Saturday, April 27, 2019

வடு, வலி, விதும்பல்


வாசித்தல்! கற்றல்! படிப்பு! கல்வி! சாதாரணமாகக் கடந்து வந்த இவ்வார்த்தைகளின் பின்னே ஒரு அடர்த்தியும் அழுத்தமும் இருப்பது சிறுவயதில் புரியவில்லை. ஏன்? இருபதுகளில் கூடப் புரியவில்லை!! ஆனால் கல்வி என்ற மூன்றெழுத்தில்தான் வாழ்க்கையே நிச்சயக்கப்படுகிறது. மனிதகுல வரலாறு எழுதப்படுகிறது! அதனால் தானே அதனைத் தடுக்க ஒருசாராரும் தடைதகர்த்துக் கற்று முன்னேற மறுசாராரும் பிரயத்தனப்படுகின்றனர்.


"மனதைச் சிந்திக்கப் பழக்குவதே கல்வி"


கல்வி, கல்வி, கல்வி என்று கூக்குரலிடும் குரல்களின் ஓசை சொல்லும் செய்தி பெருவெளியினைவிடவும் பெரிது. பெறுபவர்களுக்குத் தெரிவதில்லை கல்வியின் அருமை, தடுப்பவர்களுக்கும் தடைதகர்க்கப் போராடுபவர்களுக்குமே தெரிந்திருக்கிறது, "சிந்திக்கப் பழக்குவதே கல்வி" என்பது.

"வாசிக்கக் கற்றுக்கொண்டவுடனே நிரந்தர விடுதலை அடைகிவாய்"

வாசித்ததும் கேள்வியுற்றதும் கண்களைத் திறந்திருந்தாலும், இல்லை அப்படி நினைத்திருந்தாலும், திறக்கப்படாத ஒரு திரை இருந்திருக்கிறது என்று சமீபத்தில் உணர்ந்தேன்! திரை மட்டுமல்ல, மடை என்பது கன்னம் வழிந்த நீர் சொல்லியது.

ஆம், புதிதாக ஒரு அறிமுகம். ஆப்பிரிக்க அமெரிக்கர். நான்கு மாதமாகத் தெரியும். சில முறையே பேசியிருப்போம். அன்றும் அப்படித்தான், ஹெலோ என்றார். அவர் பார்வை அருகே புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த மற்றொரு ஆப்பிரிக்க அமெரிக்கரின் மேல் இருந்தது.

கண்களில் ஏக்கத்தோடு, "எனக்கும் வாசிக்கவேண்டும்" என்றார். அவரே தொடர்ந்தார், "ஆனால் என்னால் முடியவில்லை. வாசித்தலில் எவ்வளவு கற்றுக்கொள்ளலாம், குறிப்பாகச் சொல்லாற்றல், oh man!! you have it, man! வாசிக்க வேண்டும். என்னால் முடியவில்லை, அதனால் என் பிள்ளைகளை ஊக்குவிக்கிறேன். oh man!! அவர்கள் வாசிக்க வேண்டும், நிறைய அறிந்து கொள்ளவேண்டும்", என்று மிகுந்த வாஞ்சையுடன் சொன்னார். இதையே மூன்றுநான்கு முறை சொன்னார்.

மனம் கனக்க ஒருவகையான அதிர்ச்சியில் பார்த்திருந்தேன். மனதில், நம் நாட்டில் கல்வி மறுக்கப்பட்ட, மறுக்கப்படும் மக்கள் நினைவுவந்தனர். இதோ, என் எதிரில், அமெரிக்காவில், ஆங்கிலம் பேசும்* ஒருவர், நல்லதொரு பணியில் இருக்கும் ஒருவர்! அடிமைச்சங்கிலியின் பிடியில் கல்வி மறுக்கப்பட்ட  அவர் பெற்றோர், பிறகு போராட்டங்களின் ஊடே ஓரளவு கற்க முடிந்த என் நண்பர்!  அவர் மனதின் ஏக்கம்! வலி! விதும்பல்! அடிமைச் சங்கிலி அறுந்த ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தாண்டியும் அழுத்திக் கொண்டிருக்கிறது. தலைமுறைகள் கடந்தும் கசந்து கொண்டிருக்கிறது.

மனதைத் திறந்து அவர்  கொட்டிய வார்த்தைகளில் என் கண்களின் மடை திறந்தது. அவரின் "you have it, man" என் மனதை அறுத்தது, ஏதோ இனம்புரியா குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. பெருமையடித்துப் பறைசாற்றவில்லை என்றாலும் அன்றாடப் பேச்சில் ஏதோ ஒன்றை உணர்ந்து அதன் முக்கியத்துவத்தை அறிந்து தன் ஏக்கத்தையும்வெளிப்படுத்திய நண்பரின் வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன! அவர் குரலாக மட்டும் அல்லாமல், நம்மூர் குழந்தைகளின் குரலாகவும், அனிதாவின் குரலாகவும், ச்நோலினின் குரலாகவும், இன்னும் பெயர் தெரியாத பல குழந்தைகளின் குரலாகவும், 'நீட்', சிபிஎஸ்சி என்று அலைக்கழிக்கப்படும் குழந்தைகளின் குரலாகவும்!

நண்பரின் பிள்ளைகள் என்ன வாசிப்பார்கள் என்று கேட்டு சில நூல்களையும் அறிமுகப்படுத்தினேன். "எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் அவர்கள் வாசிக்க வேண்டும், என்ன வாசிக்கிறார்கள் என்று கவலையில்லை, ஆனால் அவர்கள் வாசிக்கவேண்டும் என்று மட்டும் உறுதியாக இருக்கிறேன்", என்றார். நூல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு மகிழ்ந்தார்.அன்று என் மனதில் ஏற்பட்டப் புதியதொரு குழுக்கம் இன்னும் சுழன்று கொண்டே இருக்கிறது. நீட், இந்தி திணிப்பு, தமிழ் நீக்கம் என்று நம் சமூகத்தை நோக்கி ஏவப்படும் ஆயுதங்களை எப்படி எதிர்ப்பது என்ற ஆதங்கமும்!

இவர் போல் ஒருவர் வேண்டுமேஆங்கிலம் பேசும்* - ஆங்கிலம் பேசினால் போதும் பெருமை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் சென்று சேர வேண்டும் நண்பரின் ஏக்கம், வலி!12 comments:

 1. கோட்சேகள் ஆளும் காலமிது...

  ReplyDelete
  Replies
  1. அவர்களை மகாத்மாவாக சித்தரித்துக் கொண்டு...

   Delete
 2. வாசிப்பு ஒன்றே மனிதனை உயர்த்தும்

  ReplyDelete
  Replies
  1. உண்மை அண்ணா..இதனைத் தடுக்கவே முயற்சிக்கிறார்களே

   Delete
 3. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற சொலவடை. படித்தல் என்பது வயிற்றுப் பிழைப்புக்கு மட்டுமே நீங்கள் சொல்லியிருப்பது போல் வாசித்தல் சிந்தித்தல் மற்றும் அனுபவப் பாடங்களைக் கூர்ந்து நோக்கி சிந்தித்தல் கற்றல்...கற்றல் என்பதுதான் - லேர்னிங்க் இதுதான் வாழ்க்கை முழுவதும் நமக்கு வெண்டியது...நம்மை உயர்த்தும். பாவம் உங்கள் நண்பர்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா, அண்ணா. இங்கு பாவம் என்று நினைக்கும் நாளில் நமக்கும் அப்படி வழியமைக்கிறார்களே :(

   Delete
 4. பெருந்தலைவரைப் போல மற்றொருவர் கிடைப்பாரா? சிரமம்தான். இளம் வயதில் பெருந்தலைவரின் அருகில் அமரும் வாய்ப்பினை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். கும்பகோணத்தில் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு என் தாத்தா அழைத்துச்சென்றிருந்தார். மூன்றாம் வகுப்போ, நான்காம் வகுப்போ படித்த நினைவு. எங்கள் இல்லத்தில் உள்ள படங்களில் இவருடைய படமும் முக்கிய இடத்தினைப் பெறுகிறது. போற்றத்தக்க மாமனிதர் பெருந்தலைவர்.

  ReplyDelete
  Replies
  1. அன்றைய நாட்களில் தலைவர்கள் படங்கள் இல்லங்களில் இருந்தன...

   Delete
  2. ஆமாம் அண்ணா..எல்லாம் மாறிவிட்டது.

   Delete
 5. பெரும் தலைவர்கள் இருந்த நாட்டில் இன்று ...

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...