ஐங்குறுநூறு 252
குன்றக் குறவன் புல்வேய் குடிலை
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும்
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்
தோழி, அவன் வாழி!
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும்
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று
வருமுன் தானே வந்து விட்டானே!
இப்பாடலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு, இந்த இணைப்பில் சொடுக்கவும், Ainkurunooru 252 - Before the cold northern winds!
ஐங்குறுநூறு 252
குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குன்றக் குறவன் புல்வேய் குரம்பை
மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரைபெயல்
அரும்பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே.
மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரைபெயல்
அரும்பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே.
பாடியவர் கபிலர், 'குன்றக் குறவன் பத்து' என்று குறிக்கப்பட்டுள்ளப் பத்து குறிஞ்சித்திணைப் பாடல்களுள் ஒன்று. குன்றக் குறவன் என்றே தொடங்குகின்ற பத்துப் பாடல்களின் தொகுதி என்கிறார் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்.
தோழி தலைவியிடம் சொல்வதாக அமைந்துள்ள பாடல். வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த பருவத்திற்கு முன்பே வந்துவிட்டதை உவகையுடன் தோழி தலைவிக்குச் சொல்வதாக அமைந்த பாடல். வாருங்கள் பாடலைப் படிப்போம்.
எளிய உரை: தோழி, குன்றத்தில் வாழும் குறவனின் புல்லால் வேயப்பட்ட குடிலினை இளமழை மறைக்கும் நாடன் உயர்ந்த பண்புடையவன், அவன் வாழ்க! விரைந்த மழையையும் பொறுத்தற்கு அரிய பனியையும் கலந்து வீசும் கூதிர்ப்பருவத்து பெரிய தண்ணிய வாடைக் காற்று வருவதற்கு முன்பே வந்துவிட்டானே.
விளக்கம்:
வரைதற்கு (திருமணத்திற்கு) வேண்டுவன ஈட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவன் தான் வருவதாகக் குறிப்பிட்டுச் சொன்ன காலம் வரும் முன்னரே திரும்பி வந்ததைப் பார்த்து உவக்கும் தோழி தலைவியிடம் அச்செய்தியை உவகையுடன் பகிர்ந்து அவள் துயரை ஆற்றுவிக்கிறாள். குன்றத்தில் வாழும் குறவர்கள் புல்லால் வேயப்பட்ட கூரையை உடைய குடில்களில் வாழ்வார்கள். அக்குடிலை மறைக்கும் இளமழை என்பது வானில் அசையாது நிற்கும் முதிராத வெண்முகில் என்கிறார் பெருமழைப்புலவர். அது நிழலாக வெயிலிலிருந்தும் தான் பொழியாமல் நிற்பதால் மழையிலிருந்தும் காத்து மறைக்கும் என்பதாம். இளமழை மறைக்கும் நாடன் என்று தலைவனைக் குறிப்பிடுவது தலைவியின் அவன் இன்னும் வரைந்திலனே என்னும் துயரத்தையும் பருவம் தாழ்த்தி வந்தால் வரும் பிரிவாற்றா துயரத்தையும் களைந்தான் என்பதாம் என்கிறார் பெருமழைப்புலவர். உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் இளமழை என்பது கரும்புகை போல் பரவி சிறுசிறு மழைத்துளியைச் சிதறிச் செல்லும் என்கிறார். இளமழை குறவனின் குடிலை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கும் என்கிறார். தலைவன் புரையோன் என்பது காலத்தின் சிறப்பும் தலைவியின் துயரமும் கருத்தில் கொண்டு, பெரிய குளிர்ந்த வாடைக் காற்று வந்து தலைவியைத் துன்புறுத்துவதற்கு முன்பே கருத்தாய் வந்ததால் உயர் பண்புடையவன் என்றும் அவன் வாழ்வானாக என்றும் மகிழ்ந்து உரைக்கிறாள் தோழி.
உடல்மொழியைப் போலவே பாடலுக்கும் மெய்ப்பாடு உண்டு. இப்பாடலின் மெய்ப்பாடு பெருமிதம் என்பார் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார். இப்பாடலின் பயன் ஆற்றுவித்தல், தலைவியின் துயர் போக்கி மகிழ்வித்தல் ஆகும்.
சொற்பொருள்: குன்றக் குறவன் - குன்றில் வாழும் குறவன்; புல்வேய் குரம்பை - புல்லைக் கூரையாக வேய்ந்த வீடு; மலைகளில் வளரும் பைஞ்சாய் கோரைப்புல் மஞ்சம்புல் என்றும் எருவைப் புல்லென்றும் வழங்கும், பனை, தெங்கு புல் வகை என்பதால் அவற்றால் வேய்ந்த கூரைகளும் உண்டு என்கிறார் உரைவேந்தர்; மன்றாடு - வானில் ஆடும்; மன்று என்பதை நடு தோட்டம் என்று கூறுகிறார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இளமழை மறைக்கும் - பஞ்சைப் போன்ற வெண்முகில் / கரும்புகை போல் பரவும் முகில் மறைக்கும்; நாடன் - நாட்டைச் சேர்ந்தவன்/தலைவன்; புரையோன் - உயர் பண்புகளை உடையவன்; வாழி - வாழ்கவே; விரைபெயல் - விரைந்து பெய்யும் மழை; அரும்பனி - பொறுத்தற்கரிய கடுமையான பனி; அளைஇய - கலந்த; கூதிர்ப் பெருந்தண் வாடை - கூதிர்க் காலத்துப் பெரிய குளிர்ந்த வாடைக் காற்று; முந்து வந்தனனே - முன்பே வந்து விட்டான்; ஏகாரம் சிறப்பு;
என் பாடல்:
என் பாடல்:
குன்றக் குறவன் புல்வேய் குடிலை
மன்று ஆடும் இளமுகில் மறைக்கும்
அந்த நாடன் உயர்ந்த பண்பாளன்
தோழி, அவன் வாழி!
விரையும் மழையுடன் கடும்பனி கலக்கும்
கூதிர்ப் பருவப் பெருங்குளிர்க் காற்று
வருமுன் தானே வந்து விட்டானே!
(இணைக்குறள் ஆசிரியப்பா)
பணிப்பளுவினால் இடைவெளி ஏற்பட்டுத் தொய்ந்திருந்த என் முயற்சியை மீண்டும் தொடங்க ஊக்குவிக்கும் புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய உறவுகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்!
அன்புடன், கிரேஸ் பிரதிபா
சிங்கம் களம் இறங்கியாச்சு இனி வேட்டைதான்... வாழ்த்துகள் அக்கா
பதிலளிநீக்கு