ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று
வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து இல்லறம் நடத்துவதைப் பாடும் பாடல்கள். தலைவனும் தலைவியும் இல்லத்தில் காதலோடு
இன்புற்றிருந்து வாழ்வதும் முல்லைத்திணையின் 'இருத்தலும் இருத்தல்
நிமித்தமும்' என்ற உரிப்பொருளுக்குப் பொருந்தும் என்பார்
திரு.பொ.வே.சோமசுந்தரனார்.
தலைவி தலைவனோடுத் தன் வீடு சென்றபின்னர், தலைவியின்
செவிலித்தாய் அவர்களைப் பார்க்கச் செல்வது மரபு; சென்று அவர்கள் எப்படி
வாழ்கிறார்கள் என்று பார்த்து வருவார். தான் பார்த்து மகிழ்ந்த தம் மகளின்
இனிய இல்லறத்தை நற்றாய் (தலைவியைப் பெற்ற தாய் ) மகிழுமாறு அவளிடம் சொல்வார். அப்படி அமைந்த 'செவிலிக் கூற்று' பாடல் ஒன்றே இது.
ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்க, இந்த Bards strumming the harp இணைப்பைச் சொடுக்கவும்.
ஐங்குறுநூறு 402, பாடியவர் பேயனார்
முல்லைத் திணை - செவிலி, தலைவியின் தாயிடம் (நற்றாயிடம்) சொன்னது
"புதல்வற் கவைஇய தாய்புர முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
வினிதா லம்ம பண்புமா ருடைத்தே"
எளிய உரை: புதல்வனைத் தழுவியிருந்தத் தாயைப் பின்னிருந்துத் தழுவி மிகுந்த விருப்பமுடையவனாய் இருந்த அவன் கிடக்கை, பாணர் யாழின் நரம்பை மீட்டும் பொழுது எழும் இசையினைப் போல இனிதே, அம்மா! பண்பும் ஆகும்.
விளக்கம்: தலைவி தன் புதல்வனை அணைத்துப் படுத்திருக்க, அவர்களை இடையூறு செய்யாமல், தலைவியைப் பின்னிருந்து முதுகைத் தழுவி மிகுந்த விருப்பத்துடன் தலைவன் படுத்திருக்கிறான். அவனுடைய அந்தச் செயலானது பாணர் யாழினை மீட்டும்பொழுது எழும் இன்னிசை போல இனிமையாய் இருந்தது என்று செவிலித்தாய் நற்றாயிடம் சொல்கிறாள். அது இல்லறத்தின் காதலைச் சொல்லும் இனிய பண்புமாகும் என்கிறாள்.
யாழிசை கேட்பதற்கு இனிதாய் இருப்பது போல, காண்பதற்கு இனிதாய் மகளின் இல்லறம் இருக்கிறது என்பது குறிப்பு. தலைவனும் தலைவியும் தங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து
மகிழ்ந்த செவிலித்தாய் திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன்
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதாக அமைந்தது இப்பாடல். இனியப் பண்பு நிறைந்த இல்வாழ்க்கையால் அறமும் தழைக்கும் என்பது குறிப்பு. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு இல்லற பண்பாகவும், அதன் பயனாக அறம் விளையும் என்பது.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்ற குறள் கூறும் இல்லறம்.
சொற்பொருள்: புதல்வன் - மகன், கவைஇய - தழுவிய, தாய் புற - தாயின் பின்புறமிருந்து, தாயின் முதுகை, முயங்கி - தழுவி, நசையினன் - விருப்பமுடையவன், வதிந்த - தங்கிய, கிடக்கை - படுத்திருத்தல், பாணர் நரம்புளர் - பாணர் நரம்பினை மீட்டும், முரற்கை போல - யாழின் இனிய இசையைப் போல, இனிதால் - இனிதே (ஆல் - அசைநிலை), அம்ம - தாயை விளித்தல் (கேள் அம்மா என்பது போல்), பண்புமார் உடைத்தே - பண்பும் உடையதே
என் பாடல்:
புதல்வன் தழுவிய தாயை, காதலில்
முதுகு தழுவி தலைவன் கிடத்தல்
பாணர் மீட்டும் யாழிசை போல
இனிது அம்மா, இல்லறப் பண்பே!
விளக்கமும் உங்கள் பாடலும் அருமை
பதிலளிநீக்குதுளசிதரன்
நன்றி அண்ணா
நீக்குஆகா...! அருமை...
பதிலளிநீக்குஅருமையான காதல் காட்சி கிரேஸ்!!
பதிலளிநீக்கு