒரு மீனையும் அவனிடம் கொடுத்தாள். வேதன் அதை எடுத்துச் சென்று முதியவருக்குச்  சாப்பிடக் கொடுத்தான். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு ஒளிவெள்ளம் தோன்றியது. முதியவர் இருந்த இடத்தில் ஒரு தேவதை நின்றது. தேவதை வேதனைப் பார்த்து, "உனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இருப்பதை மறைக்காமல், 'இயல்வது கரவேல்' என்பதற்கு இணங்க உதவி செய்த உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேல் எப்பொழுதும் உனக்குத் தேவையான மீன்கள் கிடைக்கும்." என்று வாழ்த்தி மறைந்தது. அதன் பின்னர் ஒரு நாளும் வேதனுக்கு மீன் கிடைக்காமல் இருந்ததில்லை. அவனும் அவன் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.


உங்களால் பிறருக்குச் செய்ய முடிந்த உதவியை மறைக்காமல் செய்யுங்கள்  குழந்தைகளே!

அருள் தாருமே

கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007

பல்லவி:
அருள் தாருமே  அருள் தாருமே
உம்வழி நடந்திட அருள் தாருமே
அருள் தாருமே அருள் தாருமே
உம்முடன் நடக்க அருள் தாருமே

1.
பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல்
காடோ மேடோ  என்று கலங்கிடாமல்
உம்வழி நடந்திட  உறுதி கொண்டு
உம்முடன் நடக்க அருள் தாருமே

2.
இருளோ ஒளியோ என்று நினையாமல்
திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
 உம்முடன் நடக்க அருள் தாருமே 

என்னோடினைந்த இறைவா

2007 மார்ச்சில் எழுதியது ...

பல்லவி:
என்னோடு இணைந்த  இறைவா நன்றி
என்னுள்ளம் எழுந்தத்   தலைவா நன்றி

1. காலையில் தோன்றும் கதிரவனாய்
    மாலையில் வீசும் தென்றலாய்
   இரவில் ஒளிரும் விண்மீனாய்
   என்னோடினைந்த இறைவா நன்றி

2. சுவாசத்தில் கலந்த காற்றாய்
    என்னுள் ஓடும் உதிரமாய்
    என்னுள் துடிக்கும் இதயமாய்
    என்னோடினைந்த இறைவா நன்றி

ஆறுவது சினம்

ஓர் அழகான ஊரில் அழகான ஒரு வீடு இருந்தது. அவ்வீட்டில் அன்பு என்று ஒரு பையனும் அவனுடைய தங்கை அகிலாவும் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். அன்புக்கு எட்டு வயது. அகிலாவுக்கு நான்கு வயது.  ஒரு நாள் பள்ளி விட்டு வந்தபின்னர் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பொம்மை  காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த அன்பு வேறு ஏதோ எடுக்க உள்ளே சென்றான். அப்பொழுது ஆசையாக அவனுடைய காரை எடுத்த அகிலா அதை தெரியாமல் உடைத்துவிட்டாள். உள்ளிருந்து வந்த அன்பு உடைந்த காரைப் பார்த்தவுடன் கோபம் கொண்டான். "ஏன் என் கார உடைச்ச?" என்று கத்திக்கொண்டே வந்தவன் கீழே இருந்த அகிலாவின் பொம்மையைத் தூக்கி எறிந்தான். அது மண்ணில் செய்த தஞ்சாவூர் பொம்மை. அழகான அந்தப் பொம்மை உடைந்து சிதறியது. தஞ்சாவூர் சென்ற பொழுது அவர்கள் அப்பா வாங்கிவந்தது. உடனே அகிலா அழ ஆரம்பித்தாள். பொம்மை உடைந்தவுடன் அன்புக்குப் பாவமாக இருந்தது. தான் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று வருந்தினான். கோபத்தை அடக்கியிருந்தால் அழகான பொம்மை உடைந்திருக்காதே என்று நினைத்தான். அவ்வைப்பாட்டி கோபம் அடக்கப்படவேண்டும் என்பதற்குதான்,  "ஆறுவது சினம்" என்று சொன்னதைப் புரிந்துகொண்டான்.

கோபத்தை அடக்கக் கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.